116. துஞ்சலும் துஞ்சலிலாத - பாடல் 3

திருவாரூர் தலத்தின்
116. துஞ்சலும் துஞ்சலிலாத - பாடல் 3


பாடல் 3:

    ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்
    ஞான விளக்கினை ஏற்றி நன்புலத்து
    ஏனை வழி திறந்து ஏத்துவார்க்கு இடர்
    ஆன கெடுப்பன அஞ்செழுத்துமே

விளக்கம்:

உயிர்ப்பு=உடலில் ஓடிக்கொண்டிருக்கும் பிராணவாயு; உடலில் ஓடும் மூச்சுக் காற்றினை ஒடுக்கி, ஒருமுகமாக தியானம் செய்து இறைவனை நினைத்து வழிபடும் மாந்தர்களுக்கு, முக்தி உலகத்திற்கு செல்லும் வழியைத் திறப்பது அஞ்செழுத்து என்று சம்பந்தர் கூறுவது நமக்கு திருவாரூர் தலத்தின் மீது அருளிய உயிராவணம் என்று தொடங்கும் பாடலை (6.25.1) நினைவூட்டுகின்றது. உயிராவணம்=உயிராத வண்ணம்; உயிர்த்தல் என்ற சொல் மூச்சு விடுதல் என்ற பொருளில் இங்கே கையாளப்பட்டுள்ளது. உற்று நோக்கி=தியானத்தில் ஆழ்ந்து மனதினில் உருவகப்படுத்திய இறைவனின் உருவத்தினை நினைந்து; கிழி=திரைச் சீலை, துணி; உயிர் ஆவணம் செய்தல்=உயிரினை ஒப்படைத்தல் ஆவணம்=சாசனம்;. ஆவணம் என்பதற்கு ஓலை என்ற பொருள் கொண்டு அடிமை ஓலை எழுதி, தன்னை அடிமையாக இறைவனுக்கு ஒப்படைத்தல் என்றும் கூறுவார்கள். அயிராவணம்=கயிலை மலையில் உள்ள யானை, இரண்டாயிரம் தந்தங்களை உடையது. அயிராவணம் (நான்காவது அடியில் உள்ள சொல்)=ஐ இரா வண்ணம், ஐயம் ஏதும் இல்லாத வண்ணம் உள்ள உண்மையான மெய்ப்பொருள்.

    உயிராவணம் இருந்து உற்று நோக்கி உள்ளக் கிழியின்
          உரு எழுதி
    உயிர் ஆவணம் செய்திட்டு உன் கைத் தந்தால் உணரப்படுவாரோடு
          ஒட்டி வாழ்தி  
    அயிராவணம் ஏறாதே ஆனேறு ஏறி அமரர் நாடு ஆளாதே
          ஆரூர் ஆண்ட
    அயிராவணமே என் அம்மானே நின் அருட்கண்ணால்
          நோக்காதார் அல்லாதரே

ஒட்டி வாழ்தல்=உடனாகி இருத்தல்; இந்தப் பாடலில், இறைவன் யாரோடு ஒட்டி வாழ்வான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். மனதினை ஒருமுகப்படுத்தி இறைவனை தியானித்து, அவனது உருவத்தை நமது மனதிலிருந்து நீங்காத வண்ணம் எழுதி வைத்து, நாம் அவனுக்கு பூரண அடிமை என்ற நிலையை அவனுக்கு உணர்த்தினால், அவன் அத்தகைய அடியார்களுடன் இணைந்து வாழ்வான் என்று இங்கே விளக்குகின்றார். அடியார்கள் மண்ணில் வாழ்ந்த போதே அவர்களுடன் ஒட்டி வாழும் சிவபெருமான், அத்தகைய அடியார்கள் தங்களது உடலைத் துறந்த பின்னர், அவர்களுக்கு முக்தி அளித்து அவர்களை விட்டுப் பிரியாது இணைந்து வாழ்வான் என்பதும் இதன் மூலம் உணர்த்தப் படுகின்றது. எவரோடு இறைவன் ஒட்டி வாழ்வான் என்று முதல் இரண்டு அடிகளில் கூறும் அப்பர் பிரான், கடைசி அடியில், இறைவனை உணராதவர்கள், அவனது இன்பத்தைப் பெறுவதற்கு உரியவர்கள் அல்லர் என்று கூறுகின்றார். அருட்கண் என்று சிவபெருமான் தனது கண்களைத் திறந்து அருள் புரியும் நிலையை குறிப்பிடுகின்றது. நமது துயர் தீர்க்கப்படவில்லை என்றால் இறைவன் கண் திறக்கவில்லை என்று கூறும் வழக்கம் இந்நாளிலும் உள்ளது அல்லவா. 

அயிராவணம் என்று இரண்டாயிரம் தந்தங்களைக் கொண்ட பெருமை வாய்ந்த யானை கயிலையில் இருந்தாலும், அதனை வாகனமாகக் கொள்ளாமல், எளிமையான எருதினை வாகனமாகக் கொண்டு, தேவர்கள் உலகத்தினை ஆளும் திறமையும் வல்லமையும் கொண்டிருந்தாலும், தேவலோகத்தை ஆளாமல், அடியார்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரூர் நகரினை ஆளும் இறைவனே; தங்களது உயிர் மூச்சினை அடக்கி, உன்னை தியானித்து, உனது உருவத்தைத் தங்களது உள்ளத்தில் என்றும் அழியாத வண்ணம் பதித்து, உனக்கு அடிமையாகத் தங்களைக் கருதி, அந்த அடிமை சாசனத்தை உனது கையில் ஒப்படைக்கும் அடியார்களுடன், நீ இணைந்து வாழ்கின்றாய். எவருக்கும் எந்த ஐயமும் ஏற்படாமல் உண்மையான மெய்ப்பொருளாக இருப்பவனே, உன்னிடம் தன்னை ஒப்படைக்காத மனிதர்கள், உனது அருளைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் அல்லர் என்பதே இந்த பாடலின் திரண்ட பொழிப்புரை.

உயிர்ப்பை ஒடுக்கி என்பதற்கு பிராணாயாமம் செய்யும் போது மூச்சினை ஒடுக்குதலை குறிப்பிடுவதாகவும் விளக்கம் அளிக்கப் படுகின்றது. பிராணாயாமம் செய்வது எவ்வாறு என்பதை திருமூலர் மிகவும் அழகாக விளக்கும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பூரகம் என்பது வெளியே உள்ள தூய்மையான காற்றினை உள்ளே புகுத்தும் செயல்; கும்பகம் என்பது அவ்வாறு உள்ளே சென்ற காற்றினை எங்கும் ஒடாமல் அடக்கி நிறுத்தும் செயல். இரேசகம் என்பது உள்ளே இருக்கும் மாசடைந்த காற்றினை வெளியே அனுப்பும் செயல். பூரகம் செயல் பதினாறு மாத்திரைகளும் கும்பகம் செயல் அறுபத்து மாத்திரைகளும் இரேசகம் செயல் முப்பத்திரண்டு மாத்திரைகளும் அதிகபட்சமாக செயல்பட வேண்டும். அதாவது இந்த செயல்கள் நீடிக்க வேண்டிய கால அளவை 1:4:2 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். இந்த அளவு மாறினால், நாம் நமது உடலுக்கு வஞ்சனை செய்தவர்களாவோம். இந்த மாத்திரைக் கணக்கினை நெறிப் படுத்தவே மந்திரங்கள் உள்ளன.    

    ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்    
    ஆறுதல் கும்பகம் அறுபத்து நாலதில்        
    ஊறுதல் முப்பத்திரண்டது இரேசகம்
    மாறுதல் ஒன்றின் கண் வஞ்சகமாமே

நன்புலம்=நல்ல நிலமாகிய அறிவு; இடர்=அறியாமை; ஏனை வழி திறந்து=கண் காது வாய் ஆகிய ஞானேந்திரியங்கள்;   

பொழிப்புரை:

உடலில் ஓடும் பிராணவாயுவினை ஒடுக்கி ஒருமுகப்படுத்தி தியானம் செய்து, ஒளி மிளிரும் ஞானச் சுடரினை ஏற்றி, நல்லறிவினை இறைவன் அளித்துள்ள கண் காது வாய் ஆகிய கருவிகளை நல்ல முறையில் பயன்படுத்தி மேலும் விரிவடையச் செய்து, உண்மையான மெய்ப்பொருள் பெருமான் என்பதை புரிந்து கொண்டு அவனைப் புகழ்ந்து ஏத்தும் மனிதர்களுக்கு, அறியாமையால் ஏற்படும் இடர்களைக் களைந்து அவர்களின் மெய்ஞானத்தை வளர்ப்பது அஞ்செழுத்து ஆகும்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com