சுடச்சுட

  

  சூரிய தோஷம் நீக்கும் பரிகாரத் தலம் குற்றம்பொறுத்தநாதர் கோவில், திருகருப்பறியலூர்

  By என்.எஸ். நாராயணசாமி  |   Published on : 27th July 2018 12:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  DSC_0240

   

  பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 27-வது தலமாக இருப்பது திருகருப்பறியலூர். இந்நாளில் இத்தலம் தலைஞாயிறு என்று வழங்குகிறது. 

  இறைவன் பெயர்: குற்றம்பொறுத்தநாதர், அபராதக்ஷமேஸ்வரர்

  இறைவி பெயர்: கோல்வளைநாயகி, விசித்ர பாலாம்பிகை

  இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும், சுந்தரர் பதிகம் ஒன்றும் என இரண்டு பதிகங்கள் உள்ளன. 

  எப்படிப் போவது

  மயிலாடுதுறை - மணல்மேடு சாலையில் அமைந்துள்ள பட்டவர்த்தி என்ற சிற்றூரில் இருந்து வடகிழக்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில், தலைஞாயிறு என்று கைகாட்டி உள்ள இடத்தில், வலதுபுறம் பிரிந்து செல்லும் சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம். வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

  ஆலய முகவரி

  அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோவில்
  தலைஞாயிறு, தலைஞாயிறு அஞ்சல்,
  இளந்தோப்பு வழி,
  மயிலாடுதுறை வட்டம்,
  நாகப்பட்டிணம் மாவட்டம் - 609 201.

  இவ்வாலயம் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

  இத்தலம் இந்நாளில் தலைஞாயிறு என்று வழங்கப்படுகிறது. ஊரின் பெயர் திருக்கருப்பறியலூர் என்றாலும் இங்குள்ள ஆலயம் கொகுடிக்கோயில் என்று பெயர் பெறும். கொகுடி என்பது ஒருவகை முல்லை. முல்லையை தலவிருட்சமாகப் பெற்ற கோயில் ஆதலால் கொகுடிக்கோயில் எனப்பெயர் பெற்றது. சீர்காழிக்கு மேற்கில் இருப்பதால் மேலைக்காழி என்றும், சூரியன் வழிபட்டதால் தலைஞாயிறு என்றும், ஆதித்யபுரி என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது.

  சூரியன் தான் பெற்ற சாபத்தில் இருந்து விடுபட பல சிவஸ்தலங்களில் பெருமானை வழிபட்டான். அவ்வாறு சூரியன் வழிபட்ட தலங்கள் யாவும் சூரிய தோஷ பரிகாரத் தலங்களாக போற்றப்படுகின்றன. அவ்வகையில், திருக்கருப்பறியலூர் தலமும் சூரிய தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது. ஜாதக ரீதியாக சூரிய தோஷம் உள்ளவர்கள் இத்தலம் வந்து இறைவனை வழிபடுவதன் மூலம் பலன் பெறலாம்.

  தருமபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இவ்வாலயம், கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. உள்மண்டபம் வெளவால் நெத்தி மண்டப அமைப்பில் காணப்படுகிறது.

  மூலவர் குற்றம்பொறுத்தநாதர் சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கியும் அம்பாள் கோல்வளைநாயகி, தெற்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். கருவறை சுற்றுப் பிராகாரத்தில் விநாயகர், லிங்கோத்பவர், துர்க்கை மற்றும் பிரம்மா காணப்படுகின்றனர்.

  வெளிப் பிராகாரத்தில் சீர்காழியில் இருப்பதுபோல உயர்ந்த தனிக்கோயிலாக சட்டைநாதர் சந்நிதி உள்ளது. மேலேறிச் சென்று தோணியப்பரைத் தரிசித்து அதற்கும் மேலே சென்று சட்டைநாதரைத் தரிசிக்க செங்குத்தான மரப்படிகளை ஏற வேண்டும். தோணியப்பர் சந்நிதியை இத்தலத்தில் கர்ப்பஞானேஸ்வரர் கர்ப்பஞானபரமேஸ்வரி சந்நிதி என்றழைக்கின்றனர். தலமரமான கொகுடிமுல்லை, லிங்கோத்பவருக்கு எதிரில் காணப்படுகிறது. 

  ஒருமுறை இந்திரன் இறுமாப்புடன் கயிலைக்குச் சென்றான். அப்பொழுது இறைவர் பூதவடிவாய் அவன்முன் தோன்றினார். வந்திருப்பது இறைவன் என்று அறியாமல் இந்திரன் அவர் மீது வச்சிராயுதத்தை எறிந்தான். அதன்பின் இறைவர் என்று அறிந்து தன் பிழையைப் பொறுத்தருளுமாறு வேண்டினான். இறைவனும் இந்திரனின் குற்றத்தைப் பொறுத்தருளியதால் குற்றம்பொறுத்தநாதர் என்று இத்தல இறைவனுக்கு பெயர் ஏற்பட்டது என்று தல வரலாறு கூறுகிறது. 

  மேலும் இத்தல இறைவன் அனுமனால் பூஜிக்கப்பட்டவர். தான் லிங்கத்தைக் கொண்டு வருவதற்குள் சீதை மணலால் லிங்கம் செய்து ராமேஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்ததை அறிந்த அனுமன் வருந்தினான். அத்துடன் அந்த லிங்கத்தை தன் வாலால் கட்டி இழுத்தான். ஆனால் முடியவில்லை. இப்படி செய்ததால் அனுமனுக்கு சிவ அபராதம் ஏற்பட்டது. இந்த தோஷத்தைப் போக்கிக்கொள்ள சிவனை நோக்கி தவம் செய்யும்படி அனுமனுக்கு ராமர் ஆலோசனை கூறினார். அனுமனும் அவ்வாறே செய்ய, சிவன் தோன்றி அனுமனிடம் தலைஞாயிறு எனப்படும் இத்தலம் சென்று வழிபாடு செய்தால் தோஷம் விலகும் என்று அருள்பாலித்தார். அதன்படி, அனுமனும் தலைஞாயிறு வந்து வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார். அதன் பிறகு சிவனின் கருணைக்கு வியந்து இத்தலத்தின் வடகிழக்கில் தன் பெயரால் ஒரு லிங்கம் அமைத்து அதை வழிபாடு செய்ய ஆரம்பித்தார். இத்தலம் தற்போது திருக்குரக்கா என வழங்கப்படுகிறது.

  இத்தலத்தில் நாம் செய்யும் அறச்செயலகள் யாவும் பதின்மடங்காக பெருகும் என்று வசிஷ்டருக்கு பிரம்மா கூறியதாக தல புராணம் குறிப்பிடுகிறது. வசிஷ்டரும் இத்தலத்தில் லிங்கம் அமைத்து வழிபட்டு உய்வுற்றார் என்று தல புராணம் மேலும் குறிப்பிடுகிறது. 

  சுந்தரர் தனது பதிகத்தில் இக்கோவிலை கொகுடிக்கோயில் என்று ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிட்டுள்ளனர். தனது பதிகத்தின் முடிவில், அவரது பதிகத்தை தினமும் பாடுவர்களுக்கு அவர்கள் செய்த வினை யாவும் வாடுவது மிகவும் எளிது என்று குறிப்பிடுகிறார். 

  நலந்தரு புனற்புகலி ஞானசம்பந்தன்
  கலந்தவர் கருப்பறியன் மேய கடவுள்ளைப்
  பலந்தரு தமிழ்க்கிளவி பத்துமிவை கற்று
  வலந்தரும் அவர்க்கு வினை வாடல் எளிதாமே.

  சுந்தரர் அருளிய பதிகம் - பாடியவர் இரா. குமரகுருபரன் ஓதுவார்

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai