117. காடது அணிகலம் - பாடல் 2

117. காடது அணிகலம் - பாடல் 2

கங்கை நதியையும்


பாடல் 2;

    கற்றைச் சடையது கங்கணம் முன் கையில் திங்கள் கங்கை
    பற்றித்து முப்புரம் பார் படைத்தோன் தலை சுட்டது பண்டு
    எற்றித்துப் பாம்பை அணிந்தது கூற்றை எழில் விளங்கும்
    வெற்றிச் சிலை மதில் வேணுபுரத்து எங்கள் வேதியரே

விளக்கம்:

கற்றைச் சடையது திங்கள் கங்கை, முன்கையில் கங்கணம், பற்றித்து பார் படைத்தோன் தலை, முப்புரம் சுட்டது, பண்டு கூற்றை எற்றித்து, அணிந்தது பாம்பை, என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். பற்றித்து=பற்றியது; எற்றித்து=எற்றி உதைத்தது; பற்றித்து எற்றித்து என்ற சொற்கள் முறையே பற்றிற்று எற்றிற்று என்ற சொற்களின் மரூவு. 

பொழிப்புரை: 

கற்றையாக உள்ள சடையினில் பிறைக் சந்திரனையும் கங்கை நதியையும் கொண்டுள்ள பெருமான், தனது முன் கையினில் கங்கணம் அணிந்து காணப்படுகின்றார். அவர் தனது கைவிரல் நகத்தினால் பற்றிக் கிள்ளியது உலகினைப் படைத்த பிரமனின் தலையினை; அவர் மூன்று பறக்கும் கோட்டைகளையும் தீயினில் எரித்து சுட்டவர் ஆவார்; அவர் பண்டைய நாளில் கூற்றுவனை உதைத்து வீழ்த்திய பெருமையை உடையவர்; அவர் பாம்பினைத் தனது உடலின் பல இடங்களில் கச்சாகவும், அணிகலனாகவும், கங்கணமாகவும் அணிந்துள்ளார். அவர் வேதங்களை நன்கு அறிந்துணர்ந்த வேதியர் ஆவார். இத்தகைய பெருமையை உடைய பெருமான், அழகுடன் விளங்குவதும், வெற்றி பெற்ற தன்மை உடையதும், மலை போன்று உறுதியாக உயர்ந்து நிற்கும் மதில் சுவர்களை கொண்டதும் ஆகிய வேணுபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரின் வேதியர் ஆவார். 
    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com