116. துஞ்சலும் துஞ்சலிலாத - பாடல் 2

அஞ்செழுத்து மந்திரம்
116. துஞ்சலும் துஞ்சலிலாத - பாடல் 2


பாடல் 2:

    மந்திர நான்மறை ஆகி வானவர்
    சிந்தையுள் நின்று அவர் தம்மை ஆள்வன
    செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
    அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே

விளக்கம்:

இந்த பாடலின் நான்காவது அடியினை எடுத்துரைத்து சம்பந்தர், தனக்கு வேத மந்திரங்கள் உபதேசித்த வேதியர்களுக்கு அஞ்செழுத்து மந்திரத்தின் பெருமையை உணர்த்தினார் என்று சேக்கிழார் கூறும் பாடல் இந்த பதிக விளக்கத்தின் முன்னுரையில் கொடுக்கப் பட்டுள்ளது. வேதம் நான்கினும் மெய்ப்பொருளாக உள்ளது நாதன் திருநாமம் அஞ்செழுத்து என்ற கருத்து இந்த பாடலின் முதலடியில் உணர்த்தப் படுகின்றது.   

நமச்சிவாய மந்திரத்தில் உள்ள ஐந்து எழுத்துகளும் ஐந்து ஓரெழுத்துச் சொற்களாக ஐந்து பொருட்களை உணர்த்துகின்றன என்று சுந்தரர் திருவாரூர் பதிகத்தின் (7.83) முதல் பாடலில் கூறுகின்றார். அஞ்சு பதம் என்று பஞ்சாக்கர மந்திரத்தை இங்கே சுந்தரர் குறிப்பிடுகின்றார். சிவபெருமானின் திருநாமத்தை, சொல்ல வேண்டிய முறையில் சொல்லி, அவனது திருநாமத்தை சிந்தையினில் இருத்தி, திருவாரூர் சென்று அவனை வணங்குவது எந்நாளோ என்று தனது ஏக்கத்தை, திருவாரூர் பெருமானைப் பிரிந்து பல நாட்கள் இருந்ததை சுந்தரர் வெளிப்படுத்தும் பாடல்.  

    அந்தியும் நண்பகலும் அஞ்சு பதம் சொல்லி 
    முந்தி எழும் பழைய வல்வினை மூடா முன் 
    சிந்தை பராமரியாத் தென் திருவாரூர் புக்கு
    எந்தை பிரானாரை என்று கொல் எய்துவதே

ந என்ற எழுத்து திரோதான மலத்தையும், ம என்ற எழுத்து ஆணவம் முதலான மலத்தையும், ய என்ற எழுத்து ஆன்மாவையும், சி என்ற எழுத்து சிவத்தையும் வ என்ற எழுத்து சிவனின் அருளாகிய சக்தியையும் குறிக்கும். உயிர்க்கு தனியாக எந்த குணமும் இல்லாததால், உயிர் சார்ந்ததன் வண்ணமாகத் திகழும். ய என்ற எழுத்தால் குறிக்கப்படும் உயிர், ஒரு பக்கத்தில் மலங்களாலும் மறு பக்கத்தில் சிவத்தாலும் சூழப்பட்டுள்ளது. சிவத்தைச் சென்று அடைய வேண்டும் என்று உயிர் விரும்பினாலும், அவ்வாறு நிகழாதவாறு மலங்கள் உயிரைத் தடுக்கின்றன. பிறப்பு மற்றும் இறப்பினை விளைவிக்கக் கூடிய பாசம் ஒரு புறம் இழுக்க, முக்தி அளிக்கக்கூடிய சிவத்தைச் சார வேண்டும் என்று உயிர் விரும்ப, உயிருக்கும் பாசங்களுக்கும் இடையே ஒரு போராட்டம் நடைபெறுகின்றது. பாசத்தை வெல்லவேண்டும் என்று விரும்பும் உயிர்கள் ஐந்தெழுத்தை ஓதி, இறைவனின் துணையுடன் பாசத்தை வெல்லலாம். இதனை உணர்த்தும் அப்பர் பிரானின் பாடல் (5.59.1) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதும் உயிர்களின் மனதில் சிவனும் அவனது அருட்சக்தியும் உறைந்திருப்பார்கள் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.

    ஏதும் ஒன்றும் அறிவிலர் ஆயினும்
    ஓதி அஞ்செழுத்தும் உணர்வார்கட்கு
    பேதம் இன்றி அவரவர் உள்ளத்தே
    மாதும் தாமும் மகிழ்வர் மாற்பேறரே

மந்திரங்களாகவும் நான்மறையாகவும் நிற்கும் தன்மையால், அஞ்செழுத்து மந்திரம், அந்தணர்கள் சந்தியா வேளைகளில் சொல்லப்படும் மந்திரமாகவும் திகழ்கின்றது என்று சம்பந்தர் கூறுவது நமக்கு அப்பர் பிரான் அருளிய குறுந்தொகைப் பாடலினை (5.100.8) நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. அருக்கன்=சூரியன்; தினமும் அந்தி நேரங்களில், சூரியனின் பாதங்களை வணங்குவோர், அட்ட மூர்த்தியாக பெருமான் சூரியனுடன் இணைந்து இருப்பதை உணருவதில்லை. இருக்கு முதலாகிய நான்கு வேதங்களும், சிவபெருமானைத் தொழும் நிலையை உணராதவர்கள் மனம் கல்மனம். அதனால் தான் அவர்கள் வேதங்களைப் பின்பற்றி, சிவபெருமானை வணங்கி பயனடைவதை விட்டுவிட்டு வேறு தெய்வங்களைத் தொழுகின்றார்கள். அவர்களின் நிலை பரிதாபத்திற்கு உரியது என்பதே இந்த பாடலின் திரண்ட பொழிப்புரை.. 

    அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்
    அருக்கன் ஆவது அரனுரு அல்லனோ
    இருக்கு நான்மறை ஈசனையே தொழும்
    கருத்தினை நினையார் கல் மனவரே

அஞ்செழுத்து ஆகமமாகவும் புராணமாகவும் இருக்கும் தன்மை உண்மை விளக்கம் நூலில் உணர்த்தப் படுகின்றது. மறைகளை அருளியவர் அண்ணல் என்பதால், அண்ணல் அருமறை என்று இங்கே கூறப்படுகின்றது. முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்த நிலையில் அஞ்செழுத்து பரமுக்தியாகவும் இருப்பதாகவும் கூறுகின்றார். ஈசனுடன் இரண்டறக் கலந்து நிற்கும் நிலையே பரமுக்தி எனப்படுகின்றது. இதனையே சாயுச்சியம் என்றும் கூறுகின்றனர்.  

    அஞ்செழுத்தே ஆகமமும் அண்ணல் அருமறையும்
    அஞ்செழுத்தே ஆதி புராணம் அனைத்தும் அஞ்செழுத்தே
    ஆனந்த தாண்டவமும் ஆறாறுக்கு அப்பாலாம்
    மோனந்த மா முத்தியும் 

பொழிப்புரை:

மந்திரங்களுமாகவும் நான்கு வேதங்களாகவும் தேவர்களின் சிந்தையுள் நின்று அவர்களை ஆட்கொள்வதும் செம்மை நிறத்தில் தீச்சுடரினை ஏற்றி வேள்விகள் செய்து சிறந்த வேதநெறியில் நிற்கும் அந்தணர்களுக்கு, அவர்கள் மூன்று காலங்களிலும் செபிக்க வேண்டிய மந்திரமாகவும் இருப்பது அஞ்செழுத்து மந்திரமே.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com