பித்ரு தோஷ பரிகாரத் தலம் பசுபதீஸ்வரர் கோவில், ஆவூர் பசுபதீச்சரம்

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 21-வது தலமாக இருப்பது ஆவூர் பசுபதீச்சரம்.
பித்ரு தோஷ பரிகாரத் தலம் பசுபதீஸ்வரர் கோவில், ஆவூர் பசுபதீச்சரம்

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 21-வது தலமாக இருப்பது ஆவூர் பசுபதீச்சரம். இத்தலத்தின் சிறப்பு, இங்குள்ள பஞ்ச பைரவர்கள் சந்நிதி.

இறைவன் பெயர்: பசுபதீஸ்வரர்

இறைவி பெயர்: மங்களாம்பிகை, பங்கஜவல்லி

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது. 

எப்படிப் போவது?

கும்பகோணத்தில் இருந்து கோவிந்தகுடி, மெலட்டூர் வழியாக தஞ்சாவூர் செல்லும் சாலையில் 10 கி.மீ. தொலைவில் கோவிந்தகுடியை அடுத்து ஆவூர் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு. கும்பகோணத்துக்கு அருகில் உள்ள பட்டீஸ்வரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து தெற்கே சுமார் 6 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

ஆலய முகவரி

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்

ஆவூர், ஆவூர் அஞ்சல்

வலங்கைமான் வட்டம்

தஞ்சை மாவட்டம் - 612 701.

இவ்வாலயம், தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு 

ஒருசமயம், ஆதிசேஷனுக்கும் வாயுவுக்கும் தமக்குள் யார் வலியவர் என்பதில் போட்டி எழுந்தது. ஆதிசேஷன் கயிலையைத் தன் ஆயிரம் மகுடங்களாலும் இறுகப் பற்றிக்கொள்ள, வாயுதேவன் சண்டமாருதமாக மலையை அசைக்க முற்பட்டு பலத்த காற்றை வீசினார். இந்த இருவரின் போட்டியால் தேவர்கள் அஞ்சினர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி ஆதிசேஷன் தன்பிடியைச் சிறிது தளர்த்தினார். இதுதான் தக்க சமயம் என்று எண்ணிய வாயு, இரு சிகரங்களைப் பெயர்த்துக் கொண்டுவந்து, தென்னாட்டில் ஒன்றை ஆவூரிலும், மற்றொன்றை அருகிலுள்ள திருநல்லூரிலும் விடுவித்தான் என்று தல புராணம் தெரிவிக்கிறது.

வசிஷ்டரால் சாபம் பெற்ற காமதேனு, பிரம்மாவின் அறிவுரைப்படி உலகுக்கு வந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டு தன் சாபம் நீங்கப் பெற்ற தலம். ஆ (பசு) வழிபட்டதால் இத்தலம் ஆவூர் என்று பெயர் பெற்றது. காமதேனு இவ்வுலகுக்கு முதலில் வந்தடைந்த கோவிந்தகுடி என்ற இடம் அருகில் உள்ளது. ஆலயத்தின் கொடிமரத்தில், சிவலிங்கத்தின் மீது பசு பால் சொரிந்து வழிபடும் சிற்பம் இருப்பதைப் பார்க்கலாம்.

கோவில் அமைப்பு 

கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்களில் ஆவூர் பசுபதீஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். 5 நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன், நம் கண்ணில் படுவது கிழக்கு வெளிப் பிராகாரத்தில் உள்ள கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம். இறைவன் சந்நிதி ஒரு கட்டுமலை மீது அமைந்துள்ளது. இறைவன் கருவறை விமானம், மணிக்கூடம் என்று அழைக்கப்படுகிறது.

தெற்கு வெளிப் பிராகாரத்தில் உள்ள படிகள் மூலம் ஏறி இறைவன் குடிகொண்டுள்ள கட்டுமலையை அடையலாம். கட்டுமலை ஏறி உள்ளே நுழைந்தால் மகா மண்டபம், அர்த்த மண்டபம், அதையடுத்து கருவறையில் மூலவர் பசுபதீஸ்வரர், சுயம்பு லிங்கத் திருமேனி உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். மகா மண்டபத்தில் வடபுறம் தெற்கு நோக்கி மங்களாம்பிகை, பங்கஜவல்லி என இரண்டு அம்பாள் சந்நிதிகள் அமைந்துள்ளன. இதில் மங்களாம்பிகை, குளத்தில் இருந்து எடுத்துப் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். பங்கஜவல்லி அம்மன் மிகவும் பழைமையானது. சம்பந்தர் தனது தேவாரப் பதிகத்தில் 3-வது பாடலில் பங்கய மங்கை விரும்பும் ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடுநாவே என்று குறிப்பிட்டிருந்தாலும், இத்தலத்தில் சிறப்பு வாய்ந்த சந்நிதி மங்களாம்பிகை அம்பாள் சந்நிதியே.

