Enable Javscript for better performance
‘பஸ்ஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்’ - பாமா கோபாலன்- Dinamani

சுடச்சுட

  

  ‘பஸ்ஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்’ - பாமா கோபாலன்

  By DN  |   Published on : 06th January 2016 01:03 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மேஜை ட்ராயரை இழுத்து மூடிவிட்டு, ஒற்றைச் சாவியால் பூட்டினேன். ஸ்கூட்டர் , சாவிக் கொத்தில் இந்தச் சாவியையும் சேர்த்துவிட்டேன். நான் ஆபிஸை விட்டுக் கிளம்பும் பொழுது மணி ஐந்தரை ஆகிவிட்டது.

  அவசர அவசரமாக ஸ்கூட்டரைக் கிளப்பினேன்.

  கல்லூரி வசலில் அவள் காத்துக் கொண்டிருப்பாளே! என் ஸ்கூட்டரின் பின்னால் உட்கார அவள் ஒருத்திக்குத்தான் இடம் உண்டு. என் ஆபிஸில் வேலை செய்யும் ரிஸப்ஷனிஸ்ட் ரஞ்சிதம் ஒரு தரம் லிப்ட் கேட்டாள். மறுத்துவிட்டேன். மற்றொரு நாள் டைபிஸ்ட் மஞ்சுளாவின் கோரிக்கையையும் நிராகரித்து விட்டேன். என் மனத்தில் அப்படி ஒரு தீர்மானம்.

  என் வசந்தாவுக்குத் தான் ஸ்கூட்டர் சவாரி. ஸ்கூட்டரின் வேகத்தை அதிகப்படுத்தினேன். இடையில் குறுக்கிட்ட ஊர்வலத்தினால் என் வேகம் தடைப்பட்டது.

  கல்லூரி வாசலை அடையும் பொழுது ஆறு அடிக்க ஐந்து நிமிடம்தான் இருந்தது.

  ‘ஸாரி வசந்தா. கொஞ்சம் லேட் ஆகிவிட்டது’ என்று சொல்லிக் கொண்டே ஸ்கூட்டரை நிறுத்தினேன்.

  வசந்தா ஒன்றுமே பேசவில்லை. புத்தகங்களை பக்கவாட்டில் இருந்த சதுரப் பையில் போட்டுவிட்டு, பின் ஸீட்டில் உட்கார்ந்து கொண்டாள்.

  அவள் மெளனம் என்னை உலுக்கியது. ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தேன். குலுக்கலில் அவள் முகம் என் முதுகில் பட்டது. ஆதரவாக அவள் தோளைத் தட்டிவிட்டேன்.

  ‘எங்கே?’

  ‘வழக்கம் போல்.’

  ஸ்கூட்டரின் வேகத்தை கட்டுப்படுத்திக் கொண்டேன். வசந்தாவின் கரம் என்னைச் சுற்றியிருந்தது.

  தெருவில் செல்பவர்களுக்கு என்ன பார்வை எங்கள் மீது? அவர்கள் கண்களில் தெறித்தது ஆச்சரியமா? பொறாமையா?

  பெரிய ஓட்டலின் முன்னால் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு வசந்தாவுடன் ஃபேமிலி ரூம் நோக்கிச் சென்றேன்.

  ‘என்ன வசந்தா, பேசாமலே வருகிறாய்?’

  ‘ப்ஸ்…ஒன்றுமில்லை….’ அவள் குரலில் அலுப்பு தெரிந்தது.

  சர்வரிடம் ’இரண்டு நெஸ் காபி மட்டும்’ என்று சொல்லிவிட்டு, வசந்தாவின் கூந்தலைக் கோதிவிட்டேன். அந்த அறையில் ஒரு மூலையில் ஒரு பாட்டி தன் பேரக் குழந்தைக்கு மசாலா தோசையை விண்டுக் காண்பித்துவிட்டு, தன் வாயில் போட்டுக் கொண்டிருந்தாள்.

  ‘என்ன வசு? என்ன காரணம்? இந்தமாதிரி டல்லாக இருக்க மாட்டாயே?’

  வசந்தா பதில் சொல்வதற்குள் சர்வர் காபியைக் கொண்டு வந்து வைத்தான்.

  வசந்தா முகத்தை ஒரு முறை அழுந்தத் துடைத்துக் கொண்டு. ‘காரணத்தை பீச்சில் சொல்கிறேன்’ என்றாள்.

  ‘ஆல்ரைட்!’

  அவள் நிதானமாக காபி குடிக்கும் அழகை ரசித்துக் கொண்டிருந்தேன். நிஜமாகவே வசந்தா கொள்ளை அழகுதான். என்னை விட நல்ல நிறம் தான்.

  சர்வர் கொடுத்த பில்லைப் பெற்றுக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தோம். ஒரு ரூபாய் நோட்டை வைத்தேன்.

  ஒரு நிமிடம்.

  ‘ஓ! நெஸ் காபி’ என்று எண்ணிக் கொண்டு ஸ்கூட்டரை நோக்கி நடந்தேன். வசந்தா அந்த பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள்.

  அப்பொழுதுதான் ஒரு ஹெரால்ட் கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியவரைக் கண்டு வசந்தாவின் முகம் மலர்ந்தது.

  ‘ஹலோ!’

  ‘ஹலோ!’

  இரண்டு ‘ஹலோ’க்களின் பரிமாறல்கள்.

  பிறகு அந்த மனிதர் ஓட்டலுக்குள் சென்றுவிட்டார்.

  நான் கவனித்ததை வசந்தா கவனிக்கவில்லை.

  ஒரு உதை, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யத்தான் வசந்தா பின்னால் ஹெரால்ட் கார், அந்த மனுஷன்.

  ஸ்கூட்டரின் வேகம்.

  வசந்தா என் தோளை இறுகப் பற்றிக்கொண்டாள்.

  கடற்கரை மணலில் கைகளால் கோலம் போட்டுப் போட்டு அழித்துக் கொண்டிருந்தேன்.

  வசந்தா தவித்துக் கொண்டிருக்கிறாள்.

  ‘உன் காலேஜில் அவர் கெமிஸ்ட்ரி புரொபசர் இல்லையா?’ வசந்தாவைப் பார்க்கிறேன்.

  ’ஆமாம்’ என்று தலையாட்டிவிட்டு மணலைப் பார்க்கிறாள்.

  ‘என்ன சொல்கிறார்?’

  ‘வந்து…வந்து…இந்த மாசமே…..’

  என் பார்வையைத் தாளாமல் அவள் மீண்டும் குனிகிறாள்.

  மெளனம்.

  ’வசந்தா….அவர் அப்படிச் சொல்லும்பொழுது…சரி…’ என்று சொல்லி நிறுத்துகிறேன்.

  என் மனத்தில் வசுவின் கல்யாணச் செலவுக்காகச் சேர்த்து வைத்திருந்த தொகை, தோன்றி மறைந்தது. இன்னும் ஆயிரத்து ஐநூறு ரூபாய் வேண்டுமே!

  மனத்தில் தீர்மானம் செய்து கொண்டேன்.

  ‘கல்யாணத்திற்குப் பிறகு….ஸ்கூட்டர் சவாரி கிடைக்காது வசு. கார் சவாரிதான்….’

  ‘அக்கா என்றால் அக்கா தான்’ என்று என் கழுத்தைக் கட்டிக் கொள்கிறாள் வசந்தா. எங்களிடம் இருந்த ஒரே சொத்தான ஸ்கூட்டர், வசந்தாவின் திருமணத்தை முடித்து வைக்கிறது.

  baba_ram.jpg 

  கல்யாணம்! ஆபிஸூக்குச் செல்ல பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருக்கிறேன். வசுவும் அவள் கணவரும் ஒரே கல்லூரியில் வேலை பார்ப்பதால் காரில் போவது சிரமமாக இருக்க முடியாது.

  வந்து நின்ற பஸ்ஸில் இடமில்லை. நான் பஸ்ஸுக்காக நின்று கொண்டிருக்கிறேன்.

  என் கண் முன்னால் ஸ்கூட்டர் ஒன்று போகிறது. பின் ஸீட் காலியாக.

  நெற்றியில் வியர்வை அரும்பு கட்டுகிறது.

  கர்சீப்பை எடுத்து அழுந்தத் துடைத்துக் கொள்கிறேன். குங்குமப்பொட்டா இருக்கிறது, அழுந்துவிடுமே என்று பயப்பட?

  எனக்கு இடம் தரும் பஸ்ஸுக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன்….
   

  (தினமணி கதிர் 8.11.1968  இதழில் வெளியான சிறுகதை)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai