106. எந்தை ஈசன் எம்பெருமான்- பாடல் 11

இறைவனின் திருவருளின்
106. எந்தை ஈசன் எம்பெருமான்- பாடல் 11


பாடல் 11:

    கறையினார் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன்
    அறையும் பூம்புனல் பரந்த அரத்துறை அடிகள் தம் அருளை
    முறைமையால் சொன்ன பாடல் மொழியும் மாந்தர் தம் வினை போய்ப்
    பறையும் ஐயுறவில்லைப் பாட்டிவை பத்தும் வல்லார்க்கே 

விளக்கம்:

கறை=இருள், நிழல். மரங்கள் அடர்ந்து காணப்படுவதால் சூரியனின் கதிர்கள் உள்ளே செல்ல முடியாமல் இருளின் நிறத்தினை உடைய சோலைகள். அறையும்=ஒலிக்கும்; பூம்புனல்=அழகிய நீர்த்துறை; முறைமை=பெருமானின் திருவருள் பெறும் வழிமுறைகள்; பறைதல்=அழிதல்;   

பொழிப்புரை:

அடர்ந்த மரங்கள் உள்ளதால் சூரியனின் கதிர்கள் உட்புக முடியாமல் இருண்டு காணப்படும்  சோலைகள் நிறைந்த காழி நகரினைச் சார்ந்த ஞானசம்பந்தன், ஒலிக்கின்ற அழகிய பரந்த நீர்த் துறைகள் உடைய நிவா நதிக்கரையின் மீது அமைந்துள்ள நெல்வாயில் அரத்துறை தலத்தில் வீற்றிருக்கும் அடிகளின் அருளினை பெறுகின்ற நெறிமுறைகளை உணர்த்தும் பத்து பாடல்களையும் வல்லவராக மொழியும் அடியார்கள் தங்களது வினைகள் முற்றிலும் தீரப் பெற்று உய்வது திண்ணம்; இதற்கு ஐயம் ஏதும் கொள்ள வேண்டா.   

முடிவுரை:

இந்தப் பதிகம் முழுவதும் இறைவனின் திருவருளின் சிறப்பினை உணர்த்தும் வண்ணம் ஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் கொண்டது. ஒவ்வொரு பாடலிலும் அடியார்கள் எவ்வாறு பெருமானை வழிபடவேண்டும் என்பதும் உணர்த்தப் படுகின்றது. அனைத்துப் பாடல்களிலும் எத்தகைய மனிதர்களுக்கு இறைவனின் அருள் கிடைக்காது என்பதை எதிர்மறையாக குறிப்பிட்டு, இறைவனை முறையாக வழிபடும் அடியார்களுக்கு அவனது அருள் உறுதியாக கிடைக்கும் என்பது இந்த பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. பதிகத்தின் முதல் பாடலில், இறைவனின் புகழினை வாயினால் பாடி மனதினால் சிந்திக்க வேண்டும் என்றும் இரண்டாவது பாடலில் பெருமானின் சிறப்பையும் சிறந்த குணங்களையும் புகழ்ந்து அவரை வணங்கித் தொழவேண்டும் என்றும், மூன்றாவது பாடலில் மனம் மொழி மெய் ஆகிய மூன்றினையும் இறைவனது திருப்பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும், நான்காவது பாடலில் பெருமானை நினைத்து மகிழ்ந்து மனம் கசிந்து உருகி வழிபடவேண்டும் என்றும், ஐந்தாவது பாடலில் இயல்பாகவே மலங்களின் சேர்க்கையிலிருந்து நீங்கியவன் இறைவன் என்று போற்றி உள்ளம் நைந்து பணிய வேண்டும் என்றும் ஆறாவது பாடலில் விரிந்த கங்கை நதியை தனது சடையில் மறைக்கும் ஆற்றல் உடையவன் என்று பணிந்து வணங்க வேண்டும் என்றும் ஏழாவது பாடலில் சிவபெருமானை வணங்கிப் போற்றும் நல்லொழுக்கம் உடையவர்களாக இருத்தல் வேண்டும் என்றும் இராவணனின் ஆற்றலை அடக்கும் வல்லமை வாய்ந்தவர் என்று போற்ற வேண்டும் என்றும் ஒன்பதாவது பாடலில் பிரமனும் திருமாலும் காண இயலாத பெருமை உடையவன் என்று குறிப்பிட்டு வணங்க வேண்டும் என்றும், பத்தாவது பாடலில் சமணம் பௌத்தம் முதலான மற்ற புறச்சமயங்களின் கவர்ச்சியில் மனம் மயங்காது சைவ நெறியினை பின்பற்ற வேண்டும் என்றும் பெருமானை வணங்கும் நெறிமுறைகளை சம்பந்தர் இந்த பதிகத்தில் எடுத்துச் சொல்கின்றார்.      
  
இந்த பதிகம் பாடி முடித்த பின்னர், திருஞானசம்பந்தர் முத்துச் சிவிகையை வலம் வந்து, பெருமானின் அருளை நினைத்துப் போற்றியவாறு ஐந்தெழுத்தினை ஓதிய வண்ணம் சிவிகையின் மீது ஏறி அமர்ந்தார்.

    சோதி முத்தின் சிவிகை சூழ் வந்து பார்
    மீது தாழ்ந்து வெண்ணீற்று ஒளி போற்றி நின்று
    ஆதியார் அருள் ஆதலின் அஞ்செழுத்து 
    ஓதி ஏறினார் உய்ய உலகெலாம்

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பெரிய புராணப் பாடலின் எண் 2114. மொத்தம் 4274 பாடல்கள் கொண்டுள்ள பெரிய புராணத்தின் நடுப்பகுதி என்று சொல்லும் வண்ணம் இந்த பாடல் அமைந்துள்ளது இறைவனின் கருணையால் விளைந்த செயல் என்றே கூறலாம். முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய் என்று மணிவாசகர் இறைவனை குறிப்பிடுவது போன்று, இறைவன் அடியெடுத்துக் கொடுத்த உலகெலாம் என்ற சொல்லும் பெரிய புராணத்தின் முதலிலும், நடுவிலும் கடையிலும் வருவதை நாம் உணரலாம்.     
  
ஞானசம்பந்தப் பெருமான் சிவிகையின் மீது ஏறி அமர்ந்தபோது தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர், வேத ஒலிகள் எழுந்தன; தேவர்கள் ஆரவாரம் செய்தனர்; மேகங்கள் முழங்கின; பல வகையான வாத்தியங்கள் முழங்கின, வண்டுகள் நீங்காத புது மலர்கள் வானிலிருந்து மழை போல் பொழிந்தன; சங்குகள் முழங்கின; கூடியிருந்த அடியார்கள் ஆரவார ஒலிகள் எழுப்பினர் என்று கூறும் சேக்கிழார், அந்த சமயத்தில் முத்துக்கள் பதிக்கப்பட்டு ஒளி வீசிய  வெண்குடை விரிக்கப்பட்டு பலரும் காண விளங்கித் தோன்றியது என்று கூறுகின்றார். ஞான சம்பந்தரின் பல வகை சிறப்புகளை உணர்த்தும் திருநாமங்களை எடுத்து ஓதிய அடியார்கள், ஞான சம்பந்தர் வந்தார் என்று முழக்கமிட்டு கொம்புகள் ஊதினார்கள்; வையம் ஏழுடன் மறைகளும் நிறை தவத்தோரும் உய்ய ஞானசம்பந்தன் வந்தான் என்றும். ஞானமே முலை சுரந்து ஊட்டப்பெற்ற பாலறாவாயன் என்றும், மாமறை முதல் கலை அகிலமும் ஓதாது உணர்ந்த முத்தமிழ் விரகன் வந்தான் என்றும் மூன்று சின்னங்களுக்கு ஏற்ப மூன்று அடைமொழிகள் கொடுத்து பிள்ளையாரைப் போற்றியது பொருத்தமாக உள்ளது. ஊதுகொம்பு எக்காளம் என்று சேக்கிழாரால் குறிப்பிடப்படுகின்றது. இந்த சூழ்நிலையில் அரத்துறை தலம் வந்தடைந்த ஞான சம்பந்தர், தனது கைகளை தலை மேல் கூப்பியவாறு, இறைவனின் அருளினை நினைத்து ஆனந்தக் கண்ணீர் பெருக, பெருமானை போற்றி பதிகம் பாடினார் என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார். ஆனால் இந்த தருணத்தில் அவர் அருளிய பதிகம் நமக்கு கிடைக்கவில்லை. பல நாட்கள் இந்த தலத்தில் தங்கிய பிள்ளையார் பின்னர், நெல்வெண்ணெய் முதலான பல தலங்கள் சென்றார் என்று நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். 

திருவரத்துறை திருப்புகழில் அருணகிரிநாதர் ஞானசம்பந்தருக்கு முத்துச் சிவிகை அளித்ததை குறிப்பிடும் பகுதி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

    அருள் கவிகை நித்திலச் சிவிகையைக் கொடுத்து அருள் ஈசன்
    செக தலத்தினில் புகழ் படைத்த மெய்த் திருவரத்துறைப் பெருமாளே  

திருஞானசம்பந்தர் குறிப்பிடும் நெறிமுறைகளை கடைப்பிடித்து பெருமானை வாழ்த்தியும் வணங்கியும் அவனது அருள் பெறுவதற்கு உரிய தகுதியினை நாம் பெற்று, அவனது திருவருளால் இம்மையிலும் மறுமையிலும் பல நன்மைகள் பெற்று பயன் அடைவோமாக.        

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com