இத்தலம் ஒரு பஞ்ச பைரவத் தலம் என்ற சிறப்பைப் பெற்றது. மகா மண்டபத்தில் மேற்கு நோக்கு 4 பைரவ மூர்த்திகளும், வடக்கு நோக்கி ஒரு பைரவ மூர்த்தியும் சுயம்புவாக அமைந்த திருக்கோலத்தை நாம் தரிசிக்கலாம். பைரவ மூர்த்தி வழிபாடு இங்கு மிகவும் சிறப்புடையதாகும். அஷ்டமி திதியன்று கூட்டு எண்ணெய்யால் விளக்கேற்றி இங்குள்ள பைரவர்களை வழிபாடு செய்துவந்தால், பித்ரு தோஷம் நீங்கி வாழ்வில் வளம் ஏற்படும். மேலும் பில்லி, சூன்யம், ஏவல் மற்றும் செய்வினையால் ஏற்படும் சகலவித கோளாறுகளும் நீங்கும். மரண பயம், வாகன விபத்து அபாயம் நீங்கும், பெற்றோர் பிள்ளகளுக்கு இடையில் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிணக்குகள் நீங்கி நல்ல முறையில் சேர்ந்து வாழ்வர். இந்த ஐந்து பைரவர்கள் அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், கால பைரவர் மற்றும் உன்மத்த பைரவர் எனப்படுவர்.

இத்தலத்தில், தசரதர் தனக்குப் புத்திரன் பிறக்க வேண்டும் என்று சிவபெருமானை வழிபட்டுள்ளார். தசரதர் ஈசனை வழிபடும் சிற்பத்தை பங்கஜவல்லி அம்பாள் சந்நிதியின் கிழக்குச் சுவற்றில் காணலாம். சப்த மாதர்களின் திருஉருவங்களும் உள் பிராகாரத்தில் உள்ளன. நவக்கிரக சந்நிதியும் இங்கு உள்ளது. இத்தல முருகன், வில்லேந்திய வேலனாகக் காட்சியளிக்கிறார். வள்ளி தெய்வானையுடன் வில்லேந்தி காட்சி தரும் முருகனின் சந்நிதி, மேற்கு வெளிப் பிராகாரத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள முருகன், தனுசு சுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். 

தர்மத்வஜன் என்ற அரசன், இத்தலத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி தனது குஷ்டநோய் நீங்கப் பெற்றான் என்று தல வரலாறு குறிப்பிடுகிறது.

தமிழில் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை என்று நூலை இயற்றிய சாத்தனார், ஆவூரில் பிறந்தவர் என்பது குறிப்படத்தக்கது. 

தலவிருட்சமாக அரச மரமும், தீர்த்தங்களாக பிரம்ம தீர்த்தம், காமதேனு தீர்த்தம் ஆகியவை உள்ளன. காமதேனு தீர்த்தம் வழக்கில் தேனு தீர்த்தம் என்று சொல்லப்படுகிறது. பிரம்மா, சப்தரிஷிகள், தேவர்கள், இந்திரன், சூரியன், நவக்கிரகங்கள், வசிஷ்டர், மகாவிஷ்ணு, தசரதர் ஆகியோர் வழிபட்ட இத்தலத்தை நீங்களும் சென்று வழிபடுங்கள்.

இத்தலத்து இறைவன் மேல் சம்பந்தர் பாடியருளிய பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. தனது பதிகத்தின் ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் “ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே” என்று தனது நாவுக்குக் கட்டளையிடுகிறார்.

1. புண்ணியர் பூதியர் பூதநாதர்
புடைபடுவார் தம் மனத்தார்திங்கட்
கண்ணிய ரென்றென்று காதலாளர்
கைதொழுது ஏத்த இருந்த ஊராம்
விண்ணுயர் மாளிகை மாடவீதி
விரைகமழ் சோலை சுலாவியெங்கும்
பண்ணியல் பாடல றாத ஆவூர்ப்
பசுபதியீச்சரம் பாடுநாவே.

2. முத்தியர் மூப்பில ராப்பினுள்ளார்
முக்கணர் தக்கன்றன் வேள்விசாடும்
அத்திய ரென்றென் றடியரேத்தும்
ஐயன் அணங்கொடு இருந்த ஊராம்
தொத்திய லும்பொழில் மாடுவண்டு
துதைந்தெங்கும் தூமதுப் பாயக்கோயிற்
பத்திமைப் பாடல றாத ஆவூர்ப்
பசுபதியீச்சரம் பாடுநாவே.

3. பொங்கி வரும்புனற் சென்னிவைத்தார்
போம்வழி வந்திழி வேற்றமானார்
இங்குயர் ஞானத்தர் வானோரேத்தும்
இறையவர் என்றும் இருந்த ஊராம்
தெங்குயர் சோலைசே ராலைசாலி
திளைக்கும் விளைவயல் சேரும்பொய்கைப்
பங்கய மங்கை விரும்பும் ஆவூர்ப்
பசுபதியீச்சரம் பாடுநாவே.

4. தேவியோர் கூறின ரேறதேறுஞ்
செலவினர் நல்குர வென்னைநீக்கும்
ஆவிய ரந்தண ரல்லல்தீர்க்கும்
அப்பனார் அங்கே அமர்ந்த ஊராம்
பூவிய லும்பொழில் வாசம்வீசப்
புரிகுழ லார்சுவ டொற்றிமுற்றப்
பாவியல் பாடல றாத ஆவூர்ப்
பசுபதியீச்சரம் பாடுநாவே.

5. இந்தணை யுஞ்சடை யார்விடையார்
இப்பிறப் பென்னை யறுக்கவல்லார்
வந்தணைந் தின்னிசை பாடுவார்பால்
மன்னினர் மன்னி யிருந்த ஊராம்
கொந்தணை யுங்குழ லார்விழவில்
கூட்டமி டையிடை சேரும்வீதிப்
பந்தணை யும்விர லார்தம் ஆவூர்ப்
பசுபதியீச்சரம் பாடுநாவே.

6. குற்ற மறுத்தார் குணத்தினுள்ளார்
கும்பிடு வார்தமக் கன்புசெய்வார்
ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார்
உறைபதி யாகுஞ் செறிகொள்மாடஞ்
சுற்றிய வாசலின் மாதர்விழாச்
சொற்கவி பாடநி தானம்நல்கப்
பற்றிய கையினர் வாழும் ஆவூர்ப்
பசுபதியீச்சரம் பாடுநாவே.

7. நீறுடை யார்நெடு மால்வணங்கும்
நிமிர்சடை யார்நினை வார்தமுள்ளம்
கூறுடை யாருடை கோவணத்தார்
குவலய மேத்த இருந்த ஊராம்
தாறுடை வாழையிற் கூழைமந்தி
தகுகனி யுண்டுமிண் டிட்டினத்தைப்
பாறிடப் பாய்ந்து பயிலும் ஆவூர்ப்
பசுபதியீச்சரம் பாடுநாவே.

8. வெண்டலை மாலை விரவிப்பூண்ட
மெய்யுடை யார்விறல் ஆரரக்கன்
வண்டமர் பூமுடி செற்றுகந்த
மைந்த ரிடம்வள மோங்கியெங்குங்
கண்டவர் சிந்தைக் கருத்தின்மிக்கார்
கதியரு ளென்றுகை யாரக்கூப்பிப்
பண்டலர் கொண்டு பயிலும் ஆவூர்ப்
பசுபதியீச்சரம் பாடுநாவே.

9. மாலும் அயனும் வணங்கிநேட
மற்றவ ருக்கெரி யாகிநீண்ட
சீலம் அறிவரி தாகிநின்ற
செம்மையி னாரவர் சேருமூராம்
கோல விழாவி னரங்கதேறிக்
கொடியிடை மாதர்கள் மைந்தரோடும்
பாலென வேமொழிந் தேத்தும் ஆவூர்ப்
பசுபதியீச்சரம் பாடுநாவே.

10. பின்னிய தாழ்சடை யார்பிதற்றும்
பேதைய ராஞ்சமண் சாக்கியர்கள்
தன்னிய லும்முரை கொள்ளகில்லாச்
சைவரி டந்தள வேறுசோலைத்
துன்னிய மாதரும் மைந்தர்தாமும்
சுனையிடை மூழ்கித் தொடர்ந்தசிந்தைப்
பன்னிய பாடல் பயிலும் ஆவூர்ப்
பசுபதியீச்சரம் பாடுநாவே.

11. எண்டிசை யாரும் வணங்கியேத்தும்
எம்பெரு மானையெ ழில்கொளாவூர்ப்
பண்டுரி யார்சிலர் தொண்டர் போற்றும்
பசுபதி யீச்சரத் தாதிதன்மேல்
கண்டல்கள் மிண்டிய கானற்காழிக்
கவுணியன் ஞானசம்பந்தன் சொன்ன
கொண்டினி தாயிசை பாடியாடிக்
கூடு மவருடை யார்கள்வானே.

சம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் மதுரை மு.முத்துக்குமரன் ஓதுவார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com