110. இடறினார் கூற்றைப் பொடி - பாடல் 11

கலையை கற்றுக்கொண்டே
110. இடறினார் கூற்றைப் பொடி - பாடல் 11


பாடல் 11:

    கல்லிசை பூண கலையொலி ஓவாக் கழுமல முதுபதி தன்னில்
    நல்லிசையாளன் புல்லிசை கேளா நற்றமிழ் ஞானசம்பந்தன்
    பல்லிசை பகுவாய்ப் படுதலை ஏந்தி மேவிய பந்தணைநல்லூர்
    சொல்லிய பாடல் பத்தும் வல்லவர் மேல் தொல்வினை சூழ கிலாவே 

விளக்கம்:

பல்லிசை=பற்கள் பொருந்திய; பகு வாய்=அகன்று திறந்த வாய், மண்டையோடு; கல்லிசை= கற்பதானால் ஏற்படும் ஓசை; பல தரப்பட்ட மக்களும் ஏதேனும் கற்றுக் கொண்டே இருப்பதால் எழும் ஆரவாரம்; ஓவா=நீங்காத; நல்லிசை=நல்ல பெருமை; புல்லிசை= புன்மைத் தன்மையுடன் இணைந்த சொற்கள், புறச்சமயவாதிகளின் கீழ்மையான மொழிகள்;  

பொழிப்புரை:

பலவகை மக்களும் ஏதேனும் ஒரு கலையை கற்றுக்கொண்டே இருப்பதால் எழும் ஆரவாரம் ஓயாததும் தொன்மை வாய்ந்ததும் ஆகிய கழுமலம் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களின் ஒன்று) தலத்தில் தோன்றியவனும், பெருமை உடையவனும், புறச்சமய வாதிகளின் கீழ்மைத் தன்மை மிகுந்த சொற்களைக் கேளாதவனும், நன்மை செய்யும் தமிழ் பாடல்களை அருளுபவனும் ஆகிய ஞான சம்பந்தன், பற்களுடன் கூடி பிளந்த வாயினை உடைய மண்டையோட்டினை ஏந்தி பிச்சை ஏற்கும் பெருமானை, பந்தணைநல்லூர் தலத்து இறைவனைப் புகழ்ந்து சொல்லிய பாடல்கள் பத்தும் சொல்லும் வல்லமை உடையவார்கள் மேல், அவர்களைத் தொன்று தொட்டு தொடர்ந்து வரும் பழைய வினைகள் சூழாது; ஏற்கனவே சூழ்ந்து இருக்கும் தொல்வினைகளும் நீங்கும்.  

முடிவுரை:

பசுபதியார் என்று அனைத்துப் பாடல்களிலும் குறிப்பிட்டு பெருமான், உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக உள்ள தன்மையை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பதிகத்தின் முதல் மூன்று பாடல்கள் மற்றும் ஆறாவது பாடலில்  உலகத்தவர் எவ்வாறு இறைவனைப் புகழ்கின்றனர் என்பதையும் எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவன் இறைவன் என்பதையும் சம்பந்தர் உணர்த்துகின்றார். மற்ற பாடல்களில் பசுபதி என்று அழைக்கப்படும் பெருமான் எவ்வாறு பல உயிர்களுக்கும் துணையாக இருந்து அருள் புரிந்தார் என்பதை விளக்கி, பசுக்களாகிய நாம் அனைவரும், அவரையே தலைவனாகக் கொண்டு பணிந்து தொழுது வாழவேண்டும் என்பதை உணர்த்துகின்றார். நான்காவது பாடலில், உலகத்தவரையும் தேவர்களையும் ஆலகால விடத்தின் தாக்கத்திலிருந்து காத்த செய்தியும், ஐந்தாவது பாடலில் சனகாதி முனிவர்கள் மூலம் உலகத்தவர்க்கு அறம் உரைத்த செய்தியும், ஏழாவது பாடலில் திரிபுரத்தில் வாழ்ந்து வந்த மூன்று அடியார்களை தீயில் அழியாமல் காப்பாற்றிய செய்தியும், எட்டாவது பாடலில் உலகத்தவர் உய்யும் பொருட்டு பிச்சை கொள்ளும் செயலையும் ஒன்பதாவது பாடலில் திருமால் பிரமன் ஆகியோர் செய்த பாவத்தினை போக்கிய செய்தியும் கூறப்பட்டு பெருமான் பல தரப்பட்ட உயிர்களுக்கும் செய்த நன்மை உணர்த்தப் படுகின்றது. இவ்வாறு தன்னைத் தொழும் பலவகை உயிர்களுக்கும் வேறுபாடின்றி உதவி செய்து உய்யும் வழியினை காட்டும் பெருமானை நாமும் வணங்கி, அருளாளர்கள் அருளிய பதிகங்கள் பாடி வழிபாட்டு வாழ்வினில் உய்வினை அடைவோமாக.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com