சுடச்சுட

  
  தேவாரம்

  பின்னணி:

  தில்லைப் பதியின் புனிதம் கருதி தில்லையில் தங்குவதற்கு அஞ்சிய ஞானசம்பந்தர் அருகில் உள்ள திருவேட்களம் எனப்படும் பதியில் தங்கியவராய், கழிப்பாலை. சிவபுரி மற்றும் வேட்களம் ஆகிய தலங்களில் உள்ள இறைவனைப் புகழ்ந்து பதிகங்கள் பாடினார் என்றும் இடையிடையே தினமும் தில்லைச் சிதம்பரம் சென்று தில்லைக் கூத்தனை வணங்கினார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். மேற்கண்ட திருத் தலங்களில், சம்பந்தர் பதிகம் பாடிய போது அருகிலிருந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர் பதிகங்களுக்கு பொருந்திய தன்மையில் யாழில் இசை அமைத்தமை இங்கே குறிப்பிடப் படுகின்றது. முதன் முதலாக சம்பந்தருடன் இணைந்து யாழ்ப்பாணர் சென்ற தலங்கள் இவை என்பதால், யாழில் பதிக இசை பொருந்தியதை சேக்கிழார் குறிப்பிடுகின்றார். இவ்வாறு தினமும் தில்லை சென்று வணங்கிய போது, பெருமானுக்கு அணுக்கத் தொண்டர்களாக தில்லை வாழ் அந்தணர்கள் பணி செய்ததைக் கண்ட சம்பந்தர், அவர்கள் அனைவரும் பெற்றிருந்த பேற்றினை எண்ணி அதிசயித்தார் என்று சேக்கிழார் கூறுகின்றார். அணுக்கத் தொண்டர்=சிவபெருமானின் அருகில் சென்று தொண்டு செய்யும் அடியார்கள்; பெருமானின் திருமேனியைத் தீண்டி திருமஞ்சனம் ஆட்டுதல், அலங்கரித்தல், அர்ச்சனை செய்தல் முதலிய திருப்பணிகள்  

      பாடும் பதிக இசை யாழ்ப்பாணரும் பயிற்றி
      நாடும் சிறப்பு எய்த நாளும் நடம் போற்றுவார்
      நீடும் திருத்தில்லை அந்தணர்கள் நீள் மன்றுள்
      ஆடும் கழற்கு அணுக்கராம் பேறு அதிசயிப்பார் 

  தில்லை வாழ் அந்தணர்கள் பெற்றிருந்த பேற்றினைக் கண்டு அதிசயமுற்ற சம்பந்தர்க்கு, இறைவன் அந்த பெரும்பேற்றினுக்கு காரணம் யாது என்பதை பெருமான் உணர்த்தியது பெரிய புராணத்தில் ஒரு நிகழ்ச்சியாக சொல்லப் படுகின்றது. ஒரு நாள் திருவேட்களம் தலத்திலிருந்து, சிதம்பரம் வந்து கொண்டிருந்த திருஞான சம்பந்தர், தில்லை வாழ் அந்தணர்களின் சிறந்த ஒழுக்க நிலையையும் சிறப்பினையும் எண்ணியவாறு வந்த போது, பெருமான் தில்லை வாழ் அந்தணர்கள் மூவாயிரவரும் சிவகணங்களின் தலைவராக இருக்கும் நிலையினை காட்சியாக காட்டினார். அந்த காட்சியினை சம்பந்தர் தனது அருகில்     இருந்த திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கும் காட்டினார். இதன் மூலம் சிவகண நாதர்களே தில்லைவாழ் அந்தணர்களாக இருக்கும் தன்மை உணர்த்தப் பட்டது.

      அண்டத்து இறைவர் அருளால் அணி தில்லை
      முண்டத் திருநீற்று மூவாயிரவர்களும்
      தொண்டத் தகைமைக் கணநாதராய் தோன்றக்
      கண்ட அப்பரிசு பெரும் பாணர்க்கும் காட்டினார்

  தில்லை வாழ் அந்தணர்களின் சிறப்பு கருதி அவர்களை அனைவரையும், தரையில் வீழ்ந்து ஞானசம்பந்தர் வணங்குவதற்கு முன்னமே, தில்லை வாழ் அந்தணர்கள் அனைவரும் சம்பந்தரை வணங்கி, அவரைச் சூழ்ந்து கொண்டு திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்றார்கள். திருக்கோயிலின் உள்ளே சென்ற சம்பந்தர் பேரம்பலத்தை வணங்கிய பின்னர், சிற்றம்பலத்தில் உள்ள திருக்களிற்றுப் படியின் அருகில் நிலத்தில் கீழே விழுந்து பெருமானை வணங்கினார். பின்னர் ஆடினாய் என்று தொடங்கும் இந்த பதிகத்தை பாடி பெருமானை வணங்கிய சம்பந்தர், இந்த பதிகத்தின் பாடல் ஒன்றினில் தான் தில்லை வாழ் அந்தணர்களை சிவகணங்களின் தலைவர்களாக கண்ட
  காட்சியையும் விரித்து கூறுகின்றார். இந்த பாடல் பதிகத்தின் மூன்றாவது பாடலாகும்

      ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் என்று
            எடுத்து ஆர்வத்தால்
      பாடினார் பின்னும் அப்பதிகத்தினில் பரவிய
           பாட்டு ஒன்றில் 
      நீடு வாழ் தில்லை நான்மறையோர் தமைக் கண்ட
         அந்நிலை எல்லாம்
      கூடுமாறு கோத்து அவர் தொழுது ஏத்து சிற்றம்பலம்
           எனக் கூறி          

  பாடல் 1:

      ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் அந்தணர்
            பிரியாத சிற்றம்பலம்
      நாடினாய் இடமா நறுங் கொன்றை
            நயந்தவனே
    பாடினாய் மறையோடு பல் கீதமும் பல் சடை
            பனிக்கால் கதிர் வெண் திங்கள்
      சூடினாய் அருளாய் சுருங்க எம தொல்வினையே

  விளக்கம்:

  பனிகால்=குளிர்ச்சியைத் தரும்; எம=எம்முடைய; நயத்தல்=விரும்புதல்; நாடுதல்=மனம் நாடுதல்; இந்த பாடலில் தில்லை அந்தணர்களுக்கும் பெருமானுக்கும் உள்ள நெருக்கத்தை கூற வந்த சம்பந்தர் அபிஷேகத்தையும் அந்தணர்களையும் பிரியாத சிற்றம்பலம் என கூறுகிறார். சிவனை அபிஷேகப் பிரியர் என்று கூறுவர். அதே அளவுக்கு தில்லைவாழ் அந்தணர்களும் சிவபிரானுக்கு உகந்தவர் என்பதால் அபிஷேகத்தையும் அந்தணர்களையும் இணைத்து கூறுகிறார். இவ்வாறு கூறுவதன் மூலம் தில்லை வாழ் அந்தணர்களின் பெருமையை சம்பந்தர் உயர்த்துகிறார். சந்திரனின் கொடிய வினையையே தீர்த்த சிவபிரானுக்கு நமது வினைகளை போக்குவது எளிய செயல் அல்லவா.

  எனவே தான் சந்திரனுக்கு அருளிய தன்மை கூறப்பட்டுள்ளது. பால், நெய், தயிர் முதலியவற்றில் ஆடினாய் என்று சம்பந்தர், இறைவனை குறிப்பிடுகின்றார். பால், நெய், தயிர் என்ற இந்த மூன்றுடன் நிறுத்தி ஆனஞ்சு ஆடுபவன் என்று குறிப்பால் உணர்த்துவது, சைவ நூல்களில் பின்பற்றப்படும் மரபு. கோமயம், கோசலம் ஆகிய மற்ற இரண்டினை தனியாக திருமுறை பாடல்களில் குறிப்பிடுவது இல்லை. எனவே பசுவிலிருந்து பெறப்படும் ஐந்து பொருட்களைக் கொண்டு நீராடும் பெருமான் என்று குறிப்பிடுவதாக நாம் பொருள் கொள்ள வேண்டும்.

  மூவாயிரம் தில்லை வாழ் அந்தணர்களில் பெருமானும் ஒருவராக கருதப் படுவதால், அந்த அந்தணர்களை விட்டு பெருமான் பிரியாது இருப்பவராக கருதப் படுகின்றார்.

  எனவே தான் அந்தணர் பிரியாத சிற்றம்பலம் என்று கூறுவதாக சிலர் விளக்கம் கூறுகின்றனர். தொடர்ந்து அந்தணர்கள் பிரியாது பணி செய்யும் சிற்றம்பலத்தில் உறையும் பெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பல்சடை=பல விதமான தன்மைகள் கொண்டுள்ள சடை. சுருண்டு கிடப்பதால் புன்சடை என்றும், நீண்டு இருப்பதால் நீள்சடை என்றும், பொன் போன்ற நிறத்தில்  இருப்பதால் பொன்சடை என்றும், விரிந்து பரந்து இருப்பதால் விரிசடை என்றும், நிமிர்ந்து உயர்ந்து இருப்பதால் நிமிர்சடை என்றும் பெருமானின் சடை பலவிதமாக திருமுறைப் பாடல்களில் குறிக்கப் படுகின்றது. இதனை உணர்த்தும் வகையில் பல்சடை என்று சம்பந்தர் கூறுகின்றார். ஒன்பது சடைகளை உடைய பெருமான் என்பதை உணர்த்தும் வண்ணம் பல்சடை என்று கூறினார் என்றும் பொருள் கொள்ளலாம். பாடினாய் மறை என்பதற்கு சாம வேத கீதங்கள் பாடினார் என்று பொருள் கொள்ள வேண்டும். இசை வடிவத்தில் அமைந்துள்ள வேதம் சாமவேதம் ஒன்று தான் என்பதால் பாடினார் வேதம் என்று குறிப்பிடும் போது, சாமவேதத்தையும் ஓதினார் வேதம் என்று சொல்லும் போது நான்கு வேதங்களையும் குறிப்பிடுவதாக பொருள் கொள்ள வேண்டும். 

  ஆடினாய் என்ற சொல்லுக்கு நடனம் புரிதல் மற்றும் நீராடுதல் என்று இரண்டு பொருள்கள் உள்ளன. இரண்டுமே பெருமானுடன் இணைந்த செயல்கள். ஆடவல்லானை குறிக்கும் இந்த பாடலை, ஆடினாய் என்ற சொல்லுடன் நயமாக தொடங்கி, பெருமான் பசுவிலிருந்து பெறப்படும் ஐந்து பொருட்களைக் கொண்டு நீராடுவதை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். சம்பந்தரின் சொல்லாட்சியை நாம் இங்கே உணர்கின்றோம். இந்த பாடல் சிவபூஜையின் போது பாடக்கூடிய பாடலாக கருதப்படுகின்றது. 

  பெருமான் பசுவிலிருந்து கிடைக்கப்பெறும் பொருட்களைக் கொண்டு நீராடுவதை சம்பந்தர் குறிப்பிடுவது நமக்கு சுந்தரர் ஓணகாந்தன்தளி தலத்தின் மீது அருளிய முதல் பாடலை (7.5.1) நினைவூட்டுகின்றது. காணம்=காசு; ஐந்து பொறிகளின் தேவையை நிறைவேற்ற மனிதனுக்கு பணம் தேவைப் படுகின்றது. எனவே தன்னை வருத்தும் பொறிகளை இன்புறச் செய்து, அந்த பொறிகள் துன்பம் தருவதை தடுக்கும் வண்ணம், உனது அடியார்களுக்கு, உன்னை நெய் பால் தயிர் ஆகியவை கொண்டு நீராட்டும் அடியார்களுக்கு நீ பணம் அருள வேண்டும் என்று கூறுவதாக அமைந்த பாடல். பெரிய புராண வரலாற்றிலிருந்து சுந்தரர் தனக்கு பொன் வேண்டி இறைவனிடம் இறைஞ்சி பாடிய பாடல் இது என்று நாம் அறிகின்றோம்.    

      நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல்
          பூசனை செய்யல் உற்றார்
      கையில் ஒன்றும் காணம் இல்லைக் கழலடி தொழுது
          உய்யின் அல்லால்
      ஐவர் கொண்டு இங்கு ஆட்ட ஆடி ஆழ்குழிப்பட்டு
         அழுந்துவேனுக்கு
      உய்யுமாறு ஒன்று அருளிச் செய்யீர் ஓணகாந்தன்தளி உளீரே   

  பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்து பொருட்களைக் கொண்டு விருப்பமுடன் நீராடுபவன் இறைவன் என்று பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. அத்தகைய சில பாடல்களை நாம் இங்கே காண்போம். திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (3.102.2) ஞானசம்பந்தர் குறிப்பிடும் பாடல் இங்கே கொடுக்கப் படுகின்றது.

  ஏ=அம்பு; அடியார்களின் தீவினைகளை தீர்ப்பதற்காக இறைவன் திருநாரையூர் தலத்தில் எழுந்தருளி இருப்பதாக சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.  

      தீவினை ஆயின தீர்க்க நின்றான் திரு நாரையூர்
          மேயான்
      பூவினை மேவு சடை முடியான் புடை சூழப்
          பல பூதம்
      ஆவினில் ஐந்தும் கொண்டு ஆட்டுகந்தான் அடங்கார்
          மதில் மூன்றும்
      ஏவினை எய்து அழித்தான் கழலே பரவா எழுவோமே 

  குருகாவூர் வெள்ளடை என்ற தலத்தின் மீது அருளிய பாடல். ஒன்றினில் (3.124.6) ஞான சம்பந்தர், பெருமான் பஞ்சகவ்யம் கொண்டு உகந்து நீராடுவதை குறிப்பிடுகின்றார்.

  காவியங்கண் மடவாள் என்பது இந்த திருத்தலத்தில் உள்ள தேவியின் திருநாமம். குவளை மலர் போன்ற அழகிய கண்களை உடையவள் என்று பொருள்.  

      காவியங்கண் மடவாளொடும் காட்டிடை
      தீ அகல் ஏந்தி நின்றாடுதிர் தேன்மலர்
      மேவிய தண்பொழில் வெள்ளடை மேவிய
      ஆவினில் ஐந்து கொண்டு ஆட்டு உகந்தீரே  

  கஞ்சனூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (6.90.1) அப்பர் பிரான், பெருமானை ஆவினில் ஐந்து உகந்தான் என்று குறிப்பிடுகின்றார். மூன்று சுடர்க் கண்ணினான் என்று, சூரியன் சந்திரன் மற்றும் அக்னி இறைவனின் கண்களாக இருக்கும் நிலை இந்த பாடலில் கூறப்படுகின்றது. நாவலன்=புலவன். வேதங்களை அருளிய பெருமான் என்பதால் புலவன் என்றும், தருமிக்கு பொற்கிழி அளிக்க உதவும் வண்ணம் பாட்டு எழுதியமையால் புலவன் என்றும், பாண பத்திரர்க்கு உதவும் வண்ணம் கவிதை எழுதி சேரமான் புலவனுக்கு அளித்தமையால் (பதினோராம் திருமுறை முதல் பதிகம், மதிமலி புரிசை என்று தொடங்கும் பதிகம்) புலவன் என்றும் இறைவனை அழைத்தார் அப்பர் பிரான் என்று கூறுவதுண்டு. 

      மூவிலை நற்சூலம் வலன் ஏந்தினானை மூன்று
             சுடர்க் கண்ணானை மூர்த்தி             தன்னை
      நாவலனை நரை விடை ஒன்று ஏறுவானை
             நால்வேதம் ஆறங்கம் ஆயினானை
      ஆவினில் ஐந்து உகந்தானை அமரர் கோவை அயன்
             திருமால் ஆனானை அனலோன் போற்றும்
      காவலனைக் கஞ்சனூர் ஆண்ட கோவைக்
             கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு  உய்ந்தேனே

  திருக்கழுக்குன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலிலும் (6.92.1) அப்பர் பிரான் பெருமானை ஆவினில் ஐந்து உகந்தான் என்று குறிப்பிடுகின்றார். புணர்தல்=நெருங்குதல்;

      மூவிலை வேல் கையானை மூர்த்தி
           தன்னை முதுபிணக்காடு உடையானை முதல்  ஆனானை
      ஆவினில் ஐந்து உகந்தானை அமரர் கோனை ஆலாலம்
            உண்டு உகந்த ஐயன்  தன்னைப்
      பூவினில் மேல் நான்முகனும் மாலும் போற்றப்
            புணர்வரிய பெருமானைப் புனிதன்         தன்னைக்
      காவலனைக் கழுக்குன்றம் அமர்ந்தான்
            தன்னைக் கற்பகத்தைக் கண்ணாரக்  கண்டேன் நானே

  ஆவினிலைந்து என்பதை பாலோடு அஞ்சு என்று அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல் ஆவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடலாகும் (6.46.5). ஒரு மணி=ஒப்பற்ற மணி: உதயத்தின் உச்சி=தோன்றும் ஒளிப்போருட்களுக்கு எல்லாம் முன்னமே தோன்றிய ஒளி; உருமு=இடி பருமணி=பெரிய மணி; பவித்திரன்=தூயவன்; அருமணி=கிடைத்தற்கு அரிய மணி; திருமணி=எந்த திருத்தமும் செய்ய வேண்டிய நிலையில் இல்லாது இயல்பாகவே ஒளியுடன் மிளிரும் மணி; உலகுக்கோர் உறுதி என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். திண்மை என்பது நிலத்தின் தனிப் பண்பு. உறுதியாக இருக்கும் தன்மையாக நிலத்துடன் கலந்து இருப்பது சிவபெருமான் என்று உணர்த்தும் வண்ணம், உலகுக்கோர் உறுதி என்று இங்கே கூறுகின்றார். உலகு என்ற சொல்லுக்கு உலகத்தவர் என்று பொருள் கொண்டு, உறுதியாக உயிர்களுக்கு
  இறைவன் உதவி செய்யும் தன்மையை குறிப்பதாக பொருள் கொள்வதும் பொருத்தமே.  .

      ஒரு மணியை உலகுக்கு ஓர் உறுதி தன்னை
            உதயத்தின் உச்சியை   உருமானானைப்
      பருமணியைப் பாலோடு அஞ்சு ஆடினானைப் பவித்திரனைப்
            பசுபதியைப் பவளக் குன்றை
      திருமணியைத் தித்திப்பைப் தேனதாகித் தீங்கரும்பின்
              இன் சுவையைத் திகழும் சோதி
      அருமணியை ஆவடு தண்துறையுள் மேய அரன் அடியே
              அடி நாயேன் அடைந்து  உய்ந்தேனே

  அந்தணர் பிரியாத சிற்றம்பலம் என்று சம்பந்தர் கூறுவது நமக்கு அந்தணர் தம் சிந்தையான் என்று அப்பர் பிரான் கூறுவதை (6.1.1) நினைவூட்டுகின்றது. தன்னை விட்டு என்றும் பிரியாமல் திருப்பணிகள் செய்யும் தில்லை வாழ் அந்தணர்களின் சிந்தையில் இறைவன் நீங்காமல் இருப்பது ஒன்றும் வியப்பு அல்லவே. அரியான்=அரியவன், தங்களது முயற்சியால் அறிந்து விடலாம் என்று நினைப்பவர், அவர் எத்தைகைய தகுதி படைத்தவராயினும், அவர்களால் அறிய முடியாதவன் என்று பொருள். கல்விக்கு அதிபதியாக விளங்கும் பிரமனும், செல்வத்திற்கு அதிபதியாக விளங்கும் திருமாலும், அன்னமாகப் பறந்தும், பன்றியாக ஆழ்ந்தும் முயற்சி செய்த போது அவர்களால் காணமுடியாத நிலையில் இருந்ததை நாம் இங்கே நினைவு கூரலாம். இறைவன் மீது நாம் வைத்துள்ள பக்தி, அன்பு என்ற கருவிகளால் மட்டும் தான் நாம் அவனை அறிய முடியும். பிரமனும் தேடியும் காணமுடியாத அரியவன், மிகவும் எளிமையான் முறையில் அந்தணர்களின் சிந்தையில் இருக்கும் தன்மை இங்கே உணர்த்தப் பட்டுள்ளது, பிறவா நாள்=இறந்த நாள், வாழாத நாள் என்பதை மங்களகரமாக பிறவா நாள் என்று எதிர்மறையாக சொல்லுகின்றார்.

      அரியானை அந்தணர் தம் சிந்தையானை
           அருமறையின் அகத்தானை அணுவை  யார்க்கும்
      தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் திகழொளியைத்
            தேவர்கள் தம் கோனை மற்றைக்
      கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
           கனைகடலைக் குலவரையை  கலந்து நின்ற
      பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத
            நாளெல்லாம் பிறவா நாளே  

  நறுமணம் மிகுந்த கொன்றை மாலையினை விருப்பமுடன் அணிந்தவனே என்று சம்பந்தர் இறைவனை இந்த பாடலில் அழைக்கின்றார். கொன்றை மாலை உருவத்தில் பிரணவ எழுத்தினை ஒட்டி அமைந்துள்ளது. பெருமான், மந்திரங்களில் சிறந்ததாக கருதப்படும் பிரணவ மந்திரத்திற்கு உரிய தெய்வம் தாமே என்பதை உணர்த்தும் பொருட்டு கொன்றை மலர் அணிந்தவராக காணப்படுகின்றார் என்று பெரியோர்கள் கூறுவார்கள். மிகவும் அதிகமான பாடல்களில் திருஞானசம்பந்தர், பெருமானுடன் தொடர்பு கொண்ட மலராக கொன்றை மலரை குறிப்பிடுகின்றார். இவ்வாறு அவர் பாடியதை வியந்த சுந்தரர் தனது திருத்தொண்டத் தொகையில், வம்பறா வரிவண்டு மணம் நாற மலரும் மதுமலர் நற்கொன்றையான் அடியலால் பேணா எம்பிரான் சம்பந்தன் என்று குறிப்பிடுகின்றாரோ என்று தோன்றுகின்றது. 

  கொன்றை மாலையின் சிறப்பு சண்டீசர் புராணத்தாலும் அறியப்படும். தந்தை என்றும் பாராமல், சிவபூஜைக்கு இடையூறாக இருந்தார் என்பதால் தந்தையின் கால்களை துண்டித்த விசாரசருமருக்கு சண்டீசர் என்ற பெயரினை அளித்த பெருமான், கொன்றை மாலையையும் சூட்டினார் என்று சேக்கிழார் உணர்த்தும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

      அண்டர் பிரானும் தொண்டர் தமக்கு அதிபன்
            ஆக்கி அனைத்து நாம்
      உண்ட கலமும் உடுப்பனவும்
            சூடுவனவும் உனக்காகச்
      சண்டீசனுமாம் பதம் தந்தோம் என்று அங்கு
            அவர் பொன் தடமுடிக்கு
      துண்ட மதி சேர் சடைக் கொன்றை மாலை
            வாங்கி சூட்டினார்

  உயிர்கள் படும் துன்பங்களுக்கு மூல காரணமாக இருக்கும் வினைகளின் தன்மையை உயிர்கள் அறிய முடியாது; காணவும் இயலாது. இவ்வாறு காண்பதற்கும் அறிவதற்கும் இயலாத நிலையில் உள்ள வினைகளை நாம் எவ்வாறு அகற்றிக் கொள்ள முடியும். எனவே தான் சுருங்க எம தொல்வினையே என்று இறைவனிடம் விண்ணப்பம் வைக்க வேண்டும் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது.      .  

  பொழிப்புரை: 

  நறுமணம் உடைய நெய், பால், தயிர் மற்றும் கோமியம், கோசலம் ஆகிய பொருட்களைக் கொண்டு நீராட்டப் படும் பெருமானே, தில்லை வாழ் அந்தணர்கள் எப்போதும் தங்களது  மனதிலும் புறத்திலும் உனது நினைவுகளைக் கொண்டு உன்னை பிரியாது வழிபடும் பெருமை வாய்ந்த சிற்றம்பலத்தைத் தனது அரங்கமாக தேடிச் சென்று நடனம் ஆடுபவனே, நறுமணம் வாய்ந்த கொன்றை மாலையை விரும்பி அணிபவனே, சாமவேத பாடல்களையும் மற்றும் பல கீதங்களையும் பாடுபவனே, பல விதமாக விவரித்து சொல்லப்படும் சடையினில் குளிர்ச்சியைத் தரும் கதிர்களைக் கொண்ட பிறைச் சந்திரனை சூடியவனே, எமது தொல்லை வினைகள் அனைத்தும் சுருங்கி விலகும் வண்ணம் அருள் புரிவாயாக.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai