சுடச்சுட

  
  தேவாரம்


  பாடல் 5:

   தொல்லையார் அமுது உண்ண நஞ்சு உண்டதோர்
      தூமணி மிடறா பகுவாயதோர்
   பல்லையார் தலையில் பலி ஏற்றுழல்
      பண்டரங்கா
   தில்லையார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால்
     கழல் சேவடி கை தொழ
    இல்லையாம் வினை தான் எரியம் மதில் எய்தவனே

  விளக்கம்:

  தொல்லையார்=தேவர்கள்; தொல்லையார் என்றால் பழமையானவர்கள் என்று பொருள். மனிதர்களை விடவும் வாழ்நாள் அதிகம் படைத்தவர்கள் என்பதால் தேவர்களை தொல்லையார் என்று சம்பந்தர் அழைக்கின்றார். பகுவாய்=பெரிய வாய் பிளந்த வாய்; சிற்றம்பலம் குறித்துப் பாடிய சம்பந்தப் பெருமானுக்கு பண்டை நாளில், திரிபுரம் எரித்த மகிழ்ச்சியில் தேர்த்தட்டில் ஆடிய பண்டரங்க கூத்து நினைவுக்கு வருவது நியாயம் தானே. தொல்லையார் என்றால் தொன்மை உடையவர்கள் என்று பொருள். இந்த பாடலில் தேவர்களை குறிக்க இந்த சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. திரிபுரங்கள் எரித்த விரிசடைக் கடவுளுக்கு நமது வினையை சுட்டு எரிப்பது எளிதான செயல் என்று உணர்த்தும் முகமாக, இறுதி அடியில் திரிபுரம் எரித்த நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டுள்ளது. நடராஜப் பெருமானை தரிசனம் செய்வது நமது வினையினை முற்றிலும் நீக்கி, முக்தி நிலைக்கு அழைத்துச் செல்லும் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.  

  பொழிப்புரை: 

  தொன்மை மிக்க தேவர்கள் அமுது உட்கொள்ளும் பொருட்டு, அதற்கு முன்னம் எழுந்த நஞ்சினை உண்டு கழுத்தினில் அடக்கியதால், தூய நீலமணி பதிந்தது போன்ற கழுத்தினை உடையவனே, பற்கள் நினைந்து வாய் பிளந்த நிலையில் உள்ள தலையினில் பலியினை ஏற்பதற்கு உலகெங்கும் திரிபவனே, திரிபுரம் எரித்த பின்னர் அந்த தேரினை அரங்கமாகக் கொண்டு பாண்டரங்கக் கூத்து ஆடியவனே, பறக்கும் மூன்று கோட்டைகளும் தீப்பற்றி எரியும் வண்ணம் அம்பினை எய்தவனே, தில்லை வாழ் அந்தணர்கள் தொழுது புகழ்ந்து வழிபடும் சிற்றம்பலம் அடைந்து வழிபடுவதாலும், வீர்கழல் அணிந்த உனது அழகிய திருவடிகளை கைகளால் தொழுவதாலும் அடியார்களின் வினைகள் முற்றிலும் கழிந்துவிடும்.  

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai