தீவினைகள் நீங்க, திருமணத் தடை விலக அகத்தீசுவரர் கோவில், அகத்தியான்பள்ளி

பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 126-வது தலமாக இருப்பது அகத்தியான்பள்ளி.
தீவினைகள் நீங்க, திருமணத் தடை விலக அகத்தீசுவரர் கோவில், அகத்தியான்பள்ளி

பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 126-வது தலமாக இருப்பது அகத்தியான்பள்ளி. இத்தலத்தை வழிபட்டாலும் நினைத்தாலும் தீவினை நீங்கும் பெருமை வாய்ந்தது.

இறைவன் பெயர்: அகத்தீஸ்வரர்

இறைவி பெயர்: பாகம்பிரியாள், மங்கைநாயகி

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் இயற்றிய பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது

வேதாரண்யத்தில் இருந்து கோடியக்கரை செல்லும் வழியில் 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது. வேதாரண்யத்தில் இருந்து நகரப் பேருந்து வசதி உண்டு.

ஆலய முகவரி

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்

அகத்தியான்பள்ளி

அகத்தியான்பள்ளி அஞ்சல்

வழி வேதாரண்யம், வேதாரண்யம் வட்டம்

நாகப்பட்டினம் மாவட்டம் – 614810.

இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கைலாயத்தில் நடக்க இருக்கும் பார்வதி - சிவபெருமான் திருமணம் காண தேவர்கள், முனிவர்கள் மற்றும் எல்லோரும் கூடினர். அப்போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. பூமியை சமன் செய்ய அகத்திய முனிவரை தென்திசை செல்லும்படி இறைவன் பணித்தார். அகத்தியர் தனக்கு சிவன் - பார்வதி திருமணத்தைக் காணும் பேறு கிடைக்கவில்லையே என்று வருந்தினார்.

சிவபெருமான், அகத்தியருக்கு அவர் விரும்பும் இடங்களில் எல்லாம் திருமணக் கோலம் காட்டி அருளுவேன் என்று வாக்களித்தார். இதையடுத்து, அகத்தியரும் புறப்பட்டு தென்திசை வந்து அகத்தியான்பள்ளி தலத்தில் ஒரு ஆசிரமம் அமைத்துக்கொண்டு தங்கினார். சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து அதற்கு பூஜைகள் செய்துவந்தார். அப்போது, தான் கொடுத்த வாக்கின்படி பார்வதியுடன் நடந்த தனது திருமணக் கோலத்தை அகத்தியருக்கு இத்தலத்தில் காட்டி அருள்புரிந்தார். அகத்தியருக்குக் காட்சி கொடுத்ததால் இத்தலத்து இறைவன் அகத்தீஸ்வரர் எனப்படுகிறார்.

கோவில் அமைப்பு

மக்கள் இக்கோயிலை அகஸ்தியர் கோயில் என்றே கூறுகின்றனர். ஆலயத்தின் தோரண வாயிலிலும் அகஸ்தியர் கோவில் என்றே எழுதப்பட்டுள்ளது. ஆலயத்துக்கு ஒரு தோரண வாயிலும், அதையடுத்து ஒரு மூன்று நிலை ராஜகோபுரமும் உள்ளது. இத்தலத்தில் மூலவர் சந்நிதி கிழக்கு நோக்கியும், இறைவி சௌந்தரநாயகியின் சந்நிதி மேற்கு நோக்கியும் அமைந்துள்ளது. இங்கு மூலவர் அகத்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.

சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் மேற்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். சிவன் - பார்வதி திருமணக் கோலம் கருவறையில் சிவலிங்கத்தின் பின்னே கருவறைச் சுவரில் புடைப்புச் சிற்பமாகக் காணப்படுகிறது. அம்பாள் கோயிலுக்குப் பக்கத்தில் சுவாமியைப் பார்த்தவாறு அகத்தியர் கோயில் உள்ளது. கோவிலில் உள்ள அகத்தியர் உருவச்சிலை மிகவும் அழகிய வேலைப்பாடுடன் கூடிய சிற்பமாகும்.

இறைவன் சந்நிதி கிழக்கு நோக்கியும், இறைவி சந்நிதி மேற்கு நோக்கியும் இருப்பதை, திருமணத்தில் மாலை மாற்றும் கோலம் என்று கூறுவார்கள். அத்தகைய அமைப்பில் இறைவனும் இறைவியும் இருப்பதால், இத்தலத்துக்கு வந்து இறைவனையும் இறைவியையும் வழிபட்டால், தடைபெற்ற திருமணம் விரைவில் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இக்கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டிலிருந்து, குலசேகர பாண்டியன் என்ற அரசனுக்கு இருந்த வியாதி அருகில் உள்ள வேதாரண்யம் திருத்தலத்தில் உற்சவம் நடத்தி நீங்கப்பெற்றது என்ற தகவல் தெரிய வருகிறது.

இக்கோயிலில் நவக்கிரகங்கள் ஒரே திசையைப் பார்த்துள்ளன. இத்தல எமதர்மன் தனது நீண்ட காலம் சாபம் நீங்க இத்தல இறைவனை வழிபட்டு, ஜீவன் முக்தி பெற்றுள்ளான். எமவாதனையில் அவதிப்படுவர்கள் இத்தல இறைவனை வழிபட்டால் அதிலிருந்து விமோசனம் பெறலாம்.

இவ்வாலத்தின் விருட்சமாக வன்னி மரமும், அகத்தி மரமும் உள்ளன. ஆலயத்தின் தீர்த்தங்களாக கோயிலின் மேற்கில் உள்ள அகத்தியதீர்த்தம் மற்றும் அக்னிதீர்த்தம் (அருகாமையில் உள்ள கடல்) உள்ளன.

திருஞானசம்பந்தர், இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம்

1. வாடிய வெண்தலை மாலை சூடி மயங்கிருள்

நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி

ஆடிய எம்பெருமான் அகத்தியான் பள்ளியைப்

பாடிய சிந்தையினார்கட்கு இல்லையாம் பாவமே.

அகத்தியான் பள்ளி இறைவனை மனம் ஒன்றிப் பாடுவோர்க்குப்

பாவம் இல்லை.என்று இப்பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.

2. துன்னம் கொண்ட உடையான் துதைந்த வெண்ணீற்றினான்

மன்னும் கொன்றை மதமத்தம் சூடினான் மாநகர்

அன்னம் தங்கும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியை

உன்னம் செய்த மனத்தார்கள் தம் வினை ஓடுமே.

அகத்தியான்பள்ளி இறைவனை நினையும் மனம் உடையவர்களின்

வினைகள் நீங்கும் என்று இப்பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.

3. உடுத்ததுவும் புலித்தோல் பலி திரிந்து உண்பதும்

கடுத்து வந்த கழற்காலன் தன்னையும் காலினால்

அடர்த்ததுவும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்

தொடுத்ததுவும் சரம் முப்புரம் துகளாகவே.

4. காய்ந்ததுவும் அன்று காமனை நெற்றிக் கண்ணினால்

பாய்ந்ததுவும் கழல் காலனை பண்ணின் நான்மறை

ஆய்ந்ததுவும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்

ஏய்ந்ததுவும் இமவான் மகளொரு பாகமே.

5. போர்த்ததுவும் கரியின் உரி புலித்தோலுடை

கூர்த்ததோர் வெண்மழு ஏந்தி கோளரவம் அரைக்கு

ஆர்த்ததுவும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்

பார்த்ததுவும் அரணம் படரெரி மூழ்கவே.

6. தெரிந்ததுவும் கணையொன்று முப்புரம் சென்றுடன்

எரிந்ததுவும் முன்னெழிலார் மலர் உறைவான் தலை

அரிந்ததுவும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்

புரிந்ததுவும் உமையாள் ஓர் பாகம் புனைதலே.

7. ஓதியெல்லாம் உலகுக்கோர் ஒண்பொரு ளாகிமெய்ச்

சோதியென்று தொழுவார் அவர்துயர் தீர்த்திடும்

ஆதியெங்கள் பெருமான் அகத்தியான்பள்ளியை

நீதியால் தொழுவார் அவர் வினை நீங்குமே.

அகத்தியான் பள்ளி இறைவனை முறையாகத் தொழுபவர் வினைகள்

நீங்கும் என்று இப்பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.

8. தக்கன் வேள்வியை திருந்தார் புரம்

ஒறுத்ததுவும் ஒளி மாமலர் உறைவான் சிரம்

அறுத்ததுவும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்

இறுத்ததுவும் அரக்கன் தன் தோள்கள் இருபதே.

9. சிரமும் நல்ல மதமத்தமும் திகழ் கொன்றையும்

அரவும் மல்கும் சடையான் அகத்தியான் பள்ளியைப்

பிரமனோடு திருமாலும் தேடிய பெற்றிமை

பரவ வல்லார் அவர் தங்கள் மேல் வினை பாறுமே.

அகத்தியான்பள்ளியில் உறையும் இறைவனைப் பிரம்மாவும் திருமாலும் தேடிக்காண முடியாத தன்மையைக் கூறி பரவ வல்லவர் தங்கள் மேல்வரும் வினைகள் அழியும் என்று இப்பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.

10. செந்துவர் ஆடையினாரும் வெற்று அரையே திரி

புந்தி இலார்களும் பேசும் பேச்சு அவை பொய்ம்மொழி

அந்தணன் எங்கள் பிரான் அகத்தியான் பள்ளியைச்

சிந்திமின் நும்வினை ஆனவை சிதைந்து ஓடுமே

அகத்தியான்பள்ளி இறைவனைச் சிந்தியுங்கள். வினைகள் சிதைந்து

ஓடும் என்று இப்பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.

11. ஞாலம் மல்கும் தமிழ் ஞானசம்பந்தன் மாமயில்

ஆலும் சோலை புடைசூழ் அகத்தியான் பள்ளியுள்

சூலம் நல்ல படையான் அடிதொழுது ஏத்திய

மாலை வல்லார் அவர் தங்கள் மேல்வினை மாயுமே.

உலகம் முழுதும் பரவிய புகழாளனாகிய ஞானசம்பந்தன், சிறந்த மயில்கள் ஆடும் சோலைகள் சூழ்ந்த அகத்தியான்பள்ளியுள் விளங்கும் நல்ல சூலப்படையானின் திருவடிகளைத் தொழுது போற்றிப் பாடிய இத்தமிழ் மாலையை ஓதவல்லவர்கள் மேல்வரும் வினைகள் மாயும் என்று தனது பதிகத்தின் கடைசிப் பாடலில் கூறுகிறார்.

சம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் திருப்பரங்குன்றம். இரா.குமரகுருபரன் ஓதுவார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com