117. காடது அணிகலம் - பாடல் 5

தான் இன்புகழ்
117. காடது அணிகலம் - பாடல் 5


பாடல் 5:

    கொட்டுவர் அக்கு அரை ஆர்ப்பது தக்கை குறுந்தாளன
    விட்டுவர் பூதம் கலப்பிலர் இன்புகழின் என்பு உலவின்
    மட்டு வரும் தழல் சூடுவர் மத்தமும் ஏந்துவர் வான்
    தொட்டுவரும் கொடித் தோணிபுரத்து உறை சுந்தரரே

விளக்கம்:

கொட்டுவர் தக்கை, அக்கு அரை ஆர்ப்பது,  குறுந்தாளன பூதம், விட்டுவர் என்பு, கலப்பிலர் இன்புகழ், உலகின் மட்டு வருந்தழல் ஏந்துவர், சூடுவர் மத்தமும் என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். தக்கை=ஒரு வகை வாத்தியம்; அக்கு=சங்குமணி; அக்கு என்பதற்கு எலும்பினால் ஆன மாலை என்றும் பொருள். ஆனால் இங்கே சங்குமணி என்பதே பொருத்தமாக உள்ளது. வீட்டுதல்=கொல்லுல்; விட்டுவர் என்ற சொல்லினை வீட்டுவர் என்று நீட்டி பொருள் கொள்ள வேண்டும். என்பு என்ற சொல்லுக்கு புலி என்ற பொருளும் உள்ளது. கலப்பிலர்=தானே சென்று கலக்கும் தன்மை அற்றவர்; பெருமானை புகழ் சென்று அடைகின்றதே தவிர, பெருமான் புகழினை நாடி எந்த ஒரு செயலும் செய்வதில்லை. தாள்=கால்; குறுந்தாள் அன=குட்டையான கால்களை உடைய; மற்றவர் நம்மை புகழ்வது கேட்பதற்கு எப்போதும் இனியவாக இருக்கும் அதனால் தான் இன்புகழ் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். உலத்தல்=குறைத்தல், அழித்தல்; உலவின்= உலகினை அழிக்கும் பொருட்டு வரும் பிரளயாக்னி; மட்டு=வளைத்து; 

பொழிப்புரை: 

தக்கை எனப்படும் வாத்தியத்தை கொட்டி முழக்கும் சிவபெருமான் தனது இடையிலே பூண்பது சங்குமாலையாகும். அவரைச் சூழ்ந்து நிற்பன குறுகிய கால்களை உடைய பூதங்களாகும். தாருகவனத்து முனிவர்களால் தன் மீது ஏவிவிடப்பட்ட புலியைக் கொன்ற பெருமான், புலியின் தோலை ஆடையாக அணிந்துள்ளார். கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும் புகழினை நாடி, எந்த செயலையும் அவர் செய்வதில்லை; உலகினை வளைத்து அழிப்பதற்கு எழுந்து வரும் பிரளயாக்னியைத் தனது கையில் ஏந்தியவர் பெருமான். இத்தகைய தன்மைகளை உடைய பெருமான் ஊமத்தை மலரை சூடியவராக, அழகிய வடிவினராக, வானளாவும் கொடிகளை உடைய மாளிகைகள் கொண்டுள்ள தோணிபுரம் என்று அழைக்கப் படும் சீர்காழி நகரினில் உறைகின்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com