Enable Javscript for better performance
சர்வதோஷ பரிகாரத் தலம் வான்மீகிநாதர் கோவில், திருவாரூர் (பகுதி 1)- Dinamani

சுடச்சுட

  

  சர்வதோஷ பரிகாரத் தலம் வான்மீகிநாதர் கோவில், திருவாரூர் (பகுதி 1)

  By என்.எஸ். நாராயணசாமி  |   Published on : 06th July 2018 10:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tiruvarur2

   

  சர்வதோஷ பரிகாரத் தலம் வான்மீகிநாதர் கோவில், திருவாரூர் (பகுதி ஒன்று)
  பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 87-வது தலமாக இருப்பது திருவாரூர். தமிழ்நாட்டிலுள்ள பெரிய கோவில்களில் திருவாரூர் கோவிலும் ஒன்றாகும். எல்லாவித தோஷங்களுக்கும் பரிகாரத் தலமாக இருக்கும் சிறப்புடைய தலம் திருவாரூர். 

  இறைவன் பெயர் - தியாகராஜர், வான்மீகநாதர், புற்றிடங்கொண்டநாதர்

  இறைவி பெயர் - நிலோத்பலாம்பாள், கமலாம்பிகை

  இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் 21, திருஞானசம்பந்தர் பதிகம் 5 மற்றும் சுந்தரர் பதிகம் 8 என மொத்தம் 34 பதிகங்கள் உள்ளன.

  எப்படிப் போவது

  இத்தலம் திருவாரூர் நகரில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன. திருவாரூர் அரநெறி என்று அழைக்கப்படும் மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம், இந்த ஆலயத்தின் உள்ளே இருக்கிறது. திருவாரூர் நகரின் கிழக்கு ரத வீதியில் ஆரூர் பறவயுண்மண்டளி என்று அழைக்கப்படும் மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமும் உள்ளது.

  ஆலய முகவரி

  அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில்
  திருவாரூர் - 610 001.

  இவ்வாலயம், தினமும் காலை 6 மணி முதல்   இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

  திருவாரூரின் சிறப்புகள்

  * திருவாரூர் பிறக்க முக்தி தரும் தலம்.

  * பாம்புப் புற்றை தான் எழுந்தருளி இருக்கும் இடமாக தானே விரும்பி ஏற்றுகொண்ட வான்மீகநாதர் கருவறையில் குடிகொண்டிருக்கும் தலம்.

  * கோவில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி என்று போற்றப்படும் மிகப்பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடைய திருத்தலம்.

  * முசுகுந்த சக்கரவர்த்தி, மனுநீதிச் சோழன் போன்றோரால் ஆட்சி செய்யப்பட்ட தலைநகரமாகிய விளங்கிய திருத்தலம்.

  * சப்தவிடங்கத் தலங்களில் மூலாதாரத் தலம், பஞ்சபூதங்களில் பிருத்வி (பூமி) தலம், முக்தி அளிக்கக்கூடிய தலம். மற்ற சப்தவிடங்கத் தலங்கள் - 1. நாகைக்காரோணம், 2. திருநள்ளாறு, 3. திருமறைக்காடு, 4. திருக்காறாயில், 5. திருவாய்மூர், மற்றும் 6. திருக்கோளிலி ஆகியவையாகும்.

  * திருமுதுகுன்றம் சிவஸ்தலத்தில் மணிமுத்தா நதியில் சுந்தரர் தான் இட்ட பொன்னை கமலாலயம் திருக்குளத்தில் எடுத்துக்கொள்ள அருளிய தலம்.

  * சுந்தரர் வேண்டிக்கொண்டதின் பேரில், அவருக்காக தியாகராஜப் பெருமான் நள்ளிரவில் பரவை நாச்சியாரிடம் தூது போக இவ்வூர் தெருக்களில் நடந்து சென்ற பெருமையுடைய திருத்தலம்.

  * சங்கிலி நாச்சியாரைப் பிரியமாட்டேன் என்று செய்து கொடுத்த வாக்கை மீறி திருவொற்றியூரில் இருந்து புறப்பட்டதால் தன் இரண்டு கண் பார்வையும் இழந்த சுந்தரர், காஞ்சிபுரத்தில் இடது கண் பார்வை பெற்றபின், திருவாரூர் தலத்தில் பதிகம் பாடி வலது கண் பார்வையும் பெற்ற தலம்.

  * விறன்மிண்ட நாயனார், நமிநந்தி அடிகள் நாயனார், செருத்துணை நாயனார், தண்டியடிகள் நாயனார், சுழற்சிங்க நாயனார் முதலிய சிவனடியார்கள் வழிபட்டு முக்தியடைந்த திருத்தலம்.

  * தியாகராஜர் பெருஞ்சிறப்புடன் அஜபா நடனமூர்த்தியாகத் திகழும்  தலம். இத்தியாகேசப் பெருமானே சோமாசிமாற நாயனாரின் வேள்விக்கு அம்பர் மாகாளம் தலத்தில் எழுந்தருளி அவிற்பாகம் ஏற்றார் என்னும் சிறப்பை உடைய தலம்.

  * திருவாரூர் கோயிலுக்குள் சென்றுவிட்டால், குவித்த கரங்களை விரிப்பதற்கு வழியேயில்லை என்ற அளவுக்கு ஏராளமான சந்நிதிகள் இருக்கும் சிறப்பை உடைய தலம்.

  * எந்த ஒரு சிவஸ்தலத்துக்கும் இல்லாத தனிச்சிறப்பு திருவாரூர் தலத்துக்கு உள்ளது. கோவில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றி தேவாரப் பாடல்கள் கொண்ட சிறப்பைப் பெற்றுள்ள தலம். என பல்வேறு பெருமைகளை உடைய தலம் திருவாரூர் ஆகும்.

  * தியாகராசர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று. திருவாரூர் திருக்கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார். சப்தவிடங்கத் தலங்கள் ஏழில் திருவாரூரே முதன்மையானதும், பிரதானமானதுமாகும். திருவாரூரைத் தொடர்ந்து திருமறைக்காடு (வேதாரண்யம்), திருநள்ளாறு, திருக்குவளை, திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்), திருக்காரவாசல் மற்றும் திருவாய்மூர் ஆகிய தலங்களிலும் ஸ்ரீ தியாகராஜப் பெருமான் கோயில் கொண்டுள்ளார். 

  திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும். தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதில்சுவரை நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது. நான்கு புறமும் கோபுரங்ளையும், தேர் ஓடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது. திருவாரூர் கோவில், அதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச் சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு இத்தலத்துக்கு உண்டு. 

  கோயில் ஐந்து வேலி - குளம் ஐந்து வேலி - செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி என்ற பழமொழி மூலம் இதன் சிறப்பை உணரலாம். (ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம் 700 அடி அகலம்). பிற்கால சோழ மன்னர்களில் ஒருவனான கண்டராதித்ய சோழனின் மனைவியான செம்பியன் மாதேவி இக்கோவிலை கற்றளிக் கோவிலாக மாற்றியதாகவும், பின்னர் குலோத்துங்க மன்னர்கள் காலத்தில் பெரியதாக விரிவாக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.

  திருவாரூர் ஆலயத்தில் எட்டு துர்க்கைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. முதல் பிராகாரத்திலுள்ள மகிஷாசுரமர்த்தினி பிரதான துர்க்கையாகும். மேலும் 2 துர்க்கை சந்நிதிகள் முதல் பிராகாரத்தில் உள்ளன. இரண்டாம் பிராகாரத்தில் நான்கும், கமலாம்பாள் சந்நிதியில் ஒன்றும் என மொத்தம் எட்டு துர்க்கை சந்நிதிகள் இவ்வாலயத்தில் இருப்பது இதன் சிறப்பம்சம். ஒன்பது கிரகங்களும் தியாகராஜ சுவாமிக்கு கட்டுப்பட்டு ஒரே வரிசையில் தென் திசையில் தியாகராஜ சுவாமி சன்னதி நோக்கி அமைந்துள்ளதை இத்திருத்தலத்தில் மட்டுமே காணலாம். நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் நிற்கும் கோலத்தில் காணப்படுவதும் இக்கோவிலில் காணும் ஒரு சிறப்பம்சம்.

  ஆலயத்திலுள்ள எல்லா சந்நிதிகளையும் பார்த்து வழிபட ஒரு நாள் போதாது. அவ்வளவு சந்நிதிகளைக் கொண்ட இவ்வாலயம், பஞ்சபூதத் தலங்களில் பிருத்வி தலம். வான்மீகநாதர் குடிகொண்டுள்ள கருவறை, திருமூலட்டானம் என்ற சிறப்புப் பெயருடன் விளங்கும் தலம். முசுகுந்த சக்கரவர்த்தி, இந்திரனிடம் இருந்து பெற்றுக்கொண்டுவந்த தியாகராஜ மூர்த்தம், வன்மீகநாதர் சந்நிதிக்கு வலதுபுறம் அருள்பாலிக்கும் தலம்.

  ஆலயத்திலுள்ள சிறப்பு வாய்ந்த சந்நிதிகள்

  வான்மீகநாதர் மற்றும் தியாகராஜர் சந்நிதிகள். வான்மீகநாதர் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார். இவர் சந்நிதிக்குச் செல்லும் வழியில் உள்ள கோபுரம் அழகியான் கோபுரம் எனப்படும். சுதையாலான துவாரபாலகர்கள், கோபுர வாயிலின் நடுவில் வடபால் அதிகாரநந்தி காட்சி. உள்ளே நுழைந்து வலமாக வரும்போது பிரதோஷநாயகர், சந்திரசேகரர், சோழமன்னன், மாணிக்கவாசகர், திரிபுரசம்ஹாரர், ஐங்கலக்காசு விநாயகர் முதலிய சந்நிதிகள் உள்ளன. வான்மீகநாதர் சந்நிதிக்கு வலதுபுறம் இத்தலத்தின் பிரதான மூர்த்தியான தியாகராஜர் சந்நிதி உள்ளது. தியாகராசாவின் பக்கத்திலுள்ள அம்மை, கொண்டி எனப்படுபவள். தியாகேசர் சந்நிதியில் வலதுபுறம் ஒரு பீடத்தில் உள்ள பெட்டகத்தில் வீதிவிடங்கராகிய மரகத சிவலிங்கமூர்த்தி உள்ளார். இவருக்குத்தான் தினமும் காலை மாலை வேளைகளில் அபிஷேகம் நடைபெறும். பிரதான தியாகராசாவின் முகம் மட்டுமே தெரியும். மார்கழி ஆதிரையில் தியாகராஜரின் இடப்பாதத்தையும், பங்குனி உத்திரத்தில் வலப்பாதத்தையும் கண்டு தரிசிக்க வேண்டும். மற்றைய அங்கங்கள் மூடிவைக்கப்பட்டிருக்கும். அவை மிகவும் ரகசியமானவையாகக் கருதப்படுகின்றன.

  கமலாம்பிகை சந்நிதி

  கமலாம்பிகை திருக்கோயில் மூன்றாவது பிராகாரத்தில் வடமேற்கு திசையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கு எழுந்துள்ள அம்பிகை சிரசில் சர்வேஸ்வரனைப் போன்று கங்கையையும், பிறையையும் சூடிக்கொண்டு யோக வடிவில் அமர்ந்திருக்கின்றாள். பராசக்தி பீடங்களுள் ஒன்று. அம்பாள் கோயிலின் மேற்கு மூலையில் அக்ஷரபீடம் உள்ளது. இதில் பீடமும் ஐம்பத்தோரு எழுத்துக்கள் எழுதப்பெற்ற திருவாசியுமே உள்ளன. நின்று தியானித்துச் செல்ல வேண்டும். ஆடிப் பூரம்,  ஆடி வெள்ளி, தை வெள்ளி ஆகிய தினங்களில் இங்குள்ள அம்பாளை வழிபட்டால் அருள் பெறலாம்.

  நிலோத்பலாம்பாள் சந்நிதி

  இங்கே அம்பாள் இரண்டு கரத்துடன் ஆதிசக்தியாக காட்சி தருகிறார். அல்லியங்கோதை என்று தமிழிலும், வடமொழியில் நீலோத்பலாம்பாள் என்றும் பெயர். வேறு எங்கும் காண இயலாத தனிச்சிறப்புடன் அம்பாள் காணப்படுகிறார். அம்பாளுக்கு இடதுபுறமாக ஒரு பெண் நின்ற நிலையில் ஒரு சிறுவனை தன் தோளின் மீது உட்கார வைத்துக்கொண்டு காட்சி அளிக்கிறாள். அவன் தலை மீது அம்பாள் தன் இடது கையை பிடிமானமாக வைத்துக்கொண்டிருப்பது போல, ஒரே கல்லில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. வலது கையில் ஒரு குவளை மலரை வைத்துக்கொண்டிருக்கிறாள். இவ்வாறான திருவுருவம் வேறு எங்கும் காண இயலாதது. கருவறையில் பள்ளியறையும் அமைந்து தனித்தன்மை பெற்று விளங்குகிறது.

  சிறப்பு வாய்ந்த மற்ற சந்நிதிகளைப் பற்றியும், திருவாரூர் கோவிலின் மற்ற சிறப்புகளைப் பற்றியும் அடுத்த பகுதியில் நாம் காணலாம்.
  (தொடரும்)

  நாவுக்கரசர் அருளிய பதிகம் - பாடியவர் திருஞான பாலசந்திரன்

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai