99. ஆடினாய் நறுநெய்யொடு - பாடல் 4
By என். வெங்கடேஸ்வரன் | Published on : 14th November 2018 04:37 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

பாடல் 4:
கொம்பு அலைத்து அழகு எய்திய நுண்ணிடைக்
கோல வாள் மதி போல் முகத்து இரண்டு
அம்பு அலைத்த கண்ணாள் முலை மேவிய
வார்சடையான்
கம்பலைத்து எழு காமுறு காளையர் காதலால் கழல்
சேவடி கை தொழ
அம்பலத்து உறைவான் அடியார்க்கு அடையார் வினையே
விளக்கம்:
அலைத்து=அலைய வைத்து வருத்தப்பட செய்தல்; கொம்பு=பூங்கொடி; பார்வதி தேவியின் அழகுடன் போட்டியிட்டு தோல்வி அடைந்து பூங்கொம்பு வருந்துவதாக சம்பந்தர் இங்கே கூறுகின்றார். கம்பலைத்து=ஆரவாரம் செய்து;
பொழிப்புரை:
பூங்கொம்பு தோற்று வருந்தும் வண்ணம் அதனை விடவும் அழகான மென்மையான நுண்ணிய இடையையும், வானில் உலவும் சந்திரன் போன்று ஒளிவீசுவதும் அம்பினை வென்று வருத்தும் வண்ணம் அழகுடையதும் ஆகிய இரண்டு கண்கள் உடையவளும் ஆகிய சிவகாமி அம்மையின் மார்பகங்கள் பொருந்திய திருமேனியை உடையவன் வார்சடையோன் ஆகிய நடராஜப் பெருமான். பெருமானை மிகவும் விரும்பும் தன்மையில் அர அர என்று ஆரவாரத்துடன் முழக்கம் செய்தவாறு காலையில் துயில் எழுபவர்களும் காளை போன்று அழகும் வலிமையையும் பொருந்திய தோற்றம் கொண்டவர்களும் ஆகிய தில்லை வாழ் அந்தணர்கள் காதலுடன் வீரக்கழல் அணிந்த பெருமானின் திருவடிகளை தங்களது கைகளால் தொழுகின்றனர். அம்பலத்தில் நடமாடும் இறைவனின் அடியார்களை வினைகள் சென்று அடையாது நீங்கிவிடும்.