115. சுற்றமொடு பற்றவை - பாடல் 7

சிவபூஜை செய்து
115. சுற்றமொடு பற்றவை - பாடல் 7


பாடல் 7:

    ஆதி அடியைப் பணிய அப்பொடு மலர்ச் சேர்
    சோதி ஒளி நற்புகை வளர்க்கு வடு புக்குத்
    தீது செய வந்து அணையும் அந்தகன் அரங்கக் 
    காதினன் இருப்பது கருப்பறியலூரே

விளக்கம்:

அரங்கல்=அழிதல்; அப்பு=நீர்; சோதி ஒளி=தீபம்; நற்புகை=தூபம்; வளர்க்கு=வளர்க்கும்; வடு= பிரம்மச்சாரி சிறுவன், மார்க்கண்டேயன்; அந்தகன்=இயமன்; அந்தந்த உயிர்களுக்கு விதிக்கப்பட்ட நாளினில் அந்த உயிரினை சிறியோர் முதியோர் பெண்டிர் நோய்வாய்ப் பட்டோர் என்று இரக்கம் ஏதும் கொள்ளாமலும் வலிமை உடையவர் சக்ரவர்த்தி என்று அச்சம் ஏதும் கொள்ளாமலும் குருடன் போன்று உயிர் பொருந்தியிருக்கும் உடலினை சட்டை செய்யாமல் செயல்படுவதால் இயமனுக்கு அந்தகன் என்ற பெயர் வந்தது.

சிவபூஜை செய்து கொண்டிருந்த சிறுவனின் உயிரைக் கவர முயற்சி செய்த காலனின் உயிர் பெருமானால் அழிக்கப் பட்டது என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். சிறுவன் சண்டீசன் செய்த சிவ பூஜைக்கு இடையூறாக வந்த அவரது தந்தையின் கால்கள் வெட்டப்பட்டு அவர் கீழே விழுந்து இறந்ததும் பெருமானின் செயலால் தானே. சண்டீசர் தனது தந்தையின் கால்களின் மீது மரக் கொம்பினைத் தானே வீசினார். இறைவனின் செயலால் தானே அந்த கொம்பு மழுவாளாக மாறி எச்சதத்தரின் கால்களை வெட்டியது. பண்டைய நாளில் இயமன் செய்த தவறினை செய்த எச்சதத்தனும், இயமன் பெற்ற தண்டனையை அடைந்தான் அல்லவா. காதுதல்=கொல்லுதல்; காதினன்=உதைத்தவன்; பெருமான் இயமனை உதைத்து வீழ்த்தியதால் உதைத்தவன் என்று பொருள் கொள்ளவேண்டும். பெருமானை வழிபாடு செய்து கொண்டிருந்ததையும் பொருட்படுத்தாமல் சிறுவனது உயிரைக் கவர எண்ணியதால் அந்தகன் என்று நயமாக கூறினார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.       

பொழிப்புரை:

உலகின் ஆதியாக விளங்கும் பெருமானை நீர் மலர் தீபம் தூபம் ஆகியவற்றை முறையாக வளர்த்து வழிபட்ட பிரமச்சாரி சிறுவன் மார்க்கண்டேயனின் உடலில் புகுந்து, அவனது உயிரினைப் பறிப்பதன் மூலம் அவனுக்கு தீங்கு செய்யத் துணிந்து அவனை நெருங்கி அந்தகன் போன்று செயல்பட்ட இயமன் அழியும் வண்ணம் உதைத்து வீழ்த்திய பெருமான் இருப்பது கருப்பறியலூர் என்ற தலமாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com