114. உரையினில் வந்த பாவம் - பாடல் 8

மார்க்கண்டேயனின் உயிரினைக்
114. உரையினில் வந்த பாவம் - பாடல் 8


பாடல் 8:

    உரு வரைகின்ற நாளில் உயிர் கொள்ளும் கூற்றம் நனி அஞ்சுமாதல் உற நீர்
    மருமலர் தூவி என்றும் வழிபாடு செய்ம்மின் இழிபாடு இலாத கடலின்
    அருவரை சூழ் இலங்கை அரையன் தன் வீரம் அழியத் தடக்கை முடிகள்
    திருவிரல் வைத்து உகந்த சிவன் மேய செல்வத் திருநாரையூர் கை தொழவே


விளக்கம்:

உரு வரைகின்ற நாள்=உடலும் உயிரும் ஒன்று சேர்ந்து இருக்கும் காலம்; இந்த பதிகத்தின் மூன்றாவது பாடலின் விளக்கத்தில் காலன் செயல்படுவதற்கு ஆதாரமாக இருக்கும் நிலை, இறைவன் ஒவ்வொரு உயிர்க்கும் விதிக்கும் வாழ்நாட்களின் அளவு என்பது விளக்கமாக கூறப் பட்டுள்ளது. இவ்வாறு தனது கடமையை நிறைவேற்றுவதில் அஞ்சாமல் செயல்படும் காலன், சிவனடியார்களின் அருகில் வருவதற்கு அஞ்சுவான் என்று இந்த பாடலில் கூறப் படுகின்றது. இவ்வாறு சம்பந்தர் கூறுவது, நமக்கு அப்பர் பிரானின் காலபாசக் குறுந்தொகை பதிகத்தின் பாடல்களை நினைவூட்டுகின்றது. காலனின் தூதர்களை சிவபெருமானின் அடியார்களின் அருகே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடும் அப்பர் பிரான், பெருமானின் அடியார்களை அவர்களுக்கு அடையாளம் காட்டும் விதமாக, அடியார்களின் உருவத்தையும் செய்கைகளையும் பட்டியல் இடுவதை நாம் இந்த பதிகத்தில் காணலாம். சிவபிரானின் பெருமைகளை பாடலாக பாடுவது, அவ்வாறு பாடப்படும் பாடல்களுக்கு ஏற்ப கொடுகொட்டி, கைத்தாளம் முதலிய கருவிகளை இசைப்பது, சிவபிரானின் திருநாமத்தை பிதற்றுவது, சிவபிரானின் திருவடிகளைப் போற்றி வழிபாடு செய்வது, திருநீற்றினை அணிந்து இருப்பது, சிவபெருமானை வழிபடுவதற்காக, தூபம், தீபம், மலர் மாலைகள் ஏந்திச் செல்லுதல், என்பவை அடியார்களின் அடையாளங்களாக இங்கே கூறப்படுகின்றது. அடியார்களுக்கு இடையூறு செய்யாமல் இருப்பது மட்டுமன்றி, அவர்களைப் போற்றியும், பேணியும் பாதுகாப்பது அவர்களின் கடமை என்று இயமனின் தூதர்களுக்கு உணர்த்தும் அப்பர் பிரான், பதிகத்தின் கடைப் பாடலில், அடியார்களுக்கு இன்னல் விளைவித்தால் என்ன நடக்கும் என்பதையும் எச்சரிக்கையாக விடுப்பதையும் நாம் உணரலாம். 

    அரக்கன் ஈரைந்து தலையுமோர் தாளினால்
    நெருக்கி ஊன்றி இட்டான் தமர் நிற்கிலும்
    சுருக்கெனாது அங்குப் பேர்மின்கண் மற்று நீர்
    சுருக்கெனில் சுடரான் கழல் சூடுமே

சூடும்=சுடும் என்ற எழுத்து நீட்டல் விகாரம் அடைந்துள்ளது, மூன்றாவது அடியில் உள்ள சுருக்கு, விரைவாக அகலுதலைக் குறிக்கும். நான்காவது அடியில் உள்ள சுருக்கு, இயமனின் தூதர்களின் கையில் உள்ள பாசக் கயிற்றால், உயிர்களை சுருக்கிட்டு இழுக்கும் செயலைக் குறிக்கும். தனது வலிமையின் மீது கொண்டுள்ள செருக்கினால், கயிலாய மலையினை அசைக்க நினைத்த அரக்கன் இராவணனின் முயற்சி தோல்வி அடைந்ததைப் போன்று, உங்களது வலிமையினால் உங்களுக்கு ஏற்படும் செருக்கு கொண்டு, பெருமானின் அடியார்களை நீங்கள் அணுகினால், உங்களது செருக்கும் அடக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கும் பாடல். அடியார்களை அணுகினால் என்ன நடக்கும் என்று குறிப்பினால் பதிகத்தின் முந்தைய பாடல்களில் உணர்த்திய அப்பர் பெருமான், இந்த பாடலில் நேரிடையாக, நீங்கள் சுட்டெரிக்கப் படுவீர்கள் என்று எச்சரிக்கை விடுக்கின்றார். பெருமானது திருவடி உங்களை சுட்டுவிடும் என்று பதிகத்தை முடிப்பதன் மூலம், சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரினைக் கவர வந்த இயமனுக்கு நேர்ந்த கதி இங்கே உணர்த்தப் படுகின்றது. 

கூற்றுவன் அடியார்களின் உயிரினை கவர்வதற்கு அஞ்சுவான் என்று இங்கே கூறுவதை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்; கூற்றுவன் அஞ்சுவான் என்பதால் இறப்பு இல்லாத வாழக்கை அமையும் என்று தவறாக பொருள் கொள்ளக் கூடாது. இறைவன் முன்னமே வாழ்க்கை முடிவடையும் என்று விதித்த நாளில், இயமனின் தூதுவர்களுக்கு பதிலாக சிவகணங்கள் வந்து உடலிலிருந்து உயிரினை பிரித்து சிவலோகம் அழைத்துச் செல்வார்கள் என்று பொருள் கொள்ளவேண்டும், இழிபாடு=அழிவு;

பொழிப்புரை:

அழிவு இல்லாத கடலாலும் அரிய மலைகளாலும் சூழப்பட்டுள்ள இலங்கையின் தலைவனாகிய இராவணனின் வீரம் அழியும் வண்ணம் அவனது அகன்ற கைகளும் பத்து முடிகளும் நசுங்கும் வண்ணம் தனது கால் பெருவிரலை ஊன்றி மகிழ்ந்த சிவபெருமான் உறையும் செல்வச் செழிப்பு மிகுந்த திருநாரையூர் தலத்தினை நீங்கள் கைகளால் தொழுது வணங்குவீர்களாக. அப்படிச் செய்தால், உங்களது உடலுடன் உயிர் பொருந்தி இருக்கும் நாட்கள் என்று விதிக்கப்பட்ட காலம் முடிவுக்கு வரும் தருணத்தில், கூற்றுவன் உங்களது அருகில் வருவதற்கு அச்சம் கொள்வான்; அதற்கு பதிலாக, உமது வாழ்வு முடிவடையும் தருணத்தில் சிவகணங்கள் உம்மை நெருங்கி உம்மை சிவலோகத்திற்கு அழைத்துச் செல்வர். எனவே நீங்கள் நறுமணம் மிகுந்த மலர்களைத் தூவி பெருமானை வழிபட்டு, கூற்றுவன் உங்களை அழைத்துச் சென்றால் நீங்கள் எதிர்கொள்ள இருந்த நரக வேதனையிலிருந்து விடுதலை பெறுவீர்களாக.         
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com