116. துஞ்சலும் துஞ்சலிலாத - பாடல் 6

திருநாமத்தை உச்சரிக்க
116. துஞ்சலும் துஞ்சலிலாத - பாடல் 6


பாடல் 6:

    தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
    வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
    இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்
    அம்மையிலும் துணை அஞ்செழுத்துமே

விளக்கம்:

நோய்வாய்ப்பட்டபோது உடலும் உள்ளமும் நோயின் தன்மையால் வருந்த எவருக்கும் பொதுவாக இறையுணர்வு நமக்கு தோன்றுவதில்லை. நோயினால் களைத்த உடல் இறைவனின் திருநாமத்தை உச்சரிக்கவும் ஒத்துழையாது போகலாம். ஆனால் அந்த தருணத்திலும் உறுதியாக நின்று பெருமானின் ஐந்தெழுத்து மந்திரத்தை நாம் உச்சரித்தால் ஏற்படும் விளைவினை சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். கொடிய சூலை நோய் வருத்திய போதும் சைவ சமயம் மாறியதால் கோபம் கொண்ட சமணர்கள் அடுக்கடுக்காக பல தீமைகள் விளைத்த போதிலும், அப்பர் பிரான் தொடர்ந்து இறைவனின் திருநாமங்களை சொல்லி வந்ததையும் அதனால் அவர் அடைந்த பலன்களையும் நாம் அறிவோம். திருஞானசம்பந்தரும் திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (3.4.4) தும்மல் இருமல் ஆகிய உபாதைகள் ஏற்பட்டு உடலும் உள்ளமும் வருந்தினாலும் தனது நா விடாது பெருமானின் திருவடிகளை போற்றிக் கொண்டே இருக்கும் என்று கூறுகின்றார்.

தும்மலோடு அருந்துயர் தோன்றிடினும்
அம் மலர் அடியலால் அரற்றாது என் நா
கைமல்கு வரி சிலைக் கணை ஒன்றினால்
மும் மதில் எரி எழ முனிந்தவனே 

இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
    அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

அம்மை என்பதற்கு மறுமை என்று பொருள். பல உரை ஆசிரியர்கள் அடுத்த பிறவியிலும் பஞ்சாக்கர மந்திரம் உயிரினுக்கு துணையாக இருக்கும் என்று பொருள் கூறியுள்ளனர். சிவக்கவிமணியார் அம்மை என்பதற்கு அன்னை என்று பொருள் கொண்டு, பெற்ற தாயினும் பரிந்து நன்மை புரியும் தன்மை கொண்டது பஞ்சாக்கர மந்திரம் என்று பொருள் கூறுகின்றார். பஞ்சாக்கர மந்திரம், வினைகளை அறுத்து பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அளிக்கும் என்ற சம்பந்தரின் வாக்கினை அறிந்த நாம், பஞ்சாக்கர மந்திரத்தை ஓதும் அன்பர்களுக்கு மறுபிறப்பு இல்லை என்பதையும் நன்கு அறிவோம். மறுபிறப்பு ஒன்று இருந்தால் தானே, அந்த பிறவியில் பஞ்சாக்கர மந்திரம் உதவி செய்வதற்கு. எனவே அம்மை என்பதற்கு அன்னையினும் பரிந்து என்று பொருள் கொள்வது சிறப்பு. பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து உயிர்களுக்கு அருள் செய்பவன் பெருமான் அல்லவா.

பொழிப்புரை:

தும்மல் இருமல் ஆகியவை தொடர்ந்து வந்து உடலை வருத்திய போதிலும், நரகத் துன்பங்கள் போன்று கொடிய துன்பங்கள் ஏற்பட்டு உடல் வருந்தினும், முற்பிறப்பில் செய்த வினைகளின் பயனால் பலவிதமான துன்பங்ளை அனுபவிக்க நேர்ந்த போதிலும், இறைவன் திருநாமமாகிய பஞ்சாக்கர மந்திரத்தை இடைவிடாது சொன்னால், அந்த மந்திரம் இம்மையில் துணையாக இருந்து பழவினைகளை அறுத்து நன்மை பயக்கும். பொதுவாக பெற்ற அன்னையினும் அதிகமாக நன்மைகள் புரிவது அஞ்செழுத்து மந்திரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com