Enable Javscript for better performance
எமபயம் போக்கும் தலம் திருகோடீஸ்வரர் கோவில், திருகோடிக்கா- Dinamani

சுடச்சுட

  

  எமபயம் போக்கும் தலம் திருகோடீஸ்வரர் கோவில், திருகோடிக்கா

  By என்.எஸ். நாராயணசாமி  |   Published on : 24th November 2016 05:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 37-வது தலமாக இருக்கும் திருகோடிக்கா, பல சிறப்புகளைக் கொண்டதாக விளங்குகிறது.

      இறைவன் பெயர்: திருகோடீஸ்வரர்
      இறைவி பெயர்: வடிவாம்பிகை, திரிபுரசுந்தரி

  இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் மூன்றும், திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும் என 4 பதிகங்கள் உள்ளன.

  எப்படிப் போவது?

  மயிலாடுதுறையில் இருந்து குத்தாலம், கதிராமங்கலம் வழியாகவும், கும்பகோணத்தில் இருந்து ஆடுதுறை வந்தும் இத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை மார்க்கத்தில் உள்ள திருவாவடுதுறை என்ற இடத்திலிருந்தும் இத்தலத்தை அடையலாம். நவக்கிரக தலங்களில் ஒன்றான சூரியனார்கோவிலில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

  ஆலய முகவரி

  அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோவில்,
  திருக்கோடிகாவல்,
  திருக்கோடிகாவல் அஞ்சல்,
  திருவிடைமருதூர் வட்டம்,
  தஞ்சாவூர் மாவட்டம் – 609 802.

  இக்கோயில், காலை 7 மணி முதல்  12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

  தலத்தின் சிறப்பு

  என்னுடைய திருமேனிக்கு சமமான பெருமை கொண்ட தலம் இது என்று பார்வதியிடம் சிவபெருமான் சிலாகித்துச் சொன்ன இத்தலம், எமபயம் நீக்கும் தலமாகச் சிறப்பு பெற்றுள்ளது.

  இத்தலத்தின் மற்ற சிறப்புகள்
   
  சனிபகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்ற தலம். அதேபோல் சித்திரகுப்தனும், துர்வாச முனிவரும் எதிரெதிர் சன்னதியில் உள்ள தலம்.

  தலத்தின் தீர்த்தமான காவிரி நதி உத்திரவாஹினியாக தெற்கிலிருந்து வடக்காகப் பாய்கிறது. கார்த்திகை மாதம், ஞாயிறு அன்று விடியற்காலையில் இத்தலத்தில் காவிரியில் நீராடினால் எல்லா பாவங்களும் தொலைந்துவிடும் என்பது ஐதீகம்.

  இத்தலத்தில் உள்ள சனிபகவான், பாலசனி என்று அழைக்கப்படுகிறார். இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது.

  செங்கற்களால் கட்டப்பட்டிருந்த இக்கோயில், கண்டராதித்த சோழரின் மனைவியான செம்பியன்மாதேவியின் ஆணைப்படி இடிக்கப்பட்டு கற்றளியாக திரும்பக் கட்டப்பட்ட சிறப்பை உடைய தலம்.

  மூன்று கோடி மந்திரங்களும் சாப விமோசனம் பெற இத்தலத்துக்கு வந்து சிவனின் முன்னிலையில் சரியாக மந்திரங்களை உச்சரித்து சாப விமோசனம் பெற்ற தலம். அதேபோல், மூன்று கோடி தேவர்களும் இத்தல இறைவனை வழிபட்டு ஞானமுக்தி அடைந்த தலம்.

  ஒரு சமயம் கைலாசத்தையும், திருகோடிக்காவையும் ஒரு தராசில் வைத்துப் பார்த்தபோது, கைலாசம் உயர்ந்து, இத்தலம் கீழே போய்விட்டது.
   
  இத்தலத்தில் செய்யும் தியானம், ஹோமம், ஜபம் எல்லாம் மும்மடங்காகப் பலிக்கின்ற பெருமையுடைய தலம்.

  கோவில் அமைப்பு

  இரண்டு கோபுரங்களையும், இரண்டு பிராகாரங்களையும் கொண்டு அமைந்துள்ள இத்தலத்தின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. அடுத்துள்ள கோபுரம் 3 நிலைகளைக் கொண்டதாகும். ராஜகோபுரம் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால், எதிரில் கவசமிட்ட கொடிமரமும், கொடிமரத்து விநாயகர், பலிபீடம், நந்தியும் காட்சி தருகின்றன. இரண்டாவது கோபுரம் கடந்து உள்ளே சென்றால் காணப்படும் முன்மண்டபத்தில், வலதுபுறம் அம்பாள் சந்நிதி உள்ளது. வடிவாம்பிகை நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறாள்.

  உட்பிராகார வலம் வரும்போது, கரையேற்றும் விநாயகர், மயில்வாகனர், சிவலிங்க மூர்த்தங்கள், கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, காலபைரவர், சூரியன், சந்திரன், சனிபகவான், துர்வாசர் சந்நிதிகள் உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், நடராசர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். வலம் முடித்து உள்மண்டபம் சென்று துவார விநாயகரையும் பாலசுப்பிரமணியரையும் தரிசித்து வாயில் கடந்தால், நேரே மூலவர் தரிசனம். மூலவர் கருவறை செல்லும் வழியில் இருபுறமும் சித்ரகுப்தரும், எமதர்மனும் உள்ளனர். இது இத்தலத்தின் விசேஷ அமைப்பாகும். திருகோடீஸ்வரர், சதுரபீடத்தில் உயர்ந்த பாணத்துடன் சுயம்பு லிங்க உருவில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார்.

  கருவறை மேற்கு சுற்றில் முதலில் உள்ள அறையில் நாகலிங்கம், காசி விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் மனோன்மணி அம்பாள் விக்ரகங்கள் உள்ளன. அடுத்துள்ள சந்நிதியில் ஆறுமுகம், பன்னிரண்டு கைகளுடன், கைகளில் நாககனி, வில், பாணம் மற்றும் பிற படைக்கலங்களோடு வள்ளி, தெய்வானையுடன் அசுரமயில் வாகனத்தில் முருகர் காட்சியளிக்கிறார்.  

  இதை அடுத்து ரிக், யஜுர், சாம, அதர்வண என்னும் நான்கு வேத சிவலிங்கங்கள் காணப்படுகின்றன. அதையடுத்து கஜலட்சுமி, இறுதியில் சனீஸ்வரனின் மனைவியான ஜேஷ்டாதேவி, மகன் மாந்தி, மகள் மாந்தாவுடன் உள்ள சிலை உள்ளது. மாந்தாவின் கையில் தாமரை மலரும், மாந்தியின் முகம் ரிஷப முகமாகவும், இம்மூன்றும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டும் அற்புதமாகக் காட்சி அளிக்கின்றன.

  வடக்குச் சுற்றில் கோயிலின் தல விருட்சமான பிரம்பு மரம் உள்ளது. அடுத்து அஷ்டபுஜ துர்க்கை சந்நிதியும், அதையடுத்து சண்டிகேஸ்வரர் தனிச்சந்நிதியும், அருகில் புஷ்கரணியும் (கிணறு) உள்ளது. இதைக்கடந்து சென்றால் பிரம்மாவுக்கு என்று ஒரு சிறு தனிச்சந்நிதி உள்ளது.

  ஆலயத்தில் பல அழகிய சிற்பங்களைக் காணலாம். சிவபெருமானின் 64 லீலைகளில் பல காட்சிகள் நுட்பமாக பல்லவ கால சிற்ப அமைப்பில் திருச்சுற்றிலும் ஏனைய பல இடங்களிலும் காணமுடிகிறது. சிற்பங்கள் யாவும் வெகு அற்புதமாகக் கண்ணைக் கவரும் விதத்தில் அமைத்திருக்கின்றன. ராஜகோபுர வாயிலில் காமதேனு, கற்பக விருட்சம், குதிரை மற்றும் யானை  வீரர்களின் போர்க்காட்சிகள், மனுநீதி சோழன் நீதி வரலாறு, கண்ணனின் கோகுல லீலைகள், மிக நுணுக்கமாக செதுக்கப்பட்ட 22 விதவிதமான வாத்தியங்களை இசைக்கும் மாந்தர்கள் யாவும் கண்ணுக்கு விருந்தாக அமைந்துள்ளன.

  இதேபோன்று திருக்கோடீஸ்வரரின் கருவறை வெளிச்சுவற்றிலும் அழகிய சிற்பங்களைக் காணலாம். தெற்குச் சுவரில் முதலில் நடராஜர் சிற்பம் உள்ளது. இடதுபுறம் சிவகாமியும், வலதுபுறம் காரைக்கால் அம்மையார் பேய் உருவில் தலைவிரி கோலமாய் தாளமிட்டப்படி சிவனது கூற்றினைக் கண்டு ஆனந்திக்கிறாள். திருவடியின் கீழ் இசைபாடுவோர், மத்தளம் அடிப்போர், தாளமிடுவோர் என மூன்று கணங்கள் உள்ளனர். அடுத்து வரிசையாக பிட்சாடனர், விஷ்ணுவின் மோகினி அவதாரம், ஒரு குள்ளபூதம், அமர்ந்த நிலையில் மஹா கணபதி, அகத்திய முனிவர், தட்சிணாமூர்த்தி, அத்ரி முனிவர், பிருகு முனிவர் உள்ளார்கள்.

