107. கோழை மிடறாக கவி- பாடல் 3

புரியாத நிலையில்
107. கோழை மிடறாக கவி- பாடல் 3

பாடல் 3:

    ஊனம் இலராகி உயர் நற்றவ மெய் கற்று அவை உணர்ந்த அடியார்
    ஞானம் மிக நின்று தொழ நாளும் அருள் செய்ய வல நாதன் இடமாம்
    ஆன வயல் சூழ்தரும் மல் சூழி அருகே பொழில்கள் தோறும் அழகார்
    வானம் மதியோடு மழை நீள் முகில்கள் வந்தணவும் வைகாவிலே
 

விளக்கம்:

ஊனம்=குற்றம்; மெய்=மெய்ப்பொருளை உணர்த்தும் தோத்திரம் மற்றும் சாத்திரம் ஆகிய இருவகை நூல்கள்; மல்=வளம்; மல் ஆன வயல் சூழ் தரும் சூழி அருகே என்று சொற்களை மாற்றி பொருள் கொள்ள வேண்டும். ஒரு நாள் மட்டும் அருள் புரிந்து மறு நாள் அருள் புரியாத நிலையில் இருப்பவன் அல்ல சிவபெருமான் என்பதை உணர்த்தும் வண்ணம் நாளும் அருள் செய்யும் நாதன் என்று கூறுகின்றார். தொழ என்ற சொல்லை நாளும் என்றார் சொல்லுடன் கூட்டி நாளும் தொழ என்று பொருள் கொண்டு தினமும் தொழும் அடியார்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. மெய்ந்நூல்களில் உணர்ந்து அறியும் ஞானம் பெருமான் ஒருவனே நிலையான கடவுள் என்பதையும், இந்த உலகம், உலகப் பொருட்கள் உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆதாரம் என்பதை உணர்த்துவதால், அத்தகைய நூல்களை கற்று அறியும் ஞானிகள் பெருமானை நாளும் வழிபடுவர்கள் என்ற செய்தியும் இங்கே உணர்த்தப் படுகின்றது. சூழி=நீர் நிலைகள்;     
 
பொழிப்புரை:

மனம் மொழி மெய் ஆகியவற்றால் செய்யப்படும் குற்றங்கள் ஏதும் இலராய் உயர்ந்ததும் உலகுக்கு நன்மை செய்வதும் ஆகிய தவத்தை மேற்கொண்டு, சிறந்த மெய்ந்நூல்களைக் கற்று உணர்ந்த அடியார்கள், தாங்கள் பெற்ற ஞானத்தின் வழி நின்று நாளும் இறைவனைத் தொழ அவர்களுக்கு அருள் புரியும் தன்மை வாய்ந்தவனாக விளங்கும் பெருமான் உறையும் இடம் திருவைகா ஆகும். செழுமை நிறைந்த வயல்களின் அருகே காணப்படும் நீர் நிலைகளின் அருகிலும் அழகான சோலைகளிலும் வானத்தில் உலவும் சந்திரனும் மழை பொழியும் நீண்ட மேகங்களும் வந்து சேர்ந்து தவழும் தலம் திருவைகா ஆகும்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com