Enable Javscript for better performance
முன்னோர் ஆன்மா சாந்தி அடைய கோனேசுவரர் கோவில், திருக்குடவாயில்- Dinamani

சுடச்சுட

  

  முன்னோர் ஆன்மா சாந்தி அடைய கோனேசுவரர் கோவில், திருக்குடவாயில்

  By என்.எஸ். நாராயணசாமி  |   Published on : 31st August 2018 12:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kudavasal1

   

  பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 94-வது தலமாக இருப்பது திருக்குடவாயில். இத்தலம் தற்போது குடவாசல் என்று வழங்கப்படுகிறது. நமது முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைந்து அவர்கள் நற்கதி பெற நாம் வழிபட வேண்டிய தலம் அருள்மிகு கோனேசுவரர் திருக்கோயில், குடவாசல்.

  இறைவன் பெயர்: கோனேசுவரர்

  இறைவி பெயர்: பெரியநாயகி அம்மை

  இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் இரண்டு உள்ளது. இரண்டு பதிகங்களும் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன.

  எப்படிப் போவது

  கும்பகோணம் - திருவாரூர் சாலை வழியில் உள்ள குடவாசல் என்ற ஊரில் இத்தலம் இருக்கிறது. திருவாரூரிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது. கொரடாச்சேரி, நீடாமங்கலம், வலங்கைமான் மற்றும் நன்னிலம் ஆகிய இடங்களிலிருந்தும் குடவாசல் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன. திருப்பெருவேளூர், திருதலையாலங்காடு என்ற பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் அருகில் இருக்கின்றன.

  ஆலய முகவரி

  அருள்மிகு கோனேசுவரர் திருக்கோயில்
  குடவாசல், குடவாசல் அஞ்சல்,
  குடவாசல் வட்டம்,
  திருவாரூர் மாவட்டம் - 612 601.

  இவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

  கோச்செங்கட் சோழன், முற்பிறவியில் சிலந்தியாக இருந்து திருவானைக்கா இறைவனுக்கு வலைப்பந்தல் அமைத்து வழிபட்டு இறைவன் அருளால் சோழ நாட்டின் பேரரசனாகப் பிறக்கும் பேறு பெற்றான். முற்பிறவியில் தான் சிலந்தியாக இருந்து செய்த சிவத்தொண்டுக்கு யானை இடையூறாக இருந்த காரணத்தினால் யானை ஏறாத மாடக் கோவில்களைக் கட்டினான். இத்தலத்தில் உள்ள ஆலயம் கோச்செங்கட் சோழன் கட்டிய அத்தகைய மாடக் கோவில்களுள் ஒன்றாகும்.

  பிரளய காலத்தில் உயிர்கள் அனைத்தையும் ஓர் அமுதக் குடத்தில் இட்டு, அதன் வாய்ப்பகுதியில் சிவலிங்கமாக இருந்து சிவபெருமான் காத்தார். குடத்திலிட்டுக் காத்த உயிர்களை, மீண்டும் படைப்புக் காலத்தில் வேடன் வடிவெடுத்து வந்த சிவபிரான் வில்லால் அக்குடத்தை உடைத்தார். குடம் மூன்றாக உடைந்து, முதல் பாகமாகிய அடிப்பாகம் விழுந்த இடத்தில் இறைவன் திருமேனி கொண்டார். அதுவே குடமூக்கு எனப்படும் கும்பகோணம் (ஆதிகும்பேசம்) ஆகும். அடுத்து நடுப் பாகம் விழுந்த இடமே கலையநல்லூராகும். குடத்தின் முகப்பு பாகம் விழுந்த இடமே குடவாயில் என்னும் குடவாசல்.

  இத்தலம் சங்க காலச் சிறப்பும் பழைமையும் வாய்ந்தது. சோழன் கோச்செங்கணான், சேர மன்னன் கணைக்கால் இரும்பொறையை வென்று, அவனை இக்குடவாயில் சிறைக் கோட்டத்தில் சிறை வைத்தான் என்னும் செய்தியை புறநானூறு தெரிவிக்கிறது. இதிலிருந்து அன்றைய குடவாயில், சோழப் பேரரசின் சிறைக்கோட்டமாக இருந்தது என்று தெரியவருகிறது. குடவாயில் கீரத்தனார், குடவாயில் நல்லாதனார் போன்ற புலவர்கள் பாடியுள்ள பாடல்கள், அகநானூறு உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. சங்க காலத்தில் குடவாயில், சோழர்களின் கருவூல நிலையமாக இருந்ததென்று குடவாயில் கீரத்தனார் பாடிய அகநானூற்றுப் பாடல் மூலம் அறியலாம்.

  சங்க காலச் சிறப்பும் பழைமையும் பெற்ற இத்தலம் ஊரின் சாலை ஓரத்திலேயே கோவில் உள்ளது. மேற்கு நோக்கிய சந்நிதியுள்ள இக்கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. மேற்புறத்தில் பஞ்சமூர்த்திகள் உருவங்கள் வண்ணச்சுதையில் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு எதிரில் அமிர்த தீர்த்தம் உள்ளது. இதன் கரையில் ஆதிவிநாயகர் சந்நிதி உள்ளது. முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்ததும் செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமரத்து விநாயகர் சந்நிதி, பலிபீடம், நந்தி உள்ளன. இடதுபுறம் தெற்கு நோக்கிய பெரியநாயகி சந்நிதி உள்ளது. அபயவரதத்துடன் கூடிய நின்ற திருக்கோலத்தில் அம்பாள் காட்சி தருகிறாள். அம்பிகையே பிருகத்துர்க்கையாக வழிபடப்பெறுவதால், கோயிலில் தனி துர்க்கையில்லை.

  உள்கோபுரம் மூன்று நிலைகளை உடையது. பிராகாரத்தில் இடும்பன், தண்டபாணி, கலைமகள் சந்நிதிகள் உள்ளன. நவக்கிரக சந்நிதி, பைரவர், சனீசுவரர் முதலிய சிலாரூபங்கள் வரிசையாக உள்ளன. சப்தமாதர்கள் சந்நிதியும் உள்ளது. சண்டேசுவரர் சந்நிதி தனிக்கோயிலாக உள்ளது. நடராச சபையில் ஆனந்தக்கூத்தனின் அபூர்வ விக்கிரகம் அழகாக உள்ளது. நடராசப் பெருமானின் அவிர்சடை அழகு நம் மனத்தை விட்டு அகலாது. நடராஜப் பெருமானின் திருமேனியின் பீடத்தில் 10-11-ம் நூற்றாண்டு காலத்திய தமிழ் எழுத்துகள் வடிவில் களக்காடுடையார் மாலை தாழ்மார்பன் என எழுதப்பட்டுள்ளது. இத்தொடரில் எழுத்துகளுடன் மத்தியில் இருகரங்கள் கூப்பிய நிலையில் அடியவர் ஒருவரின் உருவமும் உள்ளது. 

  ராஜராஜ சோழனின் காலத்துக் கலைப்பாணியை உடைய இத்திருமேனி, இத்தலத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள களக்காட்டில் வாழ்ந்த மாலைதாழ் மார்பன் என்பவரால் வடித்து வழங்கப்பட்டது என கூறப்படுகிறது. சந்நிதிக்கு வெளியில் பக்கவாட்டிலுள்ள காசி விசுவநாதர் சந்நிதியில் சிவலிங்கத் திருமேனி செம்மண் நிறத்தில் காணப்படுகிறது. 18 படிகளைக் கடந்து மேலே சென்றால், மாடக் கோவிலில் மூலவர் கோணேசுவரர் மேற்கு நோக்கிய சந்நிதியில் பெரிய சிவலிங்கத் திருமேனி உருவில் எழுந்தருளியுள்ளார். இறைவன் திருமேனியில் கருடன் தீண்டி வழிபட்ட சுவடுகள் உள்ளன.

  திருணபிந்து முனிவர் பூஜிக்க, இறைவன் திருக்குடத்திலிருந்து வெளிப்பட்டு முனிவரின் குஷ்ட நோய் நீக்க அருளிய தலம் இதுவாகும். அனுமனும் இத்தல இறைவனை வழிபட்டிருக்கிறார். அவர் திருவுருவங்கள் இங்குள்ளன. 

  திருப்புகழ் தலம் 

  இத்தல முருகன், அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றுள்ளார். திருப்புகழில் இரு பாடல்கள் உள்ளன. உள் பிராகாரத்தில் வடமேற்கு மூலையில், மிகவும் பிரபலமான குடவாயில் குமரன் சந்நிதி உள்ளது. மயில் மண்டபம், மகா மண்டபத்துடன் கூடிய சந்நிதியில், வள்ளி- தெய்வானையுடன் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் உடையவராக இவர் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

  தல வரலாறு 

  காசியப முனிவரின் இரண்டு மனைவிகளில் ஒருவரான விநதை, இளையவள். அவளின் மகன் கருடன். மகாவிஷ்ணுவுக்கு வாகனமாகவும், பரம பக்தனாகவும் இருந்து பெரிய திருவடி என்று புகழ் பெற்றவர். ஒரு சமயம் கருடனும், அவன் தாய் விநதையும் காசியப் முனிவரின் மூத்த மனைவியின் அடிமையாக வேண்டிய நிலை ஏற்பட்டது. தாயின் அடிமைத்தனத்தை போக்குவதற்காக, பெரிய அன்னை கேட்டபடி தேவலோகத்தில் இருந்து அமிர்தத்தை கருடன் எடுத்துவந்தான். பூலோகத்தில் குடவாயிலுக்கு அருகே பறந்து வரும்போது, ஒரு அசுரன் எதிர்பட்டு அமிர்த குடத்தைப் பறிக்க முற்பட்டான். கருடன் அருகிலிருந்த ஒரு பெரிய புற்றின் மீது தர்ப்பைகளைப் பரப்பி, அதன் மீது குடத்தை வைத்துவிட்டு, அசுரனுடன் மூர்க்கமாகப் போர் புரிந்து அவனை வீழ்த்தினார்.

  இதற்குள் அந்த புற்றுக்குள்ளே இருந்த இறைவன் கோணேசப் பெருமான் அந்த அமிர்த குடத்தை மெள்ள தம்மிடம் இழுத்துக்கொண்டார். அசுரனை வீழ்த்திவிட்டு வந்த கருடன், அமிர்த குடத்தைக் காணாமல் அந்த புற்றைத் தன் மூக்கால் கிளறியபோது, சுவாமி புற்றிலிருந்து வெளிவந்து கருடனுக்கு தரிசனம் தந்தார். கருடன் இத்தலத்தில் இறைவனை பூஜித்து அமுதம் பெற்றுத் தன்னுடைய மற்றும் தன் தாயின் சாபமும் நீங்கப் பெற்றார். 

  கோணேசப் பெருமான் அருளாணைப்படி, கருடன் இத்தலத்தில் இறைவனுக்கு ஆலயம் ஒன்றை எழுப்பினார். கருடாழ்வார் கொண்டு வந்த அமிர்தத்தால் அபிஷேகம் செய்யப்படவராதலால் கோணேசர் அமிர்தலிங்கமானார். அமிர்தத் துளிகள் சிந்தியதால் ஆலயத்துக்கு எதிரிலுள்ள தீர்த்தம் அமிர்த தீர்த்தம் ஆயிற்று. இந்த அமிர்த தீர்த்தத்தின் பெருமையைப் பற்றி தல புராணம் மிகவும் சிறப்புடன் விவரிக்கிறது. கங்கை முதலான நவ நதிகளும் தங்களுக்கு ஏற்பட்ட பாவங்களை எப்படி தொலைப்பது என்று சிவபெருமானை வேண்ட, அவர் 3 தீர்த்தங்களில் மூழ்கி நீராடி தங்களது பாவங்களை போக்கிக்கொள்ள அருளாசி கூறினார். அவ்வாறே நவ நதிகளும் நீராடி தங்களது பாவங்களைப் போக்கிக்கொண்ட 3 தீர்த்தங்களில், இத்தலத்து அமிர்த தீர்த்தமும் ஒன்றாகும்.

  சம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் சிவகாசி முருக.இரமேஷ்குமார் ஓதுவார்

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai