116. துஞ்சலும் துஞ்சலிலாத - பாடல் 4

ஐந்தெழுத்து மந்திரம்
116. துஞ்சலும் துஞ்சலிலாத - பாடல் 4


பாடல் 4:

    நல்லவர் தீயர் எனாது நச்சினர்
    செல்லல் கெடச் சிவமுக்தி காட்டுவ
    கொல்ல நமன் தமர் கொண்டு போம் இடத்து
    அல்லல் கெடுப்பன அஞ்செழுத்துமே

விளக்கம்:

நல்லவர் தீயவர் என்று அவரது குணங்களைப் பாராமல் ஐந்தெழுத்து மந்திரத்தினை விருப்பத்துடன் உச்சரிப்பவர் எவராக இருந்தாலும் அவர்க்கு முக்திக்கு செல்லும் வழியைக் காட்டுவது திருவைந்தெழுத்து என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். இதே கருத்து சம்பந்தரின் நமச்சிவாயப்பத்து பதிகத்திலும் அப்பர் பிரானின் நமச்சிவாயப் பதிகத்திலும் காணப் படுவதை நாம் உணரலாம்.

கொலையைத் தொழிலாக கொண்டவராக இருந்தாலும். நற்குணங்கள் மற்றும் நல்ல ஒழுக்கங்கள் ஏதும் இல்லாதவராக இருந்தாலும், அவர்கள் நமச்சிவாய மந்திரத்தை உரைத்தால், அவர்களது தீங்குகளை நீக்கும் தன்மை, அனைவர்க்கும் நன்மையை புரியும்  சிவபெருமானின் திருநாமமாகிய நமச்சிவாய மந்திரத்திற்கு உள்ளது என்று சம்பந்தர் கூறும் பாடல் (3.49.5) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

    கொல்வாரேனும் குணம் பல நன்மைகள்
    இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின்
    எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
    நல்லார் நாமம் நமச்சிவாயவே
 

இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் திருஞானசம்பந்தர், மந்தர மலையளவு பாவங்கள் செய்தவர்களாக இருப்பினும், உலகிலுள்ள உயிர்கள் மற்றும் பொருட்கள் மீது வைத்துள்ள பாசத்தால் கட்டுண்டவர்களாக இருப்பினும் அவர்கள் நமச்சிவாய மந்திரத்தை சொல்வாராயின் அவர்களது வலிமை வாய்ந்த தீவினைகள் மறையும்; மேலும் அவர்களது செல்வமும் பெருகும் என்று கூறுகின்றார். நந்தி=சிவபெருமான்''

    மந்தரம் அன பாவங்கள் மேவிய    
    பந்தனை அவர் தாமும் பகர்வரேல்
    சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
    நந்தி நாமம் நமச்சிவாயவே

ஏழு நரகங்கள் செல்லவேண்டிய பாவங்கள் புரிந்தவராயினும் அவர்களுக்கும் நமச்சிவாய மந்திரம் நன்மையை அளிக்கும் என்று கூறும் சம்பந்தப் பெருமானின் பாடலும் இங்கே நினைவு கூறத் தக்கது. இந்த பாடல் ஞானசம்பந்தர் அருளிய நமச்சிவாயப் பதிகத்தின் பாடல் (காதலாகிக் கசிந்து என்று தொடங்கும் பதிகம்) ஆகும்

    நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்
    உரை செய்வாயினர் ஆயின் உருத்திரர்
    விரவியே புகுவித்திடும் என்பரால்
    வரதன் நாமம் நமச்சிவாயவே 

ஆகாயம் வரை மிகவும் உயரமாக கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள குவியல்  ஆயினும், ஒரு தீப்பொறி அந்த அடுக்கினில் படர்ந்துப் பற்றிக்கொண்டால் அனைத்து கட்டைகளும் சாம்பலாக மாறி ஒன்றும் இல்லாத நிலை ஏற்படுவது போல், நாம் இந்த உலகினில் தொடர்ந்து செய்த பாவங்கள் எத்தனை ஆயினும் அவை அனைத்தையும் சுட்டெரிக்கும் தன்மை வாய்ந்து நமச்சிவாய என்னும் திருநாமம் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல், சொற்றுணை வேதியன் என்று தொடங்கும் நமச்சிவாயப் பதிகத்தின் (4.11.3) பாடலாகும். 

    விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல் 
    உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம்    
    பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
    நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே

நமன் தமர்=இயமனின் தூதுவர்கள்; இயமனின் தூதுவர்கள் கொண்டு செல்லும் இடம் நரகம். ஒருவரது உயிர் அவரது உடலிலிருந்து பிரிக்கப் பட்ட பின்னர், அவரது உயிரினைத் தாங்கிய சூக்கும உடல் நரகத்திற்கும் சொர்கத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு, அந்த பிறவியில் சேர்த்துள்ள வினைகளின் ஒரு பகுதியின் பயனை நுகர நேர்கின்றது. இந்த செய்தியையே சம்பந்தர் இங்கே நமன் தமர் கொண்டு போமிடத்து வரும் அல்லல் என்று குறிப்பிடுகின்றார். அத்தகைய நரகவேதனையை தடுக்கும் ஆற்றல் வாய்ந்த அஞ்செழுத்து, நல்லவர் தீயவர் என்ற பாகுபாட்டினை பார்ப்பதில்லை என்று இந்த பாடலில் கூறுகின்றார்.

இதே கருத்து அப்பர் பிரானின் திருமாற்பேறு பதிகத்தின் பாடலிலும் (5.60.6) காணப் படுகின்றது. சாற்றி சொல்லுவன்=பலரும் அறிய உரக்க சொல்லுவேன்; தரணி=உலகம்; மாற்றிலாச் செம்பொன்=இதை விடவும் உயர்ந்த செம்பொன் இல்லாத நிலையில், மாற்று காண முடியாத தரமான பொன். இறைவனைப் புகழ்ந்தால், இறைவன் இயமனைத் தடுத்து, தன்னைப் புகழும் அடியார்களின் குறைகளை நீக்குவான் என்று கூறுகின்றார். நம்மிடம் உள்ள குறைகளால் தான், நாம் பலவிதமான தீய செயல்களை செய்து அதற்குரிய தண்டனைகளை நரகத்தில் அனுபவிக்க வேண்டி உள்ளது. நமது குறைகள் நீங்கி விட்டால், நாம் தீய செயல்கள் செய்வது தடுக்கப்படும் போது, நாம் அந்த செயல்களுக்கு உரிய நரகத்து தண்டனைகளிலிருந்து தப்பிக்கின்றோம் அல்லவா. இவ்வாறு நம்மை நரக வேதனைகளிளுர்ந்து இறைவன் காப்பாற்றுவதை அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

    சாற்றிச் சொல்லுவன் கேண்மின் தரணியீர்
    ஏற்றின் மேல் வருவான் கழல் ஏத்தினால்
    கூற்றை நீக்கிக் குறைவு அறுத்து ஆள்வதோர்
    மாற்றிலாச் செம்பொன் ஆவர் மாற்பேறரே 

இயமனின் வாதனைகளிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்றால் பெருமானை வணங்க வேண்டும் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுவது நமக்கு சுந்தரரின் தில்லைப் பதிகத்தின் (7.90) பாடல்களை நினைவூட்டுகின்றது. அந்த பதிகத்தின் ஐந்தாவது பாடலை நாம் இங்கே காண்போம். இடிபோல் முழங்கி சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த இயமனை உருண்டு ஓட உதைத்த இறைவன், தனது அடியார்களை இயமனின் தூதுவர்கள் செக்கில் இட்டு தண்டிக்கும் போது, அந்த தண்டனையைத் தடுத்து ஆட்கொள்பவன் இறைவன் என்று இந்த பாடலில் சுந்தரர் கூறுகின்றார். இவ்வாறு அருள் புரியும் தில்லைச் சிற்றம்பலத்து இறைவனை நாம் அடைந்த பின்னர், இந்த உலகத்தில் நாம் பெற வேண்டியது ஏதும் உள்ளதோ, ஏதுமில்லை என்று உணர்த்தும் சுந்தரரின் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

    கருமானின் உரியாடைச் செஞ்சடை மேல் வெண்மதியக் கண்ணியானை     
     உருமன்ன கூற்றத்தை உருண்டோட உதைத்து உகந்து உலவா இன்பம்
    தருவானைத் தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்தாட்கொள்வான்
    பெருமானார் புலியூர் சிற்றம்பலத்து எம் பெருமானைப் பெற்றாம் அன்றே

 
பொழிப்புரை:

நல்லவர் தீயவர் என்ற பாகுபடுத்தாமல், அஞ்செழுத்து நாமத்தை விருப்பத்துடன் சொல்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் செல்லுதற்கு உரிய நன்னெறியை, முக்தி நெறியை காட்டுவது அஞ்செழுத்தாகும். மேலும் அவர்கள் இறக்கும் தருவாயில், இயமனது தூதர்கள் நரகத்திற்கு அந்த உயிரை கொண்டு செல்ல முயற்சி செய்தால், அதனைத் தடுத்து அவர்களை சிவலோகத்திற்கு அழைத்துச் சென்று, அவர்கள் எதிர்கொள்ளவிருந்த நரக வேதனையை தவிர்ப்பதும் அஞ்செழுத்தே.         

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com