  இறைவனின் கருவறை மேற்குச் சுவற்றில் லிங்கோத்பவர், மகாவிஷ்ணு நின்ற கோலம், அவருக்கு இருபுறமும் குத்ச முனிவரும் வசிஷ்ட முனிவரும் உள்ளனர். விமானத்தில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். வடக்குத் கருவறை சுவற்றில் முதலில் கௌதம மகரிஷியும் அடுத்து பிரம்மாவும், தொடர்ந்து காஸ்யப ரிஷி, அஷ்டபுஜ துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர் உள்ளனர். விமானத்தில் பரமேஸ்வரன் காட்சி அளிக்கிறார். கிழக்குப் புற விமானத்தில் இறைவன் மற்றும் அம்பாள் சிற்பம் அமைந்துள்ளது.

  எமபயம் நீக்கும் தலம்

  சிவபுராணத்தில் பன்னிரெண்டாவது அத்தியாயத்தில் விவரிக்கப்படும் ஒரு நிகழ்ச்சி இத்தலத்தின் மகிமைக்கு மேலும் சிறப்பூட்டுவதாக அமைந்திருக்கிறது. தன் கணவனைக் கொன்றுவிட்டு, நெறி தவறி தன் வாழ்க்கையை நடத்திவந்த லோககாந்தா என்ற பெண்மணி, வாழ்க்கையின் இறுதிகாலத்தில் திருக்கோடிக்கா வந்து தங்க நேர்ந்தது. அவள் இத்தலத்தில் மரணமடைந்ததும், யமதூதர்கள் அவளைத் தண்டிக்க நரகலோகம் அழைத்துச் செல்கின்றனர். சிவ தூதர்கள் இதை வன்மையாகக் கண்டிக்கின்றனர்.

  எமதர்மராஜன், சிவபெருமானிடம் வந்து  முறையிடுகிறார். தமது தலமான திருக்கோடிக்காவோடு சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க யமனுக்கு அதிகாரம் இல்லை என்றும், காலதேச வர்த்தமானங்களால் இங்கு வந்தவர்களை எமன் கண்ணெடுத்தும் பார்க்கக் கூடாது என்றும், திருகோடிக்கா என்ற ஒலியை காதால் கேட்டவர்களைக்கூட தண்டிக்கும் உரிமை யமனுக்கு இல்லை என்றும், இத்தலத்து மண்ணை மிதித்தவர்களிடம் அவன் நெருங்கவே கூடாது என்றும் கட்டளையிடுகிறார். எமன் வேறு வழியின்றி அந்தப்  பெண்ணை விட்டுவிட்டுப் திரும்பினான். லோககாந்தா என்ற அந்தப் பெண்மணி இத்தலத்தில் சம்பந்தப்பட்டுவிட்டதால், எமனிடமிருந்து விடுபட்டு, பின் முக்தி அடைகிறாள்.

  மூலவர் கருவறை செல்லும் வழியில் வெளி மண்டபத்தின் இருபுறமும் எமதர்மனும், சித்ரகுப்தனும் பணிவுடன் சிலையாக நின்றுகொண்டிருக்கின்றனர்.  இது இத்தலத்தின் விசேஷ அமைப்பாகும். காசியைப்போல இத்தலத்தில் வாழ்பவர்களுக்கும் எமபயம் கிடையாது.  இந்த நம்பிக்கையை உறுதி செய்வதுபோல, இவ்வூரில் மயானம் தனியாக இல்லை.  இவ்வூரில் வசிப்பவர்கள் இறந்தால் அவர்களை, காவிரி நதியின் மறுகரைக்குக் கொண்டுசென்று தகனம் செய்யும் வழக்கம் தொன்று தொட்டு இன்று வரை தொடர்கிறது.

  தன்னை வணங்குபவர்களை எம பயத்திலிருந்து காத்தருளும் இத்தல இறைவனை ஒரு முறை சென்று தரிசித்து வாருங்கள்.

  இத்தலம் பற்றிய சம்பந்தரின் தேவாரப் பாடல் - பாடியவர்கள் சிதம்பரம் ஆலவாய் அண்ணல் தேவார பாடசாலை மாணவர்கள்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai