சர்வதோஷ பரிகாரத் தலம் வான்மீகிநாதர் கோவில், திருவாரூர் (பகுதி - 3)

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 87-வது தலமாக இருப்பது திருவாரூர்.
சர்வதோஷ பரிகாரத் தலம் வான்மீகிநாதர் கோவில், திருவாரூர் (பகுதி - 3)

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 87-வது தலமாக இருப்பது திருவாரூர். தமிழ்நாட்டிலுள்ள பெரிய கோவில்களில் திருவாரூர் கோவிலும் ஒன்றாகும். எல்லா வித தோஷங்களுக்கும் பரிகாரத் தலமாக இருக்கும் சிறப்புடைய தலம் திருவாரூர். 

இக்கோயிலில் சிறப்பு வாய்ந்த சில சந்நிதிகளைப் பற்றியும், திருவாரூர் கோவிலின் சில சிறப்புகளைப் பற்றியும் நாம் முந்தைய பகுதிகளில்  (பகுதி 1 மற்றும் பகுதி 2) (இரண்டுக்கும் தனித்தனி லிங்க் கொடுக்கவும்) பார்த்தோம். கோயிலில் உள்ள மேலும் சில சந்நிதிகளையும், சிறப்புகளையும் பற்றி இந்தப் பகுதியில் காணலாம்.

நினைக்க முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. தரிசிக்க முக்தி தரும் தலம் சிதம்பரம். இறக்க முக்தி தரும் தலம் காசி. பிறக்க முக்தி தரும் தலம் திருவாரூர். திருவாரூரிலுள்ள வான்மீகநாதர் ஆலயத்தில் சந்நிதிகளுக்கு குறைவே இல்லை. அவ்வளவு சந்நிதிகள் இவ்வாலயத்தில் உள்ளன. அவற்றுள் சிலவற்றைக் கீழே காணலாம்.

*

திருவாரூர் கோவில், தமிழ்நாட்டிலுள்ள பெரிய ஆலயங்களில் ஒன்றாகும். பழமை வாய்ந்த இத்தலம் எப்போது தோன்றியது என்பது தெரியாது, அப்பர் பெருமான் இத்தலத்தின் பெருமையைப் பற்றி தனது பதிகத்தில் (6-ம் திருமுறை 34-வது பதிகம்) குறிப்பிட்டு, இத்தலத்தில் இறைவன் குடி கொண்டது எந்நாளோ என்று வினவுவதின் மூலமாக கூறுகிறார். 

ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ (6-34-1)
 ஓருருவே மூவுருவ மான நாளோ
கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ
 காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும் விண்ணுந் தெரித்த நாளோ
 மான்மறிகை யேந்தியோர் மாதோர் பாகந்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
 திருவாரூர் கோயிலாக் கொண்டநாளே 

பழமை மிக்க இக்கோவில் பெரியது, குளம் பெரியது, தேர் பெரியது, கீர்த்தியும் பெரியது. இங்குள்ள கோவில் 5 வேலி, கமலாலயம் குளம் 5 வேலி, செங்கழுநீர் ஓடை 5 வேலி என்பது ஒரு கணக்கு. 

திருவாரூர் கோவிலின் தல புராணம் கூறும் சிறப்புகளைப் பற்றி இந்தப் பகுதியில் காணலாம்.

பசுவுக்கு மனுநீதிச் சோழன் நீதி வழங்கியது

மனுநீதி கண்ட சோழன் இருந்த அரசாண்ட பதி திருவாரூர். இந்த மன்னனின் ஒரே மகன் தேர் ஏறி நகர் வலம் வரும்போது, துள்ளிச் சென்ற இளங்கன்று ஒன்று தேர்ச் சக்கரத்தில் அடிபட்டு இறந்தது. அக்கன்றின் தாய்ப்பசு, அரசன் மாளிகையை அடைந்து ஆராய்ச்சி மணியை அடித்தது. அரசன் மாளிகையை விட்டு வெளிவந்து தனது அமைச்சர் மூலமாக கன்று இறந்ததை கேட்டும், அதற்கு காரணம் தனது மகன் என்று அறிந்தும் வருந்தினான். கன்றை இழந்த பசுவுக்கு நீதி வழங்க தன் ஒரே மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்றான். இதனை அறிந்த திருவாரூர் இறைவன், பசுவின் கன்றையும் அரசு குமாரனையும் உயிர்ப்பித்து அருள்புரிந்த சிறப்பான தலம் இதுவாகும். இந்த வரலாற்றை விளக்கும் சிற்பங்கள் இக்கோவிலில் உள்ளன.

சுந்தரர் தனது கண் பார்வை பெற்றது

தேவார மூவரில் ஒருவரான சுந்தரரின் வாழ்க்கையின் பெரும் பகுதி இத்தலத்தில்தான் நிகழ்ந்தது. திருவாரூர் வந்து வான்மீகநாதரை வழிபட்டு இத்தலத்தில் தங்கி, இறைவன் திருவுளப்படி திருவாரில் வாழ்ந்துவந்த பரவையார் என்ற உருத்திர கன்னிகையை மணந்துகொண்டு வாழ்ந்து வந்தார். பிறகு ஒரு சமயம் தொண்டை நாட்டுத் தலங்களுக்குத் தலயாத்திரை சென்றபோது, திருவொற்றியூர் தலத்துக்கு வந்தார். இங்குள்ள சிவாலயத்தில் மலர் கைங்கர்யம் செய்துவந்த சங்கிலி நாச்சியார் என்ற பெண்ணைப் பார்ந்து மையல் கொண்டார். இறைவனை சங்கிலி நாச்சியாரிடம் தூது விட்டார். ஏற்கெனவே திருவாரூரில் பரவையாரை திருமணம் செய்துள்ளதைக் கேள்விப்பட்ட சங்கிலி நாச்சியார், தன்னை விட்டுப் பிரியமாட்டேன் என்று இத்தலத்திலுள்ள மகிழ மரத்தடியில் சத்தியம் செய்து கொடுக்கச் சொல்லி சுந்தரரை மணந்துகொண்டார். பிறகு ஒருநாள், திருவாரூர் தியாகேசர் நினைவுவர திருவொற்றியூரில் இருந்து புறப்பட்ட சுந்தரர், தான் கொடுத்த சத்தியத்தை மீறியதால் தன் இரு கண்களிலும் பார்வையை இழந்தார். பிறகு காஞ்சிபுரத்தல் பதிகம் பாடி ஒரு கண் பார்வை பெற்றார். மற்றொரு கண் பார்வை திருவாரூர் வந்து இத்தல இறைவன் மேல் ‘மீளா அடிமை’ என்று தொடங்கும் பதிகம் பாடியதும் கிடைத்தது. இத்தல இறைவன் வான்மீகநாதரையும், தியாகராஜரையும் வழிபட்டு வந்தால் கண் பார்வை கோளாறுகள் சரியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இறைவன், சுந்தரருக்காக திருவாரூர் வீதிகளில் நடந்து பரவையிடம் தூது சென்றது

திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரை சுந்தரர் மணந்துகொண்ட செய்தி அறிந்த பரவையார், சுந்தரர் மேல் கோபம் கொண்டார். திருவாரூர் திரும்பி வந்த சுந்தரரைப் பார்க்க மறுத்து, வீட்டினுள் நுழைய அனுமதியும் தர மறுத்தார். இதனால் மிகவும் மனம் வேதனைப்பட்ட சுந்தரர், இறைவன் உதவியை நாடினார். தம்பிரான் தோழர் என்று அறியப்பட்ட சுந்தரர், தியாகராஜப் பெருமானிடம் சென்று தனக்கும் பரவையாருக்கும் இடையில் ஏற்பட்ட பிரிவைப் பற்றி கூறி தனது சார்பாக பரவையாரிடம் தூது சென்று சமரசம் செய்து வைக்கும்படி வேண்டினார். இறைவன், சுந்தரர் முறையிட்டதின்படி திருவாரூர் வீதிகளில் இருமுறை நள்ளிரவில் நடந்துசென்று பரவை நாச்சியார் வீடு அடைந்து, தான் சுந்தரரின் தூதுவனாக வந்திருப்பதைக் குறிப்பிட்டு பரவை நாச்சியாரை சமாதானம் செய்து, தம்பதிகள் இருவரையும் சேர்த்துவைத்தார். தியாகேசர் திருவாரூர் வீதிகளில் நடந்து சென்ற பெருமையைப் பெற்றது இத்தலம். மன வேற்றுமை காரணமாகப் பிரிந்து வாழும் தம்பதியர் இத்தலம் வந்து இறைவனை வழிபட்டால் மனமொத்து சேர்ந்து வாழ்வார்கள்.

சுந்தரர் திருத்தொண்டர் தொகை பதிகம் பாடியது

சுந்தரர் ஒருமுறை திருவாரூர் ஆலயத்துக்குள் தேவாசிரிய மண்டப வாயிலாக உள் நுழைந்தார். மண்டபத்தில் வீற்றிருந்த சிவனடியார்களை மதிக்காமல் உள்ளே செல்ல முற்பட, சுந்தரருடன் அடியார்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இறைவன் அவர்கள் முன் தோன்றி, சுந்தரருக்கு அடியார்கள் பெருமையைப் பற்றிக் கூறி, அடியார்களுக்குத் தொண்டு செய்வது தன்னை வழிபடுவதற்கு ஒப்பாகும் என்று கூறினார். அடியார்கள் பெருமையைப் பற்றி உலகமறிய பதிகம் பாடச் சொல்லி சுந்தரருக்கு இறைவன் கட்டளையிட்டார். என்னவென்று பாடுவேன் ஐயனே என்று சுந்தரர் பணிவுடன் வினவ, இறைவனே தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என அடியெடுத்துக் கொடுக்க, சுந்தரர் தேவாசிரிய மண்டபத்தில் அமர்ந்து திருத்தொண்டர் தொகை அருளிச் செய்தார். பெரியபுராணம் பாட சேக்கிழாருக்கு இந்தத் திருத்தொண்டர் தொகை என்ற பதிகமே மூலமாக அமைந்தது.

திருவாதிரை சிறப்புகளைப் பற்றி சம்பந்தரிடம் அப்பர் கூறி விளக்குவது

பழங்காலத்தில், திருவாதிரைத் திருவிழா பெரும் சிறப்புடன் இத்தலத்தில் கொண்டாடப்பட்டு வந்தது. அவ்விழாவை அப்பர் சுவாமிகள் கண்டுகளித்து, அதன் சிறப்பை ‘முத்து விதானம்’ என்று தொடங்கும் ஒரு தனித் திருப்பதிகத்தினால் ஞானசம்பந்தருக்குக் கூறி அருளியிருக்கிறார்கள். திருவாரூரில் இருந்து திருப்புகலூர் வந்த திருநாவுக்கரசர், அங்கு திருஞானசம்பந்தரைச் சந்திக்கிறார். திருவாரூர் பற்றி தனக்குக் கூறும்படி சம்பந்தர் வேண்ட, திருவாரூரில் நடைபெறும் திருவாதிரை திருவிழாவைப் பற்றி விரிவாகக் கூறுகிறார்.

முத்துவிதான மணிப்பொற் கவரி முறையாலே
பத்தர்களோடு பாவையர் சூழப் பலிப் பின்னே
வித்தகக்கோல வெண் தலைமாலை விரதிகள்
அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.

பங்குனி உத்திரத் திருவிழா - இது மாசி மாதம் கொடியேறி, பங்குனி உத்திர நட்சத்திரத்தில் தீர்த்தவாரி நடைபெறும் திருவிழாவாகும். இவ்விழா நினைவுக்கு வரவே, ஒற்றியூரிலிருந்த சுந்தரமூர்த்தி நாயனார், தான் கொடுத்த சத்தியத்தையும் மறந்து திருவாரூர்க்குப் புறப்பட்டார் என்று பெரியபுராணம் கூறுகின்றது. அதனால், இந்த இரு திருவிழாக்களும் பழங்காலம் முதல் நடந்துவரும் சிறப்புடையவை என்பதை நன்கு அறியலாம்.

‘திருவாரூர்த் தேரழகு’ என்னும் உலக வழக்கு இவ்வூர்த் தேரின் சிறப்பைத் தெரிவிப்பதாகும். இன்னிசை மாமணிகள் என்று போற்றப்படுகின்ற தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகிய மூவரும் அவதரித்த தலம் திருவாரூர்.

இவ்வளவு சிறப்புகளைப் பெற்ற திருவாரூரிலுள்ள இக்கோவில் மூன்று பிராகாரங்களையும் நான்கு கோபுரங்களையும் கொண்டு பெரிய கோவிலாகத் திகழ்கிறது. வான்மீகநாதருக்கும், தியாகராஜருக்கும் இடையே ஐங்கலக்காசு விநாயகர் காட்சி தருகிறார். சோழ மன்னன் ஒருவன் ஐந்து கலம் பொற்காசுகள் கொண்டுவந்து இந்த விநாயகரை வடித்தான் என்பது வரலாறு.

இக்கோவிலின் தெற்கு கோபுரம் அருகே சுந்தரருக்கும் சங்கிலி நாச்சியாருக்கும் தனிக்கோவில் இருக்கிறது. கமலாலயக் குளக்கரையில் மாற்றுரைத்த விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது.

சுந்தரர், விருத்தாசலத்தில் மணிமுக்தா நதியில் இட்ட பொன்னை, மிகப்பெரிய கமலாலயம் என்னும் திருக்குளத்திலிருந்து எடுத்துப் பரவையார்க்குக் கொடுத்த தலம் இதுவேயாகும். கமலாலயக் குளத்தில் இருந்து எடுத்த பொன்னின் மாற்று பார்த்துக் கூறியதால், இந்த விநாயகர் மாற்றுரைத்த விநாயகர் என்று போற்றப்படுகிறார்.

திருவாரூர் வான்மீகநாதர் ஆலயம் நாம் வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய கோவில்களில் ஒன்றாகும். திருநாவுக்கரசர் இயற்றிய போற்றித் திருத்தாண்டகம் என்ற பதிகத்தை தினமும் பாராயணம் செய்துவந்தால், நாம் வாழ்வில் எல்லா நலமும் பெறலாம்.

கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி
கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி
அற்றவர்கட் காரமுத மானாய் போற்றி
அல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவ ரொப்பில்லா மைந்தா போற்றி
வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி 

வங்கமலி கடல்நஞ்ச முண்டாய் போற்றி
மதயானை யீருரிவை போர்த்தாய் போற்றி
கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி
கொல்புலித் தோலாடைக் குழகா போற்றி
அங்கணனே அமரர்கள்தம் இறைவா போற்றி
ஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றி
செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி. 

மலையான் மடந்தை மணாளா போற்றி
மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி
நிலையாக என்னெஞ்சில் நின்றாய் போற்றி
நெற்றிமேல் ஒற்றைக்கண் ணுடையாய் போற்றி
இலையார்ந்த மூவிலைவே லேந்தீ போற்றி
ஏழ்கடலும் ஏழ்பொழிலு மானாய் போற்றி
சிலையாலன் றெயிலெரித்த சிவனே போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி.

பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி
பூதப் படையுடையாய் போற்றி போற்றி
மன்னியசீர் மறைநான்கு மானாய் போற்றி
மறியேந்து கையானே போற்றி போற்றி
உன்னுமவர்க் குண்மையனே போற்றி போற்றி
உலகுக் கொருவனே போற்றி போற்றி
சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி.

நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி
நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி
வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி
வெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி
துஞ்சிருளி லாட லுகந்தாய் போற்றி
தூநீறு மெய்க்கணிந்த சோதீ போற்றி
செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி. 

சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி
புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி
அங்கமலத் தயனோடு மாலுங் காணா
அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி. 

வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி
வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி
கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி
குரைகழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி
நம்புமவர்க் கரும்பொருளே போற்றி போற்றி
நால்வேதம் ஆறங்க மானாய் போற்றி
செம்பொனே மரகதமே மணியே போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி. 

உள்ளமா யுள்ளத்தே நின்றாய் போற்றி
உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி
வள்ளலே போற்றி மணாளா போற்றி
வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி
வெள்ளையே றேறும் விகிர்தா போற்றி
மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி
தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி. 

பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி
புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
தேவார்ந்த தேவர்க்குந் தேவே போற்றி
திருமாலுக் காழி யளித்தாய் போற்றி
சாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி
சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி
சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி.

பிரமன்தன் சிரமரிந்த பெரியோய் போற்றி
பெண்ணுருவோ டாணுருவாய் நின்றாய் போற்றி
கரநான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி
காதலிப்பார்க் காற்ற எளியாய் போற்றி
அருமந்த தேவர்க் கரசே போற்றி
யன்றரக்கன் ஐந்நான்கு தோளுந் தாளுஞ்
சிரம்நெரித்த சேவடியாய் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி.

சுந்தரர் அருளிய பதிகம் - பாடியவர்கள் குமாரவயலூர் பாலசந்திரன்,
முருக சுந்தர்

முத்துசாமி தீட்சிதர் அருளிய கமலாம்பா நவாவர்ணம் - பாடியவர் புவனேஸ்வரி விஸ்வநாதன், புதுதில்லி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com