சுடச்சுட

  

  எமபயம் நீங்கி வாழ்வில் முக்தி பெற ஐயாரப்பர் கோவில், திருவையாறு (பகுதி 1)

  By என்.எஸ். நாராயணசாமி  |   Published on : 02nd August 2018 05:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  20171225_084011


  பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 51-வது தலமாக இருப்பது திருவையாறு. திருக்கடவூரில் மார்கண்டேயனைக் காப்பாற்ற எமனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்ததைப்போல, இத்தலத்தில் சுசரிதன் என்ற ஒரு அந்தணச் சிறுவனை எமனிடம் இருந்து இறைவன் காப்பாற்றியதால், இத்தலம் எம்பயம் நீக்கும் தலமாகப் போற்றப்படுகிறது.

  இறைவன் பெயர்: ஐயாரப்பர், பஞ்சநதீஸ்வரர்

  இறைவி பெயர்: தர்மசம்வர்த்தினி, திரிபுரசுந்தரி

  இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகங்கள் 12, திருஞானசம்பந்தர் பதிகங்கள் 5, சுந்தரர் பதிகம் 1 என மொத்தம் 18 பதிகங்கள் உள்ளன.

  எப்படிப் போவது

  திருவையாற்றின் மையப்பகுதியில் இத்தலம் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து 13 கி.மீ. தொலைவில் திருவையாறு இருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது. கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை, கபிஸ்தலம் வழியாக திருவையாறு வரலாம். அரியலூரில் இருந்து கீழப்பழுவூர் வழியாகவும் திருவையாறு வரலாம்.

  ஆலய முகவரி

  அருள்மிகு ஐயாரப்பர் திருக்கோவில்
  திருவையாறு அஞ்சல்,
  திருவையாறு வட்டம்,
  தஞ்சாவூர் மாவட்டம் - 613 204.

  இவ்வாலயம் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

  காவிரிக் கரையில் காசிக்கு சமமாகக் கருதப்படும் 6 சிவஸ்தலங்களில் திருவையாறும் ஒன்று. மற்ற 5 சிவஸ்தலங்கள், 1. திருவெண்காடு, 2. சாயாவனம், 3. மயிலாடுதுறை, 4. திருவிடைமருதூர் மற்றும் 5. திருவாஞ்சியம்.
  அந்தணச் சிறுவன் சுசதரிதனுக்கு அருள் செய்தது

  சுசரிதன் என்பவன் ஒரு அந்தணச் சிறுவன். தாயும், தந்தையும் இறந்தபின் வருந்திய அவன், தன் ஊரை விட்டுப் புறப்பட்டு தல யாத்திரை மேற்கொண்டான். அவ்வாறு தல யாத்திரை செய்து வரும் நாளில் திருப்பழனம் என்ற ஊரை அடைந்து அன்றிரவு அங்கு தங்கினான். இரவில் தூங்கிய சுசரிதன் கனவில் யமன் தோன்றி, இன்றிலிருந்து ஐந்தாவது நாள் நீ மரணம் அடைவாய் என்று கூறினான். அதைக் கேட்டு அஞ்சிய சுசரிதன், திருவையாறு சென்று இறைவனைச் சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை என்று நினைத்து திருவையாறு வந்தடைந்தான். 

  அங்கு, வசிஷ்டர் கூறியபடி சிவ தரிசனம், பஞ்சாட்சர ஜபம் செய்துவருகையில், 5-ம் நாள் முடிவில் யமன் தான் கூறியபடி சுசரிதன் உயிரைப் பறிக்க வந்தான். வசிஷ்டர் தெற்கு கோபுர வாயிலில் இருந்து ஜபம் செய்யும்படி கூறினார். அத்துடன், சுசரிதன் உயிரைப் பறிக்கவந்த யமனை சம்ஹரித்து அவனைக் காப்பாற்றி ஆசி கூறி இத்தலத்திலிருந்து என்னை வழிபட்டு முக்தி பெறுக என்று அருளினார். தன்னை தரிசிப்போருக்கு எம பயம் இல்லாதிருக்குமாறு செய்யும்படி யமனுக்கும் கட்டளையிட்டு அவனை மன்னித்து மறைந்தார். எம பயம் நீக்கிய இப்பெருமானே ஆட்கொண்டார் என்று திருநாமத்துடன் தெற்கு கோபுர வாயிலில் உள்ள சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். 

  இவர் சந்நிதியில் எப்போதும் குங்கிலியப் புகை இருந்துகொண்டே இருக்கும். குங்கிலியப் புகை பரவும் எல்லை வரை விஷ பயம், எம பயம் ஏதும் இருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருவையாறு தலத்தின் காவல் தெய்வமாக ஆட்கொண்டார் விளங்குகிறார். ஆலயத்தின் தென்கோபுர வாசலில் உள்ள ஆட்கொண்டார் சந்நிதி மிகவும் முக்கியமானது. பக்தர்கள் இங்குள்ள குண்டத்தில் குங்கிலியம் அர்ப்பணிப்பார்கள். இவரை வணங்கிவிட்டு கோவிலுக்குச் செல்வது ஒரு மரபு. இவரை வணங்கினால் எம பயம் நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. 

  அப்பர் கண்ட கைலாயம்

  திருநாவுக்கரசர் கைலாயம் சென்று சிவபெருமானைத் தரிசிக்க விரும்பினர். காளத்தியில் இறைவனைத் தரிசித்த அப்பர், தன்னுடன் வந்த அடியார்களைத் தங்கியிருக்குமாறு சொல்லிவிட்டு தனித்துப் புறப்பட்டார். கைலாயப் பயணம் மிகவும் கடினமாக இருந்ததால், முதலில் நடந்துசென்ற அவர் பிறகு நடக்க முடியாமல் தவழ்ந்து செல்லத் தொடங்கினார். திருநாவுக்கரசர் படும் சிரமத்தைப் பார்த்த இறைவன் அவரை ஆட்கொள்ள நினைத்தார். 

  அருகில் ஒரு குளத்தை ஏற்படுத்தி, ஒரு முனிவர் வேடத்தில் அவரை நெருங்கி கைலாயம் செல்லும் வழியில் உள்ள சிரமங்களை எடுத்துக்கூறி திரும்பிச் செல்லும்படி கூறினார். இறந்தாலும் கைலைநாதனைக் காணாமல் ஊர் திரும்பமாட்டேன் என்ற உறுதியுடன் இருந்த திருநாவுக்கரசரை, ஆகாயத்தில் இருந்து அசரீரியாக அழைத்த சிவபெருமான், அங்குள்ள குளத்தில் மூழ்கி திருவையாற்றில் எழுவாய்! அங்கே உனக்கு கைலாயக் காட்சி தருகிறேன் என்று அருளினார். அதேபோல் குளத்தில் மூழ்கி திருவையாற்றில் சூரியபுஷ்கரணி தீர்த்தத்தில் எழுந்தார். சிவபெருமான் தான் கூறியபடி அவருக்கு கைலாயக் காட்சி தந்து அருளினார். திருநாவுக்கரசரும்,

  மாதர் பிறைகண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
  போதோடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
  யாதுஞ் சுவடு படாம லையா றடைகின்றபோது
  காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
  கண்டேனவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்

  என்ற பாடலுடன் தொடங்கும் பதிகம் பாடி இறைவனை தரிசித்தார். இந்த வரலாற்றை உணர்த்தும் வகையில் ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் உள்ள வடகைலாயம் (ஓலோகமாதேவீச்சரம்), தென்கைலாயம் ஆகிய இரண்டும் காண வேண்டிய ஒன்றாகும். ஆண்டுதோறும் ஆடிமாதம் அமாவாசை நாளில் அப்பருக்கு கைலாயக் காட்சி தந்த விழா சிறப்பாக நடைபெறுகிறது.

  இறைவன் ஆதி சைவராக வந்தது 

  திருவையாற்றில் இறைவனுக்கு பூஜை செய்யும் உரிமை பெற்றவர்கள் 24 பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் காசி யாத்திரை மேற்கொண்டார். நெடுநாள் ஆகியும் அவர் திரும்பி வராததால் அவருக்குரிய நிலபுலன்கள் உள்ளிட்ட சொத்துகளை தமக்கே உரிமை என்று ஏனைய 23 ஆதி சைவ அந்தணர்களும் கைப்பற்றிக் கொண்டனர். காசி யாத்திரை சென்ற ஆதி சைவரின் மனைவியும், மகனும் இறைவனிடம் நடந்ததை முறையிட்டு வேண்டினார்கள். அவர்களுக்கு அருள்புரியவும் மற்ற அந்தணர்களுக்கு பாடம் புகட்டவும் எண்ணிய சிவபெருமான், காசிக்குச் சென்ற அந்தணர் உருவத்தில் கங்கை நீருடன் ஐயாரப்பர் ஆலயத்துக்கு வந்து இறைவனுக்கு பூஜையும் செய்தார். 

  மனைவியும், மகனும் மகிழ மற்ற 23 அந்தணர்களும் ஒடுங்கிப் போயினர். சில நாட்கள் கழித்து உண்மையான அந்தணர் காசியில் இருந்து கங்கை நீருடன் திரும்பி வர, இருவரில் யார் உண்மையான ஆதி சைவர் என்ற குழப்பம் ஏற்பட்டது. உண்மை அறியும் பொருட்டு, யாவரும் கூடியிருக்க முதலில் வந்த ஆதி சைவர் திடீரென்று மறைந்துவிடுகிறார். வந்தவர் சிவபெருமானே என்று எல்லோரும் உணர்கின்றனர். இவ்வாறு ஆதி சைவராக வந்து தனக்குத் தானே பூஜை செய்துகொண்டவர் இத்தலத்து இறைவன் ஐயாரப்பர். தன்னைத்தானே வழிபடும் தத்துவம் காரணமாக இவ்வாலயத்தில் மரகத லிங்கம், ஸ்படிக லிங்கம் என இரண்டு லிங்கங்கள் வைத்து வழிபாடுகள் நடக்கின்றன.

  எமபயம் போக்கும் என்ற சிறப்புடைய இத்தலம் குரு பரிகாரத் தலமாகவும் இருப்பது மற்றொரு சிறப்பு.. இதைப் பற்றியும் இத்தலத்தின் மற்ற சிறப்புகளைப் பற்றியும் அடுத்த பகுதியில் காணலாம்.

  நாவுக்கரசர் அருளிய பதிகம் - பாடியவர்கள் திருஞான பாலசந்திரன், மயிலாடுதுறை சிவகுமார்

  நாவுக்கரசர்  அருளிய பதிகம் - பாடியவர் மயிலை சற்குருநாதன்

  (தொடரும்)

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai