117. காடது அணிகலம் - பாடல் 1

அப்பர் பிரான்
117. காடது அணிகலம் - பாடல் 1

பின்னணி:

தன்னைக் காண்பதற்காக சீர்காழி நகரம் வந்த அப்பர் பிரானை, நகர எல்லையில் எதிர் கொண்டழைத்த திருஞானசம்பந்தர், அப்பர் பிரானை அழைத்துக் கொண்டு சீர்காழி திருக்கோயிலின் உள்ளே சென்றார். திருக்கோயில் சன்னதியில் ஞானசம்பந்தர் அப்பர் பிரானை நோக்கி, உங்களது தம்பிரானை நீர் பதிகம் பாடி மகிழ்வீர் என்று சொல்ல அப்பர் பிரானும் பதிகங்கள் பாடி பெருமானைத் தொழுது வணங்கினார். பின்னர் சம்பந்தர் அப்பர் பிரானைத் தனது இல்லத்திற்கு அழைத்துச் செல்ல, ஆங்கே இருவரும் சில நாட்கள் பெருமானின் பெருமையை பேசிக் கொண்டும் பல பதிகங்கள் பாடியவாறும் பொழுதினை இனிதாகக் கழித்தனர். சில நாட்களுக்கு பின்னர் இருவரும் சேர்ந்து அருகில் உள்ள திருக்கோலக்கா தலம் சென்று, தாளம் ஈந்த தயாளனை வணங்கிய பின்னர், திருஞானசம்பந்தர் சீர்காழி திரும்ப, அப்பர் பிரான் பல சோழ நாட்டுத் திருத்தலங்களை காண்பதற்கு விருப்பம் கொண்டவராக, திருஞான சம்பந்தரிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றார்.  

அப்பர் பிரான் தன்னிடம் விடைப் பெற்றுக்கொண்டு சென்ற பின்னர் பல நாட்கள் சீர்காழி நகரில் தங்கியிருந்த திருஞான சம்பந்தர் பல பதிகங்களை சீர்காழி தலத்து இறைவன் மீது பாடினார். அத்தகைய பதிகங்களில் சில தமிழ் இலக்கியத்திற்கு முன்மாதிரியாக விளங்கின. இந்த தகவலை சேக்கிழார் அளிக்கும் பெரிய புராணத்து பாடலை நாம் இங்கே காண்போம். விகற்பம்=மாறுபட்ட

    செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுட்களால் மொழி மாற்றும்
    வந்த சீர் மாலைமாற்று வழிமொழி எல்லா மடக்குச்  
    சந்த இயமகம் ஏகபாதம் தமிழ் இருக்குக்குறள் சாத்தி
    எந்தைக்கு எழு கூற்றிருக்கை ஈரடி ஈரடி வைப்பு

    நாலடி மேல் வைப்பு மேன்மை நடையின் முடுகும் இராகம்
    சால்பினில் சக்கரம் ஆதி விகற்பங்கள் சாற்றும் பதிக
    மூல இலக்கியமாக எல்லாப் பொருட்களும் உற்ற
    ஞாலத்து உயர் காழியாரைப் பாடினர் ஞானசம்பந்தர்  

மேலே குறிப்பிட்ட வகைகளில் மொழிமாற்று என்று சொல்லப்படும் பதிகத்தை முதலில் காண்போம். சொற்களை மாற்றி வைத்து பாடிய பாடல். சிறு குழந்தையாகிய ஞானசம்பந்தர் சொற்களை மாற்றி மாற்றி வைத்து விளையாடியது போன்று அமைந்த பாடல். இந்த விகற்பச் செய்யுட்கள் பலவற்றிலும் சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களையும், ஒவ்வொரு பாடலிலும் ஒரு பெயரினை உள்ளடக்கிப் பாடியதால் இந்த பதிகங்கள் பன்னிரண்டு பாடல்கள் கொண்டவையாக விளங்குகின்றன. இந்த மொழிமாற்றுப் பதிகத்தினை அப்படியே படித்தால் நமக்கு பொருள் ஏதும் விளங்காது. சொற்களை பொருளுக்கு ஏற்ப முன் பின்னாக மாற்றிக் கூட்டி பொருள் கொள்ள வைக்கும் மிறைக்கவி என்று அறிஞர்கள் இந்த பதிகத்தை குறிப்பிடுகின்றனர். மிறை என்றால் வருத்தம் என்று நிகண்டு கூறுகின்றது. படிப்போர் தங்களது மூளையினை கசக்கிக் கொண்டு சிந்தித்து சொற்களை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும் என்பதால் இந்த பெயர் வந்தது போலும். ஒரு உதாரணத்திற்கு இந்த பதிகத்து முதல் பாடலின் முதல் அடியை காண்போம். காடது அணிகலம் காரரவம் பதி என்று பாடலில் உள்ளது. இதனை காடது பதி கார் அரவம் அணிகலம் என்று மாற்றி அமைத்தால் தான், சரியான பொருளை புரிந்து கொள்ளமுடியும். காடு தான் பெருமான் உறையும் இடம் என்றும் கரிய விடமுடைய பாம்பு அவன் அணியும் நகை என்றும் இப்போது புரிந்து கொள்கின்றோம்.
   
பாடல் 1;

    காடது அணிகலம் கார் அரவம் பதி காலதனில்
    தோடது அணிகுவர் சுந்தரக் காதினில் தூச்சிலம்பர்
    வேடது அணிவர் விசயற்கு உருவம் வில்லும் கொடுப்பர்
    பீடது அணிமணி மாடப் பிரபுரத்து அரரே 

விளக்கம்:

காடது பதி, கார் அரவம் அணிகலம், காலதினில் தூச்சிலம்பர், சுந்தரக் காதினில் தோடது அணிகுவர், வேட உருவமது அணிவர், விசயற்கு வில்லும் கொடுப்பர் என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். பீடு=மிகுந்த புகழ்; மாடம்=உயர்ந்த மாட மாளிகை; பதி=வாழும் இடம்; உமையம்மை அணியும் தோடும் சிலம்பும் குறிப்பிடப்பட்டு மாதொரு பாகனாகத் திகழும் இறைவனின் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. தோடு அணியும் காது சுந்தரக்காது என்றும் சிலம்பு தூய சிலம்பு என்று அடைமொழி கொடுக்கப்பட்டு சிறப்பிடப்பட்டுள்ளதை உணரலாம்.   
     
பொழிப்புரை:

காடினைத் தான் வாழும் இடமாகக் கொண்டுள்ள பெருமான், கொடிய விடம் கொண்ட  பாம்பினைத் தனது உடலின் மீது அணிகலனாக அணிந்தவராகவும், தனது காலில் தூய சிலம்பினை அணிந்தவராகவும், தனது அழகிய காது ஒன்றினில் தோடு அணிந்தவராகவும் காணப்படுகின்றார். அவர் வேடுவக்கோலம் தாங்கி அர்ஜுனன் தவம் செய்து கொண்டிருந்த இடத்திற்கு சென்று அவனுக்கு பாசுபதம் என்ற சிறந்த வில்லினை அளித்தவர். இத்தகைய பெருமான் பெருமை வாய்ந்த மணிகள் பதிக்கப்பெற்று அழகுடன் விளங்கும் மாட மாளிகைகள் நிறைந்த பிரமபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரத்து அரனார் ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com