சுடச்சுட

  

  இந்தக் கதையில் எங்கேயோ ஒரு முற்றுப் புள்ளி இருக்கிறது. தேடிக் கொண்டே படியுங்கள்.

  மணி ஒன்பதே முக்கால் ஆகியும், இன்னும் யாரும் ஆபிசுக்கு ஏன் வரவில்லை? ஒருவேளை இன்றைக்கு ஏதாவது விசேஷமாக இருக்குமோ?

  அதோ கேட்டினுள் நுழைவது யார்? ரமணியா? அவனைத் தவிர நம் ஆபிசில் யார் இவ்வளவு நன்றாக டிரஸ் பண்ணிக் கொள்வார்கள்? வேகமாக வரும் அவனிடம் நேற்று நடந்த விஷயத்தைச் சொல்வதை விட வேறு என்ன முக்கியமான வேலை இருக்கப் போகிறது?

  ‘என்ன ரமணி?’ ஆபிசுக்குள் நுழைந்தவுடனே வேலையில் ரொம்ப அக்கறை இருப்பவனைப் போலச் சென்றால் மானேஜரிடம் நல்ல பெயர் வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? ஒரு நிமிடம் என்னோடு பேசிவிட்டுப் போனால் என்ன? குடியா முழ்கிப்போய்விடும்?’

  ‘ஏன் என்றுமில்லாமல் இன்று மட்டும் என்னை அவ்வளவு அக்கறையுடன் கூப்பிட்டுப்பேசச் சொல்கிறாய்?’ எனக்குத் தெரியாமல் ஏதாவது நடந்திருக்கிறதா, என்ன?’

  ‘ஏன் உனக்குத் தெரியாமல் இந்தக் காரியாலயத்தில் ஒன்றுமே நடக்காது என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்? உனக்கு மேல் நான் ஒருத்தன் இங்கே இருப்பதை நீ மறந்துவிட்டாயா? எனக்குத் தெரியாமல் நம் ஆபிசில் ஒரு அணு கூட அசையாதே, தெரியுமா?’

  ‘சரிதானப்பா, ஏட்ஜ்ஹோ நீ இல்லாவிட்டால் நம் கம்பெனியே இல்லை என்னும் அளவுக்கு பேசும்படி அப்படி என்னதான் நடந்துவிட்டது?’

  ‘ஓ, நான் அப்படிச் சொன்னதும் எனக்கும் அந்த விஷயத்துக்கும் ஏதோ சம்பந்தம் உண்டு என்று நீ முடிவு கட்டி விட்டாயா?’

  ‘நேற்று நடந்த விஷயமா? என்ன அது?’

  ‘ஏன்? நீ நேற்று ஆபிசுக்கே வரவில்லையா?’

  ‘நான் வந்திருந்தால் உன்னிடம் இப்படி அதைத் தெரிந்து கொள்வதற்காகக் காலில் விழாத குறையாக நின்று கெஞ்சிக் கொண்டிருப்பேனா? நானே முதலில் உன்னிடம் வந்து சொல்லியிருக்க மாட்டேனா?’

  ‘சரி, கொஞ்சம் வெற்றிலை பாக்கு இருக்குமா?’

  ‘டேய், இதுதானா சமயம் அதற்கெல்லாம்? ஏன் இப்படி என்னை ‘சஸ்பென்சில்’ வைத்து உயிரை வாங்குகிறாய்? மனத்தில் பெரிய ஹிட்ச்காக் என்று நினைப்போ?’

  ‘அது என்ன அவ்வளவு சுலபத்தில் சொல்லி விடுகிற சமாசாரமென்று நினைத்து விட்டாயா?’

  ‘ஏது, சீரியஸான விஷயமா?’

  IMG_20160120_121927468.jpg 

  ‘நான் மானேஜர் ராமச்சந்திரன் ஆகிய மூவரையும் தவிர வேறு யாருக்காவது தெரியுமானால் விசாரித்துக் கொள்ள ஏன் நீ தயங்குகிறாய்?’

  ‘நான் இப்போது பிகு பண்ணிக் கொள்ளும்படி என்ன சொல்லிவிட்டேன்?’

  ‘அப்படி வந்தாயா வழிக்கு? நான் இப்போது சொல்லப் போகும் விஷயத்தை யாரிடமும் சொல்வதிலை என்று வாக்குறுதி தருகிறாயா?’

  ‘டேய், ரொம்பப் பெரிய விஷயமா?’

  ‘ஏன் நான் ரகஸியமாகக் கூப்பிட்டுச் சொல்கிறேன்? என்றைக்காவது நான் உன்னிடம் மட்டும் ரகசியமாக ஏதாவது விஷயத்தைப்பேசியிருக்கிறேனா?’

  ‘சீக்கிரம் விஷயத்தைச் சொல்லித் தொலைக்காமல் ஏன் இப்படி கழுத்தை அறுக்கிறாய்?’

  இதை உன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லையோ? நம்ப டைப்பிஸ்ட் ராமச்சந்திரன் நேற்று என்ன பாடுபட்டுவிட்டார் தெரியுமா?’

  ‘யார்? டைப்பிஸ்ட் ராமச்சந்திரனா?’

  ‘வேறு யார்? அவர் நேற்று என்ன வேலை செய்தார் தெரியுமா?’

  ‘என்ன செய்தார்?’

  ‘உன்னிடம் அவர் கடைசியாக எப்போது பேசினார்?’

  ’கைமாற்று விஷயம் தவிர அவர் வேறு எதற்காகப் பேசப் போகிறார்? பரம சாதுவான அவர் மேல் என்ன புகார்?’

  ‘பார்த்தால் பசு, பாய்ந்தால் புலி என்னும் வசனத்தை நீ கேட்டதில்லையா?’

  ‘என்ன ஆயிற்று?’

  ‘மனுஷன் ரொம்ப நல்லவர் போல் நடித்துக் கடைசியில் மானேஜரின் தலை மேலேயே அல்லவா கையை வைக்கப் பார்த்தார்?’

  ‘நிச்சயமாகத் தெரியாமல் ஒரு நல்ல மனிதரைப் பற்றிக் குறை கூறுவது நல்லது என்று நீ நினைக்கிறாயா?’

  ‘யார்? நானா நிச்சயமாகத் தெரிந்து கொள்ளாமல் குறை கூறுகிறேன்? என் இடத்தில் உட்கார்ந்து கொண்டால் மானேஜர் விடும் மூச்சுக் காற்று கூடக் கேட்குமே தெரியுமா?’

  ‘அதற்கென்ன, இப்போது?’

  ‘என்ன அவ்வளவு சுலபமாகக் கேட்டுவிட்டாய்? நேற்று பகல் சுமார் மூன்று மணிக்கு மானேஜர் கூப்பிடுகிறாரென்று பியூன் வந்து சொன்னதும் அவர் முகம் ஏனப்படி வெளிறிப் போக வேண்டும்?’

  ‘ஏன்?’

  ‘ஆடு திருடின கள்ளன் முழுக்காமல் என்ன செய்வான்?’

  ‘என்ன சொல்கிறாய் நீ?’

  ‘நம் மானேஜர் சாதாரணமாகக் கஸ்டமர்கள் கொடுக்கும் பணத்தை எங்கே வைப்பார்?’

  ‘மேஜை மேலே தானே?’

  ‘நான்கு பேரிடம் கஷ்டம் என்று கேட்டு நிராகரிக்கப்பட்ட ஒருவன் யாருமில்லாத அறையில் பணத்தைப் பார்த்தால் என்ன செய்வான்?’

  ‘ராமச்சந்திரன் அப்படிச் செய்வாரா?’

  ‘பின்னே நான் என்ன வேண்டுமென்றே அவர் மேலுள்ள பழைய விரோதத்தினால் அப்படிச் சொல்கிறேனா? இதைக் கூட ஒவ்வொருவரிடமும் சொல்கிறேன் என்று நினைக்கிறாயா நீ?’

  ‘அப்புறம் என்ன ஆயிற்று?’

  ‘என்ன ஆகும்? அவர் காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளத் தயங்குகிறாரா? நைசாக ஜேபியில் பணத்தைப்போட்டுக் கொண்டு நழுவாமல் வேடிக்கையா பார்த்துக் கொண்டிருப்பார்?’

  ‘நீ அதை நேரில் பார்த்தாயா?’

  IMG_20160120_121912789.jpg 

  ‘அந்தக் கண்ணராவியை நேரில் வேறு பார்க்க வேண்டுமா? மானேஜர் சொல்லிக் கேட்டால் போதாதா?’

  ‘மானேஜர் அவரைத் திட்டினாரா?’

  ‘திட்டாமல் திண்பண்டம் கொடுப்பாரா?’

  ‘ராமச்சந்திரன் ஏதாவது சொன்னாரா?’

  ‘என்ன சொல்ல முடியும்? இவர் மேல் தவறு இல்லாவிட்டால், மானேஜர் திட்டும்போது ஏன் இவர் கூனிக் குறுகிப் பேசாமல் நிற்கிறார்?’

  ’மானேஜருக்கு அந்தப் பணத்தை எடுத்தவர் ராகவன் தான் என்று எப்படித் தெரியும்?’

  ‘மானேஜரின் அறையில் அவரைத் தவிர வேறு யாராவது நுழைவதற்கு அதிகாரம் உண்டா? அதுவும் இல்லாமல் நம் ஆபிசில் அந்தச் சமயத்தில் அவ்வளவு பணமுடையோடு வேறு யார் இருந்தார்கள்?’

  ‘ரொம்ப நல்ல மனிதர் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கும்போதுஏன் அவர் புத்தி இப்படிப் போயிற்று? ஒரு வேளை வீட்டில் மனைவி தூண்டிவிட்டிருப்பாளா?’

  ’மனசு சரியாக இருந்தால் யார் என்ன சொல்ல முடியும்? இவனைத் தவிர வேறு யார் மேல் தவறு?’

  ‘வரட்டுமா?’

  அவர் மாட்டிக் கொண்டார் என்று சொன்னால் இவன் ஏன் இப்படி வருத்தப்பட்டுக் கொள்கிறான்? என்ன வெய்யில் இது? இந்த ஸம்மர் வந்தாலே தொண்டை ஏன் இப்படி உலர்ந்து போகிறது?’

  ‘ஏன் இப்படித் தூங்கி வழிகிறாய் கோவிந்தசாமி? ஐஸ் போட்ட கோலா எவ்வளவு? முப்பது பைசா தானே? போய் ஒன்று வாங்கி வருகிறாயா?’

  ‘மாட்டேன்னு எப்பவாவது சொல்லியிருக்கேனா?’ உங்களை மானேஜர் வந்து பார்க்கச் சொன்னாரா இல்லையா?’

  ‘நான் போய் அவரைப் பார்த்து விட்டு வருவதற்குள் நீ வாங்கி வந்து வைத்துகிறாயா?’

  ‘மாட்டேன்னு எப்பவாவது சொல்லியிருக்கேனா? உங்களை மானேஜர் வந்து பார்க்கச் சொன்னாரா? இல்லையா?’

  ‘நான் போய் அவரைப் பார்த்துவிட்டு வருவதற்குள் நீ வாங்கி வந்து வைத்துவிடுகிறாயா?’

  ‘ஐஸ்போட்ட கோலாதானே?’

  ‘என்றுமில்லாமல் மானேஜர் இன்று மட்டும் ஏன் அழைக்கிறார்?’

  ‘ஏன் மிஸ்டர் ராகவன் வெளியே நிற்கிறீர்கள்?’

  ‘அனுமதி இல்லாமல் உள்ளே வரலாமா?’

  ‘இப்படிக் கொஞ்சம் உங்கள் பேனாவைத் தருகிறீர்களா?’

  இந்த மனிதர் என்ன சம்பாதித்துக் கொட்டுகிறார்? ஒரு பேனா கூட வாங்கிக் கொள்ளக் கூடப் பணமில்லையா? நான் மட்டும் என்னவாம்? இந்த ஒழுகும் பேனாவை ஒழித்துக் கட்டிவிட எத்தனை நாட்களாக முயற்சி செய்கிறேன்? முடிகிறதா?

  ‘இது உங்கள் பேனாதானா?’

  ‘ஏன் சார் அப்படிக் கேட்கிறீர்கள்?’

  ‘யாரை இப்போது நம்ப முடிகிறது?’

  ‘எல்லோரும் திருடர்களாகவே இருப்பார்களா?’

  ‘நான் அப்படியா சொன்னேன்? இதே பேனாவை தானே நீங்கள் ஆபிசுக்குக் கொண்டு வருவீர்கள்?’

  ‘வேறு என்ன சார் செய்வது? நினைத்தால் வேறு பேனா வாங்க முடிந்தால் இன்னும் இந்த ‘லீக்’ ஆகும் பேனாவிலேயே எழுதுவேனா?’

  ’கொஞ்ச நேரத்துக்கு முன்பு யாரிடம் பேசிக் கொண்டிருந்தீர்கள்?’

  ‘ரமணியிடம்தான் என்று தெரியாதா?’

  ‘நேற்று என்னுடைய அறையிலிருந்து எடுத்துப் போன, பச்சை பச்சையாகச் சொல்லப் போனால், திருடின மூன்று நூறு ரூபாய் நோட்டுகளையும் கொண்டு வந்து தருகிறீர்களா?’

  ‘என்ன ஸார் இது? விளையாடுகிறீர்களா? கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாமல் ஒருவரிடம் இப்படிக் கேட்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா?’

  ‘திருடுவதற்கே நீங்கள் கூச்சப்படாத போது அதைச் சொல்வதற்கு நான் ஏன் கூச்சப்பட வேண்டும்?’

  ’என்னுடைய மேலதிகாரி என்ற நினைப்பில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களால் அதை நிரூபிக்க முடியுமா?’

  ‘அது கூட முடியாமலா உங்களைக் கூப்பிட்டு விசாரிக்கிறேன்?’

  ‘நீங்கள் என்ன பேசுகிறீர்களோ என்று உங்களுக்கே தெரிகிறதா?’

  ‘மிஸ்டர் ராகவன், நம் ஆபிசில் உங்களைத் தவிர வேறு யார் கறுப்பு நிற மை போட்ட பேனா உபயோகிக்கிறார்கள்?’

  ‘நான் மட்டும்தான் என்றால் அதற்கென்ன?’

  ‘யாருக்கும் இல்லாத அக்கறை உங்களுக்கு இந்த விஷயத்தில் ஏன் ஏற்பட வேண்டும்? அதுவும் இல்லாமல் முன்பே ராமச்சந்திரனுக்கும் உங்களுக்கும் ஏதோ மனஸ்தாபம் உண்டு இல்லையா?’

  ‘என்ன சார் சொல்கிறீர்கள்?’

  ‘ராகவன், யாரும் இல்லாத சமயம் என் அறையினுள் நுழைந்து மேஜையின் மேலிருந்த நாலு நூறு ரூபாய் நோட்டுகளில் அஜாக்கரதையாக மூன்றை மட்டும் எடுத்துவிட்டு ஒன்றை மறந்து விட்டீர்கள் இல்லையா? ஒழுகும் பேனாவினால் ஏற்பட்ட கறை அந்த நழுவி விழுந்த ரூபாய் நோட்டின் மேல் படிந்திருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? ஒரு அப்பாவியின் மேல் அபாண்டமாகப் பழி சுமத்தி அவன் மேல் கெட்ட எண்ணம் ஏற்படச் செய்ததில் உங்களுக்கு என்ன லாபம்?’

  என் தலை ஏன் இப்படித் தொங்கிப் போகிறது? என் நாக்கு என்ன, செத்துப் போய்விட்டதா?’

  ‘மிஸ்டர் ராகவன், நீங்கள் எடுத்துச் சென்ற பணத்தையும் உங்களுடைய ராஜிநாமா கடிதத்தையும் இன்று எதிர்பார்க்கலாமா?’

  பணத்தையும் ராஜிநாமா கடிதத்தையும் கொடுத்துவிட்டு வரும் என்னை ஏன் எல்லோரும் அப்படிப் பார்க்கிறார்கள்? அட, டைப்பிஸ்ட் ராமச்சந்திரன் கூட ஏன் கேவி கேவி அழுகிறார்?

  (ஒரு முற்றுப் புள்ளிகூட அகப்படவில்லையா? எல்லாம் கேள்விகள் தானா? இது ஒரு கேள்வி மயக்கதை என்று இப்போதாவது புரிகிறதா?)

  தினமணி கதிர் 16.08.1968 இதழ் (டில்லிச் சிறப்பிதழ்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai