சுடச்சுட

  

  குழந்தைப் பேறு பெற, கல்வியில் சிறக்க கயிலாசநாதர் திருக்கோவில், அயனீச்சுரம் (பிரம்மதேசம்)

  By என்.எஸ். நாராயணசாமி  |   Published on : 24th November 2018 05:52 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  DSCN2709

   

  ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் அயனீச்சரம் என்று பெயர் பெற்றிருந்த இந்தத் தேவார வைப்புத் தலம், இன்றைய நாளில் பிரம்மதேசம் என்று வழங்கப்படுகிறது.

  இறைவன் பெயர்: கயிலாசநாதர்

  இறைவி பெயர்: பெரியநாயகி

  எப்படிப் போவது?

  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் என்ற ஊரில் இருந்து வடக்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது. அம்பாசமுத்திரத்தில் இருந்து சென்றுவர நகரப் பேருந்து வசதி மற்றும் ஆட்டோ, வாடகைக் கார் வசதியுள்ளது.

  ஆலய முகவரி

  அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோவில்

  பிரம்மதேசம்

  பிரம்மதேசம் அஞ்சல்

  அம்பாசமுத்திரம் வட்டம்

  திருநெல்வேலி மாவட்டம் - 627 414.

  இவ்வாலயம், தினமும் காலை 7.30 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

  திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 8-வது பாடலில், இந்த அயனீச்சுரம் வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இப்பதிகப் பாடலில் ‘ஈச்சுரம்’ என வரும் தலங்களை வகுத்து, அப்பர் அருளிச் செய்துள்ளார்.

  நாடகம் ஆடிடம் நந்திகேச்சுரம் மாகாளேச்சுரம்

      நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன் கான

  கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம்

      குக்குடேச்சுரம் அக்கீச்சுரம் கூறுங்கால்

  ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம் ‘அயனீச்சுரம்’

      அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அந்தண் கானல்

  ஈடுதிரை இராமேச்சுரம் என்று என்று ஏத்தி

      இறைவன் உறை சுரம்பலவும் இயம்புவோமே.

  பொழிப்புரை

  கூத்தப்பெருமானது இடமாகிய நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகேச்சுரம், நாகளேச்சுரம், நன்மை பொருந்திய கோடீச்சரம், கொண்டீச்சரம், திண்டீச்சரம், குக்குடேச்சுரம், அக்கீச்சரம் என்று இவற்றைக் கூறுமிடத்து, உடன்வரும் ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், ‘அயனீச்சுரம்’ அத்தீச்சுரம், சித்தீச்சுரம், அழகிய குளிர்ந்த கடற்கரையில் முத்து பவளம் முதலியவற்றைக் கொணர்ந்து போடும் திரைகள் சூழ்ந்த இராமேச்சுரம் என்றெல்லாம் இறைவன் தங்குகின்ற ஈச்சுரம் பலவற்றையும் கூறி அவனைப் புகழ்வோமாக. 
  இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகளேச்சுரம், கோடீச்சுரம், திண்டீச்சுரம், குக்குடேச்சுரம், அக்கீச்சுரம், ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அத்தீச்சுரம் ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

  தல வரலாறு 

  பிரம்மதேசம் ஊரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள திருவாலீஸ்வரம் என்ற ஊரில், ராஜராஜ சோழன் கட்டிய திருவாலிநாத சுவாமி கோவில் உள்ளது. அந்தக் கோவிலுக்கு ராஜராஜசதுர்வேதிமங்கலம் என்றும் அயனீச்சரம் என்றும் அக்காலத்தில் பெயர் பெற்றிருந்த இன்றைய பிரம்மதேசம் ஊரை, அந்தணர்களுக்குத் தானமாகத் தந்ததாக வரலாறு குறிப்பிடுகிறது. சோழர்கள் காலத்தில் மிகப் புகழ்பெற்று விளங்கிய பிரம்மதேசம், மிகவும் வளமான ஊர் என்பதால், அடிக்கடி படையெடுப்புகளும், கள்வர்கள் தொந்தரவும் அதிகமாக இருந்தது. இவ்வூர் மக்களின் பாதுகாப்புக்காக, ராஜராஜ சோழன் தன்னுடைய படை வீரர்கள் நாலாயிரம் பேரை இங்கு காவல் வைத்திருந்தான். அந்த வீரர்கள் வழிபட்ட துர்க்கைக்கு, நாலாயிரத்தம்மன் என்றே பெயர். இந்த நாலாயிரத்தம்மன் கோயில், கயிலாசநாதர் கோயிலை ஒட்டியே காணப்படுகிறது. சரித்திர காலங்களில், இத்தலத்தில் உள்ள கோயில், ஒரு போர்க்கால அரணாக இருந்துள்ளது. சுற்றிலும் உள்ள நீண்ட மதில்சுவர்கள், மேல்பாகம் சுமார் 2.5 அடி அகலம் உள்ளது. இது, ஆள்கள் நடமாடவும், வரும் பகைவர்களைக் கண்காணிக்கவும் உபயோகப்பட்டது. ஆலயத்தின் 7 நிலை ராஜகோபுரத்துக்கு மேலே செல்ல படிகள் உண்டு.

  பிரம்மாண்ட புராணத்தில், பிரம்மதேசம், சிவசைலம் மற்றும் அருகில் உள்ள திருவாலீஸ்வரம் ஆகிய மூன்று தலங்களிலும் சுயம்புவாகத் தோன்றப்போவதாக அத்திரி முனிவரிடம் சிவபெருமான் கூறியதாக்க் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டிருந்த பிரம்மனின் பேரனான உரோமச முனிவர், தனது தோஷம் நீங்க பல இடங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு வந்தார். இலந்தை மரங்கள் நிறைந்த வனமாக இருந்த இப்பகுதியில், ஓர் இலந்தை மரத்தின் அடியில் சுயம்பு மூர்த்தியாக இறைவன் இருந்ததைக் கண்டு, இவ்விடத்தில் தீர்த்தம் ஒன்றை உருவாக்கி, இறைவனை அங்கேயே பிரதிஷ்டை செய்து பூஜிக்க, அவருக்குப் பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவபெருமான் அருள் செய்தார். உரோமச முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன், இத்தலத்தில் கயிலாசநாதராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 

  கோவில் அமைப்பு 

  தாமிரபரணி மஹாத்மியத்தில் அயனீஸ்வரம் என்று குறிப்பிடப்பட்டு, இன்றைய நாளில் பிரம்மதேசம் என்று வழங்கும் இத்தலத்தில் உள்ள கயிலாசநாதர் ஆலயம், கருணையாற்றின் தென்கரையில் ஏழு நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்துடன் காணப்படுகிறது. கோபுரத்துக்கு வெளியே பெரிய தெப்பக்குளம் காட்சி தருகிறது. ராஜகோபுரத்தின் முழு உருவ நிழலும், எதிரே உள்ள தெப்பக்குளத்தில் விழும்படியாக அமைக்கப்பட்டிருப்பது, கட்டடடக் கலையின் சிறப்பை பறைசாற்றுவதாக உள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்நவுடன், நாம் காண்பது மரத்தால் செய்யப்பட்டதைப் போன்ற நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட கல்லால் ஆன கூரையை உடைய முகப்பு மண்டபம். முதன்முதலாகப் பார்ப்பவர்களுக்கு ஒரு கணம் அது மரக்கூரையோ என்ற ஐயம் கண்டிப்பாக எழும். ஏனெனில், மரத்தில் செய்யப்பட்டதுபோல, அத்தனை நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டு கல்லால் ஆனதாக இந்தக் கூரை அமைக்கப்பட்டுள்ளது. அதையடுத்து வசந்த மண்டமும், ஒரே கல்லால் ஆன சலங்கை, சங்கிலி மற்றும் ஆபரணங்கள் அணிந்த நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட நந்திகேஸ்வரர் திருவுருவத்தைக் காணலாம். 

  கோபுர வாயில் வழியே நுழைந்தவுடன், வலது புறத்தில் 20 யாளிகள் தாங்கி நிற்கும் தூண்கள் கொண்ட திருவாதிரை மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில், ஒரு தூணில் ராமர் அம்போடு மறைந்திருக்கும் காட்சியும், மற்றொரு தூணில் வாலியும் சுக்ரீவனும் சண்டையிடும் காட்சியும் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. ராமர் சிலை செதுக்கப்பட்டுள்ள தூண் அருகே இருந்து பார்த்தால், வாலி-சுக்ரீவன் செதுக்கப்பட்ட தூணும், அவர்களது உருவமும் நன்கு புலப்படும். அதே நேரம், வாலி-சுக்ரீவன் உருவம் பொறித்த தூண் அருகே இருந்து பார்த்தால், ராமர் இருக்கும் தூண் தெரியாது. இந்த அற்புதமான சிற்பக் கலைத் திறன், ஒவ்வொருவரும் பார்த்து மகிழ வேண்டிய காட்சியாகும்.

  இத்தலத்தில் உள்ள நடராஜர், புனுகு நடராஜர் என்று அழைக்கப்படுகிறார். இவர் அருகில் வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர், அம்மை சிவகாமி மற்றும் மாணிக்கவாசகர் சிலாவுருவங்களும் உள்ளன. இந்த நடராஜருக்கு, வருடத்தில் மார்கழி மாத திருவாதிரை அன்று மட்டும்தான் அபிஷேகம். மற்ற நாள்களில் இவருக்கு வெறும் புனுகுக்காப்புதான் சார்த்தப்படுகிறது.

