116. துஞ்சலும் துஞ்சலிலாத - பாடல் 11

ஐந்தெழுத்தினை நாளும்
116. துஞ்சலும் துஞ்சலிலாத - பாடல் 11


பாடல் 11:

    நற்றமிழ் ஞானசம்பந்தன் நான்மறை
    கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
    அற்றமில் மாலை ஈரைந்தும் அஞ்செழுத்து
    உற்றன வல்லவர் உம்பர் ஆவரே

விளக்கம்:

உன்னிய=நினைத்து பாடிய; அற்றம் இல் மாலை=கேடு அவமானம் முதலியன வாராமல் தடுக்கும். நற்றமிழ் ஞானசம்பந்தன்=நன்மைகளை தரும் பாடல்களை அருளிய ஞான சம்பந்தன். ஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பாடல்களை ஓதும் அடியார்கள் அடையும் பயன், பாச நீக்கம் மற்றும் சிவப்பேறு என்று சிவக்கவிமணியார் பெரிய புராண விளக்கம் புத்தகத்தில் கூறுகின்றார்  
 
பொழிப்புரை:

நன்மைகள் புரியும் தமிழ் பாடல்களை அருளியவனும் நான்மறைகளை கற்றவனும், சீர்காழி நகரின் தலைவனும் ஆகிய ஞானசம்பந்தன், மனதினில் நினைத்து பாடிய பத்து பாடல்களை, ஓதுவோர்க்கும் கேடு அவமானம் முதலியன வருவதை தடுக்கும் பாடல்களை, அஞ்செழுத்தினை உள்ளடக்கிய பாடல்களை பாடும் வல்லமை பெற்றவர்கள் உயர்ந்தவர்கள் ஆவார்கள். 

முடிவுரை:

சிவபெருமான் ஆடும் நடனத்தை ஊன நடனம் என்றும் ஞான நடனம் என்றும் உண்மை விளக்கம் எனப்படும் சைவ சித்தாந்த நூலின் ஆசிரியர் மனவாசகம் கடந்தார் கூறுகின்றார். ஆன்மாக்கள் உலக இன்பங்களை நுகரும் பொருட்டு நடத்தப்படும் கூத்தினை ஊன நடனம் என்றும், ஆன்மாக்கள் வீடுபேறு பெறுவதற்கு உதவி செய்யும் நடனத்தை ஞான நடனம் என்றும் கூறுகின்றார். பெருமானின் ஒரே நடனம் இந்த இரண்டு வகைகளில் செயல்படுவதால், நடனம் விளைவிக்கும் பயன் கருதி ஊன நடனம் என்றும் ஞான நடனம் என்றும் கருதப்படுகின்றது. 

படைத்தல் தொழிலுக்கு ஆதாரமாக விளங்கும் நாதத்தை எழுப்பும் உடுக்கை ஏந்திய திருக்கரம் படைத்தல் தொழிலையும், அபயம் காட்டும் வலது திருக்கரம் காத்தல் தொழிலையும், தீச்சுடர் ஏந்திய திருக்கரம் அழித்தல் தொழிலையும், ஊன்றிய திருவடி மறைத்தல் தொழிலையும், தூக்கிய திருவடி அருளும் தொழிலையும் குறிப்பதாக கூறுவார்கள். இந்த ஐந்து தொழில்களும் உயிர் தனது வினைத் தொகுதிகளுக்கு ஏற்ப ஒரு உடலுடன் பொருந்தி, வினைகளின் விளைவால் ஏற்படும் இன்பதுன்பங்களை அனுபவித்து, வினைகளை கழித்துக் கொள்ள வழி வகுப்பதால் இந்த நடனம் ஊன நடனம் எனப்படுகின்றது. இதனை விளக்கும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. திதி ஸ்திதி என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம்.; அங்கி=அக்னி; சங்காரம் என்றால் அழிக்கும் தொழில்; 

    தோற்றம் துடி அதனில் தோயும் திதி அமைப்பில்
    சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் -- ஊற்றமா
    ஊன்று மலர்ப் பதத்தில் உற்ற திரோதம் முத்தி
    நான்ற மலர்பதத்தே நாடு 

இந்த நடனம் எவ்வாறு ஆன்மாக்கள் வீடுபேறு பெறுவதற்கு வழி வகுத்து, ஞான நடனமாக திகழ்கின்றது என்பதை அடுத்த பாடலில் ஆசிரியர் விளக்குகின்றார். உடுக்கை ஏந்திய திருக்கை மாயா மலத்தை உதறுகின்றது; தீச்சுடர் ஏந்திய திருக்கரம் கன்ம மலத்தை சுட்டு எரிக்கின்றது; ஊன்றிய திருவடி ஆணவ மலத்தின் வலிமையை அடக்கி அதை அழுத்தி செயலிழக்கச் செய்கின்றது; இவ்வாறு மலங்களின் பிடியிலிருந்த விடுபட்ட ஆன்மாவை, தூக்கிய திருவடி பேரானந்தத்தை அருள, அபயகரம் அந்த ஆன்மாவை பேரின்பத்தில் அழுத்துகின்றது. இவ்வாறு ஆன்மாவை பேரானந்தத்தில் ஆழ்த்தும் செயல் ஞான நடனம் என்று கருதப்படுகின்றது. சிவயநம என்ற பஞ்சாக்கர மந்திரத்தில் உள்ள ஐந்து எழுத்துக்களும் ஐந்து பொருட்களை குறிக்கின்றன. சி என்ற எழுத்து சிவபிரானையும், வ என்ற எழுத்து அவனது அருட்சக்தியாகிய அம்மையையும், ய என்ற எழுத்து ஆன்மாவையும், ந என்ற எழுத்து திரோதான மலத்தையும் ம என்ற எழுத்து ஆணவ மலத்தையும் குறிக்கும். ய என்று உணர்த்தப்படும் ஆன்மா, சிவ எனப்படும் ஞான நடனத்தையும், நம எனப்படும் ஊன நடனத்தையும் நுகர்வதாக, பஞ்சாக்கர மந்திரம் உணர்த்துவதாக கூறுவார்கள். 

    மாயை தனை உதறி வல்வினையைச் சுட்டு மலம்
    சாய அமுக்கி அருள் தான் எடுத்து -- நேயத்தால்
    ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல்
    தான் எந்தையார் பரதம் தான்

இதனிடையில் தில்லை வந்தடைந்த நாவுக்கரசர், அங்கு சில அடியார்கள் திருஞான சம்பந்தரின் புகழினை சொல்லக் கேட்டு பரவசம் அடைந்தார். அவரைக் காணவேண்டும் என்ற ஆவலுடன் சீர்காழி வந்தடைகின்றார். நாவுக்கரசர் வருவதை அறிந்த ஞான சம்பந்தர் தொண்டர்கள் புடை சூழ, சீர்காழி நகர் எல்லைக்குச் சென்று அவரை வரவேற்கின்றார். நாவுக்கரசர் வந்த கோலத்தை சேக்கிழார் பெருமான் உணர்த்தும் பாடலை நாம் இங்கே காண்போம்.

    சிந்தை இடையறா அன்பும் திருமேனி தன்னில் அசைவும்
    கந்தை மிகையாம் கருத்தும் கை உழவாரப் படையும்
    வந்திழி கண்ணீர் மழையும் வடிவில் பொலி திருநீறும்
    அந்தமிலாத் திருவேடத்து அரசும் எதிர் வந்து அணைய    

மேலே குறிப்பிட்ட வேடத்துடன் வந்த திருநாவுக்கரசரை அடி பணிந்த திருஞானசம்பந்தர், பின்னர் எழுந்து நின்று தமது கைகளால் வணங்கி, அப்பரே என்று அழைத்தார். அதனைக் கேட்ட திருநாவுக்கரசர் அடியேன் என்று பதிலுக்கு கூறினார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். அன்று முதல் அனைவரும் திருநாவுக்கரசரை அப்பர் என்றே அழைக்க, பெருமான் அளித்த நாவுக்கரசு என்ற நாமத்தை விடவும் அப்பர் என்ற நாமம் நிலை பெற்று அதிகமான புகழினை அடைந்தது. , 

மனதினில் வஞ்சகம் ஏதுமின்றி ஐந்தெழுத்தினை நாளும் போற்றினால் அந்த மந்திரம் நம்மை நெருங்கவரும் காலனையும் அவன் அஞ்சும் வண்ணம் உதைத்து விரட்டும் என்று பதிகத்தின் முதல் பாடலிலும், வேதியர்கள் காலை நண்பகல் மற்றும் மாலை ஆகிய மூன்று பொழுதினும் ஓதவேண்டிய மந்திரம் என்று இரண்டாவது பாடலிலும், பற்று அறுத்து நிட்டை கூடியவர்களுக்கு பழைய வாசனையால் ஏதேனும் சலனம் ஏற்படுமாயின் அதனை போக்கி காக்கும் மந்திரம் என்று மூன்றாவது பாடலிலும், உயிர்களை நரக வேதனையிலிருந்து காக்கும் மந்திரம் என்று நான்காவது பாடலிலும், தொண்டர்களுக்கு முக்தி உலகத்தில் இடம் பெற்றுத்தரும் என்று எட்டாவது பாடலிலும், தொண்டர்களுக்கு சிறந்த அணிகலனாகத் திகழ்வது அஞ்செழுத்து மந்திரம் என்று ஒன்பதாவது பாடலிலும், தொண்டர்களின் வினைகளை ஒழிக்கும் ஆத்திரமாக திகழும் மந்திரம் என்று பத்தாவது பாடலிலும் குறிப்பிடும் ஞானசம்பந்தர், உயிர்க்கு இந்த பிறவியில் பல வகையிலும் துணையாக இருக்கும் அஞ்செழுத்து மந்திரம் உயிரினை நரக வேதனையிலிருந்து காப்பாற்றி மறுமையிலும் துணையாக இருக்கும் என்று கூறுகின்றார். நாம் இந்த பதிகத்தை ஓதியும் அஞ்செழுத்து மந்திரத்தை ஓதியும், இம்மை மற்றும் மறுமையில் நமக்கு நல்ல துணையாக அஞ்செழுத்து மந்திரத்தைக் கொள்வோமாக.       

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com