Enable Javscript for better performance
21. பொன்னார் திருவடிக்கொன்று - பாடல் 1- Dinamani

சுடச்சுட

  


  (தூங்கானைமாடம் (பெண்ணாகடம்) - திருவிருத்தம்)

   

  பின்னணி

  கல்லுடன் பிணைக்கப்பட்டு கடலில் தள்ளிவிடப்படினும், சிவபிரானின் அருளால் கடலில் மூழ்காமல் கரையேறிய அப்பர் பிரான், திருப்பாதிரிப்புலியூரில் இறைவனைத் தொழுது ஈன்றாளுமாய் என்று தொடங்கும் பதிகத்தினை பாடிய பின்னர் திருவதிகை வந்து சேர்கின்றார். கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகத்தினைத் தான் பாடிய போது இருந்த நிலைக்கும் தற்போதுள்ள நிலைக்கும் உள்ள மாற்றத்தை நினைத்து பார்க்கின்றார். பல சோதனைகளிலிருந்தும் தன்னைக் காப்பாற்றிய கருணைக் கடலான சிவபிரானின் கருணையை நினைவு கூறும் அப்பர் பிரான், இத்தகைய இறைவனை சமண மதத்தில் இருந்தபோது தான் இகழ்ந்ததற்காக மிகவும் வருந்துகின்றார். தனது வருத்தத்தை ஒரு பதிகமாக பதிவு செய்கின்றார். வெறிவிரவு என்று தொடங்கும் பதிகம்தான் இந்தப் பதிகம். இந்தப் பதிகத்தின் அனைத்துப் பாடல்களும் ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே என்று முடிவதால் இந்தப் பதிகம் ஏழைத் திருத்தாண்டகம் என்று அழைக்கப்படுகின்றது. இந்தப் பதிகத்தின் முதல் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

  வெறிவிரவு கூவிள நல் தொங்கலானை வீரட்டத்தானை வெள்ளேற்றினானைப்
  பொறி அரவினானைப் புள்ளூர்தியானைப் பொன் நிறத்தினானைப் புகழ் தக்கானை
  அறிதற்கரிய சீர் அம்மான் தன்னை அதியரையமங்கை அமர்ந்தான் தன்னை
  எறி கெடிலத்தானை இறைவன் தன்னை ஏழையேன் பண்டு இகழ்ந்தவாறே

  வெறிவிரவு = வாசனை கலந்த. கூவிளம் = வில்வம். தொங்கல் = மாலை. பொறி = புள்ளிகள். பாம்பின் படத்தில் உள்ள புள்ளிகள் இங்கே குறிப்பிடப்படுகின்றன. புள் ஊர்தியான் = கருடனை வாகனமாகக் கொண்ட திருமால். பொன் நிறத்தான் = பிரமன். சிவபிரானே திருமாலாகவும், பிரமனாகவும் அவர்களுள் இருந்து செயல்படும் தன்மை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

  பின்னர் திருவெண்ணெய்நல்லூர், ஆமாத்தூர், கோவலூர் வீரட்டம் முதலான தலங்கள் சென்று பெண்ணாகடத்தை அடைகின்றார். அப்போது அப்பர் பெருமான் சமண சமயத்துடன் தொடர்பு கொண்டிருந்த உடலினை தூய்மையற்றது என்று கருதுகின்றார். தூய்மையற்ற இந்த உடலுடன் வாழாலாகாது என்று முடிவு செய்த அப்பர் பிரான், இந்த உடலினைத் தூய்மை செய்துகொள்ள வேண்டும் என்று விரும்புகின்றார். அதன் விளைவாக எழுந்ததுதான் இந்தப் பதிகம். அப்பர் பிரானின் இந்த முடிவு வெளிப்படையாக பதிகத்தில் தெரிவிக்கப் படவில்லை; எனினும் பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமானார் இதனைக் குறிப்பிடுகின்றார்.

  புன் நெறியாம் சமண் சமயத் தொடக்குண்டு போந்த உடல்
  தன்னுடன் உயிர் வாழத் தரியேன் நான்; தரிப்பதனுக்கு
  என்னுடைய நாயக நின் இலச்சினை இட்டு அருள் என்று
  பன்னு செழும் தமிழ் மாலை முன்னின்று பாடுவார்

  சூலை நோயால் வருந்தியபோது, தனது சூலை நோய் தீர்க்கப்படவேண்டும் என்று இறைவனிடம் வேண்டிய அப்பர் பிரான், அதன் பின்னர் அருளிய பல பதிகங்களில் சிவபிரானிடம் தனது வேண்டுகோள்களை வெளிப்படுத்துகின்றார். சூலை நோயால் வருந்தியபோதுகூட இறைவனிடம் தான் அவனது அடிமையாக மாறிவிட்டதையும் சூலை நோய் சிவபிரானுக்குத் தொண்டு செய்யவிடாமல் தடுக்கின்றது என்ற பொருளில் தான் அவரது பாடல்கள் அமைந்துள்ளன. அவரது வேண்டுகோள்கள் அனைத்தும், சிவபிரானுக்குத் தான் தொண்டு செய்ய வேண்டும், சிவபிரானது பெயரினை தான் இறக்கும் தருவாயிலும்கூட உரைக்க வேண்டும், அவனது அடையாளங்கள் தனது உடலின் மீது பதிக்கப்பட வேண்டும், அவனது திருவடி தனது தலையின் மீது பட வேண்டும் என்றே அமைந்திருப்பதை நாம் காணலாம். அத்தகைய வேண்டுகோள்களில் சில இங்கே கொடுக்கப் பட்டுள்ளன. கீழ்க்கண்ட பாடலில் (நான்காம் திருமுறை பதிகம் எண்: 103 பாடல் 3). தான் இறக்கும் சமயத்தில் நமச்சிவாய என்ற அஞ்செழுத்தினை உரைக்கும் பேறு தனக்கு வேண்டும் என்று வேண்டுகின்றார்.

  தூமென் மலர்க்கணை கோத்துத் தீ வேள்வி தொழிற்படுத்த
  காமன் பொடிபடக் காய்ந்த கடல் நாகைக் காரோணா நின்
  நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்செழுத்தும்
  சாமன்று உரைக்கத் தகுதி கண்டாய் எங்கள் சங்கரனே

  மற்றொரு பாடலில் (நான்காம் திருமுறை பதிக எண்: 75 பாடல் 8) தான் இறக்கின்ற சமயத்தில், உனது நாமத்தைச் சொல்லி நீ எங்கிருக்கின்றாய் என்று வினவினால், இங்குள்ளேன் என்று நீ இருக்கும் இடத்தினைக் காட்ட வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டுகின்றார்.

  அங்கத்தை மண்ணுக்கு ஆக்கி ஆர்வத்தை உனக்கே தந்து
  பங்கத்தைப் போக மாற்றிப் பாவித்தேன் பரமா நின்னைச்
  சங்கு ஒத்த மேனிச் செல்வா சாதல் நாள் நாயேன் உன்னை
  எங்குற்றாய் என்ற போது இங்கு உற்றேன் என் கண்டாயே

  மற்றொரு பாடலில் (4ஆம் திருமுறை பதிகம் எண்: 113 பாடல் 3) அப்பர் பிரான், தனது உடலிலிருந்து உயிர் பிரிந்த பின்னரும் தன்னை மறக்காது தனது உயிரினைப் பாதுகாக்க வேண்டும் என்று கோருகின்றார்.

  முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும் இம் மூவுலகுக்கு
  அன்னையும் அத்தனும் ஆவாய் அழல் வண்ணா நீ அலையோ
  உன்னை நினைந்தே கழியும் என் ஆவி கழிந்ததற்பின்
  என்னை மறக்கப் பெறாய் எம் பிரான் உன்னை வேண்டியதே

  திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய ஒரு பதிகத்தின் (வான் சொட்டச் சொட்ட என்று தொடங்கும் பதிகம்) நான்காவது பாடலில், உடலின் இயலாமை காரணமாக தனது இறுதி நாளில் சிவபிரானைத் தான் நினைக்க முடியாமல் மறந்து போனாலும், சிவபிரான் தன்னை கவனித்துக் கொள்ளவேண்டும் என்ற விண்ணப்பத்தினை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தீத்தொழிலான் என்று தக்கன் இங்கே குறிக்கப்படுகின்றான். பேய்த் தொழிலாட்டி என்று பார்வதி தேவியின் ஒரு அம்சமாகிய காளி இங்கே குறிப்பிடப்படுகின்றாள். வேய்த் தொழிலாளர்கள் = அந்தணர்கள். விக்கல் எடுப்பதும், கோழை தொண்டையில் அடைப்பதும் உயிர் போகும் தருவாயில் நடைபெறும் செயல்கள்.

  தீத்தொழிலான் தலை தீயிலிட்டுச் செய்த வேள்வி செற்றீர்
  பேய்த் தொழிலாட்டியைப் பெற்றுடையீர் பிடித்துத் திரியும்
  வேய்த் தொழிலாளர் மிழலை உள்ளீர் விக்கி அஞ்செழுத்தும்
  ஓத்து ஒழிந்தும் உம்மை மறக்கினும் என்னைக் குறிக்கொள்மினே

   

  பாடல் 1

  பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம் போற்றிச் செய்யும்
  என் ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல் இரும் கூற்று அகல
  மின்னாரு மூவிலைச் சூலம் என் மேல் பொறி மேவு கொண்டல்
  துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க் கொழுந்தே