  உள்ளே கருவறையில், மூலவர் கயிலாசநாதர் சுயம்பு லிங்க உருவில் காட்சி அளிக்கிறார். கருவறைச் சுற்றில் வல்லப கணபதி, முருகன், சப்தமாதர்கள், தட்சிணாமூர்த்தி, காசிவிஸ்வநாதர், கோமதி சங்கரர், பாலசுப்பிரமணியர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகியோரைக் காணலாம். இத்தலத்தின் தலவிருட்சம், இலந்தை மரம். இலந்தை மரத்தின் அடியில், பத்ரிவனேஸ்வரர் என்ற இலந்தையடிநாதருக்கு இங்கு தனிச் சன்னதி அமைந்துள்ளது. குழந்தைப்பேறு விரும்பி வரும் தம்பதிகள், தாமிரபரணி ஆற்றில் நீராடிவிட்டு, இலந்தையடிநாதரை தரிசித்து வேண்டிக்கொண்டு, இலந்தைப் பழத்தை பக்தியுடன் உண்டு வழிபட்டால், அவர்கள் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை. 

  பெரிய 7 நிலை கோபுரம் கொண்டு சிறப்புறத் திகழும் இத்தலத்தில், ராஜகோபுரம், மத்தியகோபுரம், மேலகோபுரம் என மூன்று கோபுரங்களுடன் ஏழு விமானங்களும் அமைந்துள்ளன. கோயிலின் மேற்குப் பிரகாரத்தில் உள்ள தாமரை வடிவிலான வட்டவடிவக் கல்லின் மீது நின்று பார்க்கும்போது, இவை அனைத்தும் ஒரே பார்வையில் தெரிவது சிறப்பாக உள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என சிறப்பு பெற்ற இத்தலம், கட்டடக் கலைக்கும், நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுக்கும் சிறப்பு பெற்றதாகும். இறைவன் சந்நிதியில் இருந்து அம்பாள் சந்நிதிக்குப் போகும் வழியில் சோமவார மண்டபமும், கூர்ம பீடமும் உள்ளன. அதன் அருகில் அமைந்துள்ள பிட்சாடனர் சபையில், பிரதானமாக விளங்கும் சுமார் 7 அடி உயரமுள்ள பிட்சாடனர் சிலாவுருவம், எந்தவிதப் பிடிமானமும் இல்லாமல் பூதகணங்கள் சூழ, புவிஈர்ப்புச் சக்தியின் துணை கொண்டு, நின்ற நிலையில் காட்சி தருகிறார். சுற்றிலும் சுவற்றில் பிற தெய்வங்கள், தேவமாதர்கள், சந்திரன், சூரியன், விநாயகர் போன்றோர் காட்சி தருகின்றனர். நந்தியெம்பெருமான் உள்ள முகப்பு மண்டபத்தின் மேற்கூரையில், ஒரே கல்லால் ஆன கல் சங்கிலி, அதன் நுனியில் ஒரு மணியும், அதனுடன் மணியின் நாக்கும் காணப்படுகிறது. இது, அக்கால சிற்பக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

  இத்தலத்தில், நவக்கிரக சந்நிதி இல்லை. ஆனால், சூரியனுக்குத் தனி சந்நிதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உத்தராயணம் மற்றும் தட்சிணாயனம் ஆகிய புண்ணிய தினங்களில், சூரியனுடைய ஒளிக் கதிர்கள் கயிலாசநாதர் கருவறையில் சுவாமி மீது பட்டு சூரிய பூஜை நடைபெறுகிறது. மேலும், கல்விக் கடவுளான சரஸ்வதிக்கும் இத்தலத்தில் தனி சந்நிதி அமைந்துள்ளது. சூரிய தலமாகவும் விளங்கி, சரஸ்வதியும் அருள்பாலிப்பதால், இங்கு வந்து வேண்டிக்கொண்டு படித்தால், கற்ற கல்வி நன்றாக நினைவில் நிற்கும் என்றும்; அதனால் படிப்பில் சிறப்புத் தேர்ச்சிபெற முடியும் என்றும் கூறுகிறார்கள்.

  பிரம்மதேசம் ஊரிலிருந்து மேற்கே, சுமார் 3 கி,மீ, தொலைவில் மன்னார்கோவில் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள ஆலயத்தில், பெருமாள் ராஜகோபாலசுவாமி என்ற திருநாமத்துடன் சேவை சாதிக்கிறார். மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தையும் பிரம்மதேசம் செல்பவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டும்.

  நாவுக்கரசர் அருளிய பதிகம் - பாடியவர் இரா.குமரகுருபரன் ஓதுவார்

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai