சுடச்சுட

  
  தேவாரம்


  பாடல் 6:

      ஆகம் தோய் அணி கொன்றையாய் அனல் அங்கையாய்
         அமரர்க்கு அமரா உமை
      பாகம் தோய் பகவா பலி ஏற்றுழல்
         பண்டரங்கா
      மாகம் தோய் பொழில் மல்கு சிற்றம்பலம்
         மன்னினாய் மழுவாளினாய் அழல்
      நாகம் தோய் அரையாய் அடியாரை நண்ணா வினையே

  விளக்கம்:

  தோய்=பொருந்திய; ஆகம்=பொதுவாக உடல், இங்கே மார்பு; பகவன்=செல்வம், வீரியம், ஞானம், புகழ், தெய்வத்தன்மை, வைராக்கியம் எனப்படும் ஆறு குணங்களை உடையவன், இந்த ஆறு குணங்கள் பகம் என்று ஒரு தொகுப்பாக அழைக்கப் படுகின்றது. தன்வயத்தன் ஆதல், முதல் இல்லாத தன்மை உடைத்தல், உடல் அற்றவனாக இருத்தல், எல்லா நலனும் கொண்டிருத்தல், எங்கும் பரவியிருத்தல், எவற்றுக்கும் காரணனாக இருத்தல் ஆகிய ஆறு குணங்களை உடையவன் என்றும் விளக்கம் கூறுகின்றனர். மாகம்=மேகம்; தாருகவனத்து முனிவர்கள், முன்னர் தாங்கள் கொண்டிருந்த கொள்கையை விட்டொழித்து, பெருமானின் பெருமையை உணர்ந்து அவரைப் போற்றி வழிபட்ட பின்னர் பெருமான் மகிழ்ச்சியுடன் ஆடிய நடனங்களில் பண்டரங்கக் கூத்தும் ஒன்றாகும். பகவான் என்ற வடமொழி சொல்லின் தமிழாக்கமாக பகவன் என்ற சொல் சிலரால் கருதப் படுகின்றது. 

  பொழிப்புரை: 

  மார்பினில் பொருந்தும் வண்ணம் அழகிய கொன்றை மாலை அணிந்தவனே, நெருப்புப் பிழம்பினை ஏந்திய கையினை உடையவனே, தேவர்களுக்கும் தலைவனாக விளங்கும் தேவதேவனே, உமை அம்மையை தனது உடலின் ஒரு பாகத்தில் உடையவனே, முதல் இல்லாத தன்மை உடைத்தல், உடல் அற்றவனாக இருத்தல், எல்லா நலனும் கொண்டிருத்தல், எங்கும் பரவியிருத்தல், எவற்றுக்கும் காரணனாக இருத்தல் ஆகிய சிறந்த ஆறு குணங்களை உடையவனே, உலகெங்கும் பலி ஏற்கத் திரிபவனே, தாருகவனத்து முனிவர்களின் மன நிலையை மாற்றிய மகிழ்ச்சியில் பண்டரங்கக் கூத்து ஆடியவனே, வானளாவிய வண்ணம் வளர்ந்து நிற்கும் சோலைகள் நிறைந்த தில்லியில் உள்ள சிற்றம்பலம் அரங்கினை நிலையான இருப்பிடமாகக் கொண்டவனே, மழுவாட் படையை உடையவனே, கொடிய நஞ்சினை உடைய நாகத்தினைத் தனது இடுப்பினில் கச்சையாக அணிந்தவனே, உனது அடியார்களை வினைகள் நெருங்காது.   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai