சுடச்சுட

  

   

  தியேட்டர். ரசிகர்களின் கை தட்டல்களால் அது அதிர்ந்தது. இத்தனைக்கும் திரையில் காண்பித்த விஷயம் மிகப் பிரமாதமானதல்லதான்; தொடர்ந்து காட்டப்பட இருக்கும் படத்தின் பெயரைத் தான் காண்பித்தார்கள். எடுத்த எடுப்பிலேயே கை தட்டல்.

  இதில் இன்னொரு விசேஷம் ‘ஹெளஸ் ஃபுல்லாக’ இருக்கும் தியேட்டரில் தங்களுக்கும் டிக்கெட் கிடைத்து, இடமும் கிடைத்த பெருமையால் சற்றைக்கொரு முறை நிமிர்ந்து அமர்ந்த வண்ணம் படம் பார்க்கத் துவங்கியிருந்த ஆத்மாக்கள் பலர்.

  ரகுராமன் மேல் வகுப்பு டிக்கெட் எடுத்திருந்தான். ஆனாலும் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தான். தலைக்கு மேலே மின் விசிறி ஓடுகிறதா என்று அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான். அந்த இருட்டிலும் தன்னுடைய ‘டெரிலின்’ சட்டையை யாராவது பார்க்க மாட்டார்களா என்று அடிக்கடி சுற்று முற்றும் பார்த்துக் கொண்டிருந்தான்.

  அவனுடைய மனத்தை ஒரு நினைவு உறுத்திற்று. நாளைக்காவது அப்பாவுக்கு ஒரு வரி அவசியம் எழுத வேண்டும். இப்போது கல்யாணத்துக்கு அவசரமில்லை என்று எழுதிப் போட வேண்டும்.

  ஆம். இப்படி ‘ஒரே ஆளாகப்’ பட்டணத்தில் முழுசா ஐநூறு ரூபாய் சம்பாதித்துக் கொண்டு, ஊருக்கு அனுப்ப வேண்டிய அவசியமும் இல்லாத நிலையில் – தினசரி ஒரு படம் பார்க்கக் கூட ரகுராமன் தயங்க வேண்டாமே?

  இன்று தான் இந்தப்படம் ரிலீசாகி இருக்கிறது. இதுதான் முதல் ஷோ.

  இதற்கு இவனுக்கு நேரமிருக்கும் போது ஒரு வரி. பெற்ற தாய்க்கு, ‘அம்மா! ஏன் இப்படி நாட்டுப் பெண் வரவேண்டுமென்று அடித்துக் கொள்கிறாய்? எனக்கென்ன, வயசாகி விட்டதா? கொஞ்சம் பொறுமையாகத் தான் இரேன்! என்று கொஞ்சம் பொறுமையாகப் பதில் எழுதிப் போடக்கூட நேரம் இல்லாமல் போகுமா?

  இதோ எழுத்துக்கள் காட்டுவது முடிந்து பிக்சர் தொடங்கி விட்டது.

  முதல் காட்சியிலேயே கதாநாயகன் கதாநாயகியைத் துரத்தி அடிக்கிறான். அதாவது அவுட்டோரில் டூயட் பாட்டுப் படலம்.

  IMG_20160105_143554445.jpg 

  முதல் வகுப்பின் மேல் வரிசையில் கணவனும் மனைவியுமாக ஜோடி ஜோடியாக உட்கார்ந்திருப்பவருக்கிடையில் –

  திவாகரனும் ரேணுகாவும் மிக நெருக்கத்தில் அமர்ந்திருக்கிறார்கள். இருட்டிலும் ரேணுகா அணிந்திருந்த நெக்லஸ் ‘பளீரென்று’ ஒளிவிட்டது. அந்த இருட்டில் உட்கார்ந்த வண்ணம் அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த எல்லோருடைய மனமும் உணர்ச்சியால் ஒளிவிட்டதைப் போல.

  தம்பதியரிடையே அழுத்தமான முணுமுணுப்பு.

  ‘ஸ்டார்டிங்கிலேயே லவ் சீன், ரேணு!’

  ‘இனி கேட்கணுமா? உங்க பாடு கொண்டாட்டம் தான்!’

  ‘ரேணு, அவ போட்டிருக்கிற மாதிரி ஒரு சோளி வாங்கணும் உனக்கு!’

  ‘நிச்சயம் வாங்கித் தருவீங்களா?’

  ‘இந்த உலகத்தையே உனக்கு வாங்கித் தருவேன், ரேணு, மை டியர்!’

  நவரசமும் நிறைந்த படமல்லவா அது? காதல் காட்சியிலிருந்து சோகக் காட்சி மாறிய போதுதான் இளந் தம்பதியரின் நெருக்கத்திலும் சற்றே நெகிழ்வு உண்டாயிற்று.

  ‘உலகத்தையே வாங்கித் தருவதாகச் சொன்ன திவாகரனுக்கும் நினைவு அரித்தது. பிராவிடண்ட் ஃபண்டில் கடன் வாங்கியதும், அதனால் சின்னமுற்றிருந்த சம்பளத்தால் குடும்பத்தை நடத்த எத்தனையோ பகல் வேஷம் போட்டுக் கொண்டிருந்ததும்…

  மீண்டும் கைதட்டலால் தியேட்டர் ஒரு குலுங்கு குலுங்கியது.

  ஸ்டண்ட் காட்சி என்றூ நினைத்துவிட வேண்டாம். நகைச் சுவை காட்சியோ என்றால் அதுவுமில்லை.

  ஓர் ஐந்து வயதுப் பையன் தன் தந்தையிடம் வாதாடுகிறான். ‘பெரிய வசமெல்லாம் பேசினான் அந்தப் பையன். அவனுடைய கெட்டிக்காரனத்தனத்துக்கு உண்மையில் வசனகர்த்தா அச்சிறுவனின் உதட்டில் சிரமப்பட்டுப் புகுந்திருந்த வசனத் திறனுக்குத்தான் – அந்தக் கைதட்டல்.

  இப்போது –

  இரண்டாவது வகுப்பின் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த கைலாசமும் பட்டுவும் சட்டென்று ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டனர். அந்த இருட்டிலும் ஒருவர் எண்ணங்கள் மற்றவருக்குப் புரிந்தன போலிருந்தது.

  வீட்டிலிருந்து சினிமாவுக்கு புறப்பட்ட போது, அவர்களுடைய ஒரு வயதுக் குழந்தை லதா அடம் பிடித்து அழாவிட்டாலும்… அவர்களுடைய ஐந்து வயதுப் பையன் மணி எத்தனை ஆணித்தரமான கேள்வி கேட்டான்.

  ‘சின்னக் குழந்தைகள் பார்க்கக் கூடாதபடம் என்கிறதுக்காகத்தான் லதாவையும் விட்டுட்டுப் போறீங்களா?’

  IMG_20160105_143451190_HDR.jpg 

  ‘ஆமாம்.’ அழுத்தமாகப் பிள்ளைக்குப் பதில் சொன்னாள் பட்டு. ஆதிநாளிலிருந்தே அவளுக்குச் சினிமா என்றால் கொஞ்சம் பைத்தியம்.

  மணி இப்போது அப்பாவிடம் கேட்டான்.

  ‘லதா தூங்கினாலும் நீங்க போனப்புறம் விழித்துக் கொண்டு அழுதால்…?’

  ’பீடிங் பாட்டிலில் தயாராய்ப் பாலை வைத்து விட்டுப் போவாள் அம்மா; அவள் அழுதால் நீ அதைக்கொடு.’ கைலாசம் புறப்படும் அவசரத்தில் கச்சிதமாகச் சொன்னான்.

  இப்போது தியேட்டரில் பட்டு, கைலாசத்தின் கரங்களை மெதுவாகப் பற்றிக் கொண்டு, ‘வீட்டுக்குப் போவோமே!’ என்றாள்.

  ‘என்ன இது, பட்டு? இன்னும் இண்டர்வெல் கூட வரவில்லை.’

  ‘இல்லை, இந்தப் பையன் இவன் அப்பாவைக் கேட்டதெல்லாம், நம்ம மணி நம்மைக் கேட்டது போலிருக்கிறது…லதா தூளியிலிருந்து விழித்துக் கொண்டு என்ன அடம் பண்ணுகிறாளோ?’

  ‘பட்டு! அத்தி பூத்தது மாதிரி நாம் சினிமாவுக்கு வந்திருக்கிறோம்.’ அவளிடம் நெருங்கி உட்கார்ந்து கொண்டே அவன் கூறினாலும்.

  ’வேண்டாமே! சலித்துக் கொண்டாள் அவள். திரையிலே கற்பனைக் கதை ஓடிக் கொண்டிருந்த அதே சமயத்தில் அவரவருடைய மனங்களில் நிஜக் கதைகள் ஓடிக் கொண்டி இருந்தன.

  இடைவெளைக்காகத் தியேட்டர் விளக்குகள் ஒளிர்ந்தன. அத்தனை கூட்டத்திலும் தமக்குத் தெரிந்தவர் யாராவது வந்திருக்கிறார்களா என்று அவரவர் சுற்றியும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்த சமயத்தில்-

  ரகுராமன் வெளியே சென்று ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான். அதற்குள் தியேட்டர் வராந்தாவில் அங்கங்கே நின்றவர்கள், ‘இண்டர்வெல்’ வரையும் தான் படத்தைப் பார்த்தவர்கள், அதைப் பற்றி விமரிசிக்க தொடங்கியிருந்தார்கள்.

  ‘படமா எடுத்திருக்கிறான்? பப்படம்!’

  ‘இட் இஸ் எ வேஸ்ட் ஆஃப் டைம்!’

  ’நல்ல பயாசுக்கோப்பு! கீழே எறிந்துவிட்டு ரகுராமன் தனக்குள் சிரித்துக் கொண்டான். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு உலகம்!

  தியேட்டரில் அதன் அடிவயிறு குலுங்கும்படியான வால்யூமில் இசைத்தட்டு இயங்கிக் கொண்டிருந்தது. ஜாலங்களில் காதலனும் காதலியும் இசைத் தட்டில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வதைப் போல அடித்துக் கொள்வதைப் போல அத்தனை ஓட்டம், நெளிவு, சுளிவுகள்.

  திவாகரனும் ரேணுகாவும் ஆளுக்கொரு சாக்லேட் ட்ரிங்க்கைச் சுவைத்துப் பருகிக் கொண்டிருந்தனர். அதன் இனிப்பு இதயத்தைத் தொடும் விதத்திலேயே இருந்ததோ.

  போதாக்குறைக்கு இசைத்தட்டின் பரிமாறல் வேறே. ரேணுகா தன் வலது கால் கட்டை விரலால் தரையில் தாளம் போட்டுக் கொண்டிருந்தாள்.

  ட்ரிங்க் முடிந்தது.

  ‘இன்னொன்று சாப்பிடுகிறாயா ரேணு?’

  ‘நோ..நோ! வெரி காஸ்ட்லி!’ ரேணுகாவுக்கு ரொம்ப அதிகமாக தெரியாவிட்டாலும், சுற்றுப் புறத்தச் சற்றே கவரச் செய்யும் வகையில் ஆங்கிலம் கை வரும்.

  ‘வாட் காஸ்ட்லி!...பணம் இன்று வரும், நாளை போகும். ருசி, வாழ்வின் ரசனை. விருப்பமான அநுபவங்கள்…ரேணு. இன்னொன்று அவசியம் சாப்பிடு!’ என்றான் திவாகரன்.

  கணவனின் கண்ணொளி ரேணுகாவுக்கு மயக்கத்தைத் தந்தது.

  ‘பாதி பாதி சாப்பிடுவதானால் சரி’ என்று அவள் சொல்லி முடிப்பதற்கு முன்னால்.

  ‘ஓ.கே! என்று உற்சாகமாக மொழிந்தான் திவாகரன்.

  படம் மறுபடியும் ஆரம்பமானது.

  ‘பட்டு’ – கைலாசம்

  ‘என்னவாம்?’ பட்டு

  ’எட்டு வருஷத்திற்உ முன்னால்…’

  ‘முன்னால்?’

  ‘நமக்கு கல்யாணம் ஆன முதல் ஆண்டில்…திடுதிப்பென்று கிராமத்தில் உங்கள் வீட்டில் வந்து நின்றேன். ஊரே என்னை மாப்பிள்ளை மாப்பிள்ளை என்று வரவேற்று போது உன் அப்பாவுக்குக் காலும் ஓடவில்லை கையும் ஓடவில்லை..’

  ‘என்ன இது, பழைய கதை?’

  ‘கேள், பட்டு! அன்று உன்னை அடுத்த கிராமத்திலிருந்த டூரிங் சினிமாவுக்கு அழைச்சிண்டு போனேனே. திரும்பி வரும் போது ஒரே மழை.. இரண்டு பேரும் தொப்பலாக நனைந்து வந்தோம்….’

  ‘சரிதான்! சினிமாக் கதை மாதிரி நடந்த கதையைச் சொல்றீங்களே..’

  ‘நனைந்து வந்தோமா? ஊரை அடையும் போது மழை நின்று விட்டது. உனக்கு ஞாபகம் இருக்கா பட்டு? நமக்கு ஒரே பசி….ஊர் எல்லையிலே ஒரு மண்டபத்திலே கொஞ்சம் ஒதுங்கினோம்….’

  ‘அப்புறம்?’

  ‘நீ பெரிய கள்ளி, பட்டு! ஞாபகம் இல்லாதவள் போல் கேட்கிறாயே?...மண்டபத்தில் ஒரு சிமினி விளக்கை வைத்துக் கொண்டு, முறுக்கு விற்றுக் கொண்டிருந்த ஒரு பேர்வழியிடம் முறுக்கு வாங்கித் தின்றோமே…’

  ‘ஐயே, அசடு வழிகிறது. பக்கத்தில் யார் காதிலாவது விழுந்து வைக்க போகிறது…’

  ‘அது சரி, எனக்குப் பசிக்கிறது பட்டு! உனக்கு? வெளியே தேங்குழல் விற்கிறான்…’

  ’நல்ல பசி, உங்கள் பசி! அங்கே லதா விழித்துக் கொண்டு பசியால் அழுகிறாளோ என்னவோ…இது லதாவின் பசி வேளை… உங்களோடு சினிமாவுக்கு வந்தேன். இந்தப் பழைய கதையை எல்லாம் கேட்க!’

  இரண்டாவது மணி அடித்தது. தியேட்டர் விளக்குகள் யாவும் அணைந்து, மறுபடியும் படம் தொடங்கியது.

  நேரம் நகர்ந்து கொண்டிர்நுதது. ரகுராமனுக்கு சலித்தாற் போலிருந்தது. சீக்கிரமாய் முடிக்காமல் இழுத்தடிக்கிறான்’ என்று தனக்குள் முணுமுணுத்தான்.

  அவனுக்கே சிரிப்பு வந்தது. ஐநூறு ரூபாய்ச் சம்பளப் பணம் முழுசாய்ப் பையை நிறைக்கும் போது.

  அலுவலகத்திலிருந்து அறைக்குத் திரும்பும் வழியில் ஆயிரம் ஏழைகள் இருந்தாலும் அது அவன் கண்ணுக்குப் பட்டதில்லை.

  ஆனால் சினிமா முடிந்து அறைக்குத் திரும்பும் போதெல்லாம், ‘இந்தப் பணத்தை ஏழைக்குப் போட்டிருக்கலாமே’ என்ற ‘வேதாந்தம்’ அவனுள் பிறக்கும்…அதை நினைக்கும் போதுதான் அவனுக்குச் சிரிப்பு வந்தது. படத்தின் முடிவு நெருங்க…நெருங்க –

  திவாகரனின் நெஞ்சுக்குள் கவலைகள் எதிரலைகளாக இயங்கின. ’ஏன், இன்ஷ்யூரென்ஸ் பாலிசியில் கடன் வாங்கினால் என்ன? எப்படியாவது சமாளித்தாக வேண்டுமே’ – இப்படிக் கவலைகள்.

  படம் முடிந்தது.

  IMG_20160105_143535589.jpg 

  அதற்குள் முடிந்துவிட்டதே என்று கைலாசத்திற்கு உவர்ப்பாக இருந்தது –

  பட்டு பரபரத்தாள். சினிமாவைப் பார்க்கும் போது பரபரப்படைகிறோம். உணர்ச்சி வசப்படுகிறோம். சொந்த வாழ்க்கையில் இந்த நியாயமான உணர்ச்சிகளுக்காகத் தானே உயிர் வாழ்கிறோம்?

  தன்னை மறந்த லயத்திலிருந்து விடுபட்டவர்களாக வாழ்க்கையின், நிஜ சொரூபத்தில் மீண்டும் சங்கமமாகத் தியேட்டரை விட்டு எல்லோரும் வெளியே வந்தார்கள்.

  தியேட்டர் வாசலில் –

  கைலாசமும் பட்டுவும் திடுக்கிட்டார்கள். மணி தன் தோளின் மேல் லதாவைச் சுமந்து கொண்டு அங்கே நின்றிருந்தான்.

  பட்டு பாய்ந்தாள்.

  ‘என்னடா, மணி?’

  குழந்தையைப் பாய்ந்து வாங்கிக் கொண்டாள் பட்டு. வாயில் திணிக்கப்பட்டிருந்த ஃபீடிங் நிப்பளின் இன்சுவையில் உறங்கிக் கொண்டிருந்தாள் குழந்தை லதா. அவள் ரோஜாக் கன்னங்களில் வழிந்திருந்த கண்ணீரின் ஈரம் மெதுவாக உலர்ந்து கொண்டிருந்தது.

  ‘என்னடா மணி?’ கைலாசம் படபடத்தான்.

  ஐந்து வயது மணி தன் விசும்பலுக்கிடையில் பெற்றோருக்கு அறிவித்த ‘உயிர் வசனம்’ இதுதான்:

  ‘ஃபீடிங் பாட்டில் கீழே விழுந்து உடைஞ்சிடுத்து அப்பா! பாலெல்லாம் கீழே கொட்டி விட்டது….லதா பசி பொறுக்க முடியாம கத்தி…அப்புறம் தான் இங்கேயே லாதவை தூக்கிண்டு….’

  ‘மணிக் கண்ணு!’ கைலாசம் தன்னுடைய ஐந்து வயசுப் பையனை ஒரு குழந்தையைப் போல் தூக்கிக் கொண்டு முத்தமிட்டான்.

  சினிமாவைப்பார்த்துவிட்டு வெளியில் வந்திருந்த ஒரு சிலர் இந்தச் சினிமாவையும் தான் பார்த்தார்கள். அவர்களில் ரகுராமன் இருந்தான்; திவாகரனும், ரேணுகாவும் இருந்தார்கள்….நகலைப் பார்த்தவர்கள் அசலைப் பார்க்கிறார்கள்.

  சினிமா என்பது தியேட்டருக்கு உள்ளே மட்டும் தானா? வெளியே, வாழ்க்கையின் ஒவ்வொர் அம்சத்திலும் அது உயிரணுவாகவே நிறைந்திருக்கிறது.

  (தினமணி கதிர் 27.12.1968  இதழில் வெளியான சிறுகதை)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai