35. செஞ்சடைக் கற்றை - பாடல் 2

மெய் என்ற சொல்லுக்கு உண்மை என்ற பொருளும் உண்டு. சங்கார காலத்தில் அனைத்து உயிர்களும் அழிந்தபின்னர்,

பாடல் 2

ஏறனார் ஏறு தம் பால் இளநிலா எறிக்கும் சென்னிச்

ஆறனார் ஆறு சூடி ஆயிழையாளோர் பாக

நாறு பூஞ்சோலைத் தில்லை நவின்ற சிற்றம்பலத்தே

நீறு மெய் பூசி நின்று நீண்டெரி ஆடுமாறே

விளக்கம்

ஏறனார் = ஏற்றினைப்போன்று வலிமை கொண்டவர். ஆறு = வழி. ஆறனார் = வழிகாட்டுபவர். ஆறு+அன்னார் (அனார் என்று திரித்து பயன்படுத்தப்பட்டுள்ளது). மெய் = உடல்.

மெய் என்ற சொல்லுக்கு உண்மை என்ற பொருளும் உண்டு. சங்கார காலத்தில் அனைத்து உயிர்களும் அழிந்தபின்னர், அழிந்த உடல்களின் எரிந்த சாம்பலைத் தனது உடலில் பூசிக்கொண்டு, இறைவன் ஊழித்தீயின் நடுவே நின்று ஆடும் காட்சி இங்கே கூறப்பட்டுள்ளது. இறைவன் சிவபிரானது உடல் ஒன்றே என்றும் நிலைத்து நிற்கும் உடல் என்பதை உணர்த்த, உடல் என்றும் மேனி என்றும் குறிப்பிடாமல் அப்பர் பிரான் இங்கே நயமாக மெய் என்று கூறுகின்றார்.

ஆறனார் என்று சிவபிரானை நமக்கு வழிகாட்டியாக அப்பர் பிரான் உணர்த்துகின்றார். சிவபிரான் நமக்காக வைத்துள்ள வழியில் நாம் சென்று உய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் முகமாக, கழிப்பாலை தலத்தின் மீது அருளியுள்ள திருத்தாண்டகப் பதிகத்தில் (6.12) அப்பர் பிரான், அனைத்துப் பாடல்களையும் வழி வைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே என்று முடிக்கின்றார். நமது உடல் தசையைச் சுவர்களாகவும், ஒன்பது வாசல்களையும், வெள்ளை நிறத்தில் ஒளி வீசும் எலும்புகளைத் தூண்களாகவும், சுவற்றின் வெளிப்புறத்தில் உள்ள சுண்ணம் போன்று உரோமங்களால் சூழப்பட்டும், உருவாக்கப்பட்ட கூரை வீடாக, நமது உடல் உருவகப்பட்டுள்ளது. தயக்கம் = வேடம். சிவபிரான் எடுக்கும் பல வேடங்களை உணர்த்துகின்றது. தாமரை = தாவுகின்ற மான். தாமரையினார் = தாவுகின்ற மானைத் தனது கையில் உடையவர். பக்குவ நிலை பெற்ற உயிர், தன்னால் பொருத்தப்பட்ட உடலிலிருந்து விடுதலை பெறுமாறு அருள்புரியும் சிவபிரான், அத்தகைய உயிர் வானுலகத்தையும் கடந்துநிற்கும் சிவலோகத்திற்கு விரைந்து செல்லுமாறு வழி வகுத்துள்ளார். அந்த வழியைப் பின்பற்றி, அவர் வகுத்த வழியில் நாமும் செல்வோம் என்று அப்பர் பிரான் நமக்கு முக்திக்கு வழிகாட்டும் பாடல் இது.

ஊன் உடுத்தி ஒன்பது வாசல் வைத்து வொள்ளெலும்பு தூணா உரோமம் மேய்ந்து

தாம் எடுத்த கூரை தவிரப் போவார் தயக்கம் பல படைத்தார் தாமரையினார்

கானெடுத்து மாமயில்கள் ஆலும் சோலைக் கழிப்பாலை மேய கபாலப்பனார்

வானிடத்தை ஊடறுத்து வல்லைச் செல்லும் வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே

பொழிப்புரை

காளையைப் போன்று வலிமை படைத்தவரும், காளையை வாகனமாகக் கொண்டவருமான சிவபிரானார், ஒளிவீசும் சந்திரனைத் தலையில் உடையவராக காணப்படுகின்றார். கங்கை நதியினைத் தனது சடையில் சூடிக்கொண்டு, பார்வதி தேவியைத் தனது உடலில் ஒரு பாகமாக வைத்துள்ள சிவபிரான்தான் நமக்கு வழிக்காட்டியாக செயல்படுபவர். நறுமணம் கமழும் சோலைகள் நிறைந்த தில்லையில் உள்ள சிற்றம்பலத்தில், பல காலமாக, அவர் தனது உடலில் திருநீற்றினைப் பூசிக்கொண்டு ஊழித்தீயின் இடையே நின்று நடனம் ஆடுகின்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com