நீண்ட ஆயுளைப் பெற அமிர்தகடேஸ்வரர் கோவில், திருக்கடவூர்

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 47-வது தலமாக இருப்பது திருக்கடவூர்.
நீண்ட ஆயுளைப் பெற அமிர்தகடேஸ்வரர் கோவில், திருக்கடவூர்

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 47-வது தலமாக இருப்பது திருக்கடவூர். யம பயம் நீக்கும் தலங்கள் பலவற்றுள் சிறப்பானதாகக் கருதப்படுவது திருக்கடவூர்.

இறைவன் பெயர்: அமிர்தகடேஸ்வரர்

இறைவி பெயர்: அபிராமி

இத்தலத்துக்கு, சம்பந்தர் பதிகம் ஒன்று, அப்பர் பதிகங்கள் மூன்று, சுந்தரர் பதிகம் ஒன்று என ஐந்து பதிகங்கள் உள்ளன. 

எப்படிப் போவது
மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலை மார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மீ. தூரத்தில் திருக்கடவூர் இருக்கிறது. சீர்காழி - தரங்கம்பாடி சாலை வழியில் சீர்காழியில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. இது ஒரு அட்டவீரட்டானத் தலம். திருக்கடவூர் மயானம் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்
திருக்கடவூர், மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் - 609 311.

இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும் யம பயம் நீக்கும் தலங்கள் திருக்கடவூர், திருவீழிமிழலை, திருவையாறு, திருவெண்காடு, திருவைகாவூர், திருவாஞ்சியம் ஆகியவை ஆகும். இவற்றுள் திருக்கடவூர் மிகவும் பிரசித்தி பெற்ற தலம்.

புராண வரலாறு 

பிரம்மா, ஞானோபதேசம் பெற விருப்பம் கொண்டு சிவபெருமானை வழிபட்டார். சிவபெருமான் வில்வ விதை ஒன்றைக் கொடுத்து, அவ்விதை நடப்பட்ட ஒரு முகூர்த்தத்துக்குள் எந்த இடத்தில் முளை விடுகிறதோ அங்கு தன்னை வழிபடும்படி தெரிவிக்கிறார். பிரம்மாவும் அந்த விதையை பல இடங்களில் நட்டுப் பார்த்து, திருக்கடவூரில் முளைவிடக் கண்டார். இதனால் இத்தலம் வில்வவனம் என்று பெயர் பெற்றது. 

பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதத்தை தேவர்கள் அசுரர்களுக்குக் கொடுக்க விரும்பாமல், அதை குடத்தில் (கடம்) எடுத்துக்கொண்டு செல்லும்போது, வழியில் நீராடுவதற்காக இத்தலத்தில் குடத்தை இறக்கி வைத்துவிட்டு நீராடச் சென்றனர். திரும்பி வந்து குடத்தை எடுக்க முயற்சி செய்தபோது குடத்தை எடுக்க முடியவில்லை. குடம் பூமியில் வேர் ஊன்றிவிட்ட இடம் ஆதலால், இத்தலம் திருக்கடவூர் என்று பெயர் பெற்றது. அந்தக் குடம் லிங்க வடிவில் நிலைத்து நின்றபடியால், இத்தல இறைவன் அமிர்தகடேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

சிவபெருமானின் அட்டவீரட்டானத் தலங்களில் திருக்கடவூர் ஒன்றாகும். இங்குள்ள அம்பாள் வழிபாட்டில் தன்னை மறந்து, அமாவாசை தினத்தை பௌர்ணமி என்று சொல்லி அரச கோபத்துக்கு ஆளாகி அபிராமி அந்தாதி பாடி, முழுமதியை வானத்தில் காட்டி அரசனை மெய்சிலிர்க்க வைத்த அபிராம பட்டர் அவதரித்த தலம் இதுவாகும். சப்த கன்னிகள், துர்க்கை முதலானோர் வழிபட்டுப் பேறு பெற்ற தலம். 

இத்தலத்தில் அவதரித்த குங்கிலியக்கலய நாயனார் வறுமையில் அவதியுற்றபோதும், தம் மனைவியின் தாலியை விற்றுக் குங்கிலியத் தொண்டைச் செய்து 63 நாயன்மார்களில் ஒருவராகும் பேறு பெற்றார். காரி நாயனார் அவதரித்து அரசனிடம் சென்று பொருள் பெற்று, பல திருப்பணிகள் புரிந்தும் வீடுபேறு அடைந்த தலமும் இதுவே. சைவப் பெருமக்களாகிய அப்பரும், சம்பந்தரும் இத்தலத்துக்கு ஒருசேர எழுந்தருளி, இத்தல இறைவனை வழிபட்டு குங்கிலியக் கலைய நாயனார் திருமடத்தில் தங்கியிருந்த பெருமையும் இத்தலத்தின் பெருஞ்சிறப்பாகும். 

இவ்வாலயத்தில் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது இவ்வாலயத்தில் காணப்படும் கல்வெட்டு ஒன்றில், இவ்வூருக்கு அருகிலுள்ள எருக்காட்டுச்சேரி என்ற கிராமமே இக்கோயிலுக்குச் சொந்தம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.. இந்த ஆலயத்துக்கு அளிக்கப்பட்ட நிவந்தங்கள், நுந்தா விளக்குகளைப்போல் வேறு எங்கும் அளிக்கப்பெறவில்லை. இந்த நுந்தா விளக்குப்புறங்கள் பெரும்பான்மையும் இந்த எருக்கட்டாஞ்சேரி மணற்குன்றுகளைத் திருத்தி நிலமாக அளிக்கப் பெற்றவையாகும். அப்பர் பெருமானும், தீபம் ஏற்றி வழிபடுவதைப் பற்றி தனது பதிகத்தில் (4-ம் திருமுறை, 31-வது பதிகம், 4-வது பாடல்) குறிப்பிடுகிறார். இவ்வாலயத்தில் விளக்குகளையும் தூபங்களையும் முறைப்படி இட்டு வழிபடும் அடியவர்களுக்கு, இத்தல இறைவன் கருப்பங்கட்டிபோல இனிப்பவராவார் என்று கூறுகிறார்.

ரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்த ராகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங் கார்வத்தை யுள்ளே வைத்து
விரும்பி நல் விளக்குத் தூபம் விதியினால் இடவல்லார்க்குக்
கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே.

ஆலயத்தின் கிழக்கிலும் மேற்கிலும் ராஜகோபுரங்கள் இருந்தாலும், மேற்கில் உள்ள ஏழு நிலை ராஜகோபுரம்தான் பிரதான வாயிலாகும். கருவறையில் உள்ள அமிர்தகடேஸ்வரர் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை சுற்றுப் பிராகாரத்தில் முருகன், லட்சுமி, சோமஸ்கந்தர், நடராஜர், வில்வனேஸ்வரர், பைரவர், பஞ்சபூத லிங்கங்கள், சூரியன், அகத்தியர், சப்த கன்னியர்கள், 63 நாயன்மார்கள் சந்நிதிகள் உள்ளன. இவ்வாலயத்தில் நவக்கிரக சந்நிதி இல்லை. 

இறைவன் கருவறைக்கு முன்னால் உள்ள மண்டபத்தில், காலசம்ஹார மூர்த்தியின் செப்புச் சிலை உருவம் பார்த்து தரிசிக்க வேண்டிய ஒன்றாகும். காலன் காலடியில் தலைகீழாக விழுந்து கிடக்கிறான். காலசம்ஹாரமூர்த்தி வலது காலை ஊன்றி இடது காலை உயர்த்தி எமனை உதைக்கும் நிலையில் காணப்படுகிறார். மார்க்கண்டேயர் அருகில் கூப்பிய கரத்துடன் நிற்கிறார். பிறகு எமனுக்கு மன்னிப்பு கொடுத்த சிவபெருமான், எமனை தன் சந்நிதிக்கு எதிரே இருக்கச் செய்துவிடுகிறார். எருமை வாகனத்துடன் கரம் கூப்பியவாறு நிற்கும் எமனுக்கு சிறு கோவில் உள்ளது. எமனுடைய பாசக்கயிறு பட்டதால் லிங்கத்தின் உச்சியில் ஒரு பிளவும், மேனியில் தழும்பும் காணப்படுகின்றன.

இக்கோவிலின் வெளிப் பிராகாரத்தில் கிழக்கு நோக்கியவாறு அன்னை அபிராமி சந்நிதி உள்ளது. சரஸ்வதி தேவிக்கும், அபிராமி பட்டருக்கும் அருள்புரிந்தவள் இந்த அன்னை அபிராமியே. இவ்வூரில் வாழ்ந்துவந்த பட்டர் ஒருவர், அன்னை அபிராமியின் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். பக்தி அதிகரிக்க உன்மத்த நிலையில் இருப்பார். அவ்வாறு இருந்த சமயம், ஒருமுறை தஞ்சை மன்னர் இரண்டாம் சரபோஜி இவ்வூர் வந்தபோது, இந்த பட்டரைப் பார்த்து இன்று என்ன திதி என்று கேட்கிறார். அன்னை நினைவிலிருந்த பட்டர் அமாவாசையை பௌர்ணமி திதி என்று தவறாகக் கூறிவிடுகிறார். 

பட்டரைப் பற்றி தவறான கருத்துகளை மன்னரிடம் கோவில் அர்ச்சகர்கள் ஏற்கெனவே கூறி இருந்தனர். இதனால் கோபமுற்ற மன்னர், அன்றிரவு பௌர்ணமியைக் காணாவிட்டால் பட்டருக்கு தண்டனை அளிக்கப்படும் என்று கூறிவிடுகிறார். பட்டர் அன்னை அபிராமி மீது 100 பாடல்கள் கொண்ட அந்தாதி பாட, அமாவாசை அன்று பௌர்ணமி தோன்றியது. 79-வது பாடலின்போது அன்னை அபிராமி தனது காதில் இருந்த தோடு ஒன்றைக் கழற்றி ஆகாயத்தில் வீச அது பௌர்ணமி இரவு பூர்ண சந்திரனாகக் காட்சி அளித்தது. இவ்வாறு பட்டருக்கு அருள் செய்த இந்த அன்னை அபிராமியை வழிபடுவோர் எல்லா நலங்களும் பெறுவர்.

திருப்புகழ் முருகன்

திருப்புகழில், இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார். இங்கு முருகப்பெருமான் சிறு பாலகன் வடிவில் பார்வதியின் வலப்பக்கம் தாயைத் தழுவியவாறு காட்சி தருவது காண வேண்டிய ஒரு காட்சியாகும்.

தல வரலாறு 
மிருகண்டு முனிவரும் அவரது மனைவியும் புத்திரப் பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்கள் பக்திக்கு மெச்சி இறைவன் அவர்கள் முன் தோன்றி, ஆயிரம் ஆண்டுகள் வாழும் துர்க்குணங்கள் நிறைந்த மகன் வேண்டுமா அல்லது 16 வயது வரை மட்டும் வாழும் தலைசிறந்த மகன் வேண்டுமா என்று கேட்க, மிருகண்டு தம்பதியினர் 16 வயது மகனே வேண்டும் என்று வரம் கேட்டனர். மிருகண்டு தம்பதியருக்கு இறைவன் அருளால் பிறந்த மார்க்கண்டேயர் சிறந்த சிவபக்தராக விளங்கினார். 

அவருக்கு 16 வயது நடக்கும்போது, அவரின் பெற்றோர் இறைவன் கூறியபடி விதிக்கப்பட்ட ஆயுள் 16 வயதுதான் என்பதை மார்க்கண்டேயருக்கு கூறினர். சிவபெருமானே அவரின் ஆயுளைக் காக்கமுடியும் என்று மார்க்கண்டேயர் ஒவ்வொரு சிவஸ்தலமாக தரிசித்து வரும்போது திருக்கடவூர் வந்து சேர்ந்தார். அவர் திருக்கடவூர் தலம் வந்தபோது, அவருடைய ஆயுள் முடியும் நாள் நெருங்கியது. எமன் தன் பணியை முடிக்கும் பொருட்டு பாசக்கயிற்றை மார்க்கண்டேயர் மீது வீசினான். எமனைக் கண்டு அச்சமுற்ற மார்க்கண்டேயர், தான் வழிபட்டுக்கொண்டிருந்த லிங்கத்தை ஆரத் தழுவிக்கொண்டார். எமனும் பாசக்கயிற்றை லிங்கத்துக்கும் சேர்த்து வீசினான். 

இறைவன் சிவபெருமான், தன்னுடைய பக்தனைக் காப்பாற்ற லிங்கத்திலிருந்து திரிசூலத்துடன் வெளிப்பட்டு, காலனைக் சூலாயுத்தால் கொன்று காலனுக்குக் காலனாக காலசம்ஹார மூர்த்தியாக விளங்கினார். பின்பு பூதேவி, பிரம்மா, மஹாவிஷ்ணு ஆகியோரின் வேண்டுதலுக்கு இணங்கி எமனை உயிர்ப்பித்து அருள்புரிந்தார் என்று தல புராணம் கூறுகிறது. சிவபெருமானின் எட்டு வீரச் செயல்களுள், காலனை கடிந்த இந்த வீரச்செயலும் ஒன்று.

தலத்தின் சிறப்பம்சம் 

கார்த்திகை மாத சோமவார நாள்களில், மூலவர் சந்நிதிக்கு எதிரில் உள்ள சங்கு மண்டபத்தில் வலம்புரி சங்குடன் கூடிய 1008 சங்குகள் வைத்து இறைவனுக்கு அபிஷேகம் நடைபெறும். அச்சமயத்தில் மட்டுமே இறைவன் திருமேனியை வஸ்திரம் ஏதுமின்றி தரிசிக்க முடியும். காலன் பாசக்கயிறு மேலே விழுந்ததால் ஏற்பட்ட அடையாளத் தழும்புகளும், காலனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு லிங்கத்திலிருந்து வெடித்துத் தோன்றியதால் லிங்கத்தின் உச்சியில் ஏற்பட்ட பிளவும் நன்றாகத் தெரியும். அதேபோல், முன் மண்டபத்தில் உள்ள காலசம்ஹார மூர்த்தியின் செப்புச் சிலை வடிவமும், சிவலிங்கம் இரண்டாகப் பிளந்து அதிலிருந்து திரிசூலம் ஏந்திய கையுடன் சிவபெருமான் வெளிப்படும்படி தத்ரூபமாக அமைந்துள்ளது. இந்த காலசம்ஹார மூர்த்திக்கு ஆண்டுக்கு 11 முறை மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அவ்வாறு அபிஷேகம் நடைபெறும்போது இறைவனின் திருமேனி அழகினைக் கண்டுகளிக்க முடியும். 
60-வது வயது தொடங்கும்போது உக்ரரத சாந்தியும், 61-வது வயது தொடக்கத்தில் சஷ்டியப்த பூர்த்தி சாந்தியும், 71-வது வயது தொடக்கத்தில் பீமரத சாந்தியும், 80-வது வயதில் சதாபிஷேகமும் செய்துகொள்கின்ற தம்பதிகளை இத்தலத்தில் நாம் நிறையப் பார்க்க முடியும். திருக்கடவூர் தலத்தில் இப்படிப்பட்ட சாந்திகள் செய்துகொள்வது காலங்காலமாக வழக்கத்தில் இருந்துவரும் ஒன்றாகும்.

எல்லோரும் மார்க்கண்டேயனைப்போல் என்றும் 16 வயதுடன் மரணத்தில் இருந்து தப்ப முடியாது. இருப்பினும், நாம் எதிர்கொள்ளும் மரணம் துன்பத்தைத் தராமல் இருக்க இத்தலத்து இறைவனை வணங்கி வழிபட்டு நலம் பெறுவோம்.
திருக்கடையூர் சென்று அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தையும், கடவூர் மயானத்திலுள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தையும் தரிசித்த பிறகு, அருகிலுள்ள கீழ்க்கண்ட மற்ற கோவில்களுக்கும் சென்று வரலாம்.

1. அனந்தமங்கலம்: திருக்கடையூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது அனந்தமங்கலம் ராஜகோபாலப் பெருமாள் கோவில். இக்கோவிலில் உள்ள த்ரிநேத்ர பஞ்சமுக ஆஞ்சநேயர் மிகவும் பிரசித்தி பெற்றவர்.

2. தில்லையாடி: திருக்கடையூரில் இருந்து கிழக்கே திருவிடைக்கழி செல்லும் பாதையில் சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது தில்லையாடி. இங்குள்ள சிவன் கோவில் பெரிய பிராகாரம், பெரிய கோபுரம் உடையதாகும். சுயம்பு லிங்க வடிவிலுள்ள இறைவனை திருமால் வழிபட்டுள்ளார்.

3. திருவிடைக்கழி: தில்லையாடியில் இருந்து மேற்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள திருவிடைக்கழி திருவிசைப்பா பாடல் பெற்ற முருகன் தலம். இக்கோவிலில் மூலவர் திருகாமேஸ்வரர். ஆயினும், பிரதான மூர்த்தியாகத் திகழ்பவர் இக்கோவிலில் உள்ள அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றுள்ள சுப்பிரமணியர்தான்.

4. தேவானூர்: தில்லையாடிக்கு அருகில் உள்ள தேவானூரில் உள்ள அருள்மிகு விசாலாட்சி உடனுறை விஸ்வநாத சுவாமி ஆலயமும் பார்க்க வேண்டிய ஒன்றாகும். இக்கோவிலில் உள்ள ஞானகுரு பகவான் சந்நிதியும் பார்த்து வழிபட வேண்டிய சிறப்புடையது. இங்குள்ள ஞானகுரு பகவான், இந்திரனால் வழிபடப் பெற்றவர்.

5. தரங்கம்பாடி: திருக்கடையூரில் இருந்து தென்கிழக்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள அளப்பூர் என்ற தேவார வைப்புத்தலம்தான் இன்றைய தரங்கம்பாடி. கடல் அலைகள் மோதி மோதி மிகவும் சிதிலம் அடைந்துள்ள இங்குள்ள சிவாலயத்தின் மூலவர் மாசிலாநாதர். கந்த சஷ்டி நாளில் திருவிடைக்கழி முருகன் சூரசம்ஹாரம் செய்யும் தலம்.

திருநாவுக்கரசு சுவாமிகள் இயற்றிய கீழே உள்ள பதிகம் 4-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த மாணிமார்க் கண்டேயற்காய்
இருட்டிய மேனி வளைவா ளெயிற்றெரி போலுங்குஞ்சிச்
சுருட்டிய நாவில்வெங் கூற்றம் பதைப்ப வுதைத்துங்ஙனே
உருட்டிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே.

பதத்தெழு மந்திர மஞ்செழுத் தோதிப் பரிவினொடும்
இதத்தெழு மாணித னின்னுயி ருண்ண வெகுண்டடர்த்த
கதத்தெழு காலனைக் கண்குரு திப்புன லாறொழுக
உதைத்தெழு சேவடியான் கடவூர் உறை உத்தமனே.

கரப்புறு சிந்தையர் காண்டற் கரியவன் காமனையும்
நெருப்புமிழ் கண்ணின னீள்புனற் கங்கையும் பொங்கரவும்
பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன் காலனைப் பண்டொருகால்
உரப்பிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே.

மறித்திகழ் கையினன் வானவர் கோனை மனமகிழ்ந்து
குறித்தெழு மாணித னாருயிர் கொள்வான் கொதித்தசிந்தைக்
கறுத்தெழு மூவிலை வேலுடைக் காலனைத் தானலற
உறுக்கிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே.

குழைத்திகழ் காதினன் வானவர் கோனைக் குளிர்ந்தெழுந்து
பழக்கமொ டர்ச்சித்த மாணித னாருயிர் கொள்ளவந்த
தழற்பொதி மூவிலை வேலுடைக் காலனைத் தானலற
உழக்கிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே.

பாலனுக் காயன்று பாற்கட லீந்து பணைத்தெழுந்த
ஆலினிற் கீழிருந் தாரண மோதி யருமுனிக்காய்ச்
சூலமும் பாசமுங் கொண்டு தொடர்ந்தடர்ந் தோடிவந்த
காலனைக் காய்ந்த பிரான் கடவூர் உறை உத்தமனே.

படர்சடைக் கொன்றையும் பன்னக மாலை பணிகயிறா
உடைதலை கோத்துழன் மேனிய னுண்பலிக் கென்றுழல்வோன்
சுடர்பொதி மூவிலை வேலுடைக் காலனைத் துண்டமதா
உடறிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே.

வெண்டலை மாலையுங் கங்கை கரோடி விரிசடைமேல்
பெண்டணி நாயகன் பேயுகந் தாடும் பெருந்தகையான்
கண்டனி நெற்றியன் காலனைக் காய்ந்து கடலின்விடம்
உண்டருள் செய்த பிரான் கடவூர் உறை உத்தமனே

கேழல தாகிக் கிளறிய கேசவன் காண்பரிதாய்
வாழிநன் மாமலர்க் கண்ணிடந் திட்டவம் மாலவற்கன்
றாழியு மீந்து வடுதிறற் காலனை யன்றடர்த்து
ஊழியு மாய பிரான் கடவூர் உறை யுத்தமனே

தேன்றிகழ் கொன்றையுங் கூவிள மாலை திருமுடிமேல்
ஆன்றிக ழைந்துகந் தாடும் பிரான்மலை யார்த்தெடுத்த
கூன்றிகழ் வாளரக் கன்முடி பத்துங் குலைந்துவிழ
ஊன்றிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே.

நாவுக்கரசர் அருளிய பதிகம் - பாடியவர் பழநீ.க.வெங்கடேன் ஓதுவார்

சம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் திருத்தணி சுவாமிநாதன்

அபயாம்பிகை பதிகம் - பாடியவர் மயிலாடுதுறை சிவகுமார்

அபிராமி அந்தாதி - பாடியவர் பாலசந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com