115. சுற்றமொடு பற்றவை - பாடல் 2

கொன்றை மலர்
115. சுற்றமொடு பற்றவை - பாடல் 2


பாடல் 2:

    வண்டு அணை செய் கொன்றையது வார்சடைகள் மேலே
    கொண்டு அணை செய் கோலமது கோள் அரவினோடும்
    விண்டு அணை செய் மும்மதிலும் வீழ்தர ஒரம்பால்
    கண்டவன் இருப்பது கருப்பறியலூரே

விளக்கம்:

கோள்=துன்பம் மற்றும் வலிமை என்று இரு பொருள் கொண்ட சொல். இங்கே வலிமை என்ற பொருள் பொருத்தமாக உள்ளது. கோலம்=அழகு; வார்சடை=நீண்ட சடை; விண்டு= தமது இடத்தை விட்டு நீங்கி; பறக்கும் தன்மையால் ஓரிடத்திலிருந்து நீங்கி எளிதாக மற்றோர் இடத்தை அடைந்து; 

பொழிப்புரை:

வண்டுகள் சென்று அடையும் கொன்றை மலர் மாலையினை தனது நீண்ட சடையில் அணிந்தவனும், வலிமை மிகுந்த பாம்பு சென்று அணையும் அழகிய திருமேனியை உடையவனும், தங்களது பறக்கும் தன்மையால் ஓரிடத்திலிருந்து நீங்கி எளிதாக மற்றோர் இடத்தினை அடைந்து ஆங்கே உள்ளவர்க்கு துன்பம் விளைவிக்கும் மூன்று பறக்கும் கோட்டைகளும் அழிந்து பொடியாக கீழே விழும் வண்ணம் ஒரே அம்பினை எய்து திரிபுரங்களின் வீழ்ச்சியைக் கண்டவனும் ஆகிய பெருமான் இருப்பது கருப்பறியலூர் தலமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com