சுடச்சுட

  

  அனைத்து நட்சத்திரக்காரர்களும் வழிபட வேண்டிய தலம் - ஆதிபுரீஸ்வரர் கோவில், திருவொற்றியூர் (பகுதி 2)

  By என்.எஸ். நாராயணசாமி  |   Published on : 10th October 2018 04:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Picture_001

   

  பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 19-வது தலமாக இருப்பது திருவொற்றியூர். திருமணத் தடை நீங்க, புத்திர பாக்கியம் பெற 27 நட்சத்திரங்களின் பெயரில் இத்தலத்தில் அமைந்துள்ள சிவலிங்கங்களில் தங்கள் நட்சத்திரத்துக்கு உரிய சிவலிங்கத்தை வழிபாடு செய்வதன் மூலம் பலன் பெறலாம்.

  இவ்வாலயம், வெள்ளிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், பெளர்ணமி நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், மற்ற நாட்களில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

  திருவொற்றியூர் ஆலயத்தின் சிறப்புகள்

  சிவபுரி, பத்மபுரி, வசந்தபுரி, பிரம்மபுரி, நிரந்தபுரி, பூலோக சிவலோகம் என்று பல பெயர்களால் அழைக்கப்பட்ட சிறப்பு பெற்ற திருவொற்றியூர் சிவஸ்தலம், எளிதில் முக்தி தரும் தலமாகும். திருவொற்றியூர் செல்ல வேண்டும் என்று மனதில் நினைத்தாலே எம பயம் நீங்கும். தலத்தின் எல்லையை மிதித்தாலே துன்பம் நீங்கும். இத்தலத்தில் இறந்தால் பிரம்மனுக்கும் எட்டாத சிவபதம் கிடைக்கும். அன்னதானம் செய்தால் இந்திரபதம் கிட்டும் என்று இத்தலத்தின் தலபுராணம் விவரிக்கிறது. இத்தலத்தில் உறையும் ஆதிபுரிஸ்வரர், வடிவாம்பிகை, ஆடும் தியாகப் பெருமான் ஆகிய கடவுளர்களை வழிபடும் அடியார்களுக்கு நல்வாழ்வு கிட்டும்.

  அகத்தியர் கண்ட திருமணக் காட்சி

  இமவான் மகள் பார்வதியை சிவபெருமான் மணக்கும்போது, வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயரத்தில் செல்லாமல் இருக்க அகத்தியரை தென்னகம் அனுப்பினார் இறைவன். சிவ-பார்வதி திருமணத்தை தன்னால் காண முடியாமல் போகுமே என்று கவலைப்பட்ட அகத்தியரிடம், அவர் விரும்பும் இடத்தில் எல்லாம் தனது திருமணக் காட்சியைக் காணலாம் என்று அருள் புரிந்தார். அகத்தியர் திருவொற்றியூர் தலம் வந்தபோது, இங்கு கல்யாண சுந்தரர் ஆக காட்சி கொடுத்தார். இத்தலத்தில் கல்யாண சுந்தரருக்கு தனி சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

  வட்டப்பாறை அம்மன் சந்நிதி

  ஆதிபுரீஸ்வரர் சந்நிதி கருவறைப் பிராகாரம் சுற்றி வரும்போது, வடக்குச் சுற்றில் இத்தலத்துக்குப் பெருமை சேர்க்கும் வட்டப்பாறை அம்மன் சந்நிதி வடக்கு நோக்கி இருக்கிறது. இச்சந்நிதிக்கு நேர் எதிரே உள்ள வாயில் வழியாக வடக்கு வெளிச்சுற்றுப் பிராகாரத்தை அடையலாம். கவிச் சக்கரவர்த்தி கம்பர், வட்டப்பாறை அம்மனை தினமும் பூஜித்து வழிபட்டு வந்தார்.

  கி.பி. 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த முதல் குலோத்துங்கச் சோழன், கம்பரை தமிழில் ராமாயணம் எழுதுமாறு கேட்டுக்கொண்டார். கம்பர் பல கலைகளையும் பயின்ற சதுரானை பண்டிதர் என்பவரிடம் பகல் முழுவதும் வால்மீகி ராமயணத்தை செவி வழியாகக் கேட்டு இரவில் தமிழில் எழுதுவார். எழுதுவதற்கு முன் வட்டப்பாறை அம்மனை வணங்கிவிட்டு எழுதத் தொடங்குவார். அவர் எழுதுவதற்கு உதவியாக, சாதாரணப் பெண் உருவில் கையில் தீப்பந்தம் ஏந்தி நின்று அருள் செய்தவள் இந்த வட்டப்பாறை அம்மன் என்பது ஒரு சிறப்புக்குரிய செய்தியாகும்.

  ரத்தத்தில் விளக்கேற்றிய கலியநாயனார்

  63 நாயன்மார்களில் ஒருவரான கலியநாயனார், திருவொற்றியூரில் செல்வச் செழிப்புடன் சொக்கர் குலத்தில் பிறந்தவர். திருவொற்றியூர் இறைவனுக்கு கோவிலில் அன்றாடம் திருவிளக்கு ஏற்றும் திருத்தொண்டினை செய்துவந்தார். இவரின் துருத்தொண்டினையும், பக்தியையும் உலகறியச் செய்ய எண்ணிய இறைவன், இவரின் செல்வம் யாவும் இழக்கச் செய்தார். செல்வம் இழந்தும் தனது விளக்கேற்றும் தொண்டு நின்றுவிடாமல் இருக்க, கடன் வாங்கியும் தன் வீட்டை விற்றும், பிறகு கூலி வேலை செய்தும் பாடுபட்டார்.

  வறுமையில் வாடிய கலியநாயனார், ஒருநாள் எண்ணெய் வாங்க பணம் இன்றி அவதிப்பட்டார். எண்ணெய் ஊற்றி திருவிளக்கு ஏற்ற முடியாத நான் இனி உயிர் வாழ்ந்து பயனில்லை என்று கருதி, கத்தியால் தன் உடலை வெட்டிக்கொண்டார். இறுதியாக தன் ரத்தத்தை ஊற்றியாவது விளக்கேற்றலாம் என்று எண்ணி, தன் உடலில் இருந்து வெளிப்பட்ட ரத்தத்தைக் கொண்டு விளக்கேற்ற முயற்சி செய்தார். கலியநாயனாரின் உண்மையான பக்தியைக் கண்ட திருவொற்றியூர் இறைவன் அவர் முன் தோன்றி அவரை தன்னுடன் இணைத்துக்கொண்டார்.

  திருவொற்றியூரில் முக்தி பெற்ற பட்டித்தார்

  18 சித்தர்களில் ஒருவராக்க் கருதப்படும் பட்டினத்தார், சிவபெருமானைத் தவிர எல்லா செல்வமும் பொய் என்ற ஞானம் பெற்று தன்னுடைய செல்வம், மனைவி, உறவு அனைத்தையும் விட்டுவிட்டு கோவணத்துடன் பல ஊர்களுக்குச் சென்று இறைவனைப் போற்றி பாடல்களைப் பாடி வந்தார். திருவொற்றியூர் இறைவனைத் தரிசித்துவிட்டு வரும் வழியில் சுவையே இல்லாத பேய்க்கரும்பு இனித்ததை அறிந்த பட்டினத்தார், தான் முக்தி அடைய இவ்வூரே சிறந்த இடமெனக் கருதி கடற்கரை ஓரத்தில் தங்கினார். ஒருமுறை மீனவச் சிறுவர்களிடம் தன்னை மண்ணில் புதைக்குமாறு செய்து பின்பு வெளிவராமல் சிவலிங்கமாக மாறி முக்தி அடைந்தார்.

  ராமலிங்க அடிகளாருக்கு அன்னமிட்ட வடிவாம்பிகை

  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்று போற்றப்படும் ராமலிங்க அடிகளார், பள்ளிப் படிப்பே இல்லாமல் பாடல் இயற்றும் திறமை படைத்திருந்திருந்தவர். சிறு வயதில் இருந்தே திருவொற்றியூர் இறைவனை வணங்கி, இக்கோவிலின் தலவிருட்சமாகிய அத்தி மரத்தின் கீழ் அமர்ந்து தவம் புரிந்து சிவனருள் பெற்றவர். நாள்தோறும் வடிவுடை அம்மனைத் தரிசித்தபின் இரவு வீடு திரும்புவார். அவரின் அண்ணி உணவு பரிமாறுவார். ஒருமுறை, வடிவுடை அம்மனைத் தரிசித்துவிட்டு வீடு திரும்ப நேரமாகிவிட்டதால், அண்ணி வீட்டின் உள்புறம் பூட்டிக்கொண்டு தூங்கிவிட்டாள். தூங்கும் அண்ணியை எழுப்ப மனமில்லாமல் இரவில் பசியுடன் திண்ணையில் படுத்துக்கொள்ள, அவரின் பசியைப் போக்க நினைத்த வடிவுடையம்மன், அவரின் அண்ணி உருவில் வந்து உணவு பரிமாறினார். இவ்வாறு இத்தலத்து வடிவாம்பிகையின் அருள் பெற்ற அடிகளார், இத்தலத்து அம்பிகையைப் போற்றி ஶ்ரீவடிவுடை மாணிக்கமாலை என்று 101 பாடல்களைப் பாடியுள்ளார்.

