115. சுற்றமொடு பற்றவை - பாடல் 5

வேதங்களின் பொருளை
115. சுற்றமொடு பற்றவை - பாடல் 5


பாடல் 5:

    ஒருத்தி உமையோடும் ஒரு பாகம் அதுவாய
    நிருத்தன் அவன் நீதியவன் நித்த நெறியாய
    விருத்தன் அவன் வேதமென அங்கம் அவை ஓதும்
    கருத்தவன் இருப்பது கருப்பறியலூரே

விளக்கம்:

நிருத்தன்=நடனம் ஆடுபவன்; நித்தன்=அழியாமல் என்றும் இருப்பவன்; விருத்தன்= முதியவன் என்று பொதுவான பொருள்; இங்கே அனைவர்க்கும் முன்னே தோன்றியவன் என்பதால் அனைவரையும் விடவும் முதியவன் என்று சொல்லப் படுகின்றது; அனைவர்க்கும் மூத்தவன் என்று பொருள் பட விருத்தன் என்று கூறப்பட்டுள்ளது.   கருத்தவன் என்பதற்கு வேதங்களின் பொருளை கருத்தில் கொண்டுள்ளவன் என்பது பொருள். வேதங்களின் பொருளை நன்கு ஆராய்ந்து தனது மனதில் கொண்டுள்ள பெருமான்  என்பதால் தானே சனகாதி முனிவர்கள் வேதங்களின் பொருளை சரியாக புரிந்து கொள்வதற்கும் தங்களது ஐயப்பாட்டினைத் தீர்த்துக் கொள்வதற்கும் பெருமானை நாடினார்கள். வேதங்களையும் அதன் ஆறு அங்கங்களையும் ஆராய்ந்து உணர்ந்தவன் என்று இங்கே கூறுவது நமக்கு அப்பர் பிரான் அருளிய பாசூர் தலத்துப் பாடலை (6.83.5) நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் பெருமான் வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஆராய்ந்து பொருள் உணர்ந்து கொண்டு பாடினார் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

    வேடனாய் விசயன் தன் வியப்பைக் காண்பான் விற்பிடித்து
           கொம்புடைய ஏனத்தின் பின்
    கூடினார் உமையவளும் கோலம் கொள்ளக் கொலைப் பகழி உடன்
           கோத்துக் கோரப் பூசல்
    ஆடினார் பெருங்கூத்துக் காளி காண அருமறையோடு ஆறங்கம்
          ஆய்ந்து கொண்டு 
    பாடினார் நால்வேதம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன்
           உய்ந்தவாறே

ஓதும் என்ற சொல்லை வேதங்கள் செய்யும் செயலைக் குறிப்பதாக வைத்துக் கொண்டால் வேதங்கள் மற்றும் அங்கங்களின் மையப் பொருளாக, கருத்தாக இருப்பவன் என்று பொருள் கொள்ளலாம். இவ்வாறு சிலர் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால் இந்த பதிகத்தின் பெரும்பாலான பாடல்கள், கற்றவன் கண்டவன் காதவன் கடந்தவன் கண்ணவன் காதினன் காய்ந்தவன் கரந்தவன் என்று பெருமானின் பண்பு, தன்மை அல்லது செயலுடன் தொடர்பு கொண்டிருப்பதால், கருத்தவன் என்ற சொல்லுக்கு கருத்தினை உடையவன் என்று பொருள் கொள்வதே மிகவும் பொருத்தமாக உள்ளது.       

ஒருத்தி=ஒப்பற்றவள்; உமை அன்னையை ஒப்பற்றவள் என்று சம்பந்தர் கூறுவது நமக்கு அப்பர் பிரானின் சோற்றுத்துறை பதிகத்தின் பாடலை (6.44.7) நினைவூட்டுகின்றது. மாமணி=சிந்தாமணி; நினைத்ததை அளிக்கும் சிந்தாமணி தேவலோகத்தில் இருப்பதாக நம்பப் படுகின்றது. வண்மை மனம்=வேண்டும் வரத்தினை அளிக்கும் மனம். 

    வானவனாய் வண்மை மனத்தினானே மாமணி சேர்
           வானோர் பெருமான் நீயே
    கானவனாய் ஏனத்தின் பின் சென்றானே கடிய அரணங்கள்
            மூன்று அட்டானே
    தானவனாய்த் தண்கயிலை மேவினானே தன் ஒப்பார் இல்லாத
            மங்கைக்கு என்றும்
    தேனவனே திருச்சோற்றுத்துறை உளானே திகழொளியே
            சிவனே உன் அபயம்             நானே

அடியார்கள் வேண்டும் வரத்தினை அளிக்கும் சிறந்த தேவனாக விளங்குபவனே. நினைத்ததை அளிக்கும் சிறந்த மணியாகிய சிந்தாமணி சென்று சேரும் தேவர்களின் பெருமானாக இருப்பவனே, பன்றி வேடம் தரித்து தவம் புரிந்து கொண்டிருந்த அர்ஜுனனை கொல்வதற்காக ஓடிய பன்றியின் பின் சென்று அதனைக் கொன்றவனே, வலிமையான அரண்கள் கொண்ட மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்தவனே, அடியார்க்கு எதனையும் அளிக்க வல்லவனே, குளிர்ந்த கயிலாய மலையினைத் தனது இருப்பிடமாகக் கொண்டவனே, தனக்கு ஒப்பாக வேறு எந்த பெண்மணியும் இல்லாத அளவுக்கு அழகும், வீரமும், திறமையும் வாய்ந்த பார்வதி தேவிக்கு தேன் போன்று இனிப்பவனே. சந்திரன் சூரியன் ஆகிய அனைத்து ஒளிகளுக்கும் மூல காரணமாக திகழும் ஒளியே, சோற்றுத்துறை இறைவனே, சிவபெருமானே, அடியேன் உன்னை சரணடைந்து உனக்கு அடைக்கலப் பொருளாக மாறியுள்ளேன் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.

ஒருத்தி என்ற சொல்லுக்கு ஒருமித்த கருத்தினை உடையவள் என்று பொருள் கொண்டு, பெருமானுடன் ஒத்த கருத்துக்களை கொண்டவளாக அன்னை செயல்படுகின்றாள் என்றும் சிலர் விளக்கம் கூறுகின்றனர். பெருமானின் எண்ணங்களை செயலாக மாற்றுபவள் சக்தி தானே.  

பொழிப்புரை:

தனக்கு நேராக எவருமின்றி ஒப்பற்றவளாக திகழும் பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றவனும், எப்போதும் நடனம் ஆடுபவனும், நித்தம் இருப்பவனாக என்றும் அழியாமல் இருப்பவனும், நன்னெறி காட்டுபவனும், அனைவர்க்கும் முன்னே தோன்றியமையால் முதியோனாக கருதப் படுபவனும், வேதங்கள் ஒதுபவனும், வேதங்கள் மற்றும் ஆறு அங்கங்களின் பொருளை தனது மனதினில் எப்போதும் கொண்டிருப்பவனும் ஆகிய இறைவன் உறையும் இடம் கருப்பறியலூர் ஆகும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com