107. கோழை மிடறாக கவி- பாடல் 1

தனிச் சிறப்பு
107. கோழை மிடறாக கவி- பாடல் 1

பாடல் 1

பின்னணி:

திருவரத்துறை இறைவனின் அருளால் முத்துச்சிவிகை, முத்துக்குடை மற்றும் ஊது கொம்புகள் பெற்ற திருஞானசம்பந்தர், திருவரத்துறை பெருமானை வணங்கிப் பதிகம் பாடிய பின்னர், தனது தொண்டர்களுடன் சில நாட்கள் அந்த தலத்தினில் தங்கினார் என்று பெரிய புராணம் தெரிவிக்கின்றது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நெல்வெண்ணெய் முதலிய தலங்கள் சென்ற பின்னர், மீண்டும் திருவரத்துறை வந்தடைந்து பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு சீர்காழி நகரம் திரும்புவதற்கு விருப்பம் கொண்டார். அவ்வாறு சீர்காழி நகருக்கு திரும்பும் வழியில் பழுவூர், விசயமங்கை, ஆகிய தலங்கள் சென்று இறைவனை வணங்கி பதிகங்கள் பாடிய பின்னர் திருவைகாவூர் வந்தடைந்தார். இறைவனின் திருவடிகள் நிலைபெற்றுத் திகழும் வைகாவூர் என்று சேக்கிழார் கூறுகின்றார். மேலும் இசை வளர் ஞானசம்பந்தர் என்று குறிப்பிட்டு. திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்கள் தமிழ் இசையினை வளர்த்த தன்மையை குறிப்பிடுகின்றார். இவ்வாறு சேக்கிழார் கூறுவது, நமக்கு நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த ஞானசம்பந்தர் என்று சுந்தரர் குறிப்பிடுவதை நினைவூட்டுகின்றது. தேவாரப் பாடல்களால் இசை வளர்த்தார் என்று சேக்கிழாரும் இன்னிசையால் தமிழ் வளர்த்தார் சுந்தரரும் கருதுவதிலிருந்து, தேவாரப் பாடல்களால் தமிழும் இன்னிசையும் ஒன்றுடன் ஒன்று பிரியாத வண்ணம், இரண்டும் வளர்ந்தன என்பதை நாம் உணருகின்றோம். திசையினை ஆடையாக உடைய பெருமான் என்று சேக்கிழார் கூறுவதையும் நாம் உணரலாம்.       

    விசயமங்கையின் இடம் அகன்று மெய்யர் தாள்     
    அசைவில் வைகாவினில் அணைந்து பாடிப் போந்து
    இசை வளர் ஞானசம்பந்தர் எய்தினார்
    திசையுடை ஆடையர் திருப்புறம்பயம்

இந்த தலம் திருப்புறம்பயம் மற்றும் சுவாமிமலை தலங்களுக்கு அருகில் உள்ள தலம். கும்பகோணம் மற்றும் சுவாமிமலையிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. கும்பகோணத்திலிருந்து, தென்மேற்கு திசையில் சுமார் பத்து கி.மீ. தொலைவில் உள்ள தலம். தற்போது வைகாவூர் என்று அழைக்கப்படுகின்றது. இறைவனின் பெயர் வில்வவனநாதர் இறைவியின் பெயர் வளைக்கைநாயகி. இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் பாடிய தேவார திருப்பதிகம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. சிவராத்திரி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் தலங்களில் இந்த தலம் ஒன்றாகும். புலிக்கு பயந்து வில்வமரம் என்று அறியாது அந்த மரத்தின் மீது ஏறிய வேடன் ஒருவன், இரவினில் தான் தூங்கி கீழே விழுவதைத் தடுக்கும் நோக்கத்துடன், இரவு முழுதும் விழித்திருந்து மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாக கிள்ளி கீழே போட, அந்த இலைகள் கீழே இருந்த இலிங்கத்தின் மேல் விழ அதனால் முக்திப்பேறு பெற்றான் என்று தலபுராணம் கூறுகின்றது. இந்த வேடன் நவநிதி என்ற முனிவரை தாக்க வந்ததால், முனிவரை காக்கும் பொருட்டு, புலியாக மாறிய சிவபெருமான் வேடனைத் துரத்தினார் என்றும், புலிக்கு பயந்த வேடன் மரத்தின் மீது ஏறினான் என்றும், அவன் உதிர்த்த வில்வ இலைகள் மரத்தின் அடியில் நின்றிருந்த புலியின் மீது விழுந்ததால் பெருமான் வேடனுக்கு அருள் புரிந்தார் என்றும் கூறுவார்கள். 

கோயிலில் உள்ள நந்திகள் பெருமானை பாராமல், பெருமான் பார்க்கும் திசையைப் பார்ப்பது இந்த தலத்தின் தனிச் சிறப்பு. வேடனின் இறுதிக் காலம் நெருங்கியதால் இயமன் வேடனது உயிரினை பறிக்க வந்தான் என்றும், தக்ஷிணாமூர்த்தி கையினில் கோல் கொண்டு இயமனை துரத்தினார் என்றும் (இன்றும் தென்முகக் கடவுள் சிலையில் அவர் கொம்பு ஏந்தி இருப்பதை நாம் காணலாம்) அவர் இயமனை கோயிலின் உள்ளே அனுமதித்த நந்தி தேவரை கோபித்துக் கொண்டார் என்றும் மீண்டும் இயமன் வந்தால் அவனைத் தடுக்கும் நோக்கத்துடன் நந்தி திசை மாறியுள்ளது என்றும் கூறுவார்கள்.         

பாடல் 1:

    கோழை மிடறாக கவி கோளும் இலவாக இசை கூடும் வகையால்
    ஏழை அடியார் அவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன் இடமாம்
    தாழை இளநீர் முதிய காய் கமுகின் வீழ நிரை தாறு சிதறி
    வாழை உதிர் வீழ் கனிகள் ஊறி வயல் சேறு செயும் வைகாவிலே 

விளக்கம்:

இந்த பாடலில் பாடல்களை எவ்வாறு பாடவேண்டும் என்பதை எதிர்மறையாக குறிப்பிடும் சம்பந்தர், அவ்வாறு பாட இயலாத அடியார்களின் நிலையினை சற்று சிந்தனை செய்தார் போலும். முறையாக பாட இயலவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தேவாரப் பாடல்கள் பாடாமல் இருக்க வேண்டியதில்லை என்று அவர்களைத் தேற்றி அவர்களையும் பாடுமாறு ஊக்குவிக்கும் பாடல். இவ்வாறு அவர் கூறுவது அவர் அருளிய சோற்றுத்துறை பதிகத்தின் கடைப் பாடலை (1.28.11) நமக்கு நினைவூட்டுகின்றது.

    அந்தண் சோற்றுத்துறை எம் ஆதியைச்
    சிந்தை செய்ம்மின் அடியார் ஆயினீர்
    சந்தம் பரவு ஞானசம்பந்தன்
    வந்தவாறே புனைதல் வழிபாடே

ஞானசம்பந்தன் என்ற சொல் ஞானசம்பந்தன் அருளிய பாடல்களை குறிக்கும். அடியார்களாக உள்ள அனைவரும் தேவார பாடல்கள் பாட வேண்டும் என்றும் உணர்த்தும் சம்பந்தர், அவ்வாறு பாடத் தொடங்கும் போது எடுத்தவுடன் முதலில் சந்தத்துடன் பாட இயலாது என்பதை கருத்தினில் கொண்டு, தமக்கு இயன்ற வரையில் பாடுதல் இறைவனுக்கு நாம் செய்யும் வழிபாடு என்று கூறுகின்றார். நாளடைவில் அத்தகைய அடியார்களும் பாடுவதில் தேர்ச்சி பெற்று முறையாக பண்கள் பொருந்தப்பெற்று பாடுவதை நாம் காணலாம்.. வந்தவாறே என்ற சொல்லினை ஞான சம்பந்தன் என்ற சொல்லுடன் இணைத்து ஞானசம்பந்தனுக்கு வந்தவாறே என்று உணர்த்துவதாகவும் பொருள் கூறுகின்றனர். அதாவது இறைவனின் அருளால் ஞானசம்பந்தனுக்கு வாய்க்கப் பெற்ற அருளின் முதலாக வெளிவந்த பாடல்கள் என்று கூறுவதும் பொருத்தமே. ஞானசம்பந்தரின் பாடல்கள் இறைவன் அருளால், இறைவனே அவரது மனதிலிருந்து வெளிப்படுத்திய பாடல்கள் என்பதை இவ்வாறு சிலர் உணர்த்துகின்றனர். 

கோழை மிடறு=பாடுகின்ற போது குரல் நன்கு ஒலிக்க முடியாதபடி, வார்த்தைகளை சரியாக உச்சரிக்க முடியாத படி, கோழை வந்து அடைத்துக் கொள்ளும் கழுத்து; கவி=இறைவனை புகழ்ந்து பாடும் பொருள்கள் அடங்கிய தோத்திரங்கள்; கோளும் இலவாக=பொருள் கொள்ளும்படி நிறுத்தி பாடுதல் இல்லையாயினும், இசை கூடும் வகை=இசை நுணுக்கங்களை நன்கு அறிந்து உணர்ந்து பாடுதல். குரல் நன்கு ஒலிக்க, பாடலின் சொற்களை பிழையின்றி உச்சரித்து, பொருளினை உணர்ந்து கொண்டு பிறரும் பொருள் புரிந்து கொள்ளும் வண்ணம் நிறுத்தியும், இசை நுணுக்கங்களை அறிந்து கொண்டு பாடலுக்கு உரிய இசை பொருந்தும் வண்ணமும் தேவாரப் பாடல்களை நாம் பாட வேண்டும் என்பதை ஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார்.

தாழை=தென்னை மரத்தினை இங்கே குறிக்கும்; நிலத்தின் செழிப்பினை உணர்த்தும் முகமாக, இறைவனைப் போற்றி பாடும் அடியார்களும் செழிப்புடன் வாழ்வார்கள் என்பதை உணர்த்தும் பாடல். ஏழை அடியார்கள்=மேலே உணர்த்திய மூன்று திறமைகள் அற்ற அடியார்கள்; திறமையில் ஏழைகள் ஆயினும் இறைவனிடத்தில் அன்பு செய்வதில் தாழ்ந்தவரல்லர்.        
 
பொழிப்புரை:

நல்ல குரலொலியுடன் தகுந்த உச்சரிப்புடன், பாடலின் பொருள் அடுத்தவருக்கு புரியும் வண்ணம் நிறுத்தி பாடும் தன்மையுடன் இசை நுணுக்கங்களை புரிந்து கொண்டு தகுந்த இசை பொருந்தும் வண்ணம் பாட இயலாத வண்ணம் கோழை தொண்டையை அடைக்கின்றதே என்று அடியார்களே நீங்கள் கவலை கொள்ளாதீர். பெருமான் பால் நிறைந்த அன்புடன் நீங்கள் உங்களால் இயன்ற வரையில் இசையுடன் இணைத்து  எவ்வாறு பாடினும் அதனை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு அருள் புரியும் ஈசனது இடமாக உள்ளது திருவைகா தலமாகும். நீர்வளமும் நிலவளமும் மிகுந்து செழிப்பாக காணப்படும் இந்த தலத்தில் அமைந்துள்ள முற்றிய காய்களை உடைய தென்னை மரத்திலிருந்து காய்கள் அருகில் உள்ள பாக்கு மரத்தின் மீது வீழ, பாக்கு மரத்தின் வரிசையான குலைகள் சிதறி வாழை மரத்தின் மீது வீழ, அந்த வாழை மரத்தின் கனிகள் சிதறி வயலில் வீழ்ந்து ஆங்குள்ள நீரில் ஊறி, வயல்கள் சேறாக மாற்றப்பட்ட தன்மையில் செழிப்பாக காணப்படும் தலம் திருவைகா ஆகும்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com