107. கோழை மிடறாக கவி- பாடல் 5

வேதங்ளின் வழி
107. கோழை மிடறாக கவி- பாடல் 5


பாடல் 5:

    வேதமொடு வேள்வி பலவாயின மிகுத்து விதி ஆறு சமயம்
    ஓதியும் உணர்ந்தும் உள தேவர் தொழ நின்று அருள் செய் ஒருவன் இடமாம் 
    மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழல் அவை மிக்க அழகார்
    மாதவி மணம் கமழ் வண்டு பல பாடு பொழில் வைகாவிலே

விளக்கம்:

வேதங்களை கற்றதுமன்றி வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள முறையின் வழியே வேள்விகளையும் மிகுதியாக அந்நாளைய அந்தணர்கள் செய்தனர் என்று இந்த பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகின்றார். விதி ஆறு சமயம்=வேதங்களின் வழியே வந்த ஆறு சமயங்கள். சைவம் வைணவம் சாக்தம் கௌமாரம் காணாபத்யம் சௌரம் என்றும் சைவம் மாவிரதம் பாசுபதம் காளாமுகம் வாமம் பைரவம் என்றும் இரண்டு வகையாகவும் விளக்கம் கூறுவார்கள். வேதங்ளின் வழி வந்த ஆறு சமயம் என்பதால், முதலில் கூறப்பட்டுள்ள ஆறு சமயங்களை குறிப்பிடுகின்றார் என்று கொள்வதே மிகவும் பொருத்தமாகும். தேவர்கள் என்று இந்த பாடலில் குறிப்பிடுவது வேதங்களை உணர்ந்து ஓதும் அந்தணர்கள் என்று கொள்ள வேண்டும். அவர்களின் கல்வி ஞானம், தினமும் அனுசரிக்கும் சந்தியா வந்தனம் பூஜை முதலான அனுஷ்டானங்கள், சிவவழிபாடு மற்ற உயிர்களின் மீது கொண்டுள்ள அன்பு முதலிய நற்குணங்கள் கருதி நிலவுலகில் வாழும் தேவர்கள் என்று கூறுவது வழக்கம். மேதகைய=மேன்மை பொருந்திய; கேதை=தாழை; வேதங்களை முறையாக கற்று வேதங்களில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி வேள்வி செய்யும் அந்தணர்கள் என்று குறிப்பிடுவது நமக்கு தில்லைத் தலத்து பதிகத்தின் முதல் பாடலை (1.80.1) நினைவூட்டுகின்றது.  

    கற்று ஆங்கு எரி ஓம்பி கலியை வாராமே
    செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
    முற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமே
    பற்றா நின்றாரைப் பற்றா பாவமே

வேதம் முதலிய நூல்களைக் கற்று, அந்த நூல்களில் உணர்த்தப்படும் வாழ்க்கை முறையினை கடைப்பிடித்து, வேள்விகளை வளர்த்து கலிபுருடனின் வலிமையைக் குறைத்து அவனை வெற்றி கொள்ளும் அந்தணர்கள் வாழும் சிதம்பர தலத்தில் உள்ள சிற்றம்பலத்தில் நடமாடும் பெருமானின், இளமையான வெண் திங்கட் பிறையினைச் சூடியவனின், முதல்வனின் திருப்பாதங்களை, பற்றுக்கோடாகக் கொண்டு வாழும் அடியார்களை பாவங்கள் பற்றாமல் விலகிவிடும் என்பதே மேற்கண்ட பாடலின் திரண்ட கருத்து.        

பொழிப்புரை:

கற்ற வேதங்களை ஓதுவதுமன்றி வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள முறையின் வழியே வேள்வி பலவற்றைச் செய்தும், வேதங்களில் சொல்லப்படும் ஆறு சமயங்களின் (சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்யம் மற்றும் சௌரம்) தன்மையை ஓதியும் உணர்ந்ததால் தெவர்கள் போன்று உயர்ந்தவர்களாக கருதப்படும் நிலவுலத்து அந்தணர்கள் தொழ அவர்களுக்கு அருள் புரியும் பெருமான் உறையும் திருவைகா ஆகும். சிறப்பு வாய்ந்த தாழை, புன்னை, ஞாழல், (புலி நகக் கொன்றை), மாதவி செடி கொடி மரங்கள் நிறைந்து நறுமணம் கமழ, அந்த நறுமணத்தால் ஈர்க்கப்பட்ட வண்டுகள் இசை பாடும் சோலைகள் நிறைந்த தலம் வைகா ஆகும்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com