115. சுற்றமொடு பற்றவை - பாடல் 1

புராணப் பாடல்
115. சுற்றமொடு பற்றவை - பாடல் 1


பின்னணி:

நான்காவது தல யாத்திரையின் இறுதி கட்டத்தில், புறம்பயம், சேய்ஞலூர், திருப்பனந்தாள், ஓமாம்புலியூர், வாழ்கொளிபுத்தூர், கடம்பூர் மற்றும் நாரையூர் ஆகிய தலங்கள் சென்ற ஞானசம்பந்தர், திருக்கருப்பறியலூர் தலம் செல்கின்றார். இவ்வாறு சென்றதை குறிப்பிடும் பெரிய புராணப் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. சிரபுரம் என்பது சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. சிரபுரச் செல்வர் என்று திருஞானசம்பந்தரை சேக்கிழார் குறிப்பிடுகின்றார். அருகில் இருக்கும் பல தலங்கள் சென்றார் என்று சேக்கிழார் இந்த  பாடலில் கூறுகின்றார். அவை குரக்குக்கா, புள்ளிருக்குவேளூர், திருப்புன்கூர் ஆகிய தலங்களாக இருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். பாடல் தோறும் பெருமானின் புகழினைக் குறிப்பிட்டு, அத்தகைய பெருமான் உறையும் இடம் கருப்பறியலூர் என்று கூறுவதால் இந்த பதிகத்தினை உரை இசை என்று சேக்கிழார் கூறுகின்றார். குரக்குக்கா தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகம் நமக்கு கிடைக்கவில்லை.   

    பரமர் தம் திருக்கருப்பறியலூரினைச்
    சிரபுரச் சிறுவர் தொழுது செந்தமிழ்
    உரை இசை பாடி அம்மருங்கின் உள்ளவாம்
    சுரர் தொழும் பதிகளும் தொழுது பாடினர்

இந்த தலத்தின் மீது ஞானசம்பந்தர் அருளிய பதிகமொன்றும் சுந்தரர் அருளிய பதிகம் ஒன்றும் (சிம்மாந்து சிம்புளித்து என்று தொடங்கும் பதிகம்--7.30) கிடைத்துள்ளன. சீர்காழியில் முதன் முதலாக சந்தித்துக் கொண்ட அப்பர் பிரானும் சம்பந்தரும் சேர்ந்து திருக்கோலக்கா சென்று அந்த தலத்து இறைவனை வணங்கிய பின்னர், சம்பந்தர் சீர்காழி திரும்பினார். அப்பர் பிரான் இந்த தலத்துக்கு சென்றார் என்று சேக்கிழார் கூறுகின்றார். ஆனால் நமக்கு இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பதிகம் ஏதும் கிடைக்கவில்லை. 

வைத்தீஸ்வரன் கோயிலிருந்து, திருப்புன்கூர் நீடூர் வழியாக மயிலாடுதுறை செல்லும் சாலையில் சுமார் ஏழு கி.மீ. தூரம் சென்றால் தலைஞாயிறு என்ற பெயர்ப் பலகை காணலாம். அங்கிருத்து இரண்டு கி.மீ தொலைவில் இந்த கோயில் உள்ளது. தற்போது மேலைக்காழி என்றும் தலைஞாயிறு என்றும் அழைக்கப் படுகின்றது. சீர்காழி போன்று மாடக்கோயில் அமைப்பில் கட்டப்பட்டு, மலைக் கோயிலில் தோணியப்பரும் பெரியநாயகி சன்னதியும் சட்டைநாதர் சன்னதியும் இருப்பதாலும், சீர்காழி தலத்திற்கு மேற்கே இருப்பதாலும் மேலைக்காழி என்ற பெயர் வந்தது. சீர்காழியில் இருக்கும் தோணியப்பரின் கையில் மான் மற்றும் மழுவினை நாம் காணமுடியாது. ஆனால் இங்கே உள்ள பரமன் தனது கைகளில் மானும் மழுவும் தாங்கிய நிலையில் உள்ளார். தக்க யாகத்தில் பங்கேற்றதால் தனது ஒளி குன்றிய சூரியன், இந்த தலத்து இறைவனை வழிபாட்டு பழைய ஒளியினை மீண்டும் பெற்றதால் தலைஞாயிறு என்ற பெயர் வந்ததாக கூறுவார்கள். இறைவனின் திருநாமம் குற்றம் பொறுத்த நாதர்; இறைவியின் பெயர் கோல்வளை நாயகி. 

இந்த தலத்து இறைவனை வழிபடும் அன்பர்கள் பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவார்கள் என்று நம்பப் படுகின்றது. மறுபடியும் கருவறைக்குள் புக வேண்டிய அவசியம் இல்லாத நிலையினை உயிர்கள் பெறுகின்ற காரணத்தால் கருப்பறியலூர் என்ற பெயர் வந்தது. வசிட்ட முனிவர், பிரமனின் அறிவுரை படி இந்த தலம் வந்தடைந்து தவம் இருந்தார். இந்த தலத்தில் செய்யப்படும் தவம் பல மடங்கு பலன் கொடுக்கவல்லது என்பதால் தனது ஞானத்தை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு பெருமானை நோக்கி அவர் இங்கே தவம் செய்தார். அவர் போன்று எழுபத்திரண்டு முனிவர்கள் இங்கே தவம் செய்தார்கள் என்று தலபுராணம் கூறுகின்றது. இதன் காரணமாக இந்த தலத்திற்கு இன்றும் பல குழந்தைகள் வந்து தென்முகக் கடவுளை வணங்கிச் செல்வதை நாம் காணலாம். இந்த காரணம் பற்றியே, இந்த தலத்தின் மீது அருளப்பட்ட இந்த பதிகத்தை (சுற்றமொடு பற்று என்று தொடங்கும் பதிகத்தை) பாடுவோர்  கல்வி ஞானத்தில் முதன்மை பெற்று விளங்குவார்கள் என்று கருதப் படுகின்றது. 

பாடல் 1:

    சுற்றமொடு பற்றவை துயக்கற அறுத்துக்
    குற்றமில் குணங்களொடு கூடும் அடியார்கள் 
    மற்று அவரை வானவர் தம் வானுலகம் ஏற்றும்
    கற்றவன் இருப்பது கருப்பறியலூரே

விளக்கம்:

வானுலகம்=வீடுபேறு; கற்றவன்=இயல்பாகவே அனைத்தையும் உணர்ந்தவன்; மற்று என்பது பொருள் ஏதும் இல்லாத அசைச்சொல்; துயக்கு=சோர்வு, தளர்ச்சி; துயக்கு என்ற சொல்லுக்கு பெருமானை அறியும் அறிவு வேறுபடுதல் என்று விளக்கம் அளித்து சுற்றமும் யான் எனது என்ற இருவகைப் பற்றுக்களும் நாம் பெருமானை அறியமுடியாத வண்ணம் தடுக்கின்றன என்று பொருள் கூறுகின்றனர்; கூடும்=கூடி விளங்கும்; வானுலகம்=வீடு பேறு; வானவர் என்றால் பொதுவாக தேவர்களை குறிக்கும் என்றாலும் இங்கே சிவலோகத்தில் வாழும் மேலோர்களை குறிப்பதாகவே பொருள் கொள்ளவேண்டும். தேவர்கள் வாழ்வது தேவலோகம். தேவலோகத்தில் வாழும் அவர்களும் பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கியவர்களே. எனவே அவர்கள் இங்கே குறிப்பிடப் படவில்லை. எனவே வானுலகம் என்பதற்கு உயர்ந்த உலகமாகிய சிவலோகம் என்றும் வானோர்கள் என்பதற்கு சிவலோகம் சென்று அடையும் தகுதியினைப் பெற்ற உயர்ந்தவர்கள் என்று பொருள் கொள்வதே பொருத்தம். 

