116. துஞ்சலும் துஞ்சலிலாத - பாடல் 8

தேவியின் கூந்தல்
116. துஞ்சலும் துஞ்சலிலாத - பாடல் 8

பாடல் 8:

    வண்டமர் ஓதி மடந்தை பேணின
    பண்டை இராவணன் பாடி உய்ந்தன
    தொண்டர்கள் கொண்டு துதித்த பின் அவர்க்கு
    அண்டம் அளிப்பன அஞ்செழுத்துமே

 
விளக்கம்:

வண்டமர்=வண்டுகள் அமர்ந்து மொய்க்கின்ற கூந்தல்; இந்த பாடலில் சிறப்பு வாய்ந்த பஞ்சாக்கர மந்திரத்தை ஓதுபவர் யார் யார் என்று சம்பந்தர் கூறுகின்றார். வண்டுகள் வந்து மொய்க்கின்ற கூந்தலை உடைய உமையன்னை என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். ஆனால் வண்டுகள் மொய்ப்பதன் காரணம் யாது என்பதை குறிப்பிடவில்லை. தேவியின் கூந்தலில் உள்ள மலர்களை நாடி வண்டுகள் வருகின்றனவா அல்லது தேவியின் கூந்தலின் இயற்கை மணத்தால் கவரப்பட்ட வண்டுகள் வருகின்றனவா என்பதை சம்பந்தர் உணர்த்தவில்லை. இரண்டு காரணங்களும் பொருந்தும் வண்ணம் உள்ளன.

உமையம்மை பஞ்சாக்கர மந்திரத்தை ஓதுவதாக இந்த பாடலில் சம்பந்தர் கூறுவது, அவரது திருமுல்லைவாயில் பதிகத்தின் கடைப்பாடலை (2.88.11) நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. இந்த பாடலில் ஞானசம்பந்தர், பெருமான் உமையன்னைக்கு பஞ்சாக்கர மந்திரம் உபதேசம் செய்ததாகவும், அன்னை அந்த மந்திரத்தை ஓதி பேணியதாகவும் கூறுகின்றார். அணிகொண்ட கோதை என்பது தென்முல்லைவாயில் தலத்து இறைவியின் திருநாமம். திண்மை=வலிமை; தண்மை=குளிர்ச்சி, 

    அணி கொண்ட கோதை அவள் நன்றும் ஏத்த அருள் செய்த எந்தை மருவார்
    திணி கொண்ட மூன்று புரம் எய்த வில்லி திருமுல்லைவாயில் அதன் மேல்
    தணி கொண்ட சிந்தையவர் காழி ஞானம் மிகு பந்தன் ஒண் தமிழ்களின்
    அணி கொண்ட பத்தும் இசை பாடும் பத்தர் அகல் வானம் ஆள்வர் மிகவே      

பொழிப்புரை:

வண்டுகள் அமர்ந்து மொய்க்கின்ற கூந்தலை உடைய உமையன்னை ஜெபிக்கும் சிறப்பினை உடையது பஞ்சாக்கர மந்திரம். பண்டைய காலத்தில் அரக்கன் இராவணனும் இந்த மந்திரத்தினை ஓதி சிறப்படைந்தான். இந்த மந்திரத்தை தியானம் செய்வதை தங்களது தொண்டாகக் கொண்ட அடியார்களுக்கு உலகங்கள் ஆளும் வாய்ப்பினை அழிப்பது பஞ்சாக்கர மந்திரமாகும்.     

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com