110. இடறினார் கூற்றைப் பொடி - பாடல் 9

தோன்றிய பெருமான்
110. இடறினார் கூற்றைப் பொடி - பாடல் 9


பாடல் 9:

    சேற்றினார் பொய்கைத் தாமரையானும் செங்கண் மால்
       இவர் இரு கூறாத்
    தோற்றினார் தோற்றத் தொன்மையை அறியார்
       துணைமையும் பெருமையும்  தம்மில்
    சாற்றினார் சாற்றி ஆற்றலோம் என்னச் சரண் கொடுத்து
      அவர் செய்த பாவம்
    பாற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே

விளக்கம்:

இரு கூறு=அன்னம் மற்றும் பன்றி ஆகிய இரண்டு வேறு வேறு உருவங்கள்; தோற்றினார்= தோன்றினார், அவர்களின் இடையே தோன்றிய பெருமான்; துணைமை=தங்களது தொழிலைச் செய்வதற்கு உதவியாக இருந்த கருவிகள்; சாற்றுதல்=பறை சாற்றுதல்; ஆற்றலோம்=ஆற்றல் அற்றவர்களாக விளங்குகின்றோம்; பாவம்=பெருமானை விடவும் தாமே வலியவர் என்று செருக்குடன் கூறியது.  பிரமனும் திருமாலும் ஒரு முறை தங்களுக்குள் யார் பெரியவன் என்ற வாதத்தில் ஈடுபட்டனர். இருவருமே தாங்களே அடுத்தவரை விட பெரியவர் என்று வாதம் செய்தனர். அவர்களது வாதம் முடிவின்றி தொடர்ந்து கொண்டே இருந்ததால் வேதங்களும் முனிவர்களும் அவர்கள் முன்னே தோன்றி, சிவபெருமான் இருவரிலும் உயர்ந்தவன் என்பதால் அவர்களது வாதத்தை நிறுத்தி பெருமானை பணியுமாறு அறிவுரை கூறினார்கள். எனினும் பிரமனும் திருமாலும் தொடர்ந்து வாதம் செய்தனர். இவ்வாறு தங்களுக்குள்ளே மாறுபட்டு அறியாமையால் வாதம் செய்தமை திருவாசகம் தோணோக்கம் பதிகத்தில் கூறப் படுகின்றது இறந்து=கடந்து; எல்லா அளவுகளையும் கடந்து பெருமான் நின்ற நிலை இங்கே குறிப்பிடப்படுகின்றது. மேலும் அவர்கள் இருவரும் தாமே மேலான பரம்பொருள் என்று கூறியதும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. 

    பிரமன் அரி என்று இருவரும் தம் பேதமையால்
    பரமம் யாம் பரம் என்று அவர்கள் பதைப்பொடுங்க
    அரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து
    பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ 

பொழிப்புரை:

சேறு நிறைந்த குளத்தில் வளரும் தாமரைப் பூவினைத் தனது இருக்கையாகக் கொண்ட பிரமனும் சிவந்த கண்களை உடைய திருமாலும், அன்னமாகவும் பன்றியாகவும் இரண்டு வேறு வேறு உருவம் எடுத்து கடுமையான முயற்சி செய்தி போதும் தங்களின் எதிரே தோன்றிய பெருமானின் முடியையும் அடியையும் அறியாதவர்களாக இருந்தனர். பெருமானின் தொன்மைத் தோற்றத்தை அறியாதவர்களாய், தங்களது பெருமையையும் தங்களது தொழிலுக்கு உதவும் தங்களின் கருவிகளின் பெருமையையும் பறை சாற்றியவாறு இருந்த இருவரும், தங்களது முயற்சி தோல்வியில் முடியவே, தங்களது சிறுமையையும் பெருமானின் பெருமையையும் உணர்ந்தனர். பின்னர் தாங்கள் செய்த பிழைக்கு வருந்தி, பெருமானே உமது அடியையும் முடியையும் காண்பது எங்களால் இயலாத செயல் என்று இறைஞ்சினார்கள். அப்போது அவர்கள் முன்னே தோன்றி, அவர்களுக்கு சரணம் அளித்து, அவர்கள் செருக்குடன் பேசிய சொற்களால் விளைந்த பாவத்தையும் களைந்தவர் பெருமான். அவரே பந்தணைநல்லூர் தலத்தில் பசுபதியாக உறைகின்றார்.  

110. இடறினார் கூற்றைப் பொடி - பாடல் 10 - (இந்த பாடல் சிதைந்தது )   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com