117. காடது அணிகலம் - பாடல் 9

இனிய ஓசை
117. காடது அணிகலம் - பாடல் 9

பாடல் 9:

    இலங்கைத் தலைவனை ஏந்திற்று இறுத்தது இரலை இல் நாள்
    கலங்கிய கூற்று உயிர் பெற்றது மாணி குமை பெற்றது
    கலங்கிளர் மொந்தையின் ஆடுவர் கொட்டுவர் காட்டகத்து
    சலங்கிளர் வாழ் வயல் சண்பையுள் மேவிய தத்துவரே
 

விளக்கம்:

இலங்கைத் தலைவனை இறுத்தது, இரலை ஏந்திற்று, கலங்கிய கூற்று குமை பெற்றது, இல் நாள் மாணி உயிர் பெற்றது, கலங்கிளர் மொந்தை கொட்டுவர், காட்டகத்து ஆடுவர், என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். இறுத்தல்=ஒடித்தல், நெரித்தல்; இரலை=மான்; இல் நாள் மாணி=விதிக்கப்பட்ட பதினாறு ஆண்டுகள் ஏற்கனவே முடிந்தமையால் வாழ்நாள் ஏதும் இல்லாத நிலையில் இருந்த சிறுவன் மார்க்கண்டேயன்; கொட்டுதல்=ஒலி உண்டாக்குதல்; கலங்கிளர் மொந்தை=மண் பாண்டத்தின் வாய்ப்பகுதி தோலால் இறுகக் கட்டப்பட்டு மூடப்பட்ட இசைக்கருவி; கலம் என்பதற்கு யாழ் என்று பொருள் கொண்டு இனிய ஓசை எழுப்பும் மொந்தை இசைக் கருவி என்றும் விளக்கம் சிலரால் அளிக்கப் படுகின்றது. சலம் கிளர்=நீர் நிரம்பிய; குமைத்தல்=அழித்தல், வருந்துதல் என்ற பொருளும் பொருந்தும்.  

பொழிப்புரை: 

கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த இலங்கைத் தலைவன் இராவணனை மலையின் கீழே அழுத்தி துன்புறுத்தி வலியிழக்கச் செய்து நெருக்கியவர் சிவபெருமான்: அவர், தன்னை நோக்கி ஏவப்பட்ட மான் கன்றின் முரட்டு குணத்தினை மாற்றி துள்ளி  விளையாடும் மானாக தனது கரத்தில் ஏந்தியவர் ஆவார்; விதிக்கப்பட்ட பதினாறு ஆண்டுகள் முடிந்தமையால் வாழ்நாள் ஏதும் இல்லாத நிலையில் இருந்த சிறுவன் மார்க்கண்டேயன் என்றும் அழியாத சிரஞ்சீவியாக இருக்கும் வண்ணம் புதுவாழ்வு அளித்து உயிர் வாழச் செய்தவர் சிவபெருமான் ஆவார்; சிவபெருமானின் காலால் பெற்ற உதையினால் வருந்தி கீழே விழுந்து அழிந்தவன் இயமன்;. சிவபெருமான் காட்டினில் நின்று ஆடுபவராகவும், மொந்தை எனப்படும் தோற்கருவியை வாசிப்பவராகவும் உள்ளார்; இத்தகைய வியத்தகு தன்மைகள் உடைய பெருமான், நீர் வளம் நிறைந்த வயல்கள் உடைய சண்பை (சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) நகரினில் பொருந்தி உறையும் மேலான கடவுளர் ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com