சுடச்சுட

  

  திருமணத் தடை நீங்க, புத்திர பாக்கியம் கிடைக்க சிஷ்டகுருநாதர் கோவில், திருத்துறையூர்

  By என்.எஸ். நாராயணசாமி  |   Published on : 20th September 2018 05:44 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  DSCN5196

   

  சிவன் குருவாக இருந்து அருளும் தலம் திருத்தளூர். சுந்தரருக்கு உபதேசம் செய்த இவர் சிஷ்டகுருநாதராக இங்கு வீற்றிருக்கிறார். இறைவனை வியாழனன்று வழிபட்டால், தடைபட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். குழந்தை இல்லையே என்று வருந்துபவர்களுக்குப் புத்திர பாக்கியம் கிட்டும்.

  பாடல் பெற்ற நடுநாட்டு தலங்கள் வரிசையில் 15-வது தலமாக இருப்பது திருத்துறையூர். திருத்துறையூர் தற்போது வழக்கில் திருத்தளூர் என்று அழைக்கப்படுகிறது.

  இறைவன் பெயர்: சிஷ்டகுருநாதர், பசுபதீஸ்வரர், தவநெறியப்பர்

  இறைவி பெயர்: பூங்கோதை நாயகி, சிவலோக நாயகி

  இத்தலத்துக்கு சுந்தரர் அருளிய பதிகம் ஒன்று உள்ளது.

  எப்படிப் போவது

  பண்ருட்டியில் இருந்து புதுப்பேட்டை வழியாக அரசூர் செல்லும் சாலையில் சென்று, கரும்பூர் சாலையில் திரும்பிச் சென்று திருத்துறையூரை அடையலாம். பண்ருட்டியில் இருந்து வடமேற்கே சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்துக்கு நகரப் பேருந்து வசதி உண்டு. பண்ருட்டியில் இருந்து சென்னை செல்லும் NH45C சாலையில் கந்தாரகோட்டையை அடைந்து, அங்கிருந்து இடதுபுறம் திரும்பிச் செல்லும் திருத்துறையூர் சாலையில் சென்றும் இத்தலத்தை அடையலாம். இவ்வழியே சென்றால் சுமார் 11.5 கி.மீ தொலைவு. ஆனால் நல்ல சாலை வசதி உள்ளது.

  ஆலய முகவரி

  அருள்மிகு சிஷ்டகுருநாதர் திருக்கோவில்

  திருத்துறையூர் அஞ்சல்

  பண்ருட்டி வட்டம்

  கடலூர் மாவட்டம் – 607 205.

  இவ்வாலயம் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

  பெண்ணை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள இவ்வாலயத்துக்கு ராஜகோபுரம் இல்லை. ஒரு முகப்பு வாயில் மற்றும் அடுத்து ஒரு உள்வாயிலும் உள்ளது. உள்வாயிலைக் கடந்தால் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். உள்வாயிலைத் தாண்டி மண்டபத்தை அடைந்தால், இத்தலத்தின் இறைவன் சிஷ்டகுருநாதர் மேற்கு நோக்கிய சந்நிதியில் சுயம்பு லிங்கமாக அருள்காட்சி தருகிறார். அம்பாள் வடக்கு நோக்கிய சந்நிதியில் அருள்காட்சி தருகிறாள். இவ்வாறு வடக்கு நோக்கிய அம்பாள் சந்நிதி காண்பது மிகவும் அரிது. உள்பிராகாரத்தில் நர்த்தன கணபதி, பாலசுப்பிரமணியர், நடராஜர், நால்வர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டேச்வரர், ஶ்ரீஆதிகேசவப் பெருமாள் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.

  இதில், தட்சிணாமூர்த்திக்குப் பக்கத்தில் உமா மகேஸ்வரர், சுந்தரருக்குத் தவநெறி தந்த காட்சி, சாட்சி விநாயகருடன் கல்லில் சிற்பமாக உள்ளது. அம்பாள் சந்நிதிக்கு எதிரில் தலமரம் கொன்றை உள்ளது. பக்கத்தில் அகத்தியர் வழிபட்ட லிங்கம் உள்ளது. இத்தலத்தின் தீர்த்தம் சூரியபுஷ்கரணி, கோவிலுக்கு வெளியே உள்ளது. திருமணம், புத்திரதோஷம் உள்ளவர்கள் சிஷ்டகுருநாதருக்கும், தட்சிணாமூர்த்திக்கும் ஏழு வியாழக்கிழமைகளில் நெய்விளக்கு ஏற்றி, வில்வ அர்ச்சனை செய்கின்றனர். இத்தல இறைவனை சூரியன், பிரம்மா, விஷ்ணு, ராமர், சீதா, பீமன், அகத்தியர் நாரதர் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

  கோவிலுக்கு வெளியில் உள்ள அஷ்டபுஜ பத்திரகாளி சந்நிதி மிகவும் விசேஷமான பிரார்த்தனை சந்நிதி. பௌர்ணமி விழா சிறப்பாக நடைபெறுகிறது. தேரடியில் உள்ள விநாயகர் மூன்றடி உயரமான மூர்த்தியாவார். கோயிலுக்கு நேர் எதிரில் அருணந்தி சிவாசாரியாரின் சமாதிக்கோயில் உள்ளது. இது திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்தது. ஆண்டுதோறும் புரட்டாசி பூரத்தில் குருபூஜை நடத்தப் பெறுகிறது. அருணந்தி சிவாசாரியாரின் மரபினரே இக்கோயிலில் பூசை செய்யும் குருக்கள் ஆவார்.

  சுந்தரர், திருவெண்ணெய்நல்லூரில் இருந்து இத்தலத்துக்கு வந்தார். அப்போது தென்பெண்ணையாறு குறுக்கிடவே, கரையில் இருந்தே சிவனை வேண்டி பதிகம் பாடினார். அப்போது வயதான தம்பதியர் உருவில் வந்த சிவபெருமானும், பார்வதியும் சுந்தரரை படகில் ஏற்றி மறுகரைக்கு அழைத்து வந்தனர். கரையில் இறங்கிய பிறகு, இறைவன் சுந்தரர் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துகொண்டார்.

  சுந்தரர் சுற்றிலும் தேடிப்பார்த்தார். ஆனாலும் வயதான தம்பதியைக் காணவில்லை. அப்போது நீங்கள் தேடுபவர் மேலே இருக்கிறார் என்று அசரீரி வாக்கு கேட்க, சுந்தரர் மேலே பார்த்தபோது சிவன், அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் காட்சி தந்தார். சுந்தரர் இறைவனை வணங்கி தனக்கு உபதேசம் செய்யும்படி கூறினார். சிவபெருமானும் சுந்தரருக்கு குருவடிவில் எழுந்தருளி தவநெறி உபதேசம் செய்தார். எனவேதான் இறைவனுக்கு தவநெறி ஆளுடையார், சிஷ்டகுருநாதேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது.

  இத்தலத்திலுள்ள முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். இத்தல முருகப் பெருமான் இரு தேவியருடன் கிழக்கு நோக்கியவாறு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். அருணகிரியார் இவரை, ‘குருநாதர்’ என்று திருப்புகழில் பாடியிருக்கிறார்.

  இவ்வூருக்குக் அருகில் கீழப்பாக்கம் என்றொரு ஊர் உள்ளது. இங்கு ஒரு சிவலிங்கமும் உள்ளது. இவ்விடத்தில்தான் இறைவன் முதியவர் உருவில் சுந்தரருக்குக் காட்சி கொடுத்து அருள் புரிந்ததாகவும், பின்பு ரிஷபாரூடராக ஆலய விமானத்தில் காட்சி கொடுத்ததாகவும் தலபுராணம் தெரிவிக்கிறது.

  சுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்துக்கான இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சுந்தரர் தனது பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் ‘உன்பால் அடியேன் தவ நெறியையே வேண்டிக் கொள்வேன், வேறொன்றையும் வேண்டேன்’ என்று மனமுருகிப் பாடியுள்ளார். திருத்துறையூரில் உள்ள இறைவன் மீது தான் பாடிய இப்பதிகத்திலுள்ள பாடல்களை நன்கு பாடவல்லவர் தவநெறியைத் தப்பாது பெறுவர் என்று சுந்தரர் குறிப்பிடுகிறார். பெண்ணையாற்றின் சிறப்பைப் பற்றியும் ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார்

  1. மலையார் அருவித் திரள்மா மணியுந்திக்

  குலையாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபாற்

  கலையார் அல்குற்கன் னியராடுந் துறையூர்த்

  தலைவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

   

  2. மத்தம் மதயானை யின்வெண் மருப்புந்தி

  முத்தங் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபாற்

  பத்தர் பயின்றேத்திப் பரவுந் துறையூர்

  அத்தா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

   

  3. கந்தங் கமழ்கா ரகில்சந் தனமுந்திச்

  செந்தண் புனல்வந் திழிபெண்ணை வடபால்

  மந்தி பலமா நடமாடுந் துறையூர்

  எந்தாய் உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

   

  4. அரும்பார்ந் தனமல் லிகைசண் பகஞ்சாடிச்

  சுரும்பாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்

  கரும்பார் மொழிக்கன் னியராடுந் துறையூர்

  விரும்பா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

   

  5. பாடார்ந் தனமாவும் பலாக்க ளுஞ்சாடி

  நாடார வந்தெற்றி யோர்பெண்ணை வடபால்

  மாடார்ந் தனமாளி கைசூழுந் துறையூர்

  வேடா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

   

  6. மட்டார் மலர்க்கொன் றையும்வன்னி யுஞ்சாடி

  மொட்டாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்

  கொட்டாட் டொடுபாட் டொலியோவாத் துறையூர்ச்

  சிட்டா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

   

  7. மாதார் மயிற்பீலி யும்வெண் ணுரையுந்தித்

  தாதாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்

  போதார்ந் தனபொய்கை கள்சூழுந் துறையூர்

  நாதா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

   

  8. கொய்யா மலர்க்கோங் கொடுவேங்கை யுஞ்சாடிச்

  செய்யாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்

  மையார் தடங்கண் ணியராடுந் துறையூர்

  ஐயா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

   

  9. விண்ணார்ந் தனமேகங் கள்நின்று பொழிய

  மண்ணாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்

  பண்ணார் மொழிப்பா வையராடுந் துறையூர்

  அண்ணா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

   

  10. மாவாய்ப் பிளந்தானும் மலர்மிசை யானும்

  ஆவா அவர்தேடித் திரிந்தல மந்தார்

  பூவார்ந் தனபொய்கை கள்சூழுந் துறையூர்த்

  தேவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

   

  11. செய்யார் கமல மலர்நாவ லூர்மன்னன்

  கையாற் றொழுதேத்தப் படுந்துறை யூர்மேற்

  பொய்யாத் தமிழூரன் உரைத்தன வல்லார்

  மெய்யே பெறுவார்கள் தவநெறி தானே.

  சுந்தரர் அருளிய பதிகம் - பழநீ க.வெங்கடேசன் ஓதுவார்

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai