116. துஞ்சலும் துஞ்சலிலாத - பாடல் 7

பெருமானின் திருநாமம்
116. துஞ்சலும் துஞ்சலிலாத - பாடல் 7


பாடல் 7:

    வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்
    பீடை கெடுப்பன பின்னை நாள்தொறும்
    மாடு கொடுப்பன மன்னு மாநடம்
    ஆடி உகப்பன அஞ்செழுத்துமே
 

விளக்கம்:

வீடு=உயிரினை விடுதல் இங்கே வீடு என்று குறிப்படப் படுகின்றது, இறப்பு; மாடு=செல்வம்; பெருமானின் திருநாமத்தை உச்சரிக்கும் அடியார்களுக்கு செல்வமும் மல்குமால் என்று சம்பந்தர் உணர்த்திய பாடலை நாம் இதே பதிகத்தின் நான்காவது பாடலில் சிந்தித்தோம். பீடை=பிறவியில் நாம் அனுபவிக்கும் துன்பங்கள்; மன்னு=நிலை பெற்ற; பெருமான் எப்போதும் நடனம் ஆடிக் கொண்டிருப்பதை உணர்த்தும் வண்ணம் மன்னு மாநடம் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். ஆடி என்பது பெயர்ச்சொல்லாக ஆடுபவன் என்ற பொருளில் இங்கே வருகின்றது.  

பொழிப்புரை:

தன்னை விரும்பி மந்திரத்தை சொல்லும் அடியார்களின் பிறப்பையும் இறப்பையும் அறுத்து அவர்களுக்கு நிலையான வீடுபேறு அளிக்கும் வல்லமை வாய்ந்த இந்த பஞ்சாக்கர மந்திரம், அத்தகைய அடியார்கள் இந்த பிறவியில் அனுபவிக்க இருந்த தீய வினைப் பயன்களை கெடுத்து நன்மை அளிக்கும். மேலும் அத்தகைய அடியார்களுக்கு தினமும் செல்வமும் அளிக்கும் இந்த பஞ்சக்கார மந்திரத்தை, நிலை பெற்ற நடனம் ஆடுகின்ற பெருமான் மிகவும் விரும்புகின்றான்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com