Enable Javscript for better performance
சனி, செவ்வாய் தோஷ பரிகாரத் தலம் ஜம்புகாரண்யேஸ்வரர் திருக்கோவில், கூந்தலூர்- Dinamani

சுடச்சுட

  

  சனி, செவ்வாய் தோஷ பரிகாரத் தலம் ஜம்புகாரண்யேஸ்வரர் திருக்கோவில், கூந்தலூர்

  By என்.எஸ். நாராயணசாமி  |   Published on : 19th November 2018 01:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  koonthalur2

   

  தேவார வைப்புத் தலங்களில் ஒன்றாக இருப்பது கூந்தலூர். திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற சிறப்புடைய ஸ்தலம்.

  இறைவன் பெயர்: ஜம்புகாரண்யேஸ்வரர்

  இறைவி பெயர்: ஆனந்தவல்லி

  திருநாவுக்கரசர் இயற்றியுள்ள ஒரு பதிகத்தில் இத்தலத்தைப் பற்றிய குறிப்பு வருகிறது. 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 9-ம் பாடலில் கூந்தலூரைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.

  எப்படிப் போவது?

  கும்பகோணம் - நாச்சியார்கோவில் - பூந்தோட்டம் சாலையில் எரவாஞ்சேரிக்கு அருகில் சாலை ஓரத்திலேயே கூந்தலூர் ஜம்புகாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவு. கருவிலிகொட்டிட்டை என்ற பாடல் பெற்ற தலம் இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

  ஆலய முகவரி

  அருள்மிகு ஜம்புகாரண்யேஸ்வரர் திருக்கோவில்

  கூந்தலூர், கூந்தலூர் அஞ்சல்

  எரவாஞ்சேரி வழி

  குடவாசல் வட்டம்

  திருவாரூர் மாவட்டம் - 609 501.

  இவ்வாலயம், தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

  திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகம் 9-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ள பாடல்.

  திண்டீச்சரம் சேய்ஞலூர் செம்பொன்பள்ளி    

      தேவூர் சிரபுரம் சிற்றேமம் சேறை      

  கொண்டீச்சரம் கூந்தலூர் கூழையூர் கூடல்

      குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு

  அண்டர் தொழும் அதிகைவீரட்டானம்

      ஐயாறு அசோகந்தி ஆமாத்தூரும்

  கண்டியூர்வீரட்டம் கருகாவூரும்

      கயிலாயநாதனையே காணலாமே.

  பொழிப்புரை

  திண்டீச்சரம், சேய்ஞலூர், செம்பொன்பள்ளி, தேவூர், சிரபுரம், சிற்றேமம், சேறை, கொண்டீச்சரம், கூந்தலூர், கூழையூர், கூடல், குருகாவூர் வெள்ளடை, குமரி, கொங்கு, தேவர்கள் தொழும் அதிகை வீரட்டம், ஐயாறு, அசோகந்தி, ஆமாத்தூர், கண்டியூர் வீரட்டம், கருகாவூர் ஆகிய இடங்களில் கயிலாயநாதனைக் காணலாம்.
  இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடல்களில் கூறப்பட்டுள்ள திண்டீச்சரம், கூழையூர், குமரி, கொங்கு, அசோகந்தி ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

  தலப் பெயர் காரணம்

  பண்டைய காலத்தில் நாவல் மரங்கள் அடர்ந்து இருந்த வனத்திடையே அமைந்த திருத்தலமானதால், ஆலய இறைவன் ஜம்புகாரண்யேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். மேலும், வனத்தில் நரி வழிபட்டதாலும் ஜம்புகாரண்யேஸ்வரர் என ஈசன் அழைக்கப்படுவதாகப் புராணங்கள் கூறுகின்றன. ஜம்பு என்றால் வட மொழியில் நாவல் மற்றும் நரி எனப் பொருள்படும். மேலும், ஆலயத்தின் வடகிழக்கு மூலையில் உள்ள தீர்த்தத்தில், சீதா பிராட்டியார் நீராடியபோது கூந்தலில் சில உதிர்ந்ததால், ஆலயம் அமைந்த சிற்றூர் கூந்தலூர் என அழைக்கப்படுவதாகத் தல புராணம் கூறுகிறது, மேலும், சீதா தேவியார் நீராடிய தீர்த்தம் அவரது திருநாமம் கொண்டு சீதா தீர்த்தம் எனவும் வழங்கப்படுகிறது. அரசலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள கூந்தலூர், ஒரு தேவார வைப்புத் தலமாக இருந்தாலும், இத்தலம் கூந்தலூர் முருகன் கோவில் என்றுதான் இப்பகுதி மக்களால் அறியப்படுகிறது.

  ரோமரிஷி என்பவர் அரசலாற்றின் தென்கரையில் தவம் செய்து, கூந்தலூர் ஆலய சிவபெருமான் அருளைப் பெற்றார். அவ்வாறு அவர் தவம் செய்துவரும் வேளையில் நாடிய அடியார்க்கெல்லாம் வறுமை நீங்கி நல்வாழ்வு பெற, தனது அஷ்டமா சித்தியால் தாடி வழியே பொன் வரவழைத்து அனைவருக்கும் அளித்து வந்தார். ஒரு சமயம், சிவனாரின் திருவிளையாடல் காரணமாக, அவரின் தாடி வழியே பொன் வருவது நின்றுவிட்டது. ரோமரிஷி சித்தர் உடனே, தனது தாடியை நீக்கிவிட்டு, நீராட மறந்து ஈசனை வழிபட கூந்தலூர் ஆலயம் சென்றடைந்தார். நீராடாமல் சிவனைத் தரிசிக்க ஆலயம் புகத்துணிந்த சிவ சித்தரான ரோமரிஷி சித்தரை, விநாயகரும் முருகனும் விரைந்து வந்து கோவிலுக்கு உள்ளே வரவிடாமல் தடுத்தனர்.

  ஆலய நுழைவாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன், இடது புறம் விநாயகரும், வலது புறம் வள்ளி தெய்வானை சமேத முருகனும் காட்சி அளிப்பது இந்தப் புராண வரலாற்றை வெளிப்படுத்துகிறது. சித்தரும் மனம் வருந்தி ஆலய கோபுர வாயிலிலேயே தியானித்திருக்க, சிவனும் தன் தரிசனத்தை ஆலயத்துக்கு வெளியே காட்டி புறத்தூய்மையைவிட அகத்தூய்மையே இன்றியமையாதது என மற்றவர்க்கும் உணர்த்தி, ரோமரிஷிக்கு அருள்புரிந்தார் என தல வரலாறு கூறுகிறது. இந்த ரோம மகரிஷி மேலே எண்ணெய் பூசி, அந்த எண்ணெய்யை நம் உடலில் பூசி வந்தால், சரும நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம்.

  திருப்புகழ் தலம் 

  ரோமரிஷி முனிவரைத் தடுக்க முருகப் பெருமான் வந்ததால், அவரின் சந்நிதி கோவிலின் முன்புறம் அமைந்துள்ளது. இத்தலத்தில் முருகன், குமரகுருபரர் என்ற பெயருடன் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். இவர் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றுள்ளார். திருப்புகழில் இத்தல முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. குமரகுருபரர் ஒரு திருமுகமும், நான்கு கரங்களும் கொண்டு தனது இரு தேவியருடன் மயிலின் அருகில் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். மயிலின் முகம் வலப்பகம் உள்ளது. சூரசம்ஹாரத்துக்கு முன்பே முருகனுக்கு இருந்த மயில் இது என்பர். இது தேவ மயில் என்றும் கூறுவர். ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும், ஈசான்ய பாகத்தில் அமைந்துள்ள இந்த முருகனின் சந்நிதிக்கு எதிரே, ஓரத்தில் சனி பகவானின் சந்நிதி அமைந்து, முருகப் பெருமானை சனி பகவான் வழிபடுவதுபோல் இருப்பது இவ்வாலயத்தின் தனிச் சிறப்பாகும். 

  குமரகுருமரரின் சந்நிதி, ரோம மகரிஷியின் ஜீவசமாதி மேல் அமைந்துள்ளது. ஜாதகக் கட்டத்தில் செவ்வாய்க்கு உரிய இடமான ஈசான்ய பாகத்தில், இவ்வாலயத்தில் செவ்வாய் கிரகத்தின் அதிபதியான முருகப் பெருமான் அமர்ந்திருப்பதால், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், இத்தலத்தில் குமரகுருபரரை வழிபட்டு நன்மை அடையலாம். மேலும், இவ்வாலயத்தில் நவக்கிரக சந்நிதி இல்லை எம்பது குறிப்பிடத்தக்கது. நவக்கிரகங்களில், செவ்வாயும் சனியும் எதிரிகள். ஆலயங்களில் நவக்கிரக மேடையில் செவ்வாயும் சனியும் எதிர் எதிரே இருப்பார்கள். இவ்வாலயத்தில், செவ்வாய் இடத்தில் அதன் அதிபதியான முருகப் பெருமானே வீற்றிருப்பதால், சனி பகவான் அவர் எதிரே இல்லாமல் சற்று ஓரமாகக் காட்சி தருகிறார். சனியின் சந்நிதியை ஈசான்ய பார்வையாகப் பார்த்துக்கொண்டிருக்கும் முருகன், செவ்வாய் கிரகத்தின் அதிபதியாவார். அதனால், சனி மற்றும் செவ்வாய் கிரகப் பாதிப்புகளுக்கு இத்தலம் ஒரு சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது. 

  ஜாதகத்தில் சனி, செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் இத்தலம் வந்து சனி மற்றும் செவ்வாய்க்கு உரிய வஸ்திரம் சார்த்தி, எள் மற்றும் துவரை சமர்ப்பித்து, வள்ளி தெய்வானை சமேத குமரகுருபரரையும், மூலவர் ஜம்புகாரண்யேஸ்வரரையும் வழிபட்டால் தகுந்த நிவாரணம் பெறலாம். திருமணத் தடை நீங்கும், தள்ளிப்போய்க்கொண்டு இருக்கும் திருமணம் விரைவில் நடைபெறும். 

  கோவில் அமைப்பு 

  ஆலயத்துக்கு ராஜகோபுரம் இல்லை. ஒரு நுழைவு வாயிலுடன் ஆலயம் அமைந்துள்ளது. நுழைவு வாயிலின் மேற்புறம் உள்ள சிறிய மண்டபத்துள் சிவன், பார்வதி, விநாயகர், முருகன் ஆகியோர், சுதை வடிவங்களில் காட்சி அளிக்கின்றனர். கருவறையில், இறைவன் ஜம்புகாரண்யேஸ்வரர் கிழக்கு நோக்கியும், அம்பாள் ஆனந்தவல்லி தெற்கு தோக்கியும் அருள்புரிகின்றனர். ஜம்புகாரண்யேஸ்வரர் நீண்டு உயர்ந்த பாணத்துடன் காட்சி அளிக்கிறார். மூலவர் சந்நிதியில், துவாரபாலகர்களுக்கு முன்புறம் திருநாராயணப் பெருமாள் அருள்காட்சி தருவது, இத்திருத்தலத்தின் மேலும் ஒரு அற்புத சிறப்பாகும். கருவறை பிராகாரம் வலம் வரும்போது, கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பாலசுப்ரமணியர், மகாலட்சுமி, துர்க்கை அம்மன் ஆகியோரைக் காணலாம். சண்டிகேஸ்வரருக்கும் தனி சந்நிதி உள்ளது. 

  பல்லவர் கால 16 பட்டை தாரா லிங்கத்தை பாலசுப்ரமணியர் சந்நிதி அருகே காணலாம். இந்த்த் தாரா லிங்கத்தை வணங்கிவந்தால், 16 வகை செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆலயத்தின் தீர்த்தங்களாக சீதா தீர்த்தமும், குமார தீர்த்தமும் உள்ளன. 

  முருகப் பெருமானின் அருள் பெற, ஒருமுறை கூந்தலூர் சென்று வாருங்கள்.

  நாவுக்கரசர் அருளிய பதிகம் - பாடியவர் இரா. குமரகுருபரன் ஓதுவார்

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai