114. உரையினில் வந்த பாவம் - பாடல் 9

முக்தி நிலை
114. உரையினில் வந்த பாவம் - பாடல் 9


பாடல் 9:

    வேறுயர் வாழ்வு தன்மை வினை துக்கம் மிக்க பகை தீர்க்கும் மேய உடலில் 
    தேறிய சிந்தை வாய்மை தெளிவிக்க நின்ற கரவைக் கரந்து திகழும்
    சேறுயர் பூவின் மேய பெருமானும் மற்றைத் திருமாலும் நேட எரியாய்ச்
    சீறிய செம்மையாகும் சிவன் மேய செல்வத் திருநாரையூர் கை தொழவே

விளக்கம்:

வினைகள் உயிரின் விருப்பத்தற்கு மாறுபட்டு செயல்படுவதால் பகை என்று கூறுகின்றார். வேறுயர் வாழ்வு=பிறப்பிறப்புக்கு மாறுபட்டு பேரின்பம் தரும் முக்தி நிலை; கரவு=தன்னை மறைத்துக் கொண்டு இறைவனின் தன்மை; திகழும்=இறைவனின் அருட்சக்தி வெளிப்பட்டு திகழும் நிலை;   
 
பொழிப்புரை:

பிறந்து இறந்து மீண்டும் பிறந்து பிறப்பிறப்புச் சுழலில் சிக்கி வாழும் வாழ்க்கைக்கு மாறுபட்டு நிலையான பேரின்ப வாழ்வு பெறுவதற்கான தகுதியை பெற்று, உயிருடன் பிணைந்து உயிரின் விருப்பத்துக்கு மாறாக பகையாக செயல்பட்டு துக்கத்தினை விளைவிக்கும் வினைகளை ஒழித்து, தெளிவான சிந்தனை பெற்று மெய்ப்பொருளின் உண்மை நிலையினை உணர்ந்து, இறை உணர்வினை மறைக்கும் மாயையை ஒழித்து, இறைவனின் அருட்சக்தியை உணர வேண்டும் என்று நீங்கள் விரும்புவீராயின், சேற்றிலிருந்து தோன்றும் தாமரையில் பொருந்தி விளங்கும் நான்முகனும் மற்றும் திருமாலும் தேடிய போது சீறியெழுந்து நீண்டு சிவந்த தழற்பிழம்பாக நின்றவனாகிய சிவபெருமான் உறையும் செல்வச் செழிப்பு வாய்ந்த திருநாரையூர் தலத்தினை கைகளால் தொழுது வணங்குவீர்களாக.       

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com