114. உரையினில் வந்த பாவம் - பாடல் 10

அப்பர் பிரான்
114. உரையினில் வந்த பாவம் - பாடல் 10


பாடல் 10:

      மிடைபடு துன்பம் இன்பம் உளதாக்கும் உள்ளம் வெளியாக்கும்
           உன்னி உணரும்
      படை ஒரு கையில் ஏந்திப் பலி கொள்ளும் வண்ணம் ஒலி
           பாடி ஆடி பெருமை
      உடையினை விட்டுளோரும் உடல் போர்த்துளோரும் உரை
           மாயும் வண்ணம் அழியச்
      செடிபட வைத்து உகந்த சிவன் மேய செல்வத் திருநாரையூர்
           கை தொழவே

விளக்கம்:

மிடை=இடையே; உன்னி=தியானம் செய்து; ஒலி பாடி ஆடி=வாய்விட்டு கீதங்களை பாடியவாறு ஆடிய பெருமான்; படை=மழுவாட்படை; உன்னி உணரும் என்ற தொடரினை இரண்டாவது அடியில் உள்ள பெருமை என்ற சொல்லுக்கு பின்னர் வைத்து பொருள் உணர வேண்டும். இந்த பாடலில் சம்பந்தர் சமணர்கள் மற்றும் புத்தர்களின் சொற்கள் மாயும் வண்ணம் செய்யும் பெருமான் என்று கூறுகின்றார். அப்பர் பிரான் மற்றும் சம்பந்தர் வாழ்ந்த காலத்தில், சமணர்களும் புத்தர்களும் பொருளற்ற பல பழிச்சொற்களை பெருமான் பால் சொல்லி மக்களை மயக்கி வந்தனர். அப்பர் பிரானின் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்ச்சிகள் மூலம் பெருமானின் பெருமையை உணர்ந்து கொண்ட பல்லவ மன்னன், சமணர்களின் மொழி பொய்மொழி என்பதை உணர்ந்தான் என்று சேக்கிழார் கூறுகின்றார். காடவன்=பல்லவ மன்னன்; மேலும் தனது அவதார நோக்கத்தினை உணர்ந்திருந்த சம்பந்தர், பின்னாளில் மதுரையில் நடக்கவிருந்த நிகழ்ச்சிகளையும் முன்னமே அறியும் வல்லமை பெற்றிருந்தார் போலும். அப்பர் பிரான் மற்றும் சம்பந்தர் ஆகிய இருவரும், அனைத்தும் இறைவனின் அருளாலே நிகழ்ந்தன என்ற உணர்வோடும் தங்களது வாழ்க்கையை கழித்தவர்கள். எனவே தான் சமணர்கள் மற்றும் புத்தர்களின் உரைகள் பொய்மொழிகள் என்று அனைவரும் உணரும் வண்ணம் இறைவன் செய்தான் என்று கூறுகின்றனர். 

    வீடறியாச் சமணர் மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த
    காடவனும் திருவதிகை நகரின் கண் கண்ணுதற்குப்
    பாடலிபுத்திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும்
    கூட இடித்துக் கொணர்ந்து குணபரவீச்ச்சரம் எடுத்தான்  

பொழிப்புரை:

உமது வாழ்க்கையின் இடையில் அனுபவிக்கும் துன்பங்கள் இன்பங்களாக மாறவேண்டும் என்றும், உமது உள்ளம் இறைவன் நடமாடும் வெளியாக மாற வேண்டும் என்றும் நீங்கள் விரும்புவீராயின், மழுப்படையினை கையில் ஏந்தியவாறு பலி கொள்ளும் நோக்கத்துடன் உரத்த குரலுடன் கீதங்கள் பாடிய வண்ணம் நடனமாடிக் கொண்டு சென்ற பெருமானின் பெருமைகளை மனதினில் நினைத்து உணர்வீர்களாக. மேலும் உடையினை விட்டொழித்த சமணர்களும் துவராடையினை போர்த்துக் கொள்ளும் புத்தர்களும் பேசும் வீணான பழிச் சொற்கள் கெட்டு அழியும் வண்ணம் திருவிளையாடல் புரிந்து மகிழும் பெருமான் உறையும் செல்வச் செழிப்பு வாய்ந்த திருநாரையூர் தலத்தினை கைகளால் தொழுது வணங்குவீர்களாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com