  *

  இத்தலத்து இறைவன் புற்று மண்ணால் ஆனவர் ஆதலால், இவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. படம்பக்கநாதர் மேல் எப்போதும் கவசம் சாற்றியே இருக்கும். கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று, திருவொற்றியூர் இறைவனுக்குப் பூஜை செய்ய தேவர்கள் வருவதாக ஐதீகம். அதனால், ஆண்டுதோறும் கார்த்திகை மாதப் பௌர்ணமி நாளில் மாலை 6 மணிக்கு மேல் படம்பக்கநாதரின் மேல் அணிவிக்கப்பட்டுள்ள கவசம் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இப்பூஜைகள் மூன்று நாள்கள் நடைபெறும்.

  இப்பூஜையின்போது இறைவனுக்கு ஜவ்வாது, புனுகு, சாம்பிராணி தைலம் ஆகியவை சாற்றப்பட்டு அவை பக்தர்களுக்கு வழங்கப்படும். இந்தத் தைலத்தை நெற்றியில் இட்டுக்கொண்டால், சகலவித தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். இந்த 2018-ம் வருடம் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி (22.11.2018) அன்று அல்லது அடுத்த 2 நாள்களில் திருவொற்றியூர் சென்று படம்பக்கநாதரையும் வடிவாம்பிகையையும் தரிசித்துப் பலன் பெறுங்கள்.

  ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி நாளில் மேலூருக்கு காலை வேளையில் சென்று இச்சா சக்தியான திருவுடையம்மனையும், பகல் வேளையில் திருவொற்றியூரில் உள்ள ஞான சக்தியான வடிவுடையம்மனையும், மாலை வேளையில் திருமுல்லைவாயில் சென்று கிரியா சக்தியான கொடியிடையம்மனையும் தரிசிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இவ்வாறு ஒரே நாளில் தரிசனம் செய்வோர், இப்பிறவிலேயே சகல நலன்களும் பெற்று இன்புற்று வாழ்வார்கள்.

  சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜர், இத்தலத்து இறைவி வடிவாம்பிகை மீது பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது அருணகிரிநாதர் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார்.

  இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் கிழக்கு நோக்கி 5 நிலைகளுடன் காட்சி தருகின்றது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் விசாலமான வெளிப் பிராகாரம் உள்ளது. கிழக்குச் சுற்று வெளிப் பிராகாரத்தின் வலதுபுறம் இறைவி வடிவுடையம்மன் சந்நிதி அமைந்திருக்கிறது. மேலும் கிழக்கு வெளிப் பிராகாரத்தில் நவக்கிரக சந்நிதி, விநாயகர் சந்நிதி, பாலசுப்ரமணியர் சந்நிதி மற்றும் குழந்தையீஸ்வரர் சந்நிதி ஆகியவை கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. மேற்கு வெளிச் சுற்றுப் பிராகாரத்தில் தென்மேற்கு மூலையில் அண்ணாமலையார் சந்நிதியும், பின்பு வரிசையாக ஜம்புலிங்கேஸ்வரர் சந்நிதி, நாகலிங்கேஸ்வரர் சந்நிதி, காளத்திநாதர் சந்நிதி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதி ஆகியவை அமைந்துள்ளன. வடமேற்கு மூலையில் ஒற்றீஸ்வரர் சந்நிதி தனி முகப்பு மண்டபத்துடன் அமைந்திருக்கிறது. வடக்கு வெளிச் சுற்றுப் பிராகாரத்தில் பைரவர் சந்நிதி, கல்யாணசுந்தரர் சந்நிதி ஆகியவை இருக்கின்றன. பைரவர் வடக்கு நோக்கி நின்ற நிலையில் தனது வாகனமான நாய் இல்லாமல் காட்சி தருகிறார்.

  சிறப்புகள் பல உள்ள திருவொற்றியூர் ஆலயத்துக்கு நீங்கள் எப்போது செல்லப்போகிறீர்கள்?

  சம்பந்தர் மற்றும் நாவுக்கரசர் அருளிய பதிகங்கள் - பாடியவர் சொ.சிவகுமார், செண்பகவிநாயகர் ஆலயம் - சிங்கப்பூர்

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai