சுடச்சுட

  
  தேவாரம்

   

  பாடல் 12:

      கல்லுயர் கழுமல இஞ்சியுள் மேவிய கடவுள் தன்னை
      நல்லுரை ஞானசம்பந்தன் ஞானத் தமிழ் நன்குணரச்
      சொல்லிடல் கேட்டல் வல்லோர் தொல்லை வானவர் தங்களொடும்  
      செல்குவர் சீர் அருளால் பெறலாம் சிவலோகம் அதே

   
  விளக்கம்:

  மற்ற பாடல்களில் சொற்களை மாற்றி அமைத்து விளையாடிய திருஞானசம்பந்தர் இந்த பாடலில் அத்தகைய மாற்றங்கள் ஏதும் செய்யவில்லை. பொதுவாக அவரது பதிகங்களின் கடைப் பாடல்கள், அந்த பதிகம் ஓதுவோர் அடைய இருக்கும் பலன்களை குறிப்பிடுவதால், மாற்றி அமைக்கப்பட்டுள்ள சொற்களை சரியாக புரிந்து கொள்ளாமல், தவறாக எவரும் இந்த பதிகம் தரும் பலனை புரிந்து கொள்வதை தவிர்க்கும் வண்ணம், இவ்வாறு இந்த பாடலை அருளினார் போலும். கல்=மலை; இஞ்சி=மதில்; நல்லுரை=நன்மைகளைத் தரும் பாடல்கள்; மொழிமாற்றுப் பதிகம் என்பதால் இதன் பொருளை நன்கு உணர வேண்டும் என்று இந்த பாடலில் கூறுகின்றார். அவ்வாறு இந்த பதிகத்தின் பொருளை நன்கு புரிந்து கொண்டவர்கள் அடுத்தவருக்கு சொல்ல வேண்டும் என்பதையும் சம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துவதை நாம் காணலாம். தேவாரப் பதிகங்களை ஞானத்தமிழ் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். வடமொழி வேதங்களில் உள்ள கருத்துக்கள் அடங்கிய பதிகங்கள் என்று உணர்த்தும் வண்ணம் ஞானத்தமிழ் என்று கூறுகின்றார். தமிழ் மறை என்று பல பாடல்களில் குறிப்பிட்டவர் அல்லவா. மனிதர்களுடன் ஒப்பிடும்போது தேவர்களின் வாழ்நாள் அதிகம் என்பதால், தொல்லை வானவர் என்று அவர்களை சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

  பொழிப்புரை:

  மலை போன்று நன்கு உயர்ந்தும் வலிமையாகவும் காணப்படும் மதில்களால் சூழப்பெற்ற கழுமலம் (சீர்காழி நகரத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தில் பொருந்தி உறைகின்ற கடவுளை போற்றி, ஞானசம்பந்தன் உரைத்த, நன்மை அளிக்கும் பாடல்களை, இறைஞானத்தை உணர்த்தும் தமிழ் பாடல்களை, அதன் பொருளை நன்கு உணர்ந்து வல்லவராக திகழ்ந்து பதிகங்கள் ஓதும் அடியார்களும், அத்தகைய அடியார்கள் வாயிலாக கேட்கும் அடியார்களும், இறைவனது அருளால் மட்டும் செல்லக்கூடிய சிவலோகத்திற்கு பழமையான வானவர்கள் உடன் வர செல்வார்கள்.   

  முடிவுரை:

  பதிகங்களை ஓதுவோர் அடையக் கூடிய பலன்களே பெரும்பாலான பதிகங்களில் திருஞான சம்பந்தரால் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் இந்த பதிகத்தினை வல்லவர்கள் ஓத, கேட்கும் அடியார்களும் அதே பலனை பெறுவார்கள் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அந்த வகையில் தனிச் சிறப்பை பெற்றுள்ள இந்த பதிகத்தினை நன்கு உணர்ந்து ஓதியும், வல்லவர்கள் ஓதக்கேட்டும் சிவலோகம் செல்வதற்கான தகுதியை நாம் அடைவோமாக.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai