சுடச்சுட

  
  தேவாரம்


  பாடல் 11:

      ஞாலத்து உயர் காழி ஞான சம்பந்தன்
      சீலத்தார் கொள்கைச் சிற்றம்பலம் மேய
      சூலப் படையானைச் சொன்ன தமிழ் மாலை
      கோலத்தார் பாட வல்லார் நல்லாரே 
   

  விளக்கம்:

  கோலம்=அழகு; சீலம்=நல்லொழுக்கம்;

  பொழிப்புரை:

  நல்லொழுக்கம் வாய்ந்து நல்ல கொள்கைகளுடன் சான்றோர்கள் வாழும் தில்லைச் சிற்றம்பலத்தில் பொருத்தி நடமாடும் இறைவனை, தனது கையினில் சூலம் ஏந்திய பெருமானை, உலகினில் உயர்ந்த புகழுடன் விளங்கும் சீர்காழி நகரினில் தோன்றிய ஞானசம்பந்தன் புகழ்ந்து சொன்ன தமிழ் மாலையினை, அதற்குரிய பண்ணுடன் இசைத்து அழகாக பாடும் வல்லமை வாய்த்தவர்கள் நல்ல குணங்கள் பொருந்தியவராக இருப்பார்கள்.  
   
  முடிவுரை:

  சொல்மாலையால் காலம் எல்லாம் துதித்து என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுவதால் திருஞானசம்பந்தர் பல பதிகங்கள் தில்லைப் பதியின் மீது பாடியிருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. ஆனால் நமக்கு இரண்டு பதிகங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. பின்னர் திருக்கோயிலின் வெளியே வந்த சம்பந்தர் திருக்கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளையும் வணங்கினார் என்று பெரிய புராணத்திலிருந்து நாம் அறிகின்றோம். இந்த செய்கை நமக்கு அப்பர் பிரான் தில்லை திருவீதிகளின் புனிதம் கருதி, நான்கு வீதிகளையும் தரையில் புரண்டு வலம் வந்ததை நினைவூட்டுகின்றது. 

  மேலும் தில்லை தலத்தின் புனிதம் கருதி, தில்லையில் தங்கி இரவு துயில்வது தவறு என்ற எண்ணத்துடன் தில்லையில் இரவுப் பொழுதினில் தங்குவதைத் தவிர்த்து, அருகில் உள்ள திருவேட்களம் என்ற தலத்திற்கு  சம்பந்தர் சென்றார் என்பதையும் சேக்கிழார் நமக்கு உணர்த்துகின்றார். இதிலிருந்து தில்லைத் தலத்தினை எத்துணை புனிதமாக தேவார ஆசிரியர்கள் கருதினார்கள் என்பது நமக்கு புலனாகின்றது. அல்குதல்=தங்குதல்;

      செல்வத் திருமுன்றில் தாழ்ந்து எழுந்து தேவர் குழாம்
      மல்கும் திருவாயில் வந்து இறைஞ்சி மாதவங்கள்
      நல்கும் திருவீதி நான்கும் தொழுது அங்கண்
      அல்கும் திறம் அஞ்சுவார் சண்பை ஆண் தகையார் 

  பின்னர் திருவேட்களம், கழிப்பாலை, சிவபுரி தலங்களுக்கு சென்று பதிகங்கள் அருளிய சம்பந்தர் மீண்டும் ஒரு முறை தில்லை வந்து ஆடினாய் நறுநெய்யுடன் என்று தொடங்கும் பதிகத்தினை பாடுகின்றார். திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய கற்றாங்கு என்றும் தொடங்கும் இந்த பதிகத்தினை ஓதி, பலவிதமான நலங்களும் பெற்று,  நமது இடர்கள் தீர்க்கபெற்று, மறுமையில் நாம் பெருமானது சிவந்த திருவடிகளை சென்று சேர்வதற்கு வழி வகுத்துக் கொள்வோமாக.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai