சுடச்சுட

  
  தேவாரம்

  பாடல் 1:

      கற்று ஆங்கு எரி ஓம்பி கலியை வாராமே
      செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
      முற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமே
      பற்றா நின்றாரைப் பற்றா பாவமே

  விளக்கம்:

  இந்த பாடலில் அந்தணர்கள் செய்யும் வேள்விகள் கலி புருடனின் வல்லமையை குறைக்கும் என்று குறிப்பிட்டு அத்தகைய வேள்விகள் செய்யும் அந்தணர்களை கலியை வெல்லும் திறமை கொண்டவர்கள் என்று சம்பந்தர் கூறுகின்றார். பண்டைய நாளில் இந்த நம்பிக்கை இருந்தமை, பல தேவாரப் பாடல்களில் உள்ள குறிப்பு மூலம் தெரிய வருகின்றது. அத்தகைய குறிப்புகள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

  காழிப் பதியில் அந்தணர் குலத்தில் தோன்றியவன் என்று தன்னைக் குறிப்பிடும் சம்பந்தர், கலியின் ஆற்றலை குறைத்து கலியினை வெற்றி கொள்ளும் தனது குலத்தின் தன்மையை உணர்த்தும் பொருட்டு, கலி கடிந்த கையான் என்று குறிப்பிடும் இந்த பாடல் திருவையாறு பதிகத்தின் (2.6.12) கடைப் பாடலாகும். பெருமான் பாண்டரங்கக் கூத்து ஆடியதை நினைவூட்டும் வண்ணம் பெருமானை பண்டங்கன் என்று சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

      பலி திரிந்து உழல் பண்டங்கன்  மேய ஐயாற்றினைக்
      கலி கடிந்த கையான் கடற்காழியர் காவலன்
      ஒலி கொள் சம்பந்தன் ஒண்தமிழ் பத்தும்  வல்லார்கள் போய்
      மலி கொள் விண்ணிடை மன்னிய சீர் பெறுவார்களே 

  சீர்காழி தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (3.43.5) சம்பந்தர், கலிபுருடனை வருத்தும் வேள்விகள் செய்யும் கையினை உடைய அந்தணர்கள் வாழ்கின்ற தலம் சீர்காழி என்று கூறுகின்றார். நமது மனதினை வருத்தும் குற்றங்களும் தீவினைகளால் ஏற்படும் உடலை வருத்தும் நோய்களும் நம்மை விட்டு விலக வேண்டும் என்று விரும்பினால் நாம் செய்ய வேண்டிய செயல் செஞ்சடையினை உடைய பெருமானை போற்றுவது தான் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

      நலியும் குற்றமும் நம்முடல் நோய் வினை
      மெலியுமாறது வேண்டுதிரேல் வெய்ய
      கலி கடிந்த கையார் கடற்காழியுள்
      அலைகொள் செஞ்சடையார் அடி போற்றுமே 

  தில்லைச் சிதம்பரத்தில் வாழும் அந்தணர்களை சிறப்பித்தது போன்று திருவீழிமிழலை தலத்தில் வாழும் அந்தணர்களை சிறப்பிக்கும் சம்பந்தர், உலகில் மேல் வரும் கலியை வென்ற வேதியர்கள் என்று கீழ்க்கண்ட பாடலில் அவர்களை (3.119.7) குறிப்பிடுகின்றார்.  

      தன் தவம் பெரிய சலந்தரன் உடலம் தடிந்த சக்கரம்
           எனக்கு அருள் என்று
      அரி வழிபட்டு இழிச்சிய விமானத்து இறையவன்
           பிறையணி சடையன்
      நின்ற நாள் காலை இருந்த நாள் மாலை கிடந்த மண்
           மேல் வரு கலியை
      வென்ற வேதியர்கள் விழா அறா வீழிமிழலையான்
           என வினை கெடுமே

  திருப்பழனம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (4.12.10) அப்பூதியடிகளின் தன்மை பற்றி கூற வந்த அப்பர் பிரான், பயத்தினால் கலி புருடன் மெலியும் வண்ணம் வேள்விகள் செய்யும் வல்லமை வாய்ந்தவர் என்று குறிப்பிடுகின்றார். குஞ்சி என்றால் தலைமுடி என்று பொருள். அப்பூதி அடிகளாரின் குடுமியில், இறைவனது திருப்பாதங்கள் பதிந்துள்ளன என்று அப்பர் பிரான் கூறுகின்றார். 

      வஞ்சித்து என் வளை கவர்ந்தான் வாரானே ஆயிடினும் 
      பஞ்சிக்கால் சிறகன்னம் பரந்து ஆர்க்கும் பழனத்தான்
      அஞ்சிப் போய் கலி மெலிய அழல் ஓம்பும் அப்பூதி
      குஞ்சிப் பூவாய் நின்ற சேவடியாய் கோடியையே

  கோடு இயைதல் என்பது, தலைவனை விட்டு பிரிந்திருக்கும் தலைவி, தலைவனுடன் கூடுவது எந்நாளோ என்ற கவலையில், செய்யும் ஒரு செயல். தனது கண்களை மூடிக்கொண்டு, கால் கட்டை விரலால் தரையில் கோடுகள் இடுவது, அல்லது சிறு சிறு வட்டங்கள் போடுவது வழக்கம். இவ்வாறு போடப்படும் கோடுகள் இணைந்தால், தலைவன் தன்னுடன் கூடுவான் என்றும், வரைந்த சிறு வட்டங்கள் இரட்டைப் படை எண்ணிக்கையில் வந்தால் தலைவன் தன்னுடன் கூடுவான் என்றும் நம்புவதுண்டு. எனவே இவ்வாறு கோடுகள் இடும்போதும், வட்டங்கள் வரையும் போதும், அந்த கோடுகள் இயைய வேண்டும், அதாவது இணைய வேண்டும் என்றும் வட்டங்கள் இரட்டைப்படையாக கூட வேண்டும் என்று விரும்புவதும், அந்த விருப்பம் ஈடேற வேண்டும் என்று வேண்டுவதும் இயற்கை. எனவே தான், அப்பர் நாயகி தான் வரையும் கோடுகள் இணைய வேண்டும் என்று தனது விருப்பத்தை வேண்டுகோளாக, கோடு இயையே என்று இங்கே இறைவனை வேண்டுகின்றாள். 

  எனது வளையல்களைக் கவர்ந்து என்னை வஞ்சித்து, என்னை பிரிந்துவிட்ட எனது தலைவன் சிவபிரான்,  செம்பஞ்சு போன்ற சிவந்த கால்களையும் வெண்பஞ்சு போன்ற சிறகுகளையும் உடைய அன்னங்கள் கூட்டமாக ஆரவாரம் செய்யும் பழனத்துப் பெருமான்,   வாராமல் போனாலும் போகலாம். எனவே, பயத்தினால் கலி வருந்தி மெலியுமாறு வேள்விகள் செய்யும் அப்பூதி அடிகளின் தலைமுடியில் பூவாகத் தனது சேவடிகளை வைத்த சிவபெருமானே, நான் வரையும் கோடுகள் இணையுமாறு அருளவேண்டும். அவ்வாறு கோடுகள் இணைந்தால், எனது தலைவன் சிவபிரான் என்னுடன் வந்து கூடுவான் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்படும் என்று அப்பர் நாயகி கூறுவதாக அமைந்த அகத்துறை பாடல் இது. 

  கோடு இயைதலை கூடல் இழைத்தல் என்றும் கூறுவார்கள். திருமருகல் தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பாடல் ஒன்றினில் (5.88.8) கூடல் இழைத்தல் பற்றிய குறிப்பு காணப் படுகின்றது. திவ்ய பிரபந்தம் நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் நாச்சியார் அருளிய பாடல்களிலும் கூடல் இழைத்தல் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த பாடல், இறைவனுடன் தான் கூட வேண்டுமே என்ற ஆன்மாவின் ஏக்கத்தை வெளிப் படுத்துகின்றது. நீடு நெஞ்சு=நெஞ்சத்தில் ஆழமான இடம்: மால்=மயக்கம்: தனது எண்ணம், அதாவது தனது மனத்தைக் கவர்ந்த தலைவனாகிய சிவபெருமானுடன் இணைவது, நடக்குமா என்ற கவலையில், தான் இழைக்கும் கூடல் ஒருகால் கூடாமல் போனால், தனது விருப்பம் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற கவலையில், இழைக்கும் கூடல் கூட வேண்டுமே என்று தலைவி ஏங்கும் ஏக்கம் இங்கே வெளிபடுத்தப்படுகின்றது.

      நீடு நெஞ்சுள் நினைந்து கண் நீர் மல்கும்
      ஓடு மாலினோடு ஒண்கொடி மாதராள்
      மாடம் நீள் மருகல் பெருமான் வரில்
      கூடு நீ என்று கூடல் இழைக்குமே

  மணிவாசகரும், தனது திருக்கோவையார் தொகுப்பில், கூடல் இழைத்தலை (பாடல் எண் 186) குறிப்பிடுகின்றார். சுழிகளின் எண்ணிக்கை, அதாவது கூடல் கணக்கு, இரட்டைப் படையில் அமைந்து சரியாக கூட வேண்டும் என்று இறைவனை வேண்டும் தலைவி, கூடல் ஐயன் என்று அவனை அழைப்பதை நாம் இங்கே காணலாம். பதி ஞானம் (சிவபிரானைப் பற்றிய தெளிந்த அறிவு) ஆன்மாவுக்கு ஏற்படுமாயின், ஆன்மா சிவத்தை அடையும் என்பது இங்கே உணர்த்தப்படுகின்றது. ஆழி=ஆணைச் சக்கரம், கடல்: ஆழி திருத்தி=கூடல் இழைத்து; தனது ஆணைச் சக்கரத்தால் உலகினை நடத்தும் புலியூர் பெருமானின் அருள் போன்று இனிமையான இன்பத்தை, நான் எனது தலைவனுடன் கூடினால் பெறலாம். ஆனால் கடலின் அருகே உள்ள மணல் குன்றில், இறுதியாக சந்தித்த எனது தலைவன் என்னை விட்டு பிரிந்து சென்றான்; அவனது பிரிவால் வருந்திய நான் கூடல் இழைக்கின்றேன்; கூடல் தெய்வமே, எனது தலைவன் மீண்டும் வருவான் என்று எனக்கு நம்பிக்கை ஊட்டும் வண்ணம், எனக்கு வருத்தம் ஏதும் ஏற்படா வண்ணம், சுழிகளின் கணக்கினைத் திருத்தி கூடலைக் கூட்டவேண்டும்.      

      ஆழி திருத்தும் புலியூர் உடையான்
            அருளின் அளித்து
      ஆழி திருத்தும் மணல் குன்றின் நீத்து
             அகன்றார் வருகென்று
      ஆழி திருத்திச் சுழிக் கணக்கு ஓதி
              நையாமல் ஐய
      வாழி திருத்தித் தரக் கிற்றியோ
              உள்ளம் வள்ளலையே

  வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.67.11) சுந்தரர் அந்தணர்கள் வேள்வி வளர்ப்பதன் நோக்கமே கலி புருடனின் வலிமையை கெடுப்பதற்காக என்று கூறுகின்றார்.

      கலி வலம் கெட ஆரழல் ஓம்பும் கற்ற நான்மறை
           முற்றனல் ஓம்பும்
      வலிவலம் தனில் வந்து கண்டு அடியேன் மன்னு
            நாவல் ஆரூரன் வன்றொண்டன்
      ஒலிகொள் இன்னிசைச் செந்தமிழ் பத்தும் உள்ளத்தால் உகந்து
            ஏத்த வல்லார் போய்
      மெலிவில் வானுகத்தவர் ஏத்த விரும்பி விண்ணுலகு
            எய்துவர் தாமே

  கலி வாராமல் காக்கும் அந்தணர்கள் பெருமானை போற்றுகின்றார்கள் என்று வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பாடலில் (7.88.2) சுந்தரர் குறிப்பிடுகின்றார். நஞ்சினை உண்டதால்  கரிய கண்டத்தினை உடையவரே என்றும் வெண்மையான சங்கக்குழை ஒன்றினை ஒரு காதினில் தொங்க விட்டவரே என்றும் அந்தணர்கள் இறைவனை போற்றுவதாக சுந்தரர் இங்கே குறிப்பிடுகின்றார். 

      விடம் கொள் மாமிடற்றீர் வெள்ளைச் சுருள்
           ஒன்றிட்டு விட்ட காதினீர் என்று
      திடம் கொள் சிந்தையினார் கலி காக்கும்
             திருமிழலை
      மடங்கல் பூண்ட விமானம் மண்மிசை வந்து
           இழிச்சிய வான நாட்டையும்
      அடங்கல் வீழி கொண்டீர் அடியேற்கும்
           அருளிதிரே

  கற்று=வேதங்களை கற்று; வேள்விகள் வளர்க்கும் முறை வேதங்களில் சொல்லைப் படுகின்றது. அத்தகைய வேதங்களை முறையாக கற்ற தில்லை வாழ் அந்தணர்கள், தாங்கள் கற்றதை வாழ்வினில் கடைப்பிடித்து வேள்விகள் வளர்த்தமை இங்கே குறிப்பிடப் படுகின்றது. செற்றார்=வென்றவர்கள்; பற்றா=பற்றுக்கோடாகக் கொண்டு; இறைவன் தனது தலையில் சூட்டிக் கொண்டுள்ள பிறைச் சந்திரனை முற்ற வெண் திங்கள் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பிறைகள் தேய்ந்து அழிந்த நிலையில் ஒற்றைப் பிறையுடன் சரண் அடைந்த சந்திரன், பெருமானிடம் தஞ்சம் புகுந்த பின்னர் வளரத் தொடங்கியதால், பிறைச் சந்திரன் இளைமையாக இருக்கும் நிலையை, முற்றா வெண்திங்கள், வளராத வெண்திங்கள் என்று குறிப்பிடுகின்றார். .

  கலி என்ற சொல்லுக்கு வறுமை என்ற பொருள் கொண்டு, தாங்கள் செய்யும் வேள்வியின் பயனாக மழை பொழிந்து உலகம் வளம் பெற்றுத் திகழ்வதற்கு அந்தணர்கள் உதவி புரிகின்றனர் என்று திருஞான சம்பந்தர் உணர்த்துகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. இந்த செய்தி வாழ்க அந்தணர் என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலிலும், (3.54.1) குறிப்பிடப் படுகின்றது. வேள்விகளை வளர்க்கும் அந்தணர்கள் வாழ வேண்டும் என்றும், வேள்விகள் செய்வதற்கு உரிய பொருட்களைத் தந்து உதவும் பசுவினங்கள் வாழ வேண்டும் என்றும், வேள்வியில் வழங்கப்படும் ஆகுதிகளை பெறுகின்ற தேவர்கள் வாழ வேண்டும் என்றும், நாட்டில் மழை பொழிய வேண்டும் என்றும், நாட்டில் நீர்வளம் பெருகி நாடும் நாட்டின் மக்களும், நாட்டின் வேந்தனும் ஓங்கி வளர வேண்டும் என்றும் பாடும் பாடலில். நாட்டில் தீய சக்திகள் அனைத்தும் அழிந்து, எங்கும் சிவன் நாமமே ஒலிக்கப்பட வேண்டும் என்று தனது விருப்பத்தையும் தெரிவிக்கின்றார். 

      வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
      வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
      ஆழ்க தீயது எலாம் அரன் நாமமே
      சூழ்க வையகமும் துயர் தீர்கவே

      
  பொழிப்புரை:

  வேதம் முதலிய நூல்களைக் கற்று, அந்த நூல்களில் உணர்த்தப்படும் வாழ்க்கை முறையினை கடைப்பிடித்து, வேள்விகளை வளர்த்து கலிபுருடனின் வலிமையைக் குறைத்து அவனை வெற்றி கொள்ளும் அந்தணர்கள் வாழும் சிதம்பர தலத்தில் உள்ள சிற்றம்பலத்தில் நடமாடும் பெருமானின், இளமையான வெண் திங்கட் பிறையினைச் சூடியவனின், முதல்வனின் திருப்பாதங்களை, பற்றுக்கோடாகக் கொண்டு வாழும் அடியார்களை பாவங்கள் பற்றாமல் விலகிவிடும்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai