117. காடது அணிகலம் - பாடல் 7

மானும் மழுவும்
117. காடது அணிகலம் - பாடல் 7

பாடல் 7:

    காலது கங்கை கற்றைச் சடையுள்ளால் கழல் சிலம்பு
    மாலது ஏந்தல் மழுவது பாகம் வளர் கொழுங்கோட்டு
    ஆலது ஊர்வது ஆடல் ஏற்று இருப்பர் அணிமணி நீர்ச்
    சேலது கண்ணியொர் பங்கர் சிரபுரம் மேயவரே

விளக்கம்:

காலது கழல் சிலம்பு, கங்கை கற்றைச் சடை உள்ளால், மாலது பாகம், மழுவது ஏந்தல், வளர் கொழுங்கோட்டு ஆலது இருப்பர், அடல் ஏறு ஊர்வர், என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். கழல்=ஆடவர்கள் அணியும் வீரக்கழல்; சிலம்பு= பெண்கள் அணியும் அணிகலன்; கொழுங்கோடு=செழிப்பாக உள்ள மரக்கிளை;  ஏறு=எருது; ஊர்தல்=வாகனமாகக் கொண்டு பல இடங்களுக்கு செல்லுதல்; சேல்=மீன்; கண்ணி= கண்ணினை உடைய உமையன்னை; மீன் போன்று அழகிய கண்களை உடையவள் என்று பொருள்படும்படி, மதுரை தேவியை அங்கயற்கண்ணி என்று அழைப்பார்கள். பிராட்டி அங்கயற்கண்ணி என்று அழைக்கப்படுவதற்கு அழகான விளக்கம் ஒன்றினை பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில் அளிக்கின்றார். தண்ணீரில் வாழும் மீன் தனது முட்டைகளுக்கு எவ்வாறு வெப்பம் அளித்து பக்குவம் அடையச் செய்ய முடியும். தனது கண்களின் வழியே வெப்பத்தைப் பாய்ச்சி, மீன்கள் முட்டைகளை பொறிப்பது போன்று, அம்பிகையும் தனது அருட்கண்களால் உயிர்களை நோக்கி காப்பதால் இந்த பெயர் வந்தது என்று கூறும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. அளி=கருணை; செவ்வி உற=பக்குவம் அடையும் வண்ணம்; ஒளி=ஞானம், அருள்; இமவான் மகளாகப் பிறந்த அன்னை, தனது சிறிய வயதினில் கிளி மயில் அன்னம் போன்ற பறவைகளை வளர்த்த செய்தி இங்கே குறிப்பிடப் படுகின்றது. மீனாட்சியம்மை மக்களை காத்தது போன்று, அரசியாக திகழ்ந்த தடாதகை பிராட்டியார் தனது குடிமக்களை பாதுகாத்தார் என்று பரஞ்சோதி முனிவர் இந்த பாடலில் கூறுகின்றார்.    

    ஒளியால் உலகு ஈன்று உயிர் அனைத்து மீன் போல் செவ்வி உற நோக்கி
    அளியால் வளர்க்கும் அங்கயற்கண் அன்னே கன்னி அன்னமே
    அளியால் இமவான் திருமகளாய் ஆவி அன்ன மயில் பூவை
    தெளியா மழலைக் கிளி வளர்த்து விளையாட்டு அயரும் செயல் என்னே

கழலும் சிலம்பும் அணிபவர் என்று மாதொரு பாகனாக விளங்கும் தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது. இத்தகைய குறிப்பு பல தேவாரப் பாடல்களில் காணப்படுகின்றது. அத்தகைய சில பதிகங்களை நாம் இங்கே காண்போம். நறையூர் சித்தீச்சரம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.71.7) கால்களில் அணிந்துள்ள கழலும் சிலம்பும் ஒலிக்க இறைவன் வருவார் என்று சம்பந்தர் கூறுகின்றார். புலம்ப=ஒலிக்க, குழல்=கூந்தல்; கோலம்=அழகு; தவளம்=வெண்மை; கீள்=கிழிக்கப்பட்ட ஆடை; தழலார் மேனி=தழல் போன்று சிவந்த மேனி

    குழலார் சடையர் கொக்கின் இறகர் கோல நிற மத்தம்
    தழலார் மேனித் தவள நீற்றர் சரி கோவணக் கீளர் 
    எழிலார் நாகம் புலியின் உடை மேல் இசைத்து விடையேறிக்
    கழலார் சிலம்பு புலம்ப வருவார் சித்தீச்சரத்தாரே

கோட்டாறு தலத்தின் மீது அருளிய பாடலில் (2.52.5) சம்பந்தர், பேய்க் கணங்கள் புகழும் வண்ணம் கானகத்தில், வளமான சிலம்பும் கழலும் ஒலிக்க நடனமாடும் அழகிய பெருமான் என்று கூறுகின்றார். எழுவார்=பஞ்சாக்கர மந்திரத்தை சிந்திந்து எழும் சித்தர்கள்;   

    பழைய தம் அடியார் துதி செயப் பாருளோர்களும் விண்ணுளோர் தொழக்
    குழலும் மொந்தை விழாவொலி செய்யும் கோட்டாற்றில்
    கழலும் வண் சிலம்பும் ஒலி செயக் கானிடைக் கணம் ஏத்த ஆடிய
`   அழகனென்று எழுவார் அணியார் வானவர்க்கே

குடவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடலில் (2.58.2) சம்பந்தர், தனது திருவடிகளில் அணிந்துள்ள கழலும் சிலம்பும் ஒலிக்கும் வண்ணம் பெருமான் உலகம் முழுதும் திரிந்து பலி ஏற்பதாக கூறுகின்றார். பைங்கழல்=பசும் பொன்னால் செய்யப்பட்ட கழல்; ஆர்ப்ப=ஒலிக்க; ஆர்ந்த=இணைந்த; அங்கை=அழகிய கை; செடி=குணம் இல்லாத, துர்நாற்றம் வீசும்; தேர்தல்=தேடிச் செல்லுதல்; குடி ஆர்ந்த=சிறந்த குடியில் பொருந்திய; குலாவி=கொண்டாடி; படி ஆர்ந்த=படிகள் நிறைந்த; குடவாயில் திருக்கோயில் யானைகள் ஏற முடியாத வண்ணம் படிகள் அமைக்கப்பட்ட மாடக் கோயில்களுள் ஒன்று. 

     அடியார்ந்த பைங்கழலும் சிலம்பும் ஆர்ப்ப அங்கையில்
    செடி ஆர்ந்த வெண்தலை ஒன்று ஏந்தி உலகம் பலி தேர்வீர்
    குடி ஆர்ந்த மாமறையோர் குலாவி ஏத்தும் குடவாயில்
    படி ஆர்ந்த கோயிலே கோயிலாகப் பயின்றீரே   

கச்சூர் ஆலக்கோயில் தலத்தின் மீது சுந்தரர் அருளிய பாடலில் (7.41.2) பசியால் வாடிய தனக்கு உணவு அளிக்கும் பொருட்டு, பெருமான் பிச்சை ஏற்ற அதிசயத்தைக் குறிப்பிடும் சுந்தரர், கழலும் சிலம்பும் ஒலிக்கும் வண்ணம் உச்சிப் போதினில் பல இல்லங்கள் சென்று பிச்சை எடுத்த பெருமானே என்று குறிப்பிட்டு உருகுவதை நாம் உணரலாம். பெருமான் அந்த தலத்தில் வாழும் அந்தணர் போன்று பல இல்லங்கள் சென்று பிச்சை ஏற்றார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார். பெருமானே சென்றார் என்பதை வலியுறுத்தும் வண்ணம் சுந்தரர் தனது பாடலில், பாம்பு அணிந்தவராகவும் கழலும் சிலம்பும் அணிந்தவராகவும் பெருமான் பிச்சை ஏற்கச் சென்றார் என்று குறிப்பிட்டார் போலும். கலிக்க=ஒலிக்க; பெருமானின் செய்யும் செயல்களின் பின்னணியை எவரும் அறிய முடியாது என்பதை இச்சை அறியோம் என்ற தொடர் கொண்டு சுந்தரர் குறிப்பிடுகின்றார். எளியவனாகிய அடியேன் பொருட்டு பிச்சை எடுத்த செயல் கண்டால்  மற்ற அடியார்கள் மனம் பதைபதைத்து உருகுவார்கள் என்று சுந்தரர் கூறுகின்றார். 

    கச்சேர் அரவு ஒன்று அரையில் அசைத்துக் கழலும் சிலம்பும் கலிக்கக்
    உச்சம் போதா ஊரூர் திரியக் கண்டால் அடியார் உருகாரே
    இச்சை அறியோம் எங்கள் பெருமான் ஏழேழ் பிறப்பும் எனை ஆள்வாய்
    அச்சமில்லாக் கச்சூர் வடபால் ஆலக் கோயில் அம்மானே

பெருமானின் திருவடிகளின் சிறப்பினை எடுத்து உரைக்கும் திருவடித் தாண்டகப் பாடலில் (6.6.5) அப்பர் பிரான் கழலும் சிலம்பு ஒலிக்கும் திருவடி என்று குறிப்பிடுகின்றார். ஒரு காலத்து ஒன்றாக நின்ற அடி=ஏக பாத திரிமூர்த்தியாக இறைவன் இருக்கும் நிலை. முற்றூழிக் காலம் முடிந்த பின்னர், மறுபடியும் உலகினைத் தோற்றுவிக்கத் திருவுள்ளம் கொள்ளும் சிவபெருமான் ஒற்றை கால் உடையவராக, தனது இடது புறத்திலிருந்து திருமாலையும் வலது புறத்திலிருந்து பிரமனையும் தோற்றுவிக்கின்றார் என்று புராணம் கூறுகின்றது. திருவொற்றியூர் திருக்கோயிலின் வடக்கு பகுதியில், மகிழ மரத்திற்கு அருகில், பிராகாரத்தின் வெளிச்சுவற்றில் பொறிக்கப்பட்ட ஏகபாத திருமூர்த்தியின் உருவத்தை நாம் காணலாம். மானும் மழுவும் தாங்கி உள்ள சிவனை, இரு புறமும் பிரமனும் திருமாலும் சூழ்ந்து இருப்பதையும் அவர்கள் தொழுவதையும் காணலாம். சிவனின் இடுப்பிலிருந்து பிரமனும் திருமாலும் பிரிவது போல் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தில், அவர்கள் இருவரும் தங்களது ஒரு காலை மடித்து இருப்பதையும் காணலாம். பிரமனை ஜபமாலை மற்றும் கமண்டலத்துடனும், திருமாலை சங்கு சக்கரத்துடனும் நாம் காணலாம். இந்த சிற்பம் ஒற்றைக் கல்லால் ஆன சிற்பம், இதைப் போன்ற சிற்பம் ஆனைக்காவிலும் உள்ளது. 

    ஒரு காலத்து ஒன்றாகி நின்ற அடி ஊழி தோறூழி உயர்ந்த அடி
    பொரு கழலும் பல் சிலம்பும் ஆர்க்கும் அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி
    இருநிலத்தார் இன்புற்று அங்கு ஏத்தும் அடி இன்புற்றார் இட்ட பூ ஏறும் அடி
    திருவதிகைத் தென்கெடில நாடன் அடி திருவீரட்டானத்து எம் செல்வன் அடி

நெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (6.42.6) அப்பர் பிரான், தனது கால்களில் ஒலிக்கும் சிலம்பினையும் கழலினையும் அணிந்து உலகம் அதிரும் வண்ணம் நடமாடும் பெருமான் என்று கூறுகின்றார். மிறை=துன்பம்; பழைய வினைகளின் பயனால் நாம் துன்பங்கள் மட்டுமன்றி இன்பங்களையும் நுகர்கின்றோம்; ஆனால் அத்தகைய இன்பங்களில் ஆழ்ந்து மகிழும் நாம் நம்மை மிகவும் உயர்வாக நினைத்துக் கொள்கின்றோம். அத்தகைய தருணங்கள், நாம் அகந்தை கொண்டு இறைவனை மறக்கும் தருணங்களாக மாறுகின்றன. எனவே தான். இன்பம் நுகரும், நேரங்களிலும் நம்மை உயர்வாக எண்ணிக் கொள்ளமால், அடக்கத்துடன் தாழ்மையாக நினைத்து இறைவனை வணங்க வேண்டும். அவ்வாறு இருப்பவரின் நெஞ்சத்தில் இறைவன் உறைவான் என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். வியவேல்=மகிழாமல் இருத்தல்; நிறைவுடையான் என்ற தொடரினை அவனிதலம் பெயர வரு நட்டம் நின்ற என்ற தொடருடன் இணைத்து, ஊழிக்காலத்தில் மன நிறைவுடன் நடனம் ஆடும் இறைவன் என்று சிலர் விளக்கம் அளிக்கின்றனர். ஊழிக்காலம் முடிந்த பின்னர், உயிர்கள் தங்களுடன் பிணைந்துள்ள வினைகளை நீக்கிக் கொள்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை அளிக்கும் பொருட்டு, உலகத்தை தோற்றுவிக்க எண்ணம் கொள்ளும் பெருமான், அந்த எண்ணத்தினால் மனநிறைவு அடைகின்றார் என்று அப்பர் பிரான் கூறுகின்றாரோ என்று தோன்றுகின்றது

    மிறைபடும் இவ்வுடல் வாழ்வை மெய் என்று எண்ணி
                 வினையிலே கிடந்து அழுந்தி வியவேல் நெஞ்சே
    குறைவுடையார் மனத்துளான் குமரன் தாதை கூத்தாடும்
                 குணம் உடையான் கொலை வேல் கையான்
    அறை கழலும் திருவடி மேல் சிலம்பும் ஆர்ப்ப அவனிதலம்
                 பெயர வரு நட்டம் நின்ற
    நிறைவுடையான் இடமாம் நெய்த்தானம் என்று நினையுமா
                 நினைந்தக்கால்  உய்யலாமே 

கோடு என்பதற்கு மலையினுச்சி என்று பொருள் கொண்டு, கயிலாய மலையின் உச்சியில் உள்ள கல்லால மரத்தின் நிழலில் இருக்கும் பெருமான் என்று சில அறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.   
   
பொழிப்புரை: 

சிவபெருமானின் காலில் உள்ளது வீரக்கழலும் சிலம்பும்; கற்றையாக அடர்ந்து காணப்படும் அவரது சடையின் உள்ளே கங்கை நதி பொதிந்து உள்ளது; திருமால் அவரது உடலின் இடது பாகத்தில் உள்ளார்; அவர் தனது கையினில் ஏந்துவது மழு ஆயுதம்; செழிப்புடன் வளரும் கிளைகளை உடைய ஆலமரத்தின் கீழே அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு அறம் விளக்கிய பெருமான் வலிமை உடைய இடபத்தினைத் தனது ஊர்தியாகக் கொண்டு தான் விரும்பும் இடங்களுக்கு செல்கின்றார்; அழகிய நீல மணிகளை அடித்துக் கொண்டு வரும் நீரினில் பாயும் மீன்கள் போன்று கண்ணினை உடைய உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டுள்ள பெருமான், சிரபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரினில் பொருந்தி உறைகின்றார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com