சுற்றமும் அவர்கள் பால் வைத்துள்ள பற்றும் இறைவனை அடையும் நெறியில் இடர்களை விளைவிக்கும் என்பதால் சுற்றங்கள் பால் வைத்துள்ள பற்றினை நீக்க வேண்டியது அவசியம் என்று ஞானிகளால் கருதப் படுகின்றது. மணிவாசகரும் தனது போற்றித் திருவகலில் சிவநெறியை அடையத் தடையாக உள்ளவற்றை குறிப்பிடுகையில், சுற்றத்தை குறிப்பிடுகின்றார். இறை நெறியின் சிறப்பினை உணராத சுற்றத்தார், இறைநெறியினில் ஆழ்வோர், தங்களுக்கு இறுதி வரை துணையாக உறுதியுடன் நில்லாமல் இடையிலே விலகிப் போய் விடுவார்களோ என்று அச்சம் கொள்ளுதல் இயல்பு. அந்த அச்சத்தினால், அவர்கள் அனைவரும் ஒன்றாக சூழ்ந்துகொண்டு எம்மை விட்டு விடாதீர் என்று பதறியவாறு தடுத்தலை இங்கே அடிகளார் குறிப்பிடுகின்றார். அத்தகைய சுற்றத்தினரை தொல்பசுக் குழாங்கள் என்று அழைக்கின்றார். உயிர் உடலுடன் இணைந்து பிறந்த நாட்களிலிருந்து அத்தகையோர் உயிரினைச் சூழ்ந்து இருப்பதால் தொன்மையாக உள்ளவர்கள் என்பதை குறிப்பிடும் வண்ணம் தொல்பசு என்று கூறுகின்றார். உயிரின் நோக்கமே பற்றுகளை அறுத்து வினை நீக்கம் பெற்று இறைவனைச் சென்று அடைதல் என்பதை உணராத சுற்றத்தாரை, விலங்குகளுக்கு சமமாக மதித்து பசுக் குழாங்கள் என்று அடிகளார் கூறுகின்றார். 

    சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள்  
    பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும்

பற்று என்பது பொதுவாக யான் எனது என்று நாம் கருதுவதை குறிப்பிடுகின்றது. யான் எனது என்ற எண்ணங்கள் தாமே பற்றினை வளர்க்கின்றன. இந்த உடலே உயிருக்கு சொந்தமும் அல்ல நிலையானதும் அல்ல. அவ்வாறு இருக்கையில் நிலையற்ற இந்த உடலை உயிர் தான் நிலையாக உள்ள பொருள் என்று கருதுவது தவறு தானே. உடலே சொந்தமல்ல என்ற போது இந்த உடலால் நாம் அடைந்த பொருட்களை எனது என்று கருதுவதும் தவறு தானே. மேலும் அனைத்துப் பொருட்களும் நிலையற்றவை என்பதை உணர்ந்தால் அந்த பொருட்களுக்கு உரிமை கொண்டாடுவதை நாம் தவிர்ப்போம் அல்லவா. மற்ற அனைத்து பற்றுக்களும் யான் எனது எனப்படும் இந்த இருவகைப் பற்றினை சூழ்ந்தே  தோன்றுகின்றன என்பதால் யான் எனது என்ற இருவகைப் பற்றினை அறுத்தவர்கள் எளிதில் மற்ற பற்றுக்களையும் அறுக்க முடியும்..

பற்று என்பதற்கு அகப்பற்று மற்றும் புறப்பற்று என்று விளக்கம் கொடுத்து, இரண்டையும் நீக்க வேண்டிய அவசியத்தை ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார் என்று விளக்கம் கூறுவார்கள். குரை கழல்கள்=ஒலிக்கும் கழல் அணிந்த திருவடிகள்; கற்றா=கன்று+ஆ; தனது கன்றைப் பிரிந்ததால் அக்கன்றினை நினைத்து மனம் உருகிக் கண்ணீர் விடும் பசுவின் நிலை; தனக்கு புகழ் வேண்டாம் என்றும் தான் இனிமேல் எதுவும் கற்க வேண்டிய அவசியம் இல்லை தனது உடலின் மீது பற்று ஏதும் இல்லாதவராக அடிகளார் இருப்பதை நாம் காணலாம். உற்றார் வேண்டாம் ஊர் வேண்டாம் கற்றாரின் தொடர்பு வேண்டாம் என்று மற்ற புறப்பற்றுகளை நீத்தவராக அடிகளார் காணப்படுவதையும் நாம் உணரலாம். பெருமானின் திருவருள் கூடிய பின்னர், நூல்களை கற்ற பின்னர் அடைய வேண்டிய  பலன்களை அடைந்த பின்னர் மேலும் கற்று அடைவதற்கு வேறு என்ன உள்ளது. உண்மையான கல்வியின் பயன் அனைத்துப் பொருட்களின் மீது அன்பினை வளர்த்து, அவ்வாறு வளர்ந்த அன்பினை இறைவனின் திருவடிகளில் செலுத்துவது தானே. நாம் இறைவனிடத்தில் வைத்துள்ள அன்பு உண்மையாக இருந்தால், அகத்திலும் புறத்திலும் நம்மிடையே மாற்றங்கள் தோன்றும். மெய்தான் விரும்பி என்று பாடியதற்கு ஏற்ப, மனம் கசியும் கண்ணீர் பெருகும். இந்த நிலைகளை ஏற்கனவே அடைந்து விட்ட அடிகளாருக்கு இனி கல்வி தேவை அற்றது அல்லவா. இதற்கு மேலும் ஏதேனும் தேவையாக இருந்தால் அந்த நிலைக்கு இறைவனின் திருவருள் அழைத்துச் செல்லும் என்று நம்பிக்கையுடன் கற்பனைவும் இனி அமையும் என்று கூறுகின்றார். தனக்கு முன்னே தோன்றிய இறைவன், தனது திருப்பாதத்தை அடிகளாரின் தலையில் சூட்டிய இறைவன், திடீரென்று மறைந்து விட்டாரே என்று பதைபதைக்கும் அடிகளார், தனது அருகே இல்லாத கன்றினை நினைத்து தாய்ப்பசு மனம் கசிந்து உருகி, எப்போதும் அந்த கன்றையே நினைத்து கண்ணீர் சொரிவது போன்ற தன்மையை தான் அடைய வேண்டும், இறைவனின் திருவடிகளை நினைத்து தான் கதறவேண்டும் என்று விரும்புகின்றார். தனது விருப்பம் ஈடேற இறைவனையும் வேண்டுகின்றார். இந்த மாறுதலுக்கு அடிப்படை காரணமே அகப்பற்றும் புறப்பற்றும் இல்லாத அடிகளாரின் நிலை தானே. இந்த நிலையே சுற்றமொடு பற்றவை துயக்கற அறுத்து என்று சம்பந்தரால் இந்த பதிகத்தின் பாடலில் கூறப்படுகின்றது.

    உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்
    கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும்
    குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா உன் குரை கழற்கே
    கற்றாவின் மன போலக் கசிந்து உருக வேண்டுவனே 

குற்றம்=உடலுடன் இணைந்துள்ள அறுவகைக் குற்றங்கள் இவற்றை அகப்பகை குற்றங்கள் என்று கூறுவார்கள். காமம் குரோதம் உலோபம் மோகம் மதம் மாச்சரியம் எனப்படும் இந்த குற்றங்கள் நாம் பொருட்களின் மீது பற்று கொள்வதற்கு காரணமாக உள்ளன. ஞானம், அருள், தவம், பொறை, வாய்மை, அன்பு, ஐம்பொறி அடக்கல் ஆகிய குணங்கள் பற்றினை தவிர்க்கும். எனவே இத்தகைய குற்றங்கள் இல்லாதவர்களாக நாம் விளங்கினால் தான் பற்று ஏதும் நிலையினை அடைந்து முக்தி நிலை அடைவதற்கு தகுதி உள்ளவர்களாக மாற முடியும்.      

பொழிப்புரை:

சுற்றங்களும் யான் எனது எனப்படும் பற்றும், பெருமானை அறிந்து பெருமானிடத்தில் அறிவு செல்வதைத் தடுத்து பெருமானுடன் ஒன்று சேரும் நெறியினில் தளர்வினை ஏற்படுத்தும் என்பதால், சுற்றங்களையும் சுற்றங்கள் பால் வைத்துள்ள பற்றினையும் அறவே நீக்கி, குற்றம் ஏதும் இல்லாத குணங்களுடன் கூடி விளங்கும் அடியார்களை மேலோர்கள்  வாழும் முக்தி உலகத்திற்கு அழைத்துச் செல்லும் வழியினை கற்று செயல்படுத்தும் பெருமான் வீற்றிருக்கும் தலம் கருப்பறியலூர் ஆகும்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com